மெய்யான கொள்கைக் கூட்டு எது?


அரசியற் கைதிகள் மறுபடியும் போராடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமது கோரிக்கைகளை வென்று தருவதாக வாக்குறுதியளித்த எவரும் அதைச் செய்து முடிக்கவில்லை என்றும் கடந்த எட்டாண்டுகளில் இவ்வாறு சில தடவைகள் நடந்திருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். கடைசியாக அரசியற் கைதிகளின் போராட்டத்தை கையில் எடுத்தது சில அரசியல்வாதிகளும், யாழ் பல்கலைக்கழக மாணவர்களுமாகும். ஆனால் போராட்டத்தை முதலில் ஆரம்பித்தது சில பொது அமைப்புக்களாகும். சுமார் ஐந்து பொது அமைப்புக்கள் அப்போராட்டத்தை முதலில் தொடங்கின. பின்னர் படிப்படியாக யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் பல பொது அமைப்புக்கள் போராட்டத்துள் இணைந்தன. கைதிகளுக்கு மீட்சி கிடைத்ததோ இல்லையோ பொது அமைப்புக்களுக்கிடையில் ஓர் ஒருங்கிணைப்பு ஏற்பட்டது என்பது ஒரு நன்மையான விளைவுதான். எனினும் இப் பொது அமைப்புக்களின் கூட்டினாலும் போராட்டத்தை வென்றெடுக்க முடியவில்லை. போராட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே சில அரசியல்வாதிகள் போராட்டத்தில் தலையைக் காட்டி ஊடகக் கவனிப்பைப் பெற்றார்கள். பின்னர் போராட்ட அமைப்புக்களுக்கு சொல்லாமலேயே சுழித்தோடி அரசுத் தலைவரோடு ஒரு டீலுக்குப் போனார்கள். அந்த டீலின் பிரகாரம் கைதிகளின் பெற்றோர்கள் அரசுத் தலைவரை சந்தித்தார்கள்.

அப்படித்தான் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திலும் அரசுத் தலைவரைச் சந்தித்து வாக்குறுதிகளை பெற்றுக்கொண்டு மாணவர்கள் திரும்பினார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. பொது அமைப்புக்களை மேவி போராட்டத்தை முன்னெடுத்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஒரு கட்டத்திற்கு மேல் போராட முடியவில்லை. முடிவில் வாக்குறுதிகளை வழங்கியே மாணவர்களையும், அரசியல்வாதிகளையும், அரசியல் கைதிகளையும் அரசாங்கம் ஏமாற்றி விட்டது. இப்பொழுது அரசியற்கைதிகள் தாம் மறுபடியும் போராடப் போவதாக அறிவித்திருந்தார்கள்.

அரசியற் கைதிகளின் விவகாரம் மட்டுமல்ல காணி மீட்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் போன்ற எல்லாப் போராட்டங்களின் கதியும் இதுதான். கேப்பாப்புலவிலும், முள்ளிக்குளத்திலும், இரணைதீவிலும் அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்கி மக்களைக் காத்திருக்கச் செய்வதன் மூலம் போராட்டங்களை தொய்வடையச் செய்து விட்டது. வாக்குறுதிகளுக்காக காத்திருக்கும் மக்கள் முடிவில் ஏமாற்றப்படுகிறார்கள். இவ்வாறு வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம் அல்லது சில தமிழ் அரசியல்வாதிகளுக்கூடாக டீல்களைச் செய்வதன் மூலம் போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்யலாம் என்று அரசாங்கம் ருசி கண்டுவிட்டது.

அண்மையில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி ஒரு விடயத்தை வெளிப்படுத்தியிருந்தார். மே பதினெட்டுக்குப் பின் இது வரையிலும் ஏழு பெற்றோர் சாவடைந்திருப்பதாக அவர் கூறுகிறார். காணாமல் ஆக்கப்பட்டவரின் பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்கள் முதுமை காரணமாகவும், துக்கம் காரணமாகவும், வறுமை காரணமாகவும் நோய்வாய்ப்பட்டு இறந்து கொண்டிருக்கிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டங்கள் கிட்டத்தட்ட முந்நூறாவது நாளை அடைகின்றன. ஆனால் அவர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக விட்டுக்கொடு;பபின்றிப் போராடுவது அவர்களுடைய உறவினர்கள் தான். படிப்படியாக அந்த உறவினர்கள் இறப்பது என்பது போராட்டத்தைப் பலவீனப்படுத்தும். தமிழ் சிவில் சமூக அமையத்தைச் சேர்ந்த சில செயற்பாட்டாளர்கள் சில மாதங்களுக்கு முன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் தலையிட்டார்கள். அரசுத் தலைவரை சந்திப்பது வரையிலும் நிலமைகள் சென்றன. அங்கேயும் அரசுத் தலைவர் வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் இன்று வரையிலும் எதுவும் நடக்கவேயில்லை.

இப்படியாக மக்களுடைய போராட்டங்கள் நீர்த்துப் போகின்றன. அல்லது சோரத் தொடங்கி விட்டன. தமது கோரிக்கைகளை போராடி வெல்ல முடியாத மக்களாக தமிழ் மக்கள் காணப்படுகிறார்களா? ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் வேறெந்த வழிகளிலும் போராடும் சக்தியோ, திராணியோ தமிழ் மக்களுக்கு கிடையாதா? அப்படித்தான் அரசாங்கம் நம்புகிறது. அரசு புலனாய்வுத் துறைகளும் அப்படித்தான் நம்புகின்றன. அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த பொழுது யாழ் இந்துக்கல்லூரிக்கு அரசத்தலைவர் வருகை தந்தார். ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையில் அரசுத்தலைவர் அங்கு விஜயம் செய்வதைக் குறித்து அமைச்சர் மனோகணேசன் அரசுத் தலைவரோடு கதைத்திருக்கிறார். ஆனால் தன்னுடைய விஜயத்தை தான் நிறுத்தப் போவதில்லை என்று அரசுத்தலைவர் அமைச்சருக்குக் கூறியிருக்கிறார். ஏனெனில் புலனாய்வு அறிக்கைகளின் படி யாழ்ப்பாணத்தில் அவருக்கு பெரிய அச்சுறுத்தல்கள் எதுவும் கிடையாது என்று அவர் நம்பியதே காரணமாகும். அதாவது மக்கள் போராட்டங்கள் அரசுத்தலைவரின் விஜயங்களையோ, அல்லது அமைச்சர்களின் விஜயங்களையோ தடுத்து நிறுத்தும் அளவிற்கு ஆக்ரோசமானவைகளாக இல்லை என்பதே பொருள்.

இவ்வாறாக 2009 மேக்குப் பின் ஆக்ரோசமாகப் போராட முடியாத ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் மத்தியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலானது புதிய உடைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பலமடைந்து வந்த ஒரு மாற்றுத்தளம் இரண்டாக உடைந்து போயுள்ளது. ஒரு மாற்று அணியைக் குறித்து விமர்சிப்பவர்களுக்கும் எள்ளி நகையாடுவோருக்கும் அது வாய்ப்புக்களை வழங்கியிருக்கிறது. அதுமட்டுமல்ல தமிழரசுக்கட்சி மீதும் அதன் தோழமைக்கட்சிகள் மீதும் அதிருப்தியுற்ற வாக்காளர்களுக்கு அது குழப்பமான சமிக்ஞைகளை வழங்கியிருக்கிறது.

ஆயின் தமிழ் தேர்தல் களம் ஒரு மும்முனைப் போட்டியை நோக்கிச் செல்கிறதா?
அதை இருமுனைப் போட்டியாக மாற்றுவதற்கு தொடர்;ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கஜனுக்கும், சுரேசுக்குமிடையே போட்டித்தவிர்ப்பு உடன்படிக்கையொன்றை கொண்டு வரவேண்டும் என்று மாற்று அணிக்கு ஆதரவானவர்கள் கேட்கிறார்கள். விக்னேஸ்வரனின் தயக்கம் மாற்று அணிக்கு ஆதரவானவர்கள் மத்தியில் அவருக்கு இருந்த மதிப்பை குறைத்துக் கொண்டு வருகிறது. இப்பொழுது உடைந்து போயிருக்கும் மாற்றுத் தளத்தை ஒட்ட வைப்பதல்ல பிரச்சினை. எது சரியான மாற்று என்பதைக் கண்டு பிடிப்பதே பிரச்சினை என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. எது சந்தர்ப்பவாதக்கூட்டு, எது கொள்கைக்கூட்டு என்பதனை வாக்காளர்கள் கண்டு பிடிக்கட்டும் என்றும் கூறப்படுகிறது.

கஜன் அணியானது தனது கூட்டின் பெயரில் பேரவை என்ற சொல்லைச் சேர்த்திருக்கிறது. அக்கூட்டின் கொள்கைப் பிரகடனத்தில் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாகவும் கூறப்பட்டிருக்கிறது. பேரவைக்குள்; கஜேந்திரகுமாரிடம் பரிவுடையோர் அதிகம் என்று ஒரு கருத்து சுரேஸ் அணியின் மத்தியில் காணப்படுகிறது. நிலமை இப்படியே போனால் போட்டித் தவிர்ப்பிற்கான வாய்ப்புக்கள் குறைந்து விடும். பதிலாக எது சரியான மாற்று என்று தீர்மானிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் வாக்காளர்களுக்கு ஏற்படும். ஆனால் இங்கேயுள்ள முக்கியமான கேள்வி என்னவென்றால் எது சரியான மாற்று என்பதை ஒரு தேர்தல் களத்தில் மட்டும் தீர்மானித்து விடலாமா என்பதுதான்.

2009 மேக்குப் பின்னரான ஈழத்தமிழ் அரசியலைப் பொறுத்தவரை அப்படித் தீர்மானிக்க முடியாது என்பதே மெய்நிலையாகும். தேர்தல் கூட்டுக்களை மட்டும் வைத்தோ அல்லது தேர்தல் கொள்கைகளை மட்டும் வைத்தோ ஒரு சரியான மாற்றைக் கண்டுபிடித்துவிட முடியாது. பதிலாக இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது போல தேங்கிநிற்கும் மக்கள் போராட்டங்களுக்கு சரியான திசையைக் காட்டும் பொருத்தமான ஒரு தலைமைத்துவம் தான் தன்னை மாற்று அணியாக நிறுவிக்கொள்ள முடியும். ஈழத்தமிழ் அரசியலை அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னெடுப்பதற்கும் அப்படியொரு தலைமைதான் வேண்டும்.

கடந்த சுமார் எட்டாண்டுகளாக கூட்டமைப்பை விமர்சித்த பெரும்பாலான தரப்புக்கள் கூட்டமைப்பிடம் இல்லாத மக்கள் மைய அரசியலுக்கான ஒரு தரிசனம் தம்மிடமுண்டு. அதற்கான ஒரு வழிவரைபடம் தம்மிடம் உண்டு என்பதனை இன்று வரையிலும் நிரூபித்திருக்கவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டங்கள், குறியீட்டு வகைப்பட்ட போராட்டங்கள் போன்ற சிறு திரள் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதற்குமப்பால் பெருந்திரள் மக்கள் போராட்டங்களை இத் தரப்புக்கள் எவையும் இன்று வரையிலும் முன்னெடுக்கவில்லை. அவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்கவல்ல மக்கள் மைய அரசியல் இயக்கங்கள் எவையும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. தமிழ் மக்கள் பேரவை போன்ற பிரமுகர் மைய அமைப்புக்களின் போதாமைகளை சுட்டிக்காட்டும் எந்தவோர் அரசியல்வாதியும், அல்லது செயற்பாட்டாளரும் இன்று வரையிலும் மக்கள் மைய போராட்டங்களை முன்னெடுக்கவல்ல அரசியல் இயக்கங்களையோ, செயற்பாட்டு இயக்கங்களையோ உருவாக்கியிருக்கவில்லை.

அதைவிடப் பாரதூரமான ஒரு விடயம் என்னவெனில் கடந்த சுமார் முந்நூறு நாட்களாகப் போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு சரியான வழியைக் காட்டி போராட்டங்களை ஆக்ரோசமானவைகளாக மாற்றி அவற்றை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்லவல்ல ஓர் அமைப்போ கட்சியோ, செயற்பாட்டு இயக்கமோ தமிழ் மக்கள் மத்தியில் இல்லை என்பதுதான். மாறாக புலம்பெயர்ந்த தரப்புக்களால் ஊக்குவிக்கப்படும் அல்லது என்.ஜி.ஓக்களால் ஊக்குவிக்கப்படும் போராட்டங்களே அதிகம் எனலாம். இப்படியான ஒரு போராட்டச் சூழலை அடிப்படையாக வைத்தே அரச புலனாய்வுத் துறையானது அரசுத் தலைவரின் வடகிழக்கு விஜயங்களைக் குறித்து மேற்சொன்னவாறான அறிக்கைகளை வழங்கி வருகின்றது.

எனவே ஒரு சரியான மாற்று எதுவென்பதை ஒரு தேர்தல் களத்தில் மட்டும் தீர்மானிக்க முடியாது. அரசாங்கம் தேர்தலை அறிவிக்கப் போய் அதற்கு பிரதிபலிப்பைக் காட்ட வெளிக்கிட்டு மாற்று அணியானது இரண்டாக உடைந்து விட்டது. இங்கேயும் கூட அரசாங்கம் எடுத்த ஒரு நகர்விற்கு பதிற்குறி காட்டும் ஒரு போக்கையே காண முடிகிறது. மாறாக மக்கள் மைய அரசியலை முன்னெடுக்கும் விதத்தில் மக்கள் மைய அமைப்புக்களை கட்டியெழுப்பியிருந்திருந்தால் அதன் தர்க்கபூர்வ வளர்ச்சியாக சரியான ஒரு தேர்தல் கூட்டு படிப்படியாக உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு தேர்தலை முன்வைத்து அவசரப்பட்டு கூட்டுக்களை உருவாக்க வேண்டி வந்திருக்காது. பிரசித்தமான சின்னங்களை நோக்கிச் செல்லும் அல்லது ஜனவசியமிக்க ஒரு தலைவரின் மனமாற்றத்திற்காக காத்திருக்கும் ஒரு நிலை தோன்றியிருக்காது.

2009 மேக்குப் பின் ஈழத்தமிழ் அரசியலில் வன்சக்தி இல்லாமல் போய்விட்டது. இருப்பதெல்லாம் மிதவாத சக்திகள்தான். இதில் கூட்டமைப்பின் இணக்க அரசியலை எதிர்க்கும் தரப்புக்கள் தமது எதிர்ப்பு அரசியலை கொள்கையளவில் வெளிக்காட்டிய அளவிற்கு செயல் பூர்வமாக மக்கள் மைய அரசியலுக்கூடாக வெளிக்காட்டத் தவறிவிட்டன. மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு தேர்தலை மட்டுமே ஒரு செயல்வழியாக கொண்டிருக்கும் கட்சிகள் தான் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு. கடந்த எட்டாண்டுகளாக இக்கட்சிகளில் எவையும் தேர்தல் அல்லாத வேறு வழிகளில் அதாவது செயற்பாட்டு இயக்கங்களுக்கு ஊடாக அல்லது மக்கள் மைய இயக்கங்களுக்கூடாக மக்கள் அதிகாரத்தை கட்டியெழுப்பும் எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபட்டிருக்கவில்லை. குறைந்த பட்சம் பல்கலைக்கழகங்களுக்குள் ஊடுருவி மாணவ அமைப்புக்களையாவது தமது செல்வாக்கின் கீழ் கொண்டு வர முடியவில்லை. அல்லது அரங்கிலுள்ள வெகுசன அமைப்புக்களை ஒருங்கிணைத்து அவற்றிற்குத் தலைமை தாங்கவும் முடியவில்லை.

கூட்டமைப்பிடம் அப்படிப்பட்ட அரசியல் தரிசனமோ, ஒழுக்கமோ இல்லையென்று கூறிய எந்தவொரு தரப்பும் தன்னளவில் தானாக அதைச் செய்திருக்கவில்லை. அவ்வாறு மக்கள் அதிகாரத்தை தேர்தல் அல்லாத வழிமுறைகளின் மூலம் கட்டியெழுப்பியிருந்திருந்தால் தமிழரசுக் கட்சியும் அதன் கூட்டாளிகளும் ஓர் இடைக்கால அறிக்கையின் பங்காளிகளாகவதை தடுத்து நிறுத்தியிருக்கலாம். எனவே அப்படிப்பட்ட செயற்பாட்டு இயக்கங்களோ, மக்கள் மைய இயக்கங்களோ இல்லாத ஒரு வெற்றிடத்தில் பிரமுகர் மைய இயக்கங்களின் வரையறைகளை உணர்த்தும் ஒரு தருணமாக உள்ளூராட்சிசபைத் தேர்தல் வந்திருக்கிறது.

இதில் யார் கொள்கை வழிக் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள். யார் தந்திரோபாயக் கூட்டில் சேர்ந்திருக்கிறார்கள், யார் சந்தர்ப்பவாதக் கூட்டில் சேர்ந்திருக்கிறார்கள் என்பவற்றை அவர்களுடைய தேர்தல் பிரகடனங்களை மட்டும் வைத்து கணிப்பிட முடியாது. மாறாக தேங்கி நிற்கும் மக்கள் போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு ஆக்ரோசமாக முன்னெடுக்கத் தேவையான ஒரு வழிவரைபடம் யாரிடம் இருக்கிறது என்பதே அதைத் தீர்மானிக்கும். அப்படி ஒரு வழிவரைபடம் தம்மிடம் இருப்பதாக கடந்த எட்டாண்டுகளில் எந்தவொரு கட்சியும் நிரூபித்திருக்கவில்லை. இனியாவது அப்படியொரு வழிவரைபடம் தங்களிடம் உண்டு என்பதனை சம்பந்தப்பட்ட கட்சிகள் நிரூபிக்க வேண்டும். குறைந்தபட்சம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் களத்தையாவது அவ்வாறான ஒரு மக்கள் மைய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாக அவர்கள் பயன்படுத்தலாம்.சரியான கொள்கைக் கூட்டு எதுவென்பதையும் சரியான மாற்று எதுவென்பதையும் இறுதியிலும் இறுதியாக மதிப்பிடுவதற்குரிய ஒரே ஒரு அளவுகோல் அதுதான்.

5.12.2017

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *