அம்மாக்களும் கட்சிகளும்

 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான  சர்வதேச நாள் கடந்த 30 ஆம் திகதி யாழ்ப்பாணம்,தந்தை செல்வா கலையரங்கில் அனுஷ்டிக்கப்பட்டது.யாழ்ப்பாணத்தில் அந்நாள் இம்முறை ஒரு சர்வதேச மாநாடாக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவரக்ள் கலந்து கொண்டார்கள்.வெளி மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களும்,அரசியல் செயற்பாட்டாளர்களும்,சிவில் சமூகத்தவர்களும் வந்திருந்தார்கள்.அனைத்துலக சமூகத்தின் பிரதிநிதிகளும் வந்திருந்தார்கள். ஐநாவின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அல்லது தன்னிச்சையான கடத்தல்கள் தொடர்பான சிறப்புப் பணிக்குழுவின் (UN WGEID) ஐந்து சுயாதீன நிபுணர்களில் ஒருவரான மெக்சிகோவைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்டத்தரணியான   எம்எஸ். அனா லோரெனா டெல்காடிலோ பெரெஸ் (Ms. Ana Lorena Delgadillo Pérez) வந்திருந்தார்.சர்வதேச மன்னிப்பு சபையின் தென்னாசிய பிராந்தியப் பொறுப்பாளரான ஸ்மிருதி சிங்  வந்திருந்தார்.அமெரிக்க ஓஸ்ரேலிய,சுவிட்சர்லாந்து தூதரகங்களின் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள்.நாடாளுமன்ற உறுப்பினர்கள்,கட்சிப் பிரமுகர்கள்,சிவில் சமூகத்தவர்கள்,கருத்துருவாக்கிகள் வந்திருந்தார்கள்.

மாநாடு தொடங்க முன்பு,தமிழாராட்சிப் படுகொலை நினைவுச் சின்னத்திலிருந்து  தீப்பந்தம் ஏந்திய மக்களோடு ஒரு வாகன ஊர்தி புறப்பட்டு யாழ் நகரப் பகுதியூடாக நகர்ந்து தந்தை செல்வா கலையரங்கை வந்தடைந்தது.இந்த ஊர்வலத்தில் ஒரு பாரம் தூக்கி வாகனத்தில் ஒரு வெள்ளை வான் வைக்கப்பட்டிருந்தது.அந்த வெள்ளை வானின் உடல் முழுவதும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஒளிப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன.அது ஓர் அருமையான கற்பனை.அது போலவே மாநாட்டு மண்டபத்தின் அரங்கில் இரண்டு ரத்தம் வடியும் பாதங்கள் வைக்கப்பட்டிருந்தன.பின்னணியில் தமது பிள்ளைகளுக்காகப் போராடி இதுவரை உயிர் நீத்த 200க்கும் குறையாத அம்மாக்கள் அப்பாக்களுடைய ஒளிப்படங்கள் அடங்கிய இரண்டு தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.

மேடை ஒழுங்கமைப்பும்,நிமிர்ந்திருக்கும் இரண்டு பாதங்களும்,வெள்ளை வானும்  கலைத்துவமாக உருவாக்கப்பட்டிருந்தன.தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் எதிர்ப்பை நீதிக்கான கோரிக்கையை கலாபூர்வமாக வெளிப்படுத்துகிறார்கள் என்பதை அவை காட்டின.அதேபோல மாநாட்டில் பேசிய பாதிக்கப்பட்ட அம்மாக்களின் அறிக்கைகளும் நன்கு திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டவைகளாக காணப்பட்டன.அங்கேயும் வார்த்தைகள் கலாபூர்வமாக கையாளப்பட்டிருந்தன.

வெளிநாட்டு பிரதிநிதிகள் உரையாற்றினார்கள்.உள்நாட்டு மக்கள் பிரதிநிதிகளும் உரையாற்றினார்கள்.அரசியல் ஆய்வாளர் ஒருவரும் உரையாற்றினார்.அம்மாக்கள் மத்தியில் இருந்தும் பிரதிநிதிகள் உரையாற்றினார்கள்.தமிழ் மக்கள் சார்பில் உரையாற்றிய அனைவருமே அனைத்துலக விசாரணையை கேட்டார்கள். யாருமே உள்நாட்டு விசாரணை பொறிமுறையை ஏற்றுக்கொள்ளவில்லை.

அனைத்துலக பிரதிநிதிகளில் குறிப்பாக ஐநாவின் ராஜதந்திரி ஆகிய அனா லொரீனா  உரையாற்றும்போது,விடுதலைப்புலிகள் இயக்கத்தால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டினார்.சர்வதேசத் தரநிலைகளுக்கு ஏற்ப அவை முறையாக விசாரிக்கப்பட்டு,உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

வெளிநாட்டு பிரதிநிதிகளின் உரைகளுக்கு மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது.இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன.மாநாடு முடிந்த பின் மண்டபத்தின் ஒரு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய நினைவு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

அனைத்துலக நாள் ஒன்றை அனைத்துலக மாநாடாக ஒழுங்குபடுத்தியமை என்பது முக்கியமானது. அதுவும் பெருமளவுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் பங்கு பற்றிய ஒரு மாநாட்டில் அனைத்துலகப் பிரதிநிதிகளைப் பேச வைத்தமை முக்கியமானது. அந்த அனைத்துலகப் பிரதிநிதிகளின் முன்னிலையில் தமிழ் மக்கள் அனைத்துலக விசாரணைப் பொறிமுறையைத்தான் கேட்கின்றார்கள் என்பது உரத்துச் சொல்லப்பட்டதும் முக்கியமானது.

அந்த மாநாட்டுக்கு பெரும்பாலான கட்சிப் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சிறீதரனும் இரண்டு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வந்திருந்தார்கள்.தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் பதில் செயலாளரும் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்கள்.அம்மாக்கள் கூறுகிறார்கள்,தாங்கள் கட்சியின் பதில் தலைவருக்கு அழைப்பைக் கொடுத்ததாக.

யாழ்ப்பாணத்தில் இவ்வாறு ஓர் அனைத்துலக மாநாடு நடைபெற்ற அதே காலப்பகுதியில்,கிளிநொச்சியில் மற்றொரு நிகழ்வு நடந்தது.அது சிறிய அளவில் நடந்தது.அதுவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அம்மாக்களின் நிகழ்வுதான்.நாடாளுமன்ற உறுப்பினர் சிறீததரன் அங்கேயும் காணப்பட்டார்.அனைத்துலக மன்னிப்புச் சபையின் தென்னாசியப் பிராந்தியப் பொறுப்பாளரும் அங்கே காணப்பட்டார்.கொழும்பில் உள்ள சுவிற்ஸலாந்து தூதரகத்தின் பிரதிநிதி ஒருவரும் அங்கே காணப்பட்டார்.சிங்கள மனித உரிமைச் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோவும் காணப்பட்டார்.இவர்கள் அனைவரும் சில அம்மாக்களும் அந்த நிகழ்வு முடிந்தபின் அங்கிருந்து வந்து யாழ்ப்பாணத்து மாநாட்டிலும் கலந்து கொண்டார்கள்.

கிளிநொச்சி  மாநாட்டில் ஒருவர் அந்த மாநாட்டைக் குழப்பும் விதமாக கெட்ட வார்த்தைகளை உரத்துப்பேசியதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.அவ்வாறு பேசியவர் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அம்மாக்களின் சங்கங்களை சேர்ந்த ஒரு பெண்ணுடைய கணவர் என்றும் கூறப்படுகிறது. அவர் அந்த நிகழ்வின் அமைதியைக் குழப்பம் விதத்திலும் அந்த நிகழ்வின் மாண்பைக் குழப்பும் விதத்திலும் நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு உண்டு.அம்மாக்களின் சங்கங்களுக்கு இடையில் காணப்படும் பிளவையும் முரண்பாடுகளையும் அது பிரதிபலித்தது.அங்கெ நடந்தவற்றை அனைத்துலக மணிப்புச் சபையின் பிரதிநியும்,சுவிற்ஸலாந்து தூதரகத்தைச் சேர்ந்த ஒருவரும் சிங்கள மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவரும்  பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த இரண்டு கூட்டங்களுக்கும் ஐந்து நாட்கள் முன்னதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் அம்மாக்களின் மீது போலீசார் பலப் பிரயோகத்தை மேற்கொண்டார்கள்.அந்தக் கூட்டத்தை ஒழுங்கு படுத்தியது அரசாங்கத்தின் ஓஎம்பி என்று அழைக்கப்படுகின்ற காணாமல் போனோருக்கான அலுவலகம் ஆகும்.அந்த அலுவலகத்தை அம்மாக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.அந்த அலுவலகத்தின் நிகழ்வைப் புறக்கணித்து அவர்கள் மாவட்டச் செயலகத்தின் வாசலில் எதிர்ப்புக் காட்டினார்கள்.அதே சமயம் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 362 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஓஎம்பியும் அரசாங்கத்தின் அமைச்சர்களும் நிவாரணம் வழங்கினார்கள்.நிதி உதவிகளைச் செய்தார்கள்.பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஒரு பகுதியினர் ஓஎம்பியினால் கையாளப்படுகிறார்கள் என்பதனை அது காட்டியது.காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி தொடர்பான விடயங்களைக் கையாளும் அமைச்சு மற்றும் ஓஎம்பிக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதை அது காட்டியது.

எனவே கடந்த வாரம் நடந்த மூன்று நிகழ்ச்சிகளையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது தெளிவாகத் தெரிவது என்னவென்றால்,காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காக  போராடும் அமைப்புகள் மத்தியில் முரண்பாடுகள் உண்டு;அந்த முரண்பாடுகளை வெளிச் சக்திகள் ஊக்குவிக்கின்றன;கையாள முற்படுகின்றன.அதுமட்டுமில்லை,அம்மூன்று நிகழ்வுகளும் தமிழ்த் தேசிய அரசியலில் கட்சிகளுக்கு உள்ளேயும் கட்சிகளுக்கு வெளியேயும் காணப்படும் முரண்பாடுகளையும் பிரதிபலித்தன.இந்த விடயத்தில் சிவில் சமூக அமைப்புகளுக்கு இடையேயும் ஒருங்கிணைந்த முடிவுகள் இல்லைத்தான். ஆனாலும் பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டம் என்ற அடிப்படையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது எல்லாருக்குமான பொதுக் கொள்கை என்று அடிப்படையில் சிவில் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் முரண்பாடுகளைக் கடந்து அங்கே குழுமியிருந்தார்கள்.எனினும் தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் உட்போட்டியை அந்த நிகழ்வுகள் பிரதிபலித்தன.

கடந்த 17ஆண்டுகால தமிழ் அரசியலில் உணர்ச்சிகரமான முன்னணிப் போராளிகளாக மேற்படி அம்மாக்கள்தான் காணப்படுகிறார்கள்.அம்மாக்களை தமிழ்த் தேசியக் கட்சிகளோ அல்லது தமிழ் சிவில் சமூகங்களோ ஒருங்கிணைக்கவில்லை.மாறாக புலம்பெயர்ந்த தரப்புகளின் உதவிகளோடு அம்மாக்கள் போராடி வருகிறார்கள்.கொழும்பில் உள்ள சில தூதரகங்களும் அம்மாக்களுக்கு ஆதரவாகக் காணப்படுகின்றன.கடந்த 30ஆம்திகதி நடந்த நிகழ்வுகள் அம்மாக்களின் போராட்டதுக்குள்ள அனைத்துலகப் பரிமாணத்தைப் பிரதிபலித்தன.அதேசமயம்,அம்மாக்களுக்கிடையிலான முரண்பாடுகளையும், கட்சிகளுக் கிடையிலான முரண்பாடுகளையும்,கட்சிகளுக்குள் காணப்படும் முரண்பாடுகளையும் பிதிபலித்தன.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *