மைத்திரேயி ராமகிருஷ்ணன் எந்த வார்த்தைகளைச் சொல்லியிருக்கக் கூடாது என்று சிங்களக் கடும்போக்காளர்கள் கருதினார்களோ,அதை அவர்களே முன்னரேவிட அதிகமாகப் பிரபல்யப்படுத்தியிருக்கிறார்கள்.அவர்கள் கொந்தளிக்கும் அளவுக்கு மைத்திரேயி என்ன சொன்னார்?
நெற்பிளிக்ஸில் அவருடைய புதிய படம் வெளிவந்தபின் அவர் வழங்கிய ஒரு நேர்காணலில்,“நான் ஒரு ஸ்ரீலங்கன் அல்ல.நான் ஓர் ஈழத் தமிழ்ப் பெண். நான் யாராக இருக்கிறேனோ அதை-ஒரு தமிழீழப் பெண்ணாக இருப்பதை-நேசிக்கிறேன்…. நான் நினைக்கிறேன்,எனது தொழில் முன்னெடுப்புக்களுக்கு ஊடாக நான் எனது அடையாளத்தை மேலும் நேசிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டேன்”…என்று சொன்னார்.இது சிங்கள இணையத் தளவாசிகளில் கடும்போக்காளர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது.அவர்கள் இரண்டு விடயங்களைச் செய்தார்கள். ஒன்று,மைத்திரேயிக்கு எதிராக வன்மத்தைக் கக்கினார்கள்.அதோடு,அவர் கடைசியாக வெளியிட்ட திரைப்படத்தின் இணைய மதிப்பீட்டைக் குறைக்கும் விதத்தில் திட்டமிட்டு உழைத்தார்கள்.
ஆனால் அவர்கள் எதைத் தடுக்க நினைத்தார்களோ,எது பரவலாகக் கூடாது என்று நினைத்தார்களோ,அதை அவர்களே பரவலாக்கியிருக்கிறார்கள்;வைரல் ஆக்கியிருக்கிறார்கள். அதனால் மைத்திரேயியை முன்னரை விட அதிக அளவு பிரபல்யப்படுத்தி இருக்கிறார்கள்.அவருடைய படத்திற்கான இணைய மதிப்பீடு அதிகரித்திருக்கிறது.
அதற்கு என்ன காரணம் ? அவருக்கு எதிராக சிங்களக் கடும்போக்குவாதிகள் தெரிவித்த கருத்துக்கள் தமிழ் இணைய உலாவிகளைக் கோபப்படுத்தி இருக்கலாம்.அதனால் அவர்கள் ஒன்றுதிரண்டு,நிறுவனமயப்பட்டு மைத்திரேயியின் புதிய படத்திற்கான இணைய மதிப்பீட்டைக் கூட்டும் விதத்தில் திட்டமிட்டுச் செயற்பட்டிருக்கலாம்.ஆனால் அவ்வாறு செயல்படுவதற்குத் தேவையான மையப்படுத்தப்பட்ட கட்டமைப்பு ஏதாவது தமிழ் மக்களிடம் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உண்டா?
அப்படி இல்லையென்றால்,அது வழமையான இணையதளப் பண்பின் ஊடாக கிடைத்த ஒரு விளைவு எனலாமா ? வழமையான இணைய ஊடகப் பண்பு எனப்படுவது பெரும்பாலும் நெகட்டிவ் ஆனதை வைரல் ஆக்குவதுதான். எது அதிகம் சர்ச்சைக்குரியதாக இருக்கிறதோ,எது அதிகம் முரணானதாக அல்லது நெக்கடிவ் ஆனதாக இருக்கிறதோ அது வேகமாக வைரல் ஆகிறது.
நல்லவை,நியாயமானவை அல்லது மகத்தானவை வைரல் ஆவதை விடவும் எதிர்மறைப் பண்புடையவை விரைவாக வைரல் ஆகின்றன.அது ஒருவகை எதிர்மறைக் கவர்ச்சி.இந்தக் கவர்ச்சி காரணமாகத்தான் பங்களாதேஷில் ஓர் எருமை வைரல் ஆகியது.அது அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் தலைமுடியை ஞாபகப்படுத்தும் தலை முடியைக் கொண்டிருந்த காரணத்தால் வைரல் ஆகியது.அப்படித்தான் இந்தியாவிலும் வேலையற்ற இளையோரை நோக்கி தலைமை நீதிபதி கரப்பான் பூச்சிகள் என்று சொல்லப்போய் அந்த நெகட்டிவ்வான குறிப்பு வைரல் ஆகியது. பின்னர் அது கட்சியாகியது.முடிவில் அது ஒரு போராட்ட சக்தியாகவும் எழுச்சி பெற்றது.
அப்படித்தான் கரூரில் விஜயின் கூட்டத்தில் நிகழ்ந்த மரணங்கள் அவருடைய தேர்தல் வெற்றிகளைப் பாதிக்கலாம் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏறக்குறைய விஜயின் பக்தர்களாகவே மாறிவிட்ட ரசிகர்கள் மத்தியில் அது விஜய் மீதான இரக்கத்தையும் அனுதாபத்தையும் தூண்டியது.
எங்கள் ஊரிலும் சுமந்திரன் அவ்வாறான எதிர்மறைக் கவர்ச்சியை அனுபவிக்கும்,ரசிக்கும் ஓர் அரசியல்வாதிதான். ஆனால் அவருக்கு அவருடைய எதிர்மறைக் கவர்ச்சி வாக்குத் திரட்சியாக மாறவில்லை.
இப்படிப்பட்டதோர் இணைய வெளி யதார்த்தத்தில்,மைத்ரேயிற்கு எதிரான சிங்கள இணைய உலாவிகளின் வன்மம் அவர் மீதான கவர்ச்சியைக் கூட்டியிருக்கிறது.மூக்குத்தி அணிந்த அழகிய இளம் நடிகை,தனது கலைத் தாகத்தால் கல்வியை ஒத்திவைத்தவர்,மேற்கத்திய ஆங்கில அசைவுகளோடு, தடித்த சன்னமான குரலில் அழுத்தமாக கதைக்கிறார்.
அவர் தமிழிச்சியா இல்லையா,அல்லது ஆணா பெண்ணா என்பவை இங்கு முக்கியமல்ல.ஒரு வளர்ந்த நபர்,24 வயதுடையவர்,பிரபல்யமானவர்,தன்னை உலகம் எப்படி அழைக்க வேண்டும் என்பதனை தீர்மானிப்பதற்கு தேவையான உரிமையை கொண்டிருக்கிறார்.அவர் தன்னை ஸ்ரீலங்கன் என்று அழைக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அவர் ஏன் தன்னை அவ்வாறு அழைக்கவில்லை என்று கேள்விக்கு விடை காண வேண்டும்.சில வார்த்தைகள் ஏன் தங்களை ஆவேசப்படுத்துகின்றன என்பதற்கு அவர்கள் விடை கண்டுபிடிக்க வேண்டும்.
அது ஒரு பண்பாட்டு அடையாளம் அல்லது புலப்பெயர்ச்சியின் அடையாளம் என்று கூறலாம்.ஈழத் தமிழ்ப் புலப்பெயர்ச்சி எனப்படுவது அரசியல் காரணங்களால் நிர்ப்பந்திக்கப்பட்டது.எனவே அது முழுக்க முழுக்க அரசியல் அடையாளம்தான். ஒரு 24 வயதுப் பெண் தனது அரசியல் அடையாளம் எது என்பதை அவ்வாறு தீர்மானிப்பதற்கான காரணம் எங்கிருந்து வருகிறது என்பதனை அதை எதிர்ப்பவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.அந்த அடையாளப்படுத்தல் ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரும் இருந்தது;ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னரும் இருந்து வருகிறது என்பதனை அவர்கள் ஆழமாக ஆராய வேண்டும்.
