சீன அரசாங்கத்தின் சிந்தனைக் குழாத்தைச் சேர்ந்த ஒருவர் நரேந்திர மோடியை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ”நிக்ஷனைப் போன்றவர்’ என்று வர்ணித்துள்ளார்.குஜராத்தில் ஒரு முதலமைச்சராக அவர் எப்படிச் செயற்பட்;டார் என்பதன் அடிப்படையில் சில விமர்சகர்கள் அவரை சிங்கப்பூரின் லீகுவான் யூ வைப் போன்றவர் என்று வர்ணித்துள்ளார்கள். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவரை தென் ஆசியாவின் மகிந்த என்று வர்ணித்துள்ளார். ஏறக்குறைய இதே தொனிப்படவே அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் கருத்துக் கூறியுள்ளார். தயான் ஜெயதிலக மகிந்தவும் மோடியும் ஒரே தறியில் நெய்யப்பட்ட துணிகள் என்று கூறியுள்ளார். பி.பி.சிக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். அதேசமயம், விமர்சனத்தோடு தமிழ்த்தேசியத்தை ஏற்றுக்கொள்ளும் ஒரு பிரிவினர் மோடியை இன்னொரு ராஜபக்ஷ என்று வர்ணிக்கின்றார்கள். குஜராத்தில் அவரும் இனப்படுகொலை செய்தவர் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இனப்படுகொலைக்கு நீதி கேட்டும் தமிழர்கள் அதை இன்னொரு இனப்படுகொலையாளியிடம் எதிர்பார்க்க முடியாது என்றுமவர்கள் கூறி வருகிறார்கள்.
அதாவது, இரு வேறு துருவ நிலைகளில் இருப்பவர்கள் மோடியையும், மகிந்த ராஜபக்ஷவையும் ஒப்பிட்டுக் கருத்துக் கூறியுள்ளார்கள்;. மெய்யாகவே இருவருக்குமிடையில் ஒற்றுமைகள் உண்டா? அப்படி ஒற்றுமைகள் இருந்தால் அது இச்சிறு தீவின் எதிர்காலத்தை நேர்மறையாகத் தீர்மானிக்குமா? அல்லது எதிர்மறையாகத் தீர்மானிக்குமா?
அவருடைய ஆழுமையைச் செதுக்கிய மற்றொரு முக்கிய காரணி, 1975இல் இந்திரா காந்தியால் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம். அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. இதனால் இனாம்டரும் மோடியும் உட்பட ஏனைய ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களும் தலைமறைவாக நேரிட்டது. வழமைக்கு மாறான உடைகளை அணிந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ். அனுதாபிகளின் வீட்டில் தலைமறைவாக வாழ்ந்த அந்நாட்களில் மோடி செயற்பட்ட விதம் அவரை தலைமைத்துவத்தை நோக்கிப் படிப்படியாக உயர்த்தியது. ஒரு தீவிர சமயச் செயற்பாட்டாளராகத் தொடங்கியவர் முடிவில் முழு நேர அரசியல் செயற்பாட்டாளராக அரசியல்வாதியாக மாறினார். அவசரகாலச் சட்டம் அவரது செயற்பாட்டாழுமையைச் செதுக்கியது.
இதை ஓர் ஆழுமை உருவாக்கமாக ஏற்க மறுப்பவர்களும் உண்டு. இந்திய அறவுஜீவிகளில் ஒரு பகுதியினரும், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்களில் ஒரு பகுதியினரும் அப்பிடித்தான் கருதுகிறார்கள். மோடியின் எழுச்சியை அவர்கள் அடிப்படைவாதத்தின் எழுச்சியாகப் பார்க்கின்றார்கள்.
