தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஒரு பொதுவான தமிழ் நம்பிக்கை. ஆனால், ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை கடந்த நான்காண்டுகளாக தை பிறந்தும் வழி பிறக்கவில்லை. இவ்வாண்டிலாவது வழி பிறக்குமா? அல்லது நாளை மற்றொரு நாளே என்ற கவிதை வரியைப் போல இந்த ஆண்டும் மற்றொரு ஆண்டாக மாறிவிடுமா?
முன்னைய நான்கு ஆண்டுகளோடும் ஒப்பிடுகையில், இவ்வாண்டு வேறுபட்டதாக அமையக்கூடும் என்று யாராவது நம்புவார்களாயிருந்தால் அவர்கள் தமிழர்களின் அரசியலோடு சம்பந்தப்பட்ட இரண்டு முக்கிய நிகழ்வுகளைக் கருதியே அவ்வாறு கூற முடியும்.
வரும் ஜெனிவாக் கூட்டத் தொடரும் அதன் பின் வரப்போகும் இந்தியப் பொதுத் தேர்தலுமே அந்த இரு முக்கிய நிகழ்வுகளாகும். இவையிரண்டும் இந்த ஆண்டைத் திருப்பங்களுக்குரிய ஆண்டாக மாற்றுமா?
முதலில் ஜெனிவாக் கூட்டத் தொடரை எடுத்துப் பார்க்கலாம்.
வழமை போல ஜெனிவாவை நோக்கி தமிழர்களின் நம்பிக்கைகள் குவியத் தொடங்கிவிட்டன. இம்முறை முன்னைய ஆண்டுகளை விட இறுக்கமான ஒரு நிலைப்பாட்டையே மேற்கு நாடுகள் எடுக்கலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. இதில் பிரித்தானியா ஒப்பீட்டளவில் கடும் நிலைப்பாட்டை எடுக்கக்கூடும் என்று ஒரு அவதானிப்பு உண்டு. ஆனால், மேற்கு நாடுகள் எந்தவொரு நிலைப்பாட்டை எடுத்தாலும் அது இலங்கை அரசாங்கத்தின் கழுத்தை நெரிக்கும் ஒரு நிலைப்பாடாக இருக்குமா? அல்லது காதைத் திருகும் ஒரு நிலைப்பாடாக இருக்கமா?
இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலுமான நிலைமைகளைத் தொகுத்துப் பார்த்தால் காதைத்திருகும் ஒரு நிலைப்பாடே வெளித் தெரிகிறது. சிலசமயம் காதைத் திருகுவதோடு தலையில் சில குட்டுக்களையும் போடலாம். அவை செல்லக் குட்டுக்களா அல்லது வலிக்கும் குட்டுக்களா என்பதெல்லாம் இலங்கை அராசங்கத்தின் கைகளில்தான் தங்கியிருக்கிறது. ஆனால், கழுத்தை நெரிக்கும் ஒரு முடிவை எடுப்பதற்குரிய அரசியல் திடசித்தம் மேற்கு நாடுகளின் மத்தியில் இன்னமும் உருவாகவில்லை என்றே தோன்றுகிறது.
போர் குற்றவிசாரணை தொடர்பில் அனைத்துலக பொறிமுறை ஒன்றைக் குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இவ்வெச்சரிக்கைகள் எவையும் செயலுக்குப் போகும் தீர்மானங்களாக நிறைவேற்றப்படுமா என்பதே இப்போதுள்ள கேள்வி.
சீனாவையும், ரஷ்யாவையும் மீறி ஐ.நா. சபையில் இலங்கை அரசாங்கத்துக்கெதிராகத் தீர்மானங்களை நிறைவேற்ற முடியாது. இத்தகையதொரு பின்னணியில்தான் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றைக் குறித்து உரையாடப்படுகின்றது. எனவே, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றைக் குறித்த உரையாடல்களும், தென்னாபிரிக்காவைப் போல உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு ஒன்றைக் குறித்த உரையாடல்களும் ஒருவிதத்தில் மேற்கு நாடுகள் கடைப்பிடித்து வரும் முறிக்காமல் வளைக்கும் அணுகுமுறையின் பாற்பட்டவைதான். அவை அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை வழங்கும் உத்திகள்தான். அதாவது, கழுத்தை நெரிக்காமல் காதைத் திருகும் அரசியல்.
எனவே, மேற்குநாடுகள் இலங்கை அரசாங்கத்தை இனி வளைப்பதில்லை முறிப்பதுதான் என்ற ஒரு முடிவுக்கு வரவேண்டும். அதுஒரு கொள்கைத் தீர்மானம்தான். அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டால்தான் இவ்வாண்டில் திருப்பகரமான மாற்றங்கள் எதையும் தமிழர்கள் எதிர்பார்க்கலாம்;. அப்படியொரு முடிவை நோக்கி இந்தியாவையும், மேற்கு நாடுகளையும் உந்;தித்தள்ள தமிழ் லொபியால் முடியுமா?
இது தான் பிரச்சினையே.
முன்னரங்கில் ஒரு தரப்பாக இருக்க வேண்டிய தமிழர்கள் பின்னரங்கிற்கு லொபிக் குழுக்களாகப் பி;ன் தள்ளப்பட்டிருப்பது மிகவும் பலவீனமானதொரு நிலைதான். ஏறக்குறைய இலங்கை – இந்திய உடன்படிக்கை உருவாகிய போதிருந்த ஒரு நிலைமையை ஒத்ததுதான்.
இதில் சக்திமிக்க நாடுகள் தமது புவிசார் அரசியல் நலன்களின் நிமித்தம் தமிழர்களைப் பலியிட்டு விடாதபடிக்கு தமிழர்கள் லொபி செய்ய வேண்டியிருக்கிறது. ஏனெனில், தென்னாசியப் பிராந்தியத்தில் கடந்த சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சக்திமிக்க எல்லா நாடுகளினதும், புவிசார் அரசியல் நலன்களுக்காக குரூரமாக வேட்டையாடப்பட்ட மக்களாகத் தமிழர்களே காணப்படுகி;ன்றார்கள்.
அரசுக்கும் – அரசுக்கும் இடையிலான கட்டமைக்கப்பட்ட உறவு வலைப்பின்னலுக்கூடாக இலங்கை அரசாங்கம் நகர்த்தக்கூடிய காய்களோடு ஒப்பிடுகையில் அரசற்ற தரப்பாகிய தமிழர்கள் நகர்த்தக்கூடிய காய்களிற்கு அடிப்படையான வரையறைகள் உண்டு. இப்படிப் பார்த்தால் ஜெனிவா எனப்படுவது தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அரங்குதான்.
ஆனால், இந்திய அரங்கு ஒப்பீட்டளவில் அப்படிப்பட்டது அல்ல. சிலவேளை, டில்லியில் ஒரு கூட்டரசாங்கம் உருவாகுமிடத்து அங்கு தமிழர்கள் அழுத்தங்களைப் பிரயோகிக்கவல்ல ஒரு தரப்பாகச் செயற்பட முடியும். டில்லியில் முடிவுகளை எடுக்கும் தரப்புக்களில் ஒன்றாகவோ அல்லது அத்தகைய தரப்புகளின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கவல்ல ஒன்றாகவோ தமிழ் நாடு உருவாகுமிடத்து இந்த ஆண்டு ஒரு மாற்றங்களுக்குரிய ஆண்டாக அமைய இடமுண்டு.
ஆனால், இங்கேயும் ஒரு அடிப்படையான பிரச்சினையிருக்கிறது. அது என்னவெனில், ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட ஒரு லொபியைச் செய்தாலும் அது அதன் இறுதிப் பிரயோக நிலையில் அங்குள்ள அரசியற் கட்சிகளைக் கையாள்வதாகவே அமையும். அப்படித் தமிழ் நாட்டில் உள்ள கட்சிகளைக் கையாளும்போது அககட்சிகளின் நலன்சார் வியூகத்துடன் சிக்குப்படும ஆபத்தும் உண்டு. இது ஏற்கனவே, பல தடவைகள் நடந்துமிருக்கிறது. குறிப்பாக, கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கூட மேற்படி உள்ளுர் மோதல் பிரதிபலித்ததை இங்கு சுட்டிக்காட்டலாம்.
ஒரு ரஷ்யப் பழமொழி இருக்கிறது. ‘‘கடவுளுக்குள்ள முக்கிய பிரச்சினை எதுவெனில்…. அவர் எதைச் செய்வதென்றாலும் அதை மனிதர்களை வைத்தே செய்ய வேண்டியிருக்கிறது” என்று. தமிழ் நாட்டிற்கான ஈழத் தமிழ் லொபியின் நிலையும் ஏறக்குறைய இத்தகையதுதான். அங்கு எதைச் செய்வதென்றாலும் அது அதன் இறுதி நிலையில் அங்குள்ள பிரதானகட்சிகளுக்கூடாகவே செய்ய வேண்டியிருக்கிறது. இதனால், அங்குள்ள பெரிய கட்சிகளுக்கிடையிலான உள்ளுர்ப் போட்டிகளுக்குள்ளும், வாக்கு வேட்டை வியூகங்களுக்குள்ளும் ஈழத்தமிழ் லொபி சிக்குப்படும் ஆபத்து எப்பொழுதுமிருக்கிறது. இது காரணமாகவே கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாணவர் போராட்டங்களின்போது மாணவர் தலைமைகள் பெரிய கட்சிகளை உள்ளெடுக்க மறுத்ததை இங்கு சுட்டிக்காட்டலாம்.
இது விசயத்தில் ஈழத்தமிழ் நோக்கு நிலையிலிருந்து தமிழ் நாட்டைக் கையாள்வது தொடர்பில் அதிகம் அறிவுபூர்வமான ஆய்வுகளையோ அல்லது கொள்கைத்திட்ட வரைபுகளையோ ஈழத் தமிழர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க அளவிற்குக் காண முடியவிலலை. தமிழ் நாட்டை எப்படி கட்சி சாராது கையாள்வது என்பது தொடர்பில் அதிகம் அறிவு பூர்வமான வழி வரைபடம் ஏதும் இதுவரையிலும் ஈழத்தமிர்கள் மத்தியில் உருவாக்கப்படவில்லை.
இது அடிப்படையானதொரு பிரச்சினை. இந்தப் பிரச்சினை வெற்றிகரமாகக் கையாளப்படாத வரை தமிழ் நாட்டுக்கான ஈழத்தமிழ் லொபியென்படுவது அதன் புத்திபூர்வமான செயற்றிறன் மிக்க இறுதி வடிவத்தைப் பெற முடியாது.
எனவே, மேற்கண்டவை அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெரியவரும். அதாவது ஜெனிவாவில் தமிழர்கள் ஒரு தரப்பு அல்ல என்பதால் அங்கு தமிழர்களுக்கு அடிப்படையான வரையறைகள் உண்டு. அதைப் போலவே தமிழ் நாட்டிலும் அங்குள்ள பெரிய கட்சிகளுக்கூடாவே எதையும் செய்ய வேண்டியிருப்பதாலும் அடிப்படையான வரையறைகள் உண்டு. அதாவது, ஈழத்தமிழர்கள் தமது அனைத்துலக அரசியலை முன்னெடுப்பதில் இரு பிரதான பின் தளங்களிலும் வரையறைகள் உண்டு. இத்தகைய வரையறைகளின் பின்னணியில் இந்த ஆண்டு ஒரு நிர்ணயகரமான ஆண்டாக அமையுமா? இல்லையா? என்பது பின்வரும் பிரதான மாற்றங்களிற் தங்கியிருக்கிறது.
முதாவது- இந்தியாவில் ஏற்படக் கூடிய ஆட்சி மாற்றமும், அந்த மாற்றத்தை வெற்றிகரமாகக் கையாளத்தக்க ஒரு வளர்ச்சியைத் தமிழ் லொபி பெறுவதும்.
அதாவது, உலகளாவிய தமிழ் லொபி என்ற ஈட்டியின் கூர்முனையாகக் காணப்படும் தமிழ் நாட்டைக் கையாள்வதற்குரிய நடைமுறைச் சாத்தியமான கொள்கைத் திட்ட வரைபு ஒன்றைத் தமிழர்கள் கண்டு பிடிப்பது.
இரண்டாவது- மேற்குநாடுகள் இலங்கை அரசாங்கத்தை இனி வளைப்பதில்லை முறிப்பதுதான் என்ற ஒரு முடிவுக்கு வருவது.
மூன்றாவது- அனைத்துலக மற்றும் பிராந்திய அரசியல் வலுச்சமநிலைகளில் எதிர்பாராத திடீர்த் திருப்பங்கள் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக சீனாவுக்கு எதிரான அனைத்துலக அல்லது பிராந்திய வியூகங்கள் இப்பொழுது இருப்பதை விடவும் பலமடைவது. அதாவது சீனாவின் நண்பர்களைத் தண்டிக்கும் ஒரு உலகக் சூழல் அல்லது பிராந்திய சூழல் உருவாகுவது.
நான்காவது-இலங்கை அரசாங்கமானது மேற்கு நாடுகளும் இந்தியாவும் எதிர்பார்க்கும் ஒரு எல்லை வரை அதாவது, திருப்பிச் செல்லவியலாத ஒரு எல்லை வரை வளைந்துகொடுக்க மறுத்து இரண்டு தரப்புக்களையும் முறித்துக்கொண்டு செங்குத்தாகத் திரும்புவது அதாவது யு ரேண் எடுப்பது.
;ஐந்தாவது, உலகம் பூராகவும் அல்லது பிராந்திய அளவில் சுனாமியைப் போல பரந்தளவிலான ஒரு இயற்கை அனர்த்தம் ஏற்படுவது.
மேற்சொன்ன மாற்றங்களில் ஒன்று அல்லது சில ஏற்படுமிடத்து இலங்கைத் தீவில் தமிழர்களின் அரசியலில் பெருந்திருப்பங்களை எதிர்பார்க்கலாம். இல்லையெனில், இந்த ஆண்டும் இதற்கு முந்திய நான்கு ஆண்டுகளைப் போல வெளியாருக்காகக் காத்திருந்த ஒரு ஆண்டாகவே முடியக்கூடும்.