ஐநாவின் 63ஆவது கூட்டத் தொடர் கடந்த 7ஆம் திகதி தொடங்கியது.தொடரை முன்னிட்டு கடந்த மூன்றாம் திகதி வெளியிடப்பட்ட மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.. “அனைத்துத் தரப்பினராலும் இழைக்கப்பட்ட சர்வதேச சட்டத்தின் கீழான குற்றங்கள், பெரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கடுமையாக மீறப்பட்டமை ஆகியன எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை அவற்றுக்கு பொறுப்பு கூறப்படவும்” இல்லை.
மேற்கண்ட அறிக்கை வெளியிடப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, உலகப்பொது நிறுவனங்களில் ஒன்றாகிய மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின்( Human Rights watch)அறிக்கை வெளிவந்தது.அந்த அறிக்கை பின்வருமாறு கூறுகிறது.அரசாங்கம் “நீதியின் விடயத்தில் நேர்மையாக இல்லை” என்று.தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளிலும் நாட்டின் மிக மோசமான பல வழக்குகளை மீண்டும் திறந்துள்ளது.எனினும் அந்த வழக்குகளை இன்றுவரை முடிக்கவில்லை” என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேற்கண்ட அறிக்கைகள் நமக்கு எதனை உணர்த்துகின்றன? கடந்த 17 ஆண்டுகளாக இலங்கைத் தீவு இறந்த காலத்துக்குப் பொறுப்புக் கூறவில்லை என்பதைத்தான்.இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால்,2009 மே 18க்குப் பின், அப்போது இருந்த ஐநா பொதுச் செயலாளர் கொழும்புக்கு வருகை தந்தபோது,அப்போது இருந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அவருக்கு கொடுத்த வாக்குறுதிகளின் பிரகாரம் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறவில்லை என்பதைத்தான்.கடந்த 17ஆண்டுகளிலும் ராஜபக்சக்கள் மட்டுமல்ல,ரணில் விக்கிரமசிங்க,மைத்திரிபால சிறிசேன,அனுர குமார… யாருமே பொறுப்புக்கூறவில்லை என்பதுதான் உண்மை.
குறிப்பாக 2015இல் தமிழ்,சிங்கள,முஸ்லிம் மக்களின் ஆதரவோடு நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தின் பின்,அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் இன்றுவரை பொறுப்பு கூறவில்லை.இதை இன்னும் விரிவாகச் சொன்னால் அந்த தீர்மானமானது பொறுப்புக் கூறலுக்கானது.அதாவது நிலை மாறுகால நீதிக்கானது.அந்தத் தீர்மானத்தை அப்போது இருந்த மைத்திரி-ரணில் அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொண்டது.தான் இணை அனுசரணை வழங்கிய ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் கடந்த சுமார் 11 ஆண்டுகளாக இலங்கை அரசாங்கம் கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் பொறுப்புக் கூறவில்லை.இதை இன்னும் ஆழமான கோட்பாட்டு வார்த்தைகளில் சொன்னால்,கடந்த 11 ஆண்டுகளில் அனைத்துலக சமூகத்துடன் தான் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் தொடர்ச்சியாக வந்த எந்த ஓர் இலங்கை அரசாங்கமும் பொறுப்புக் கூறவில்லை.
இது ஒரு ராஜபக்ச குடும்பத்தின் அல்லது ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அல்லது அனுர குமாரவின் தனிப்பட்ட பொறுப்புக் கூறாமை அல்ல.இது சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பின் பொறுப்புக் கூறாமை.அவ்வாறு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பைப் பொறுப்புக்கூற வைப்பதில் ஐநா கடந்த 17 ஆண்டுகளாக அதிலும் குறிப்பாக,2015 நிலைமாறு கால நீதிக்கான தீர்மானத்தின் பின்னரான 11ஆண்டுகளில் பின்னடைவைக் கண்டுள்ளது என்பதுதான் உண்மை.
நிலைமாறு கால நீதியின் தமிழ்ப்பங்காளியாகிய சுமந்திரன் கடந்த 2021ஆம் ஆண்டு,வவுனியாவில் நடந்த ஒரு கூட்டத்தில் கூறியதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அந்தக் கூட்டம் அப்பொழுது நடக்கவிருந்த ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரை முன்னிட்டு தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டுக் கடிதம் ஒன்றைத் தயாரிக்கும் நோக்கத்தோடு கூட்டப்பட்ட இரண்டாவது கூட்டம் ஆகும்.அந்தக் கூட்டத்தில் சுமந்திரன் கூறினார் “6 ஆண்டுகளாக ஒரு பரிசோதனை செய்தோம்,அதில் தோல்வி அடைந்து விட்டோம்” என்று.அந்த பரிசோதனைதான் நிலைமாறு கால நீதியாகும்.அதாவது நிலை மாறு கால நீதியின் தமிழ்ப் பங்காளியாகிய சுமந்திரன் அது ஒரு தோல்வியுற்ற பரிசோதனை என்று கூறினார்.