ஆனால், மோடி ஒரு தனி மனிதன் அல்ல. அவர் ஒரு சமூகத்தின் கூட்டு மனோநிலையின் பெரும்பகுதியைப் பிரதிபலிக்கிறார். அவர் பெற்றிருக்கும் வெற்றியின் பருமன் அத்தகையது. அவரைக் கடுமையாக எதிர்த்த, விமர்சித்த அறிவுஜீவிகளால் ஆதரிக்கப்பட்ட பல வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டதை இங்கு சுட்டிக்காட்டவேண்டும். பொதுப் புத்திக்கும், புத்திசாலித்தனத்திற்கும் அநேகமாகப் பெருந்தி வருவதில்லை என்றொரு கூற்று உண்டு. ஆயின் மோடியைத் தெரிந்தெடுத்தவர்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களா? இக்கேள்வியை அதன் அடுத்த கட்டத்திற்கு வளர்த்துச் சென்றால் இந்தியா இருண்ட ஒரு மத அடிப்படை வாதத்தை நோக்கி செல்லத் தொடங்கிவிட்டதா? என்றும் கேட்கத் தோன்றும்.
ஆனால், மோடியின் வெற்றியை இருண்ட மத அடிப்படைவாதத்தின் வெற்றியாக மட்டும் சுருக்கிப் பார்க்க முடியாது. அதை அதன் பல்பரிமாண இயங்குவிசைகளுக்கூடாகவே விளங்கிக்கொள்ள வேண்டும். அதாவது, மத அடிப்படைவாதம் மட்டும் மோடியின் வெற்றியைத் தீர்மானிக்கவில்லை. முஸ்லிம்களில் ஒரு சிறு பகுதியினர் அவருக்கு வாக்களித்திருப்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ் நாடு மற்றும் கேரளா உட்பட சில மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகள் பெற்ற வெற்றிகளையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். மோடியின் வெற்றி பல்பரிமாணங்களைக் கொண்டது. அது சிக்கலான பல காரணிகளில் திரண்ட விளைவாக உருவாகியது.
கொங்ரஸ் விட்ட வெற்றிடத்திலிருந்து அது தொடங்குகிறது. கொங்கிரஸ் கட்சி அதன் தலைமையைப் பாதுகாப்பதற்குப் பதிலாக கட்சியைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்திருந்திருந்தால் சில சமயம் தேர்தல் முடிவுகள் வேறு விதமாக அமைந்திருக்கக்கூடும். அதாவது, நேரு குடும்பத்தைப் பலப்படுத்துவதை விடவும் கட்சியைப் பலப்படுத்தியிருந்திருந்தால் முடிவுகள் வேறு விதமாக அமைந்திருக்கக்கூடும். தனது அந்நிய அடையாளம் காரணமாக சோனியா காந்தி அரங்கின் முன்னணிக்கு வரத் தயங்கினார். ராகுல் காந்தியின் தலைமைத்துவம் பலப்படும் வரையிலும் ஒரு கிங் மேக்கராக அவர் பின்னரங்கில் இருந்து செயற்பட்டார். ராகுல் காந்தி கட்டியெழுப்படும்போது அவருக்குப் போட்டியாக வரமுடியாத ஒரு தலைவரை இடைப்பட்ட காலத்திற்கு நியமிக்கவேண்டியிருந்தது. அதற்கு மன்மோகன்சிங்கே தோதானவராகக் காணப்பட்டார். இந்தியப் பொருளாதாரத்தைப் பொறுத்த வரை மன்மோகன் சிங் குறிப்பிடத்தக்க அளவிற்கு பொருத்தமானவராக இருக்கலாம். ஆனால், ஒரு பிராந்திய வல்லரசின் சக்கரவார்;;த்திக்கு இருக்க வேண்டிய மிடுக்கும் நிமிர்வும் அவரிடம் இருக்கவில்லை. அவருக்கு மட்டுமல்ல, இந்திரா காந்திக்குப் பின் வந்த பெரும்பாலான இந்தியத் தலைவர்களிடம் அது இருக்கவில்லை. வி.பி.சிங்கிடம் ஒரு வித்தியாசமான ஆழுமை இருந்தது. ஆனால், அது பிராந்திய வல்லரசின் சிம்மசானத்தை அலங்கரிப்பதற்குரிய இரும்பினாலும், இரத்தத்தாலுமான ஓர் ஆழுமையல்ல.
இத்தகையதொரு பின்னணியில், அப்படிப்பட்ட ஒரு தலைமைத்துவத்தை கொங்கிரஸ் கட்சிக்கு வெளியே தேடும் ஒரு போக்கு கடந்த சில தசாப்தங்களாகக் காணப்பட்டது. ஒரு காலம் அத்வானி அந்த வெற்றிடத்தை நிரப்புவர் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
இத்தகையதொரு பின்னணியில் இம்முறைத் தேர்தலில், வழமையான இந்தியத் தேர்தல்கள் போலன்றி, ஆனால், கிட்டத்தட்ட அமெரிக்கத் தேர்தலைப்போல ஒரு பெயரை முன்வைத்து வாக்குக் கேட்கப்பட்டது. இப்படி ஆழுமைப் போட்டி என்று வந்தபோது ராகுல் காந்தியை விடவும் மோடியின் ‘இரத்தத்தினாலும், இரும்பினாலுமான’ ஆழுமை துலங்கிக்கொண்டு தெரிந்தது. அவரது உளவியலை உருவாக்கிய ஆர்.எஸ்.எஸ். பின்னணி பெரியளவில் எடுபடவில்லை. இது ஒரு காரணம்.
இதைவிடப் பல காரணங்கள் உண்டு. மோடி கோப்ரேட் நிறுவனங்களின் காதலன் என்றொரு காரணம் கூறப்படுகிறது. மோடி மட்டுமல்ல, மன்மோகன் சிங்கும் அதுதான். ஆனால், இம்முறை தேர்தலில் வென்றவர்களில் 442 பேர் கோடீஸ்வரர்கள் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மீது குற்றவியல் சார்ந்த குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பணமும் பலமுமே தலைவர்களைத் தீர்மானித்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், இது .ஒர் உலகளாவியப் போக்கு. திறந்த சந்தைப் பொருளாதாரத்தின் தவிர்க்கப்படவியலாத ஒரு விளைவு.
இது தவிர இம்முறை ஊடகங்கள் உருவாக்கிய மாயையும் மோடியின் வெற்றிக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. மோடி கெட்டித்தனமாக உள்ளுர் ஊடகங்களைக் கையாண்டார் என்றும் அவர் முன்வைத்த சுலோகங்கள் எளிமையானவைகளாக, சிக்கலற்றவைகளாகக் காணப்பட்டதால் அவை இலகுவாக வெகுசனங்களைச் சென்றடைந்தன என்றும்; கூறப்படுகிறது. புதிதாக வயதுக்கு வந்த வாக்காளர்களைப் பொறுத்த வரை அவர்களின் உளவியலைத் தீரமானிக்கும் ஊடகங்கள் அவர்களைப் பெருமளவிற்கு இறந்த காலத்தில் இருந்து துண்டித்துவிட்டன என்றும், இதனால்,ஒரு பலமான தலைமைத்துவம் ‘அனைவருக்கும் வளர்ச்சி…அனைவருக்கும் மேன்மை’போன்ற சுலோகங்கள் இலகுவாக மக்களைச் சென்றடைந்தன என்றும் கூறப்படுகிறது. இவை போன்ற பல காரணிகளும் சேர்ந்து மோடியை மேலுயர்த்திவிட்டன.
இத்தகையதொரு விளக்கத்தின் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது மோடியை ஒரு தனி நபராக நோக்க முடியாது. மாறாக, அவர் ஒரு பெரும்போக்கை பிரதிபலிக்கும் தலைவர்தான். அப்போக்கின் வேர்கள் மிக ஆழமானவை. இந்திய ஆன்மிக மரபு, அது சார்ந்த குருட்டு நம்பிக்கைகள், இந்தியத் தேசியத்தின் உள்ளடக்கப் போதாமை, நிதி மூலதானப் படர்ச்சி, கோப்பரேட் முதலாளிகளுக்குச் சேவகம் செய்யும் ஊடக வலையமைப்பு போன்ற இன்னோரன்ன அம்சங்களிலிருந்து அப்பெரும் போக்கின் வேர்கள் புறப்படுகின்றன. மோடியை இப்போக்கின் ஆகப் பிந்திய வடிவம் எனலாம். உலகின் ஆகப் பெரிய ஜனநாயகத்தின் ஆகப் பிந்திய தெரிவு அவர்.
இலங்கை கண்கொண்டு நோக்கும்போது அவர் மிக அடி மட்டத்திலிருந்து எழுச்சி பெற்ற விதம் அவருடைய எதிரிகளை அவர் கையாண்ட விதம் என்பவற்றைக் கருதி கூறின் அவருக்கும், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவுக்குமிடையில் சில ஒற்றுமைகள் உண்டு. இத்தகைய பொருள் படக் கூறின் மோடியை மகிந்த 10 பிரேமா கலப்பு எனலாமா? தனது பதவியேற்பு வைபவத்தில் வழமைக்கு மாறாக அவர் சார்க் தலைவர்களை அழைத்திருப்பது ஒரு விதத்தில் பிராந்தியத்தில் தனக்குரிய அங்கீகாரத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் தான். உள்நாட்டில் ஒரு தொகுதி புத்திஜீவிகளும், படைப்பாளிகளும், விமர்சர்களும் தன்னை ஏற்றுக்கொள்ள வில்லை என்பது அவருக்குத் தெரியும். தேர்தல் வெற்றிகளுக்கும் அடுத்தபடியாக, அவருக்கொரு அங்கீகாரம் தேவைப்படுகிறது. அதை அவர் முதலில் பிராந்திய மட்டத்தில் உறுதிப்படுத்த முயற்சிக்கிறார். பல மாதங்களுக்கு முன் அமெரிக்கா அவருக்கு நுழைவிசை வழங்க மறுத்ததை அவர் மறந்திருக்க மாட்டார்.
எனவே, தேர்தல் வெற்றிகளை அடிப்படையாக வைத்து தனக்குரிய கேள்விக்கிடமற்ற ஓர் அங்கீகாரத்தை அவர் கட்டியெழுப்ப முற்படுவார். இதற்கு முன்பிருந்த கொங்கிரஸ் தலைவர்களும் ஏனைய தலைவர்களும் சாதித்ததைவிடவும் கூடுதலாக எதையாவது சாதித்துக் காட்டமுற்படுவார். தன்னை ‘இரும்பினாலும், இரத்தத்தாலுமாகிய’ ஒரு தலைவராக நிரூபித்துக்காட்டவும் கூடும்.
அவருடைய எழுச்சியோடு ஆசியப் பிராந்தியத்தில் மேலுமொரு கேள்விக்கிடமற்ற இறுக்கமான தலைமை உருவாகியிருக்கிறது. ஏற்கனவே, சீனாவில் கொம்மியூனிஸ்ற் கட்சியின் தலைமை கேள்விக்கிடமற்ற பலத்தோடு காணப்படுகிறது. பாகிஸ்தானிலும் பெருமளவிற்கு படைத் துறையினரை மீறிப்போக முடியாத ஓர் ஆட்சிக் கட்டமைப்பே உண்டு. இலங்கைத்தீவிலும் எதிர்கட்சிகள் தலையெடுக்க முடியாத சக்தி மிக்க ஓர் அரசாங்கமே காணப்படுகிறது. இங்கேயும் அதிகாரத்தின் நிழலில் அடிப்படைவாதிகள் புதுப்பலம் பெற்றுவருகிறார்கள்.
இவ்விதமாக சில அடிப்படையான வேறுபாடுகள் இருந்தபோதிலும் ஏறக்குறைய ஒரே இயல்பினையுடைய தலைமைகள் பிராந்திய மட்டத்தில் எழுச்சிபெறுவதானது, எதிர்காலத்தில் இப்பிராந்தியத்தை எங்கே கொண்டுபோய் விடும்? ஓரே இயல்புடைய இத்தலைமைகளுக்கிடையிலான நட்பு அல்லது பகைமையே இனிவரும் நாட்களில் இப்பிராந்தியத்தின் ஸ்திரத் தன்மையையும் வலுச் சமநிலையையும் தீர்மானிக்கப்போகிறது. அதுதான் ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப் போகின்றது.
23-05-201