உள்ளூராட்சி சபைத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர் தலைமைகளும்


கொழும்பில் கொட்டேனாவில் ஒரு சில்லறை வியாபாரி சொன்னார். “கொழும்பில் போளை அடித்துக் கொண்டு திரிந்தவன் எல்லாம் ஊரில எலக்சன் கேட்கிறான்” என்று. கடந்த கிழமை நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான் கன்னி அமர்வின் போது நடந்த குத்துச்சண்டைகளை வைத்துப் பார்த்தால் போளை அடிப்பவர்கள் ஏற்கெனவே நாடாளுமன்றத்திற்குள் வந்து விட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

மேற்கூறிய சில்லறை வியாபாரி குறிப்பிட்டது கொழும்பு மையக் கட்சிகளைத்தான். தமிழ்ப் பகுதிகளில் தற்பொழுது போட்டியிடும் எல்லா வேட்பாளர்களுமே போளை அடிப்பவர்கள் இல்லைத்தான். எனினும் கட்சிச் சின்னத்தை முன்னிறுத்தி குறிப்பிட்ட சின்னத்தின் கீழ் யார் போட்டியிட்டாலும் வெற்றியீட்டலாம் என்று நம்பி களமிறக்கப்படும் வேட்பாளர்களில் ஒரு பகுதியினர் போளை அடிப்பவர்கள் மட்டுமல்ல கசிப்பு அடிப்பவர்களும், குடு அடிப்பவர்களும், றஸ்தி அடிப்பவர்களும் தான் என்று ஒரு விமர்சனம் உண்டு.

ஏனைய தேர்தல்களோடு ஒப்பிடுகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ஒப்பிடுகையில் அதிகளவு வேட்பாளர்கள் தேவை. அதிலும் குறிப்பாக இம்முறை பால் சமத்துவம் பேணப்பட வேண்டும். இப்படிப் பார்த்தால் வேட்பாளர்களைக் கண்டுபிடிப்பது கட்சிகளுக்கு பெரிய சோதனையாகக் காணப்பட்டது.

தமிழரசுக்கட்சியைத் தவிர ஏனைய கட்சிகளுக்கு கிராமிய மட்ட வலைப்பின்னல் எனப்படுவது ஒப்பீட்டளவில் பலவீனமாகவே காணப்பட்டது. தமிழரசுக் கட்சியின் கிராமமட்ட வலைப்பின்னலும் கூட முற்போக்கானது என்று கூற முடியாது. வெல்லக் கூடிய குதிரையில் பந்தயம் கட்டும் சூதாடியின் மனோநிலையில் இருப்பவர்களெ அதில் கணிசமான தொகையினர் ஆகும். உள்ளூரில் ஏற்கெனவே ஊர் விவகாரங்களில் மூப்பிற்கு நின்றவர்கள், பிரபலஸ்தர்கள் போன்றோரை வைத்து கட்டப்பட்ட ஒரு வலைப்பின்னல் அது. கட்சிச் சின்னம்தான் அவர்களுடைய பலம்.

ஆனால் கஜன் அணியைப் பொறுத்தவரை அங்கு கட்சிச் சின்னம் முக்கியமில்லை. அந்த அணி சைக்கிளை முன்வைத்துப் பிரச்சாரத்தைச் செய்தாலும் தனது வேட்பாளர் தெரிவில் துருத்திக் கொண்டு திரியும் ஆளுமைகளை அதிகம் கவனத்தில் எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

சுரேஸ் அணியைப் பொறுத்தவரை அவர்கள் சின்னத்தை முன்னிறுத்தி கூட்டை உருவாக்கினார்கள். ஆனால் உதயசூரியனின் வலையமைப்பு என்ற ஒன்று உள்ளூரில் பலமாக இல்லை. ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் மன்னாரைச் சேர்ந்த சிவகரன் போன்றோரின் வலையமைப்புக்களே அக்கூட்டின் அடித்தளமாகும். வவுனியாவிலும், மன்னாரிலும் கூட்டமைப்பின் ஆதரவுத் தளத்தைத்தான் உதயசூரியன் உடைத்திருக்கிறது. மன்னாரில் உதயசூரியனின் வேட்பாளர்களில் பத்துக்கு மேற்பட்டவர்கள் முன்பு கூட்டமைப்பில் நின்றவர்கள் என்று கூறப்படுகிறது.

