நினைவு கூர்தலுக்கான ஒரு பொது உடன்படிக்கை


திலீபனின் நினைவிடத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் அதன்பின் யாழ்.மாநகரசபை வெளியிட்ட அறிக்கையும் இக்கட்டுரையை எழுதத்தூண்டின. நினைவிடம் அமைந்திருப்பது மாநகர சபை எல்லை என்பதால் அந்த இடத்திற்கும் நிகழ்வுக்கும் மாநகரசபை உரிமை கோருகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு கூர்தலின் போது மாகாணசபையும் அப்படி உரிமை கோரியது. முள்ளிவாய்க்கால் நிலத்துண்டு பிரதேசசபை எல்லைக்குள் அமைந்திருப்பதால் பிரதேசசபை அதை அனுஷ்டிக்கும் என்றும் பிரதேச சபை நிர்வாகம் மாகாணசபையின் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் வருவதால் நினைவு கூர்தலை மாகாணசபை நடத்தும் என்று ஒரு விளக்கம் தரப்பட்டது. அது போலவே கிளிநொச்சியில் மாவீரர் துயிலுமில்லத்தை கரைச்சி பிரதேசசபை பொறுப்பெடுக்க முற்பட்டது சர்ச்சையை உண்டாக்கியது. இவ்வாறான சர்ச்சைகள் ஏன் ஏற்படுகின்றன? பின்வரும் காரணங்களைக் கூற முடியும்.

1. எல்லாத்தரப்பையும் ஒருங்கிணைக்கவல்ல ஒரு பெருந்தலைமை தமிழ்மக்கள் மத்தியில் இல்லை.
2. நினைவு கூர்தல் என்றால் என்ன என்பது பற்றிய பொருத்தமான விளக்கம் இன்மை. யாரை, யார், எதற்காக நினைவு கூர்வது?
3. நினைவு கூர்தலில் உள்ள பல்வகைமையை விளங்கிக் கொள்ளாமை, ஏற்றுக்கொள்ளாமை. அதாவது ஒரு நினைவு கூர்தல் அல்ல பல நினைவு கூர்தல்கள் உண்டு என்ற விளக்கம் இன்மை
4. நினைவு கூர்தலை ஒரு பொது மக்கள் நிகழ்வாகக் கருதாமல் கட்சி நிகழ்வாகக் குறுக்குவது. எந்தக்கட்சி முதலில் நினைவு கூர்ந்து அதை படம் எடுத்து முகநூலிலும் இணைய ஊடகங்களிலும் போடுவது என்ற போட்டி.
5. சில நினைவு கூர்தல்களில் சில கட்சிகள் அல்லது இயக்கங்களுக்கு பங்கெடுக்க உரிமையோ தகுதியோ இல்லை என்ற ஒரு வாதம்
6. டயஸ் பொறாவில் உள்ள பணவலிமை கொண்ட சில தரப்புக்கள் தாயகத்தில் நினைவு கூர்தல்களை ஒழுங்குபடுத்த முயற்சிப்பதும் தாயகத்தில் இதில் சம்பந்தப்படும் தரப்புக்களை ரிமோர்ட் கொன்ரோல் செய்ய முயற்சிப்பதும்.
7. சில மக்கள் பிரதிநிதிகள் சில நினைவு கூர்தல்களைத் தத்தெடுக்க முயற்சிப்பதும் அதில் ஏனையவர்கள் தலையிடுவதைத் தடுப்பதும்.
8. அரச புலனாய்வுத்துறையின் செயற்பாடுகள்.

மேற்படி காரணங்களினால் தாயகத்திலும், டயஸ்பொறாவிலும் நினைவு கூர்தல் எனப்படுவது சமூகத்தைப் பிரிக்கும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. அது இறந்தவர்களை கௌரவிக்கும் ஒரு நிகழ்வா அல்லது அவமதிக்கும் ஒரு நிகழ்வா என்று கேள்வி கேட்குமளவுக்கு நிலமைகள் காணப்படுகின்றன. வருமாண்டுகள் தேர்தல் ஆண்டுகளாக இருக்கலாம் என்ற ஓர் ஊகத்தின் அடிப்படையில் சிந்தித்தால் இனிவரும் நினைவு கூர்தல்களில் முன்னரை விடக் கூடுதலான குழப்பங்களுக்கும் பூசல்களுக்கும் இடமுண்டு. இக்குழப்பங்கள் கடந்த ஆண்டு மட்டக்களப்பில் அன்னை பூபதி நினைவு தினத்தன்று பொலிஸை வரவழைக்கும் ஒரு விகார வளர்ச்சிக்கு இட்டுச் சென்றன. வருங்காலங்களில் இது போன்ற குழப்பங்கள், ஏற்படுவதைத் தடுப்பதற்கு என்ன வழி?