மைத்திரேயி தன்னுடைய அரசியல் அடையாளத்தை அவ்வாறு தீர்மானகரமாகக் கூறியதை வைத்து அவரைத் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தோடு தொடர்புபடுத்தி வெறுப்பைக் கொட்டும்போது,அது அவரை நோக்கி மற்றவர்களின் கவனத்தைக் குவிக்கிறது.இதனால் மைத்திரேயி ஆங்கில இணையப் பரப்பில் முன்னரை விட அதிகம் பிரபல்யமாகயிருக்கிறார்.தமிழ் இணைய வெளியில் முன்பு அறிமுகம் இல்லாதவர்களுக்கும் தெரிய வந்திருக்கிறார்.
அவரை ஒன்று திரண்டு எதிர்த்தவர்கள் எதைத் தடுக்க நினைத்தார்களோ,அது வெளியே வந்துவிட்டது;அது மேலே வந்துவிட்டது.அது மட்டுமல்ல,அது இன்னொரு விளைவையும் ஏற்படுத்தியிருக்கிறது.
மைத்திரேயிக்குக் கிடைத்த பிரபல்யம் என்பது அவரை எதிர்த்த சிங்களக் கடும்போக்கு வாதிகளுக்கு எதிரான அபகீத்தையும்தான்.அதாவது அவருக்கு எதிரான பால் ரீதியான,மொழி ரீதியான,இன ரீதியான,குறிப்பாக அரசியல் ரீதியிலான தாக்குதல்கள் இனவாதத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றன.அசோக ஹந்தகம போன்ற மதிப்புக்குரிய திரைக் கலைஞர்கள் மைத்திரேயியை ஆதரித்திருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் பெரும்பான்மைக்குள் காணப்படும் சிறுபான்மைகள்.
இப்போதுள்ள அரசாங்கம் நாட்டில் இனவாதம் இல்லை என்று கூறுகிறது. ஏனென்றால் தமிழ்மக்கள் தனக்கு வாக்களித்தபடியால் தமிழ் மக்களின் ஆணை தனக்கும் உண்டு என்றபடியால் நாட்டில் இப்பொழுது இனவாதம் இல்லை என்று இந்த அரசாங்கத்தால் கூறமுடிகிறது.ஆனால் இணைய வெளி யதார்த்தம் அதுவல்ல.டிஜிட்டல் வெளியில்,டிஜிட்டல் இனவாதம் அதன் வேடமில்லாத முகத்தோடு வெளிவருகிறது.
அண்மைக்காலங்களாக,குறிப்பாக தேசிய மக்கள்சக்தி அரசாங்கத்தின் வருகைக்குப் பின்,சிங்கள இணைய உலாவிகள் மத்தியில் இந்தப் போக்கு அதிகரித்து வருகிறது.இது ஒரு திட்டமிட்ட செயற்பாடு என்று தமிழர்கள் நம்புகிறார்கள்.யாரோ இதனை ஒருங்கிணைத்துச் செய்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.ஆனால் அது சிங்கள இணைய உலாவிகளின் நிறுவன மயப்பட்ட செயற்பாடா? அல்லது ஏற்கனவே நிறுவனமயப்பட்டுள்ள ஒரு கூட்டு உளவியலின் வெளிப்பாடா?
நாட்டில் இனவாதத்தை வைத்து அரசியல் செய்ய இனியும் முடியாது என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால் டிஜிட்டல் இனவாதம் முன்னெப்பொழுதையும் விட விகாரமான,அசிங்கமான முகத்தோடு மேலெழுகின்றது. மைத்திரேயியின் விவகாரம் அதனை மேலும் அம்பலப்படுத்தியிருக்கிறது. ஐநாவின் நல்லிணக்க முயற்சிகள்,பொறுப்புக் கூறலுக்கான தீர்மானங்கள் போன்றன நாட்டில் தோல்வியடைந்து விட்டன என்பதை அது அம்பலப்படுத்துகிறதா? மைத்ரேயியை எதிர்த்தவர்கள் அவரைப் பிரபல்யப்படுத்தி விட்டார்கள்.அவருக்குள்ள கவர்ச்சியை அதிகப்படுத்தி விட்டார்கள்.அதைவிட முக்கியமாக தங்களைத் தாங்களே அம்பலப்படுத்தி விட்டார்கள்.





