இரண்டு ஆண்டுகளில் மாற்றப்படாத சின்னச்சின்ன விசயங்கள்

இம்மாதத் தொடக்கத்தில்,ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளிவந்தன.”பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் குழந்தைகளை உடல் ரீதியாகத் தண்டிக்கும் அல்லது உளவியல் ரீதியாகத் துன்புறுத்தும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்”என்று பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரித்துள்ளது.”தேர்வு முடிவுகள் தொடர்பான தகவல்களை,குழந்தைகளுக்குச் சங்கடத்தையோ,மன உளைச்சலையோ அல்லது அசௌகரியத்தையோ ஏற்படுத்தக்கூடிய வகையில் வெளியிடுவதையோ அல்லது பரப்புவதையோ தவிர்க்குமாறு ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகப் பயனர்களை”அது எச்சரித்துள்ளது.”இத்தகைய செயல் குழந்தைகளைத் துன்புறுத்துவது தொடர்பான குற்றமாகக் கருதப்படக்கூடும் என்று கூறியுள்ள அமைச்சு, இதற்குப் பொறுப்பானவர்கள் மீது சட்டப்படி எடுக்கக்கூடிய அதிகபட்ச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றும் எச்சரித்துள்ளது.

நல்ல விடயம்.வரவேற்க வேண்டும்.அதேசமயம் பரீட்சையில் சித்தி பெறாத பிள்ளையை தண்டிப்பது மட்டுமல்ல,அதைவிட ஆழமான உளவியல் அர்த்தத்தில்,சித்திபெற்ற பிள்ளையை அளவுக்குமிஞ்சிப் போற்றுவதும் சித்தி பெறாத பிள்ளையைத் துன்புறுத்தும்தான்.

ஆனால் அதற்காக போட்டியில் வென்ற பிள்ளையை பாராட்டாமல் விட முடியுமா? தேசிய மட்டப் போட்டியில் வெற்றி பெற்ற அதனுடைய உழைப்பைப் பாராட்ட வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்ப்பார்கள்தானே? போட்டி என்று வந்தால் பாராட்டும் இருக்கும்;திட்டலும் இருக்கும்.எனவே இங்கே முதலில் நிறுத்தப்பட வேண்டியது போட்டியை;போட்டிப்பரீட்சையை.

போட்டிப்பரீட்சையை மட்டுமல்ல,எந்தப்பள்ளிக்கூடத்தில் பிள்ளையைச் சேர்ப்பது என்ற போட்டியை நிறுத்தவேண்டும்.இதை மேலும் ஆழமாகச் சொன்னால் பள்ளிக்கூடங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வை நீக்க வேண்டும்.குறிப்பிட்ட சில பள்ளிக்கூடங்களை நோக்கி பெற்றோர் பிள்ளைகளை கொண்டு வரும்போது இயல்பாக அங்கே போட்டி உருவாகிறது.இந்தப் போட்டியும் புலமைபரிசில் பரீட்சை போட்டிக்கு பிரதான காரணம்.

திறமைகளின் அடிப்படையில் பிள்ளைகளுக்கு உதவுவதாக இருந்தால் அதற்கு போட்டிப் பரீட்சையை விட வேறு வழிகள் உண்டா என்று சிந்திக்கலாம்.வறுமை காரணமாக கற்க முடியாமல் இருக்கும் பிள்ளைக்கு உதவ விரும்பினால் அங்கே போட்டி தேவையில்லை.வறுமையை,குடும்ப நிலைமையை அளவுகோலாக எடுத்துக்கொண்டு பிள்ளைக்கு உதவலாம்.எனவே போட்டிப்பரீட்சை ஏன் வேண்டும் என்ற கேள்விக்கு முதலில் விடை முக்கியம்.

அந்த பரிட்சையின் உளவியல் குறித்து அந்த பரீட்சையின் உளவியல் விளைவுகள் குறித்து ஏற்கனவே உளவியலாளர்கள் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள்.தமிழ்ப் பகுதிகளில் அந்தப் பரீட்சை பிள்ளைகளுக்கு இடையிலான பரீட்சை என்பதை விடவும் பெற்றோருக்கு இடையிலான பரீட்சையாகத்தான் காணப்படுகிறது.அது பெற்றோரின் கௌரவப் போட்டியாக மாறி விட்டது.அதனால் பரிட்சையில் பிள்ளை வெற்றி பெற்றால் அதற்காக உழைத்த ஆசிரியருக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.எனக்கு தெரிந்து ஓர் ஆசிரியைக்கு தங்கச் சங்கிலிகள் வழங்கப்பட்டன.தென்னிலங்கையில் ஓர் ஆசிரியருக்கு ஒரு புதிய கார் பரிசளிக்கப்பட்டது.இந்தமுறை வலிகாமம் பகுதியில் வெற்றிபெற்ற பிள்ளையைக் கௌரவிக்க வலயக் கல்விப் பணிமனையின் அதிகாரிகள் குறிப்பிட்ட பள்ளிக்கூடத்துக்குப் போனார்கள்.எல்லாமே போட்டியின் விளைவு.எனவே முதலில் நிறுத்தவேண்டியது போட்டி மனப்பான்மையை.அதாவது போட்டிப்பரீட்சையை.

போட்டி என்று வந்தால் அது அதன் தர்க்கபூர்வ விளைவாக சந்தைக்குள் வந்துவிடும்.அது ஒரு தொழில்துறையாக வளரும்.ஐந்தாம் வகுப்பு பரீட்சை ஒரு பெரிய தொழில்துறையாக வளர்ந்துவிட்டது.தனியார் கல்விச் சந்தையில் ஏனைய தேசியமட்டப் பரீட்சைகளுக்கு தயார்படுத்தும் ஆசிரியர்களைவிட ஐந்தாம் வகுப்பு பரீட்சைக்கு தயார்படுத்தும் ஆசிரியர்கள் அதிகளவு மாதக் கட்டணத்தை பெறுகிறார்கள்.இந்தத் தனியார் தொழில் துறையுடன் மோத அரசாங்கம் தயங்குகிறதா? பொலித்தீன் தடையைப் போலவா இதுவும்?

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.இந்த இரண்டு ஆண்டுகளில் பொலித்தீன் பாவனையை நிறுத்தப்போவதாகக் கூறி கடைகளில் பொலித்தீன் பைக்கு தனியாக காசு வாங்குமாறு கூறப்பட்டது.அதனால் பேரங்காடிகளின் முதலாளிகளுக்கு லாபம் கூடுதலாகக் கிடைத்தது.ஆனால் பொலித்தீன் பாவனை நிறுத்தப்படவில்லை மட்டுமல்ல,இப்பொழுது மீண்டும் பேரங்காடிகள் கட்டணம் இல்லாமல் பொலித்தீன் பைகளை வழங்குகின்றன.

பொலித்தீன் தடையை போலத்தான் “கிளீன் ஸ்ரீலங்கா”வும்.இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தபோது ஜனாதிபதி பொதுக் கழிப்பறைகள்பற்றி அருமையான ஓர் உரையை ஆற்றினார்.அந்த உரையில் தூரப் பயணங்களின் போது பெண்கள் நீர் அருந்துவதில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.ஏனெனில் நீண்டதூரப் பயண வழிகளில் காணப்படும் பொதுக் கழிப்பறைகள் அருவருப்பானவை;எந்த ஒரு சுகாதாரத் தரத்தையும் பேணாதவை;போகும் வழி நெடுக மல நாற்றமும் சிறுநீர் நாற்றமும்.

ஆனால் அரசாங்கம் நினைத்ததுபோல அதை மாற்றியமைக்க முடியவில்லை. ஏனென்றால் அதுவும் ஓர் தொழிற்துறை சம்பந்தப்பட்ட விவகாரம்தான்.பேருந்து எங்கே நிறுத்தவேண்டும் என்பதனை எந்த அடிப்படையில் தீர்மானிக்கிறார்கள்?எந்த உணவுச் சாலையில் சுத்தமான கழிப்பறை இருக்கிறது என்று பார்த்து நிறுத்துகிறார்களா?அல்லது குறிப்பிட்ட உணவுச் சாலைக்கும் பேருந்து உரிமையாளருக்கும் அல்லது நடத்துனருக்கும் இடையிலான தொழில்சார் உறவின் அடிப்படையில் நிறுத்துகிறார்களா?

இந்த விடயத்தில் அரசாங்கம் எதிர்பார்த்த வேகத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியவில்லை.இப்பொழுதும் தூரப் பயணம் செய்யும் பெண்கள் நீர் அருந்தாமல் அல்லது குறைந்தளவு நீரை அருந்திக்கொண்டு பயணம் செய்கிறார்கள்.

அண்மையில்,கொழும்பு பெற்றாவில் அமைந்துள்ள மத்திய பேருந்து நிலையத்தில் எச்சில் துப்பிய,சிறுநீர் கழித்த 1000 பேரைக் கைது செய்த போலீசார் அவர்கள் அசிங்கப்படுத்திய இடத்தை அவர்களைக் கொண்டே துப்புரவாக்கினார்கள்.அது அருமையான வேலை.பொது இடங்களில் எச்சில் துப்பிகளையும் வாகனங்களில் பயணம் செய்யும்போது கண்ணாடியை இறக்கி எச்சிலை துப்புகிறவர்களையும் மோட்டார் சைக்கிள் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது எச்சில் துப்புகிறவர்களையும் தண்டிக்க வேண்டும்.

பொது இடங்களில் எச்சில் துப்புவது என்பது ஒரு பண்பாட்டு பிரச்சினை. அப்படித் துப்பக்கூடாது என்பது ஒரு பண்பாடாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.தன்னுடைய வீட்டின் விருந்தினர் அறைக்குள் அல்லது சாமியறைக்குள் எச்சிலைத் துப்ப யாராவது தயாரா? இல்லை.தன்னுடைய வீடடைப்போல பொது இடங்களையும் கருதுவதற்கு அதை ஒரு பண்பாடாக வளர்க்கவேண்டும்.அது ஒரு பண்பாடாக வளர்க்கப்படவில்லை என்றால் தண்டனைகள் மூலம்தான் அதனை இப்போதைக்குத் தடுக்கலாம்.

போட்டிப் பரிச்சையில் சித்தி பெறாத பிள்ளையை தண்டிக்கக்கூடாது அல்லது அதனை அவமதிக்கக்கூடாது என்பதும் ஒரு பண்பாடுதான்.அது ஒரு பண்பாடு சம்பந்தப்பட்ட கூட்டு மனோநிலைதான்.

குறிப்பிட்ட வயது வரை பிள்ளைகளுக்குப் போட்டிப் பரீட்சைகள் வைக்கப்படுவதைத் தடுத்து நிறுத்திய நாடுகள் கூறும் விளக்கத்தை இங்கே கவனிக்க வேண்டும்.யப்பான்,பின்லாந்து போன்ற நாடுகளில் உளப்பாங்கு உருவாகும் ஒரு வயதில் பிள்ளைகளைப் போட்டிக்குள் தள்ளக்கூடாது என்று அரசியல் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.போட்டிப் பரீட்சைகளால் பிள்ளைகள் மத்தியில் போட்டியும் பொறாமையும் தந்திரங்களும் கள்ளத்தனங்களும் சுயநலமும் வளரும்.இந்த மனோநிலையை சிறுபிராயத்திலேயே ஊக்குவிக்கக்கூடாது என்பது ஓர் உளவியல் தீர்மானமாக,அரசியல் தீர்மானமாக எடுக்கப்பட வேண்டும்.

எனவே பிள்ளைகளுக்கிடையே போட்டி,பொறாமை,தந்திரம் இல்லாத, கள்ளத்தனம் இல்லாத உளவியற் சூழலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பது பண்பாட்டு அரசியல் தீர்மானம்தான்.ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டுமல்ல,ஏனைய தேசியப் பரீட்சைகளிலும் போட்டியும் பொறாமையும் அதிகம்.இது பல்கலைக்கழகம் வரையிலும் வருகிறது.இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் வந்த பலர்,சில ஆண்டுகளுக்கு முன் நாட்டின் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது முதலில் தப்பி ஓடியவர்களின் பட்டியலில் காணப்பட்டார்கள்.

எனவே உளப்பாங்கு உருவாகும் காலத்தில் பரீட்சைகளை வைக்கக்கூடாது என்பது ஒரு பண்பாட்டு அரசியல் தீர்மானம்.அதுபோல பொது இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதும் ஒரு பண்பாடு.பொலித்தீன் இல்லாத ஒரு வாழ்க்கை முறையைக் கட்டியெழுப்புவதும் ஒரு பண்பாடுதான்.உள்ளூர் உற்பத்திகளை,உள்ளூர்ச் சுவையை விரும்பித் தெரிவதும் ஒரு பண்பாடுதான்.

சில நாட்களுக்கு முன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகிய பாப்பரசர்,சுற்றுச்சூழலுக்கு எதிரான நடவடிக்கைகளை,”படைத்தவருக்கும் படைப்புக்கும் எதிரான பாவம்”என்று வர்ணித்திருக்கிறார்.குறைந்தபட்சம் கடவுளுக்குப் பயந்தாவது மனிதர்கள் சூழலியல் பாவத்தைச் செய்ய மாட்டார்கள் என்று கத்தோலிக்க திருச்சபை நம்புகிறது.

ஒருவிடயத்தை பாவம் என்று கருதி அதைச் செய்யாமல் விடுவது கூட பண்பாடு சார்ந்த ஒழுக்கம்தான்.இவ்வாறு பண்பாடாகக் கட்டியெழுப்பப்பட வேண்டிய விடயங்களை ஏன் தண்டனைகளின்மூலம் கையாள வேண்டியுள்ளது? ஏனென்றால் அது நடைமுறையில் ஒரு பண்பாடாக பயிலப்படவில்லை என்பதால்.

மாற்றத்தை வாக்களித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தியானது,இரண்டு ஆண்டுகளுக்குள் பண்பாட்டு மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை.ஆனால் குறைந்தபட்சம்,சின்னச்சின்ன விடயங்களில்கூட குறிப்பாக சின்னப் பிள்ளைகளின் உளவியல் சம்பந்தப்பட்ட விடயங்களில்கூட மாற்றத்தை ஏன் ஏற்படுத்த முடியவில்லை?பத்து வயதுப் பிள்ளைக்கு ஒரு தேசிய சித்திரவதையாகக் காணப்படும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாற்று ஏற்பாடு என்ன?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *