

“அமைதியான காலத்தில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை அடக்கம் செய்கிறார்கள்; ஆனால் போர்க் காலத்தில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அடக்கம் செய்கிறார்கள்” இது கிரேக்க வரலாற்று அறிஞர் ஹெரோடோடஸ் கூறியது.ஈழத் தமிழர்களுக்கும் இது பொருந்தும்.
வயதாகி முதுமை கண்டு இறந்து போகும் தமது பெற்றோருக்கு பிள்ளைகள் இறுதிக் கிரியைகளை செய்வது சுமுகமான ஒரு காலம்.போருக்குப் போன அல்லது போரில் சிக்கி உயிரிழந்த பிள்ளைகளுக்கு பெற்றோர் இறுதிக் கிரியைகளைச் செய்வது போர்க்காலம். ஆயின் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் படத்தை ஏந்தியபடி அம்மாக்கள் தெருக்களில் நிற்பது எந்த காலம்?
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறுவதுபோல, இது இனவாதம் இல்லாத காலமா? தமிழ் மக்கள் அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நம்பிப் பின் தொடரும் ஒரு காலமா?
அண்மையில் ஒரு சிங்களப் பெண் மருத்துவர் சொன்ன கதை வருமாறு… யாழ்ப்பாணத்தில் உள்ள பெரிய ஆஸ்பத்திரி ஒன்றில் ஒரு முதியவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் பெரும்பாலும் தப்ப மாட்டார் என்று மருத்துவர்கள் முடிவு செய்தார்கள்.இது அவருக்குத் துணையாக நின்ற அவருடைய முதிய மனைவிக்கும் கூறப்பட்டது. அந்த முதிய தாய் இந்த மருத்துவரிடம் கேட்டார், “இவரை நோயாளர் காவு வண்டிமூலம் எனது மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மாற்றுவீர்களா? ஏனென்றால் இங்கிருந்து இவருடைய உடலை எனது கிராமத்துக்கு காவிச்செல்ல பெருந்தொகை செலவாகும்.என்னுடைய மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரியிலிருந்து எனது கிராமத்துக்குக் கொண்டுபோக குறைந்த காசுதான் தேவைப்படும். அதனால் தான் அப்படி கேட்கின்றேன்” என்று. அப்பொழுது அந்த மருத்துவர் அந்த முதிய தாயின் குடும்ப விவரங்களைக் கேட்டிருக்கிறார். அவர்களுக்கு ஒரே ஒரு மகன்.அவர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு விட்டார். இப்பொழுது அவர்கள் இருவரும் துணைக்கு இரண்டு நாய்களை வளர்க்கிறார்கள். தனது கணவர் ஒரு படுக்கை நோயாளி என்ற போதிலும் அவர் உயிரோடு இருக்கும்வரை தான் தனிமையை உணர்வதில்லை என்றும்,அவர் இறந்து போனால் தானும் இரண்டு நாய்களும் மட்டுந்தான் என்றும் அந்த அம்மா கூறியிருக்கிறார்.
இது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஒரு பிள்ளையின் தாயுடைய கதை. இப்பொழுது தமது பிள்ளைகளின் ஒளிப்படங்களை ஏந்தியபடி நீதி கேட்கும் அம்மாக்களிடம் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொல்வார்கள். “புள்ளிவிவரங்கள் இரத்தம் சிந்துவதில்லை;விவரங்களே முக்கியம்” என்று ஆர்தர் கோஸ்ற்லர் கூறுவார். ஏனென்றால் புள்ளி விபரங்களில் காணப்படுவது எண்ணிக்கையைக் காட்டும் தானங்கள் மட்டுமல்ல,அவை ரத்தம்வடியும் கதைகள். அவற்றைத் தானங்களாக அனைத்துலக சமூகத்திடம் கொடுப்பதை விடவும் அந்த ஒவ்வொரு தானத்துக்குள்ளும் இருக்கும் கதைகளை கலைப் படைப்புக்களாக வெளியே கொண்டுவந்தால் அது உணர்வுபூர்வமாக உரையாடும்;உலக சமூகத்தின் மனசாட்சியை உலுப்பும்.
தமக்கு நடந்தது இன அழிப்பு என்று கூறும் ஈழத் தமிழர்கள் அந்த இன அழிப்பை நிரூபிக்கும் உலகத்த தரத்திலான எத்தனை திரைப்படங்களை இதுவரை தயாரித்திருக்கிறார்கள்? அந்தக் கதைகளை திரைப்படமாக்கலாம்;கதையாக்கலாம்;கவிதையாக்கலாம்; ஓவியம் ஆக்கலாம்; நாடகமாக்கலாம். தமிழ் மக்கள் மத்தியில் உள்ள காணொளிப் பிரபல்யங்கள் குறைந்தபட்சம் வாரம் ஒரு கதையையாவது வெளியே கொண்டு வரலாம். அந்தக் கதைகளுக்கு அரசியல் பெறுமதியும் உண்டு;சமகாலப் பெறுமதியும் உண்டு;சந்தைப் பெறுமதியும் உண்டு.ஆனால் எத்தனை யுரியூப்பர்கள் அவற்றைக் கதையாக்குகிறார்கள்?
யாழ்ப்பாணம் கோவில் வீதியில் “ஹெரிடேஜ் ஹோட்டலுக்கு” அருகே ஓர் ஆவணக் காப்பகம் உண்டு”.ஸ்ரீலங்காவின் சமகால கலை,கட்டிடக்கலை, வடிவமைப்பு என்பவற்றுக்கான காப்பகம்” என்று அழைக்கப்படுகின்ற அந்த கட்டிடத்தில்,நிரந்தரமாக ஓர் ஓவியக் காட்சியகம் கடந்த பல மாதங்களாக இயங்கிவருகிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டு காலப் பகுதிக்குள் வெவ்வேறு தலைமுறைகளை சேர்ந்த தமிழ் ஓவியர்கள் வரைந்த ஓவியங்கள் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.தமிழ்ப் பகுதிகளில் காணப்படும் ஒரே ஒரு நிரந்தர ஓவியக் காட்சியகம் அது.குடா நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் குறிப்பாக ராஜதந்திரிகள் அந்த காட்சியகத்துக்கு வருகிறார்கள்.
அண்மையில் பிரிட்டிஷ் தூதுவர் அங்கே போயிருந்தார். அங்குள்ள மூன்று தலைமுறை ஓவியங்களில் பெரும்பாலானவை இன முரண்பாடுகளோடு தொடர்புடையவை. புள்ளி விபரங்களைவிட அந்த ஓவியங்கள் உணர்வு பூர்வமாக உரையாடுகின்றன. இதுபோல வெளிநாட்டவருக்கு தமது கண்ணீர்க் கதைகளை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் எத்தனை ஏற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு?
அண்மையில் தென்னிலங்கையில் உள்ள பிரபல்யமான அதேசமயம் தமிழ் மக்களுக்கு நெருக்கமான திரைப்பட நெறியாளர் பிரசன்ன விதானகே யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார்.செம்மணி தொடர்பாக அவர் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க இருப்பதாக தகவல். அதற்கு நிதி உதவி செய்வது யார் தெரியுமா? ஒரு சிங்களப் பெண்மணியாம். செம்மணியில் அகழ்ந்து எடுக்கப்படும் எலும்புக்கூடுகளின் ஒளிப்படங்கள் காணொளிகளைக் கண்டு அந்தப் பெண்மணி,அது தொடர்பான ஒரு திரைப்படத்தை தயாரிக்குமாறு பிரசன்ன விதானகேயை கேட்டதாக ஒரு தகவல்.
புதைகுழிகள் தொடர்பாக படங்களைத் தயாரிக்குமாறு பிரசன்ன விதானகே போன்ற சிங்கள நண்பர்களையும் தமிழ்த் திரைக் கலைஞர்களையும்,முதலீட்டாளர்களையும் ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பு தமிழ்ச் சமூகத்துக்கு உண்டு.கோடம்பாக்கத்தின் வணிக சினிமா தொழில்துறைக்குள் கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் தமிழ் முதலாளிகள் இந்த விடயத்தில் தமது காசில் ஒரு கொஞ்சத்தையாவது நீதிக்கான போராட்டத்தின் பக்கம் ஏன் திருப்பக்கூடாது? சோமிதரனின் “நீளிரா” படத்துக்கு இந்தியரான கார்த்திக் சுப்புராஜ் முதலீடு செய்திருக்கிறார்.
ஒரு சிங்களப் பெண் ஒரு பிரபல இயக்குனரை அணுகி செம்மணி தொடர்பாக ஒரு படத்தைத் தயாரிக்குமாறு கேட்கிறார்.ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதையை கலையாக்க வேண்டிய பொறுப்பு யாருடையது? அதற்கு நிதி உதவி செய்ய வேண்டியது யார்?
நீதிக்கான போராட்டத்தில் தமிழ் மக்கள் பொருத்தமான விதங்களில் முன்னேறியது போதாது என்பதற்கு இது ஒரு சான்று. தமது துயரக் கதைகளை இப்பொழுதும் புள்ளி விபரங்களாக முன்வைக்கும் தமிழ் மக்கள் அதையே கலையாக்கம் செய்தால் அது உலக சமூகத்தின் அபிப்பிராயத்தை நொதிக்கச் செய்யும்.
நீதிக்கான போராட்டத்தில் இதுவரையிலும் 200க்கும் குறையாத தாய்மார்கள் தந்தைமார்கள் முதுமையினாலும்,நோய்களினாலும்,நீதி கிடைக்காது என்ற விரக்தியாலும்,ஏக்கத்தினாலும் இறந்து போய்விட்டார்கள்.அவர்கள் மட்டும் இறக்கவில்லை. அவர்களோடு சேர்ந்து பல கதைகளும் இறந்து போய்விட்டன.
தனது பிள்ளையின் படத்தை ஏந்திக் கொண்டு கண்ணீரோடு நிற்கும் கடைசித் தாயும் இறந்து போய்விட்டால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் படிப்படியாகக் கூர்மையிழந்து விடும் என்று அரசாங்கம் நம்பக்கூடும். அதேசமயம் தன் பிள்ளையின் ஒளிப் படத்தை ஏந்தி கொண்டு ஒரு தாயாவது தெருவில் நிற்கும்வரை, இலங்கைதீவில் சமாதானம் ஏற்பட்டுவிட்டது;நல்லிணக்கம் பிறந்து விட்டது;இனவாதம் இறந்துவிட்டது என்று யாரும் வகுப்பெடுக்க முடியாது.