இம் மூன்று அணிகளினதும் வேட்பாளர்களையும், அவர்களுடைய பின்னணிகளையும் வைத்துப் பார்த்தால் உள்ளூரில் ஏதோ ஒரு விதத்தில் கவனிப்பைப் பெற்றவர்களை வேட்பாளர்கள் ஆக்கியுள்ளார்கள். ஆனால் இந்த உள்ளூர் பிரமுகர்களில் எல்லாருமே தேசிய விழிப்பைப் பெற்றவர்கள், முற்போக்கனவர்கள் என்று கூறிவிட முடியாது.

மேலும் தமது வெற்றி வாய்ப்புக்களை அதிகப்படுத்துவதற்காக மாவீரர் குடும்பங்களையும், போரில் அவயவங்களை இழந்தவர்களையும் கட்சிகள் களத்தில் இறக்கியுள்ளன. கிளிநொச்சியில் உயிரிழை அமைப்பின் தலைவர் ஒரு வேட்பாளராக இருக்கின்றார். அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களை சக்கர நாற்காலிகளில் வைத்து வீடு வீடாகத் தள்ளிக் கொண்டு சென்று பிரச்சாரம் செய்யப்படுவதாக கிளிநொச்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது போலவே கூட்டமைப்பில் உள்ள முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்களும் எதிரணியிலுள்ள முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்களும் கூட மாவீரர்களின் உறவினர்களை வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடமராட்சியில் கூட்டமைப்பின் தோழமைக் கட்சியொன்று அந்த வட்டாரத்தில் தன்னுடைய ஆதரவுக் குடும்பங்கள் இருக்கத்தக்கதாக மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை வேட்பாளர்களாகத் தெரிவு செய்துள்ளது.

இவ்வாறான ஒரு பின்னணிக்குள் பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வது என்பது கட்சிகளைப் பொறுத்தவரை மிகப் பெரிய சோதனைதான். கபே அமைப்புக் குறிப்பிட்டிருப்பதைப் போல பெரும்பாலான பெண் வேட்பாளர்கள் பெயரளவில்தான் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் அரசியல் தெளிவோ, பால்நிலை விழிப்போ, தேசிய விழிப்போ இருப்பதாகத் தெரியவில்லை. உள்ளூர்த் தலைமைத்துவங்களைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக உள்ளூர் விசுவாசிகளையும், பஜனைக் கோஸ்டிகளையும், நாட்டாமைகளையும் கட்டியெழுப்பிய கட்சிகள் பெண் தலைமைத்துவங்களை கட்டியெழுப்பியிருப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்கலாம்?

எனவே எப்படித்தான் பார்த்தாலும், எவ்வளவுதான் வடிகட்டித் தெரிந்தாலும் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போளையடிப்பவர்களும் ஒரு தொகுதி வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை. இவ்வாறே போளை அடிப்பவர்கள் ஏற்கெனவே உள்ளூராட்சி மன்றங்களை நிர்வகிக்கப் போய் அங்கெல்லாம் சொந்தக் கட்சிக்குள்ளேயே குத்து வெட்டுப்பட்டு சொந்தக் கட்சிக்காரனுக்கு எதிராகவே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்து அலங்கோலப்படும் ஓர் நிலமை ஏற்பட்டது. அவர்கள் போளை மட்டும் அடிக்கவில்லை. காசையும் அடித்திருக்கிறார்கள் என்று நெல்சிப் ஊழல் தொடர்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இது தொடர்பில் முறையான விசாரணை முடிவுகள் இன்னமும் வெளிவரவில்லை;.

இந்நிலையில் போளை அடிப்பவர்களையும், காசு அடிப்பவர்களையும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அனுப்பக் கூடாது என்று முடிவெடுத்து சில பிரதேசங்களில் சுயேட்சைக் குழுக்கள் களமிறக்கியுள்ளன. வல்வெட்டித் துறையில் ஒரு சுயேட்சைக்குழு எந்தவொரு கட்சியையும் உள்ளே விடமாட்டோம் என்று கூறுகின்றது. குறிப்பாக தமிழரசுக்கட்சியின் நிர்வாகத்தின் கீழ் முன்பிருந்த உள்ளூராட்சி மன்றமானது எப்படியெல்லாம் அசிங்கப்பட்டது என்பதனை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

அவர்களைப் போலவே பெரிய கட்சிகளில் நம்பிக்கையிழந்து அக்கட்சிகளோடு சேர மறுத்து ஒரு சுயேட்சைக்குழு புதுக்குடியிருப்பில் போட்டியிடுகிறது. போர்ச் சூழலுக்குள் உருவாக்கப்பட்ட இளைஞர்களில் பெரும்பாலானவர்களை கொண்ட இக்குழுவானது ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்ட கட்சிகளுக்கு சவாலாகக் காணப்படுகிறது. அச்சுயேட்சைக்குழுவைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வட்டாரமாகச் சென்று மக்களின் அபிப்பிராயத்தைப் பெற்று அந்த அடிப்படையிலேயே வேட்பாளர்களை நிறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இது தவிர மற்றொரு சுயேட்சைக்குழு முல்லைத்தீவில் போட்டியிடுகிறது.

வலிகிழக்கிலும் ஒரு சுயேட்சைக்குழு போட்டியிடுகிறது. வலிகிழக்கில் மயானக்காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு ஆதரவாகப் போராடிய அமைப்மைபச் சேர்ந்தவர்களால் இக்குழு முன்னிறுத்தப்பட்டுள்ளது. வலி கிழக்கில் மட்டுமல்ல வலிகாமத்தின் ஏனைய சில பகுதிகளிலும் மயானக்காணிகளில் குடியிருக்கும் மக்கள் தொடர்பான சர்ச்சைகள் உண்டு. இதற்கு முன்பிருந்த எந்தவொரு பிரதேச சபையும் உரிய தீர்வைக் கொடுக்கவில்லை என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும் அவ்வாறு பிர்சசினைகள் தீர்க்கப்படாத வெற்றிடத்திற்குள்தான் தமிழ்த்தேசியத்திற்கு எதிரான சக்திகளும், வடமாகாண ஆளுநரும் மேற்படி போராட்டங்களை தத்தெடுக்க முயற்சித்த ஒரு நிலமையும் உருவாகியது.

இது போலவே காரைநகரிலும் ஒரு சுயேட்சைக்குழு போட்டியிடுகிறது. விளிம்பு நிலை மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதே தமது நோக்கம் என்று அக்குழு கூறுகிறது. இதற்கு முன்னிருந்த பிரதேச சபை ஆட்சிகள் தமது அடிப்படைப் பிரச்சினைகள் பலவற்றை தீர்க்கத் தவறியதாக அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். தாங்கள் குடிப்பதற்கு நீரில்லை என்பது தங்களுடைய ஜீவாதாரப் பிரச்சினைகளில் ஒன்று. ஆனால் முன்பு பிரதேசபையை நிர்வகித்தவர்கள் அதை ஒரு பிரச்சினையாகவே எடுக்கவில்லை என்றும் அவர்களுக்கு வீட்டைக் கழுவவும், காரைக் கழுவவும் போதியளவு குடிநீர் இருந்ததென்றும் அதனால் குடிநீருக்காகத் தவித்த தமது மக்களின் தாகத்தை அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்றும் மேற்படிச் சுயேட்சைக்குழு கூறுகின்றது.

இது தவிர மற்றொரு சுயேட்சைக்குழு நல்லூர் பிரதேச சபையில் போட்டியிடுகிறது. முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சரினால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் ஆதரவோடு இக்குழு களமிறங்கியுள்ளது. தனது தேர்தல் வாக்குறுதிகளில் சுற்றுச் சூழல் தொடர்பான விவகாரங்களையும் அது முன்வைக்கிறது. தமிழ்த்தேசிய அரசியலில் ஒரு சுற்றுச்சூழல் இயக்கம் தனது வேட்பாளர்களை சுயேட்சையாக நிறுத்தியுள்ளமை என்பது முன்னெப்பொழுதும் காணப்பட்டிராத ஒரு புதிய தோற்றப்பாடுதான். இச்சுயேட்சைக் குழுவும் ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்ட கட்சிகளோடு சேர்ந்து போட்டியிட விரும்பவில்லை.

இவ்வாறாக ஸ்தாபிக்கப்பட்ட கட்சிகளோடு சேர்ந்து போட்டியிட விரும்பாத அல்லது சற்றுப் பகிடியாகச் சொன்னால் பிரதேச சபைகளில் போளை அடிக்கவோ அல்லது காசு அடிக்கவோ விரும்பாத ஒரு பகுதியினர் சுயேட்சையாக களத்திலிறங்கியிருக்கிறார்கள். இச் சுயேட்சைக் குழுக்கள் யாவும் தத்தமது பிரதேசங்களுக்குரிய தனித்துவமான பிரச்சினைகளை பிரதிபலிக்கின்றன. இந்த அடிப்படையில் பார்த்தால் உள்ளூர் யதார்த்தங்களுக்கு ஏற்ப பொருத்தமான உள்ளூர் தலைமைத்துவங்களை இக்குழுக்கள் கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறாக உள்ளூர் தலைமைத்துவங்களை ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்ட கட்சிகள் கட்டியெழுப்பத் தவறிவிட்டன என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

உள்ளூர் தலைமைத்துவங்கள் அழிக்கப்பட்டமை அல்லது பலவீனமாக்கப்பட்டமை என்பது ஒரு விதத்தில் யுத்தத்தின் நேரடி விளைவுதான். ஒரு காலம் ஆயுதப் போராட்டம் எழுச்சி பெற்று வந்த ஒரு சூழலில் உள்ளூரில் தலைவர்களாகப் பிரகாசித்த பலரும் இயக்கங்களில் இணைந்தார்கள் அல்லது இயக்கங்களின் ஆதரவாளர்களாக மாறினார்கள். இயக்கங்களுக்கிடையில் மோதல்கள் ஏற்பட்ட பொழுது இவர்களில் சிலர் பலியானார்கள். இயக்கங்களைப் படைத்தரப்பு வேட்டையாடிய பொழுது இவர்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமல் போனார்கள் அல்லது கைது செய்யப்பட்டார்கள். 2009ல் ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்த பொழுது பெரும்பாலான தமிழ்க் கிராமங்களில் சமூகப்பற்றுள்ள, தேசிய விழிப்புள்ள அர்ப்பணிப்பும், தியாக சிந்தையும் கொண்ட சுயநலமற்ற உள்ளூர் தலைமைத்துவம் எனப்படுவது பெருமளவிற்கு அழிக்கப்பட்டு விட்டது அல்லது புலம்பெயர்ந்து விட்டது அல்லது உறங்கு நிலைக்குச் சென்று விட்டது.

இப்படியானதோர் பின்னணிக்குள் கடந்த எட்டாண்டு காலச் சூழலில் இறந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்றிருக்கக் கூடிய உள்ளூர் தலைமைத்துவங்களை கட்டியெழுப்ப பெரும்பாலான எந்தக் கட்சியாலும் முடியவில்லை. இந்த வெற்றிடத்தில்தான் போளை அடிப்பவர்களும், காசு அடிப்பவர்களும் களத்தை அலங்கரித்தார்கள். இப்பொழுது போளை அடிப்பவர்களையும் காசு அடிப்பவர்களையும் அகற்றி விட்டு புதிய முற்போக்கான சமூகச் சிற்பிகளாக மேலெழ வல்ல உள்ளூர் தலைமைத்துவங்களை கட்டியெழுப்ப வேண்டிய ஒரு தேவையை உள்ளூராட்சி சபைத் தேர்தல் கொண்டு வந்திருக்கிறது. போளை அடிப்பவர்கள் யார்? போளை அடிக்காதவர்கள் யார்? காசு அடிப்பவர்கள் யார்? காசு அடிக்காதவர் யார்? தமிழ்த்தேசியத்தை ஒரு முகமூடியாக அணிந்து கொண்டு குற்றம் செய்பவர் யார்? குற்றம் செய்யாதவர் யார?; என்று தரம்பிரித்து வடிகட்டி வாக்களிப்பது மகா ஜனங்களுடைய பொறுப்பு.

13.01.2017

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *