சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணம்,திருமறைக் கலாமன்ற மண்டபம் ஒன்றில் ஜோதிலிங்கம் தனது நூல் ஒன்றை வெளியிட்டார்.அந்த மேடையில் நான் பேசினேன்.ஜோதிலிங்கத்தின் தமையனும் சமயச் சொற்பொழிவாளருமாகிய சிவமகாலிங்கமும் அதில் பேசினார்.
நூல் வெளியிட்டு வைக்கப்பட்ட பின் சிவமகாலிங்கம் என்னோடு கதைக்கும் போது சொன்னார்….”நிலாந்தன் என்னுடைய தம்பியை அதாவது ஜோதிலிங்கத்தை 1980களின் இறுதிப்பகுதியில் எவ்வளவு கஷ்டப்பட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து பாதுகாத்துக் கொண்டுபோய் கொழும்பில விட்டன். ஆனால் யார் இவனை யாழ்ப்பாணத்தில் இருக்கவிடாமல் துரத்தினார்களோ, அவர்களுடைய அரசியலை இவன் இப்பொழுது ஆதரித்துக் கதைக்கிறான். அப்படியென்றால் என்பதுகளின் இறுதியில் இவனைப் பாதுகாத்துக் கொண்டு போன எனக்கு விசரா? அல்லது இவனுக்கு விசரா? என்று கேட்டார்.நான் அவருக்குச் சொன்னேன் “அண்ண உங்களுக்கும் விசர் இல்ல;ஜோதிக்கும் விசர் இல்ல.இது பண்புருமாற்றம்-transformation.ஆயுதப்போராட்டம் நிகழ்ந்த எல்லா நாடுகளிலும் எல்லாச் சமூகங்களிலும் இது நிகழ்ந்திருக்கிறது.இது நிகழாவிட்டால் சமூகம் மாற்றத்துக்கு உள்ளாக முடியாது.இறந்த காலத்திலேயே தேங்கி நின்றுவிடும்.அன்றைக்கு நீங்கள் ஜோதியைப் பாதுகாத்ததும் சரி ;இன்றைக்கு ஜோதி கதைக்கும் அரசியலும் சரி.அதுதான் பண்புருமாற்றம். அன்றைக்கு நீங்கள் பாதுகாத்துக் கொடுத்திருக்கா விட்டால் இன்றைக்கு சமூகம் கொண்டாடும் ஜோதி உயிருடன் இருந்திருக்க மாட்டார்” என்று.
ஈழத் தமிழர்கள் சுமார் 4 தசாப்த கால ஆயுதப் போராட்டத்தை நிகழ்த்திய ஒரு சமூகம்.ஆயுதப் போராட்டத்தோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட எல்லாருடைய கைகளிலும் இரத்தக்கறை உண்டு.எல்லாருடைய எழுத்துக்களிலும் இரத்தக் கறை இருக்கும். எனவே இதில் என்னுடையது தேவ ரத்தம் உன்னுடையது அசுர ரத்தம் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ரத்தம் ரத்தந்தான். ரத்தம் சிந்தும் ஓர் அரசியலைக் கடந்துவந்த சமூகம் அந்த இறந்த காலத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் புதிய காலத்துக்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும்.அதுதான் பண்புருமாற்றம்.
ஜோதிலிங்கம் மட்டுமல்ல,தராகி,சிவராமும் அவ்வாறு பண்புருமாற்றத்தைப் பிரதிபலித்த ஒரு கருத்துருவாக்கிதான்.சிவராமின் இறுதி நிகழ்வின்போது “சரிநிகர்” பத்திரிகையின் ஆசிரியர் சிவக்குமார் அதைச் சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார்.1980களின் பிற்பகுதியில் இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு உடனடுத்த காலப்பகுதியில்,கிழக்கில்,மட்டக்களப்பில் இடம்பெற்ற ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதலில்,புளட் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் கொல்லப்பட்டார்கள்.இந்தச் சம்பவத்தில் சிவராமும் இலக்கு வைக்கப்பட்டதாக ஒரு தகவல் உண்டு.சிவராம் அந்தத் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து அந்த வாகனத்தில் வராமல் தன்னைப் பாதுகாத்துக் கொண்டார் என்ற ஒரு “கொன்ஸ்பிரேசி”விளக்கமும் உண்டு.இத்தாக்குதல் தொடர்பாக சிவராம் ஒருமுறை என்னிடம் சொன்னார்.”அன்றைக்கு என்னைக் கொல்லத் திரிந்தவர்கள் இன்றைக்கு என்னை கௌரவிக்கிறார்கள்” என்று.
சிவராமின் இறுதி நிகழ்வில் சரிநிகர் ஆசிரியர் சிவகுமார் இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.அன்றைக்கு கொல்லப்பட்டு இருந்திருந்தால் சிவராம் எப்படி அழைக்கப்பட்டு இருந்திருப்பார்? ஆனால் 2005இல் அவர் கொல்லப்பட்ட போது அவர் “மாமனிதர்” என்று அழைக்கப்படுகிறார்.இப்படி எத்தனை மாமனிதர்கள் எதிரிகளாகக் கணிக்கப்பட்டு அல்லது துரோகிகளாகக் கணிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள்”? என்ற பொருள்பட சிவக்குமார் கேள்வி எழுப்பியிருந்தார்.
சிவக்குமார்,ஜோதிலிங்கம்,சேரன்,சிவராம்,குருபரன்… இப்படிப் பலருக்கு 1980 களின் பிற்பகுதியில் தாயகம் பாதுகாப்பாக இருக்கவில்லை.அவர்கள் கொழும்பில் தஞ்சங்கோர வேண்டியிருந்தது.ஆனாலும் அவர்கள் கொழும்பின் அரசியலைப் பிரதிபலிக்கவில்லை.கொழும்பில் இருந்தபடியே தமிழ் மக்களின் கூட்டுக் காயங்களையும் துயரங்களையும் பிரதிபலித்தார்கள்.அதாவது தங்களுடைய மக்களோடு நின்றார்கள்;மக்களுக்காக நின்றார்கள்.ஒரு இயக்கத்துக்குடாக அவர்கள் போராட்டத்தைப் பார்க்கவில்லை.மக்களுக்கு ஊடாகவே போராட்டத்தைப் பார்த்தார்கள்.தமது மக்களோடு நின்ற காரணத்தால் அரசையும் அரசாங்கத்தையும் எதிர்த்தார்கள்.
இதுதான் பண்புருமாற்றம்.தமது மக்களோடு நிற்கும் எல்லா அரசியல் போராளிகளும் செயற்பாட்டாளர்களும் அவ்வாறான பண்புரு மாற்றத்துக்கு தயாராக இருப்பார்கள்.ஜோதிலிங்கமும் தயாராக இருந்தார்.
அவர் எந்த காலகட்டத்தில் எந்த கட்சியோடு நின்றார்?அல்லது எந்த இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார்?அல்லது எந்த இயக்கத்தால் தேடப்பட்டார்?அல்லது எந்த இயக்கத்துக்கு எதிராகச் செயல்பட்டார்? அல்லது எந்தக் கட்சிக்கு எதிராக எழுதினார்?…என்பவையெல்லாம் இங்கு முக்கியமல்ல. எல்லாக் காலங்களிலும் அவர் மக்களோடு நின்றாரா? இல்லையா? என்பதுதான் இங்கு முக்கியம்.ஜோதிலிங்கம் மக்களோடு நின்றார்.
மக்களோடு நின்ற காரணத்தால்தான் அவர் தான் உறுப்பினராக இருந்த அமைப்பையும் விமர்சித்தார்;கட்சிகளை விமர்சித்தார்.தான் ஆதரித்த கட்சிகளில் இருந்து வெளியேறினார்.மக்களோடு நின்ற காரணத்தால்தான் தன்னை ஆபத்துக்கு உள்ளாக்கிய அரசியலை மக்களுக்கு ஊடாகப் பார்த்தார். இயக்கங்களுக்கு ஊடாகப் பார்க்கவில்லை.
அவர் ஈ.பி.ஆர்.எல்.எஃபில் ரமணியாக இருந்த காலத்தில் தொடங்கி,அவர் தலைமறைவாக இருந்து தப்பி ஓடிய காலம்,பின்னர் ஆசிரியராக கொழும்பு மைய அரசியற் செயற்பாட்டாளராக இருந்த காலம்,அதன்பின் 20009ஐ உடனடுத்த காலம்,மீண்டும் யாழ்ப்பாணத்தில்…என்று கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கால அவருடைய அரசியல் வாழ்வைத் தொகுத்து பார்த்தால் அவர் எப்பொழுதுமே தன் மக்களோடு நின்றிருக்கிறார்.தன்னுடைய மக்களின் கூட்டுக் காயங்களை,கூட்டுக் கோரிக்கைகளை,கூட்டுணர்வை பிரதிபலித்திருக்கிறார்.தனது மக்களின் நீதிக்கான போராட்டங்களில் எப்பொழுதும் முன்னணியில் காணப்பட்டிருக்கிறார்.தனது மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் எல்லா நடவடிக்கைகளிலும் அவர் முன்னணியில் நின்றிருக்கிறார்.அவர் மக்களோடு நின்றிருக்கிறார்.அதனால் அரசுக்கும் அரசாங்கத்துக்கும் எதிராகச் செயற்பட்டிருக்கிறார்.அதுதான் ஜோதிலிங்கம். அவர் தன் மக்களோடு நின்றபடியால்,மக்களுக்கு ஊடாக அரசியலைத் தரிசித்தபடியால், பண்புருமாற்றத்துக்குத் தயாராக இருந்தார்.
அவருடைய அரசியல் நிலைப்பாடுகளில் அதிதீவீரம் இருந்ததுண்டு. அதனாலேயே பகைவரைச் சம்பாதித்ததும் உண்டு.ஆனால் மனித உறவுகளைக் கையாளும்போது அவர் பகை பாராட்டியவர் அல்ல.நட்புப் பாராட்டியவர்தான்.அவருக்கு அஞ்சலி செலுத்திய எல்லாக் கட்சித் தலைவர்களும் அதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.முரண்பாடுகள் இருந்த போதும் உறவைப் பேணியவர் என்று.
பல்கலைக்கழகத்துக்கு வந்த காலத்தில் இருந்து,கடைசியாக கடந்த மாதம் திலீபனின் நினைவு வீதி வளைவில் தமிழ் மக்களின் நினைவு கூர்தலுக்கான உரிமைக்கான போராட்டம் வரையிலும்,அவர் தனது மக்களுடைய நீதிக்காக போராடியவர்.எல்லாச் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் எல்லா அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடியவர்.சாதி ஒடுக்குமுறையாகட்டும், மலாயகத் தமிழர்களின் நீதிக்கான போராட்டங்கள் ஆகட்டும்,எல்லாவற்றிலும் ஜோதிலிங்கம் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்றார்.
ஏன் அதிகம் போவான்? 1980களின் பிற்கூறில் யாழ்.பல்கலைக்கழகத்தில் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்ட விஜிதரன் என்ற மாணவனுக்கான போராட்டக் களத்தில் தலைமை வகித்தவர் அவர்தான்.அதேசமயம் கடந்த 17 ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டக் களங்களிலும்,நீதிக்கான போராட்டக் களங்களிலும் அவர் காணப்பட்டார்.
மேலோட்டமாகப் பார்த்தால் அவர் அங்கேயும் நிற்கிறார்;இங்கேயும் நிற்கிறார் என்று ஒரு தோற்றம் கிடைக்கும்.ஆனால் அவருடைய அரசியல் நம்பிக்கைகளை ஆழமாகத் தொகுத்துப் பார்த்தால் அவர் எப்பொழுதும் தனது மக்களோடு நின்றிருக்கிறார்.தனது மக்களோடு நிற்கும் எந்த ஒரு வாழ்நாள் போராளியும் பண்புருமாற்றத்திற்குத் தயாராக இருப்பார்.
பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக தோளில் ஒரு துணிப்பையோடு காணப்பட்டவர்.இறக்கும்வரையிலும் தோளில் துணிப்பையோடு பெரும்பாலான போராட்டக் களங்களில் முன்னணியில் நின்றார்.அந்தத் துணிப்பைக்குள் சில புத்தகங்கள் இருக்கும்.அந்த புத்தகங்களை தன் கண்ணில் படும் எல்லாருக்கும் தேடித்தேடிக் கொடுப்பார்.கிறிஸ்தவ சுயாதீன திருச்சபைகளைச் சேர்ந்தவர்கள் தமது துண்டுப் பிரசுரங்களைத் தேடித்தேடி விநியோகிப்பதுபோல.
சிறிய உருவம்;நரைத்த;நறுக்கப்பட்ட மீசை;கரகரத்த அடிக்குரலில் கதைப்பார். கடைசியாக திலீபனின் நினைவு வீதி வளைவிலும் அவ்வாறுதான் காட்சி தந்தார்;கதைத்தார்.அவரை கடந்த திங்கட்கிழமை,அவருடைய ஊர்ச் சுடலையில் அவருடலைத் தகனம் செய்தோம்.
தோளில் துணிப்பையோடு கரகரப்பான அடிக்குரலில் கதைக்கும் அந்தச் சிறிய உருவம் இனி எங்கள் மத்தியில் இல்லை.ஆனால் அவர் எழுதிய நூல்கள் உண்டு;எழுதிய கட்டுரைகள் உண்டு;கொடுத்த நேர்காணல்கள் உண்டு.கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் வாழ்ந்து காட்டிய பண்புரு மாற்ற வாழ்க்கை உண்டு.
சிவராமுக்கு நான் எழுதிய நினைவுக் குறிப்பின் கடைசிப் பந்தியில் நான் கூறியதுபோல,ஜோதிலிங்கத்துக்கு அஞ்சலி செலுத்துவது என்பதை,ஆயுத மோதல்களுக்குப் பின்னரான கடந்த 17 ஆண்டுகால அனுபவத்தின் அடிப்படையில் சொன்னால்,பண்புருமாற்றத்துக்குத் தயாராக இருப்பதுதான்.ஒரு பண்புருமாற்றத்தை நோக்கித் தமிழ்மக்கள் மத்தியில் கருத்துருவாக்கம் செய்வதுதான்.