நிலை மாறுகால நீதி இலங்கைத் தீவில் தோல்வியுற்ற ஒரு பரிசோதனை என்பதற்கு அதைவிட வேறு கூர்மையான உதாரணங்களைக் கூறலாம். முதலாவது உதாரணம்,நிலைமாறு கால நீதியின் பெற்றோறில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேன 3ஆண்டுகளில் தன் குழந்தையைக் காட்டிக் கொடுத்தார்.அவர் ராஜபக்ஷங்களோடு இணைந்து ஒரு யாப்புச் சதி முயற்சியில் ஈடுபட்டார்.அதாவது இலங்கைத் தீவை பொறுப்புக்கூற வைப்பதற்கான செயற்பாடுகளின் பிரதான பங்காளியாகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்தச் செயற்பாடுகளில் இருந்து பின்வாங்கினார்.அனைத்துலக சமூகம் ஒன்றுக்கு தான் வழங்கிய வாக்குறுதிகளைத் தானே விழுங்கி நிலைமாறு கால நீதியைக் காட்டிக் கொடுத்தார்.இது முதலாவது உதாரணம்.
அடுத்த உதாரணம் ஈஸ்டர் குண்டு வெடிப்பு. ஈஸ்டர் குண்டு வெடிப்பானது நிலைமாறு கால நீதியின் தோல்வியின் விளைவு எனலாம்.நிலை மாறுகால நீதி செய்முறைகள் நாட்டில் அமுலில் இருந்த ஒரு காலகட்டத்தில் தான் ஈஸ்டர் குண்டுகள் வெடித்தன.எனவே நிலைமாறு கால நீதியின் இயலாமையை தோல்வியை அந்த குண்டு வெடிப்புகள் ரத்தம் சிந்தி நிரூபித்தன.
நான்காவது உதாரணம்,மிகவும் பிந்தியது;இப்பொழுது நடந்து கொண்டிருப்பது.இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தைச் புதுப்பிக்க முயற்சிக்கின்றது.அந்த அடிப்படையில் “பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தைக் காப்பாற்றும்” சட்டமூலம் கடந்த மாதம் அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து விடுவித்து விட்டதாகக் கூறும் அரசாங்கங்கள் எதற்காக தொடர்ந்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் புதுப்பிக்க வேண்டும்? நிலைமாற்றம் ஏற்பட்டுவிட்டது என்றால் பிறகு எதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டம்? நிலைமாறு கால நீதியின் ஆகப் பிந்திய தோல்வி அது.
மேற்கண்ட நான்கு உதாரணங்களும் ஐநாவின் இலங்கையைப் பொறுப்புக் கூற வைப்பதற்கான திட்டம் தோல்வி அடைந்ததைக் காட்டுகின்றன.அதற்குப் பொறுப்பு,இலங்கைத் தீவின் சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பு மட்டுமல்ல. அதைவிட முக்கியமாக ஐநாவும்தான்.ஏனென்றால் நிலைமாற்றம் ஏற்படாத ஒரு நாட்டில் நிலைமாறு கால நீதியை ஸ்தாபிக்க முயன்றமைதான் அந்தத் தவறுக்கு அடிப்படைக் காரணம்.
தென்னாபிரிக்காவில் நிலைமாற்றம் ஏற்பட்டிருந்தது.அங்கே பெரும்பான்மை கருப்பின மக்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தது. அந்த நிலை மாற்றத்தின் பின்னணியில் அங்கே நல்லிணக்கப் பொறிமுறைகள் ஒப்பிட்டுளவில் வெற்றி பெற்றன.ஆனால் இலங்கைத் தீவிலோ போரில் விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதை வைத்துக்கொண்டு அதனை ஒரு நிலை மாற்றமாக எடுத்துக்கொண்டு,ஐநா நிலைமாறு கால நீதியை இலங்கைக்கு பரிந்துரைத்தது. ஆயுதப் போராட்டத்தை தோற்கடித்ததை நிலைமாற்றம் என்று ஐநா ஏற்று கொண்டதா?
ஆயுதப் போராட்டம் எனப்படுவது ஒரு மூல காரணம் அல்ல. அது விளைவு. இன ஒடுக்கு முறையின் விளைவுதான்.2009இல் தோற்கடிக்கப்பட்டது விளைவுதான். மூல காரணம் அல்ல.மூலகாரணம் அப்படியே மாறாமல் இருந்த காரணத்தால்தான்,மைத்திரிபால சிறிசேன அதற்குப் பயந்து அப்பத்தைச் சாப்பிட்டுவிட்டு நிலைமாறு கால நீதியைக் காட்டிக்கொடுத்தார்.
மூல காரணம் அப்படியே மாறாமல் இருந்த காரணத்தால்தான்,ஈஸ்டர் குண்டுகள் வெடித்தன.அந்தக் குண்டு வெடிப்பின் பின்னரான உணர்ச்சிகரமான அரசியல் சூழலில்,ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்தது.
மூல காரணம் அப்படியே உள்ளபடியால்தான்,பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் புதுப்பிக்க வேண்டிய தேவை வந்தது.புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உருவாக்க வேண்டி வந்தது.மாற்றத்தை வாக்களித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தியாலும் அந்த மூல காரணத்தை மாற்ற முடியவில்லை என்பதை அது காட்டுகிறது.
இவ்வாறு மூல காரணம் அப்படியே இருக்கத்தக்கதாக, விளைவின் தோல்வியை வைத்துக்கொண்டு, நாட்டில் நிலை மாற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கணித்தமை ஐநாவின் தவறு.இது ஐநா அதாவது அனைத்துலக சமூகம் தெரியாமல் செய்த தவறு அல்ல.தெரிந்து செய்த தவறு.தமிழ்மக்களுக்கு அவர்கள் தரக்கூடிய நீதியின் வரையறையை உணர்த்துவது அது.
எனவே இப்பொழுது ஐநா மனித உரிமைச் செயலாளருடைய அறிக்கைகளும் சரி,ஏனைய அனைத்துலக நிறுவனங்களின் அறிக்கைகளும் சரி, சுட்டிக்காட்டுகின்ற போதாமைகள்,தவறுகள்,பின்னடைவுகள் போன்றவற்றுக்கு ஐநாவும் உட்பட உலக சமூகமும் பொறுப்பு.
இந்தப் பொறுப்பின்மைக்கு பலியாடுகள் ஆக்கப்படுவது தமிழ்மக்கள்தான். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த சுமார் இரண்டு ஆண்டு கால பகுதிக்குள் ஊழல் முறைகேடு போன்ற குற்றச் செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.அதில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தை ஐநா,மனித உரிமைகள் காப்பகம் போன்றன ஏற்றுக்கொள்கின்றன.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டில் யார் யாருக்கு எதிராக,என்னென்ன குற்றங்களுக்கு எதிராக,வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன என்ற தொகுத்துப்பார்த்தால்,அவற்றில் பெரும்பாலானவை இன முரண்பாடு சம்பந்தப்படாத வழக்குகள்தான். அதாவது இன முரண்பாடுகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் அரசாங்கம் கை வைக்கவில்லை.இந்த விடயத்தில் அவர்களிடம் ஓர் அரசியல் தெரிவு உண்டு. அந்தத் தெரிவுதான் இனவாதம்.ஆனால் அண்மையில் பேருவளையில் மக்களை சந்தித்தபோது ஜனாதிபதி என்ன கூறினார் தெரியுமா? இலங்கைத் தீவின் நவீன வரலாற்றிலேயே இனவாதம் இல்லாத காலம் கடந்த இரண்டு ஆண்டுகள்தான் என்று.
எனவே இதில் ஐநாவும் கூட்டுப் பொறுப்பாளி.நிலைமாறு கால நீதி இலங்கைத் தீவில் தோல்வியடைந்து விட்டது என்பதனை அதன் தமிழ் பங்காளியே கூறிவிட்டார்.எனவே இனியும் ஐநா நிலை மாறுகால நீதிச் செய்முறைகளைத் தொடர முடியாது.மாறாக இலங்கை அரசாங்கங்களைப் பொறுப்புக்கூற வைப்பதற்கான புதிய ஏற்பாடுகளையும் பொறிமுறைகளையும் குறித்துச் சிந்திக்க வேண்டியுள்ளது.உதாரணமாக இப்போது ஆட்சியில் இருக்கும் என்.பி.பிஅரசாங்கம் உலக வங்கி,பன்னாட்டு நாணய நிதியம் போன்றவற்றின் நிகழ்ச்சி நிரல்களுக்கு உட்பட்டிருக்கிறது.இந்த விடயத்தில் நிதி உதவிகளையும் பொறுப்புக்கூறலையும் பிரிக்கப்படவியலாதபடி இணைப்பதற்கு உலக சமூகத்தால் முடியும்.ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை.செய்ய முடியவில்லையா? செய்ய விரும்பவில்லையா?