ஒரு பொது ஏற்பாட்டுக்குழுவை உருவாக்கினால் நினைவுகூர்தல்கள் ஓர் ஒழுங்கிற்குள் வரும் என்று கூறப்படுவது சரியா? ஒரு பொது ஏற்பாட்டுக்குழுவை உருவாக்கினால் மட்டும் இக்குழப்பங்கள் தீர்ந்து விடுமா? ஏனெனில் நினைவு கூர்தல் எனப்படுவது ஒரு தரப்புடன் மட்டும் சம்பந்தப்படுவது அல்ல. யாரை நினைவு கூர்வது? யார் யார் நினைவு கூர்வது? போன்ற விடயங்களில் பல்வகைமை உண்டு. ஒற்றைப்படையாக ஒரு பொதுக்குழுவை உருவாக்கி அக்குழுவே எல்லா நினைவு கூர்தல்களையும் பொறுப்பேற்பது நடைமுறைச் சாத்தியமற்றது. ஏனெனில் நினைவு கூரப்படுவோர் பல வகைப்பட்டவர்களாகக் காணப்படுகிறார்கள். அதில் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் உண்டு. பொதுமக்களும் உண்டு. இது பிரதானமான ஒரு வகைப்பாடு. இதை விட பல உப வகைகள் உண்டு. அவையாவன

1. இயக்கத்திலிருந்து படையினரால் கொல்லப்பட்டவர்
2. இயக்கத்திலிருந்து தனது இயக்கத்தாலேயே கொல்லப்பட்டோர். அதாவது உள்இயக்கச் சண்டையில் கொல்லப்பட்டவர்.
3. இயக்கச் சண்டைகளில் வேறு இயக்கத்தால் கொல்லப்பட்டவர்
4. இந்திய அமைதி காக்கும் படையால் கொல்லப்பட்டவர்
5. துணைக் குழுக்களால் கொல்லப்பட்டவர்
6. இயக்கங்களால் கொல்லப்பட்ட பொதுசனம்
7. யார் கொன்றது யார் கடத்தியது என்று தெரியாமல் கொல்லப்பட்டோர், காணாமல் போனோர்.

மேற்படி வகைகளைச் சேர்ந்தவர்களை அவர்களுடைய தனிப்பட்ட உறவினர் நண்பர்கள் நினைவு கூர்வதுண்டு. அவர்கள் சார்ந்த இயக்கங்கள் கட்சிகள் நினைவு கூர்வதுண்டு. ஒரு இயக்கம் அல்லது கட்சி நினைவு கூரும் ஒருவரை வேறு இயக்கம் அல்லது கட்சி துரோகி என்று கூறும் ஒரு நிலமையும் உண்டு. எனவே தொகுத்துப் பார்த்தால் நினைவு கூர்தலை தட்டையாகப் பார்க்க முடியாது. அதை ஒற்றைப்பரிமாணத்தில் விளங்கிக் கொள்ள முடியாது. அதை அதற்கேயான பல்வகைமைக்கூடாக விளங்கிக் கொள்ள வேண்டும். அதுதான் நினைவு கூர்தலில் எழக்கூடிய குழப்பங்களையும், பிரச்சினைகளையும் தீர்ப்பதற்குரிய முதலாவது முக்கிய நிபந்தனை. இதன்படி யாருக்கும் யாரையும் நினைவு கூர உரிமை உண்டு. அதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் இதன் அர்த்தம் யாரும் யாருடைய தியாகத்தையும் தமது வாக்கு வேட்டை அரசியலுக்காகத் துஷ்பிரயோகம் செய்யலாம் என்பதல்ல. ஆயின் தேர்தல் மையக் கட்சிகளை அதிகமாகக் கொண்ட ஓர் அரசியல் அரங்கில் தியாகிகளை நினைவு கூர்வதன் மூலம் தமது வாக்கு வங்கியை பலப்படுத்தும் அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

அதற்குத்தான் ஒரு பொது ஏற்பாட்டுக்குத் தேவை என்று கூறப்படுகிறது. எந்த எந்த நினைவு கூர்தல்களை அரசியல்வாதிகள் துஷ்பிரயோகம் செய்ய முடியுமோ அவற்றை ஒரு பொதுக்குழு பொறுப்பேற்கலாம். ஆனால் இங்கேயும் பிரச்சினை எழும். ஒவ்வொரு இயக்கமும் தனக்கென்று தியாகிகள் தினத்தை அனுஷ்டித்து வருகிறது. இதில் ஒரு இயக்கத்தின் தியாகியை இன்னொரு இயக்கம் துரோகி என்று கூறக்கூடிய நிலமையும் உண்டு. ஆயின் எல்லா இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் தியாகிகளை மேற்படி பொதுக்குழு பொறுப்பேற்க முடியுமா?

முடியாது. ஒவ்வொரு இயக்கமும் தனக்குரிய தியாகிகள் தினத்தைத் தனித்தனியாக அல்லது விரும்பினால் கூட்டாக அனுஷ்டிக்கட்டும். ஒவ்வொரு இயக்கத்தினதும் தனித்தனி தியாகிகளையும் அது சார்ந்த அமைப்புக்களே நினைவு கூரட்டும். அதே சமயம் மேற்படி தியாகிகளை நினைவு கூர விரும்பும் பொதுசனங்களையோ வேறு இயக்கங்களையோ அல்லது கட்சிகளையோ, அமைப்புக்களையோ தடுக்கக்கூடாது. குறிப்பிட்ட தியாகியின் குடும்பத்தினரும் நண்பர்களும் நினைவு கூர்வதையும் தடுக்கமுடியாது. நினைவு கூர்வதற்கான தனிநபர் உரிமையையும், கூட்டுரிமையையும், பல்வகைமையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நிலைமாறுகால நீதியின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டுரிமைகளில் அதுவுமொன்று.

ஆயின், பொது ஏற்பாட்டுக்குழு எங்கே தேவை? நினைவு கூர்தலில் எங்கே ஆகக்கூடிய பொதுத் தன்மை உண்டோ அங்கே தேவை.

நினைவு கூர்தல் தொடர்பில் ஒரு விடயத்தில் ஆகக்கூடிய பொதுத்தன்மை உண்டு. அது என்னவெனில் இனப்படுகொலையை நினைவு கூர்வதுதான். தமது தமிழ் இன அடையாளத்திற்காகக் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வதுதான். அந்த அடையாளத்திற்காகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவு கூர்வதுதான். இதன்படி அம்பாறை மாவட்டத்தில் இங்கினியாகல சீனித்தொழிற்சாலையில் கொத்தாகக் கொல்லப்பட்ட தமிழ் மக்களிலிருந்து தொடங்கி முள்ளிவாய்க்காலில் மே 18 வரை கொத்துக் கொத்தாகவும் உதிரியாகவும் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வது என்பது ஒப்பீட்டளவில் அதிக பட்சம் பொதுத்தன்மை வாய்ந்தது. அதை ஒரு பொதுஏற்பாட்டுக் குழு பொறுப்பேற்பதே அதிகம் பொருத்தமானது

நினைவு கூர்தலில் ஆகக் கூடிய பட்சம் பொதுத்தன்மை வாய்ந்த ஒரு பெருந்திரள் நிகழ்வு அதுதான். ஈழத்தமிழர்கள் மத்தியில் ஆகப்பெரிய பெருந்திரள் அரசியல் நிகழ்வாக அது இருக்கும். ஆகக்கூடிய பட்சம் உணர்ச்சிகரமான ஒரு நிகழ்வாகவும் அது இருக்கும். எனவே அந்நிகழ்வில் உருத்திரளும் கூட்டுத்துக்கத்தை வாக்குகளாக மாற்ற கட்சிகள் முயற்சிக்கும்;. அதைத்தடுப்பதற்கும் ஒரு பொது ஏற்பாட்டுக்குழு தேவை. அதாவது இனப்படுகொலையை நினைவு கூர்வதற்கான ஒரு பொது ஏற்பாட்டுக்குழு.

அக்குழுவில் சமூகத்தின் சகல தரப்பும் பங்காளிகளாக்கப்பட வேண்டும். பெருந்தமிழ்ப் பரப்பிற்கும் அது விஸ்த்தரிக்கப்பட வேண்டும். அதன் மூலமே அதை ஆகப்பெரிய பெருந்திரள் நிகழ்வாக ஒழுங்குபடுத்தலாம். அவ்வாறு சமூகத்தின் சகல தரப்பினரும் பங்கெடுக்கும் போது அதில் அரசியற்கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் உள்ளடங்குவர். அது அவசியம். மக்கள் ஆணையை பெற்ற பிரதிநிதிகள் அதில் பங்கேற்பதன் மூலம் அதற்குரிய அரசியல் அந்தஸ்து உயரும். அதே சமயம் மக்கள் பிரதிநிதிகள் கூட்டுத்துக்கத்தை கொத்து வாக்குகளாக மடைமாற்றுவதை எப்படித் தடுப்பது?

தடுக்கலாம். அதற்கு நினைவு கூர்தல் என்றால் என்ன என்பது தொடர்பில் பொதுக்குழு ஒரு பொது உடன்பாட்டிற்கு வரவேண்டும். அதன்படி பின்வரும் விடயங்களில் ஒரு பொது உடன்பாடு எட்டப்பட வேண்டும்.

1. நினைவு கூர்தல் எனப்படுவது ஓர் அரசியல் நிகழ்வு
2. அது முடிவடையாத ஒரு போராட்டத்தின் பிரிக்கப்படவியலாத ஒருபகுதி.அதாவது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறுவதற்கான ஒரு போராட்டத்தின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதி.
3. அதை முடிவுறாத ஒரு போராட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டால்தான் கூட்டுத்துக்கத்தை கூட்டுக் கோபமாக மாற்றலாம்.
4. அவ்வாறு கூட்டுத்துக்கம் ஒரு கூட்டு ஆக்க சக்தியாக மாற்றப்படும் போது அது ஒரு குணமாக்கல் செய்முறையாகவும் அமையும். அதாவது அது ஒரு கூட்டுக்குணமாக்கல் செய்முறை. ஒரு கூட்டுச் சிகிச்சை.
5. தாயகத்திலும், டயஸ்பொறாவிலும் நினைவு கூர்தலை ஒரே மையத்திலிருந்து திட்டமிட்டால் அது மிகவும் உன்னதமானது. தமிழகத்தையும் உள்ளடக்கி பெருந்தமிழ்ப் பரப்பு முழுவதுக்குமான ஒரு நினைவு கூர்தலாக அதை ஒழுங்கமைத்தால் 2009 மேக்குப் பின் ஈழத் தமிழர்கள் பெற்ற மிகப்பெரிய அரசியல் வெற்றியாக அது அமையும். அது தமிழ் மக்களின் பலத்தைக் கூட்டும். தாயகத்தை மையமாகக் கொண்டே அது ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். மாறாக டயஸ்பொறாவிலிருந்து ‘ரிமோற் கொன்ரோல்” செய்யப்படுவதாக இருக்கக்கூடாது.
6. இனப்படுகொலை எனப்படுவது ஓர் இனத்தின் இருப்பை நீர்த்துப்போகச் செய்து அந்த இனத்தை அழிப்பது. எனவே இனப்படுகொலைக்கு எதிரான நீதியை பெறுவது என்றால் ஆகக்கூடிய பட்சம் ஓர் இனமாக திரள வேண்டும். கட்சிகளால் அமைப்புக்களால் சிதறடிக்கப்படாத ஓர் ஆகப்பெரிய திரளாக மேலெழ வேண்டும். அதாவது அது ஒரு பெருந்திரள் நிகழ்வு. கட்சி நிகழ்வு அல்ல. அது ஒரு கூட்டு நிகழ்வு என்பதால் அங்கே கட்சி வேறுபாடுகளுக்கோ கட்சி முதன்மைகளுக்கோ இடமில்லை.

இப்படியொரு விளக்கம் ஒரு பொது உடன்படிக்கை ஏற்படுமிடத்து கடந்த பத்தாண்டுகளாக பல்வேறு நினைவு கூர்தல்களில் மேலெழுந்து வரும் குழப்பங்களுக்கும், பூசல்களுக்கும் இடமிருக்காது. மேற்படி உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளும், அமைப்புக்களும் நபர்களும் ஒரு பொது ஏற்பாட்டுக்குழுவைக் கட்டியெழுப்பினால் அது எல்லா நினைவு கூர்தல்களையும் ஓர் ஒழுங்கிற்குள் கொண்டு வந்துவிடும். இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறுவதற்கான போராட்டத்தையும் வேகப்படுத்தும். அதுமட்டுமல்ல இறந்தவர்களின் பெயராலும் ஒற்றுமைப்பட முடியாத ஓர் இழி நிலைக்கு அது முடிவு கட்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *