நல்லூர் பிரதேச சபை ஒரு வித்தியாசமான காரியத்தைச் செய்திருக்கிறது. அதன் ஆளுகைக்குட்பட்ட திருநெல்வேலிச் சந்தியில் போக்குவரத்துச் சமிக்கை விளக்குகளுக்காக கிட்டத்தட்ட ஒரு நிமிடம் காத்திருக்கும் வழிப்போக்கர்களுக்கு தற்காலிகமாக ஒரு நிழல்குடை அமைத்துக் கொடுத்திருக்கிறது.இப்போதுள்ள அசாதாரண வெக்கையைக் கவனத்தில் எடுத்து சாக்கினாலான படங்குகளை அந்தச் சந்தியில் கூரைபோல இழுத்துக் கட்டியிருக்கிறார்கள்.
தனது பிரதேசத்துக்கு ஊடாகச் செல்லும் வழிப்போக்கர்களை தாங்க முடியாத வெயிலில் இருந்து பாதுகாப்பதற்காக ஒரு பிரதேச சபை அப்படிச் சிந்தித்துச் செயல்பட்டிருப்பதைப் பாராட்டலாம்.
அது ஒரு தற்காலிக ஏற்பாடுதான்.அதில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. எனது நண்பர் ஒருவர் சொன்னார்,காலையில் வரும்போது அந்த கூரையின் நிழல் எங்கேயோ நின்றது.அப்படித்தான் பின்னேரங்களிலும் என்று.ஏனென்றால் சூரியன் நகரும் போது நிழலும் நகரும்.எனினும்,உச்சி வெயிலில் நிழல் தலைக்கு மேல்தான் நிற்கிறது.
இவ்வாறு வீதியில் நிழல் கூரைகளைப் போடுவது அல்லது தற்காலிகப் பந்தல்களை அமைப்பது என்பது எமது பண்பாட்டில் ஏற்கனவே உண்டு. பெருவிழாக் காலங்களில் குறிப்பாக கோடை வெயில் தலையைப் பிளக்கும் காலங்களில் பக்தர்களின் வசதிக்காக தண்ணீர் பந்தல்கள் வீதிகள்தோறும் அமைக்கப்படும்.இப்பந்தல்கள் பெரும்பாலும் பச்சைத் தென்னோலைகளால் அல்லது கிடுகுகளால் அமைக்கப்படும் வீதியிலும் வீதியின் ஓரங்களிலும் மணல் தூவப்பட்டு அங்கே நீர் விசிறப்பட்டிருக்கும்.அந்த இடம் குளுமையாக இருக்கும். இங்கே தாகம் தீர்வதோடு நிழலில் சிறிது ஆறிச் செல்லலாம்.
நல்லூர் திருவிழாவையொட்டி கோவிலைச் சூழ உள்ள வீதிகளிலும் கிராமங்களிலும் இவ்வாறு தற்காலிகப் பந்தல்கள் அமைக்கப்படுவதுண்டு.இந்தத் தாகசாந்திப் பந்தல்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக,ஒரு நிரந்தர அமைப்பாக தெருமூடி மடங்கள் அமைக்கப்பட்டிருக்கலாம் என்பதனை யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சனாதனன் சுட்டிக்காட்டினார்.யாழ்ப்பாணத்தின் ஒரு மரபுரிமைச் சொத்தாகப் பேணப்படும் தெருமூடி மடம் மடமராட்சியில் உண்டு. தெரு மூடி மடங்கள் தெருவில் நிழல் விரிக்கும் ஓர் ஏற்பாடுதான்.தெருவுக்கு மேலே கூரை அமைத்து,வீதியின் இருமருங்கிலும் திண்ணைகள் கட்டப்பட்டிருக்கும். அந்த நிழலில் வழிப்போக்கர்கள் இளைப்பாறிச் செல்லலாம்
தெருமுடி மடங்களை உதாரணமாகக் கொண்டு வீதிகளில் சந்திகளில் குறிப்பாக போக்குவரத்துச் சமிக்கை விளக்குகள் பொருத்தப்பட்ட சந்ததிகளிலும் நடைபாதைகளிலும் அதுபோல பொருத்தமான கட்டமைப்புகளை உருவாக்கலாம்
வீதிகளுக்கு உயரத்தில் கூரைகளை அமைப்பது என்பது ஏற்கனவே பல நாடுகளில் உண்டு.குறிப்பாக லிங் யாஓ என்ற சீன விஞ்ஞானி உலகில் உள்ள நெடுஞ்சாலைகளுக்கு சூரிய மின்கலக் கூரை போடுவதன்மூலம் போதியளவு மின்சக்தியை உற்பத்தி செய்யலாம் என்று கூறினார்.அவ்வாறு தயாரிக்கப்படும் மின்சக்தியானது 2023 ஆம் ஆண்டுக்குரிய உலகின் மொத்த மின்சார நுகர்வின் 60 விகிதத்துக்கும் அதிகமானது என்றும் லிங் யாஓ கணித்திருந்தார்.உலகில் உள்ள எல்லா நெடுஞ்சாலைகளினதும் மொத்த நீளம் கிட்டத்தட்ட 3.2 மில்லியன் கிலோ மீட்டருக்கும் அதிகம் .
சாலைகளில் சூரிய மின்கலக் கூரை போடுவதால் தலையைப் பிளக்கும் வெயிலிலிருந்து வழிப்போக்கர்களைப் பாதுகாக்கலாம்.அது நிழலாகவும் அமையும் மின் சக்தியாகவும் அமையும்.அதாவது மனிதர்களுக்குக் கெடுதியான ஒன்றையே நன்மையாக மாற்றுவது.
யாழ்பாணத்தில் இப்பொழுது நடுத்தர வர்க்க வீடுகளில் சூரிய மின்கலக் கூரை ஏற்கனவே வந்துவிட்டது.அப்படி ஒரு கூரையை சமிக்கை விளக்குச் சந்திகளில் பொருத்தினால் அது நிழலாகவும் மின் சக்தியாகவும் அமையும். தெருமூடி மடங்களின் இற்றைப்படுத்தப்பட்ட-அப்டேட் செய்யப்பட்ட-வளர்ச்சியாக அது அமையும்.
நல்லூர் பிரதேச சபையின் மக்கள் நேயச் செயற்பாடானது இவ்வாறான புதிய விவாதப் பரப்புகளையும் சிந்தனைகளையும் தூண்டி விடுகிறது.அப்பிரதேச சபையை இப்பொழுது நிர்வகிக்கும் தமிழ் மக்கள் கட்சியானது வெயிலை வைத்து அரசியல் செய்கிறது என்று சிலர் விமர்சிக்கிறார்கள்.எல்லாவற்றிலும் அரசியல் உண்டு.வெயிலிலும் அரசியல் உண்டு;நிழலிலும் அரசியல் உண்டு. அதை விமர்சிப்பதிலும் அரசியலுண்டு.
இது தற்காலிக ஏற்பாடுதான்.நிரந்தரமான பசுமை ஏற்பாடு எதுவென்றால்,பிரதேச சபை தந்து ஆட்சிக்குட்பட்டபிரதேசத்தைச் சோலையாக மாற்றுவது.பிரதேச சபைகள் ஆட்சிக்கு வந்தபொழுது இதை நான் பல தடவை எழுதியிருக்கிறேன். பிரதேச சபையின் ஆட்சிக்காலம் முடியும்போது, அவர்கள் எத்தனை மரங்களை வளர்த்து விட்டு செல்கிறார்கள் என்ற ஒரு கணக்கை மக்களுக்குக் காட்டட்டும்.வீதியோரங்களிலும்,பொது இடங்களிலும், எங்கெல்லாம் மரங்களை நட முடியுமோ அங்கெல்லாம் மரங்களை நடலாம். எங்கெல்லாம் குளங்களைத் தூர்வார முடியுமோ,வாய்க்கால்களைத் துப்புரவாக்கித் தூர் வார முடியுமோ,அங்கெல்லாம் அதைச் செய்யட்டும். எங்கெல்லாம் நகர்ப்புறச் சிறு காடுகளை உருவாக்க முடியுமோ அங்கெல்லாம் அதைச் செய்யட்டும்.அவை தனிய அரசியல் சாதனைகளாக மட்டும் இருக்காது அந்தப் பிரதேச சபையின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக தலைமுறைகள் தோறும் போற்றப்படும்;கொண்டாடப்படும்.





