மோடியை நோக்கி மகிந்த வளைவாரா? முறிவாரா?

நரேந்திர மோடியின் வருகைக்குப் பின் தென்னிலங்கையில் உள்ள சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்கள் உஷாரடைந்துவிட்டது தெரிகிறது. அண்மையில் கொள்ளுப்பிட்டியில் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சிறியதே எனினும் குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. மன்மோகன் சிங்கைப் போல மோடியைக் கையாள முடியாது என்பதை கொழும்பு திட்டவட்டமாக விளங்கி வைத்திருக்கிறது. ஜெயலலிதாவின் தீவிரமும் அவர்களை கவலையுறச் செய்திருக்கிறது.

ஏற்கனவே, மேற்கு நாடுகள் ஜெனிவா மனித உரிமைக் கூட்டத் தொடர்களில் கொழும்பின் காதை முறுக்கி வருகின்றன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரது விசாரணைகள் விரைவில் ஆரம்பமாகப் போகின்றன. அதுவும் ஒரு குறிபீட்டு முக்கியத்துவம் மிக்க நடவடிக்கைதான். இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக் கூறும் செயற்பாடுகளின் மீதும் அனைத்துலக சமூகம் நம்பிக்கையிழந்து விட்டதை அது காட்டுகிறது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படக்கூடிய முழு அளவிலான விசாரணைகளுக்குரிய ஒரு தளத்தை இதிலிருந்து பலப்படுத்த முடியும்.

ஆனால், மேற்கு நாடுகள் ஒரு புறம் அனைத்துலக விசாரணைக்கான ஏற்பாடுகளைக் காட்டி பயமுறுத்துகின்றன. இன்னொரு புறம் தென்னாபிரிக்காவை அனுப்பி மத்தியஸ்தம் செய்யுமாறு கேட்கின்றன. ஒரு புறம் அழுத்தப் பிரயோகம் இன்னொரு புறம் அந்த அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்குரிய வாய்ப்புக்களும் திறக்கப்படுகின்றன. மேற்கின் அணுகுமுறை இவ்வாறிருக்கும் ஒரு பின்னணியில் இந்தியாவின் புதிய அரசாங்கத்தின் அணுகுமுறைகள் எப்படியிருக்கும்?

அது எப்படியுமிருக்கலாம். ஆனால், கொழும்பு அதைக் கையாள்வதற்கு பின்வரும் நான்கு பிரதான வழிமுறைகளே உண்டு.

முதலாவது, தமிழர்களுடைய பிரச்சினையை உண்மையாகத் தீர்ப்பது.

இரண்டாவது, தமிழர்களுடைய பிரச்சினையை அரைகுறையாகத் தீர்ப்பது.
மூன்றாவது, சீனாவிடமிருந்து குறிப்பிடத்தக்க அளவிற்கு விலகி நிற்பது.

நாலாவது, சீனாவை மேலும் நெருங்கிச் சென்று அதை ஒரு கவசமாகக் கையாண்டு மேற்கையும் இந்தியாவையும் கையாள்வது.

கொழும்பைப் பொறுத்த வரை இந்நான்கு வழிமுறைகளில் ஏதோ ஒன்றைக் கைக்கொள்ளவேண்டி இருக்கும் அல்லது இவற்றின் கலப்பான ஒரு வடிவத்தைக் கைக்கொள்ள வேண்டியிருக்கும். முதலில் இந்நான்கு வழிமுறைகளையும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

முதலாவது, தமிழர்களுடைய பிரச்சினையை விசுவாசமாகத் தீர்;ப்பது. இது ஒரு விதத்தில் கற்பனைதான். இலங்கைத் தீவின் இனமுரண்பாட்டு வரலாற்றைப் பொறுத்த வரை ஏதும் அதிசயங்கள் அற்புதங்கள் நிகழ்ந்தால் தவிர இந்த வழிமுறைக்கு வாய்ப்பேயில்லை. அதிலும் குறிப்பாக, உள்நாட்டில் தமிழர்களுடைய எதிர்ப்பு சக்தி பெருமளவுக்கு நிர்மூலமாக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில் வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கும் ஒரு அரசாங்கம் இவ்வழிமுறையைக் கைக்கொள்ளப்போவதில்லை.

ஏனெனில், வெற்றிவாதம் எனப்படுவது வென்றவர்களுக்குத் தலைமை தாங்குவது தான். வென்றவர்களுக்குத் தலைமை தாங்கும் ஒரு அரசாங்கம் தோற்றவர்களை தோற்கடிக்கப்பட்டவர்களாகவே வைத்திருக்க முற்படும். தோற்றவர்கள் தொடர்ந்தும் தோற்கடிக்கப்பட்டவர்களாகவே இருக்கும் வரைதான் வெற்றிவாதமும் கோலோச்ச முடியும். இந்த அரசாங்கத்தைப் பொறுத்த வரை அது தமிழர்களில் தங்கியிருக்கவில்லை. முழுக்க முழுக்க சிங்கள வாக்காளர்களில் தான் தங்கியிருக்கிறது. தமிழர்களைத் தோற்கடித்தமை தான் அதனுடைய அரசியல் முதலீடு. எனவே, இந்த அரசாங்கத்தைப் பொறுத்த வரை யுத்த வெற்றிதான் அதன் முதலீடு. வெற்றி தான் அதற்குச் சிறையும்கூட. தனது சொந்த வெற்றியின் கைதியாகவுள்ள ஓர் அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினையை மெய்யாகத் தீர்க்க முடியாது.

இரண்டாவது, வழிமுறை தமிழர்களுடைய பிரச்சினையைப் அரைகுறையாகத் தீர்ப்பது. இவ்வழிமுறைக்கான வாய்ப்புக்களே அதிகரித்து வருகின்றன. கடந்த சுமார் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக சிங்களத் தலைவர்களுடைய அணுகுமுறை பெரும்பாலும் இதே வழிமுறையின் பாற்பட்டதுதான். அதில் விகித வேறுபாடுகள் இருக்கலாம்.

இந்த அரசாங்கம் ஏற்கனவே, மாகாணக் கட்டமைப்பை கோறையாக்கி விட்டது. இப்பொழுது மோடியைத் திருப்திருப்படுத்துவதற்காக மாகாண சபையைப் பலப்படுத்துவது போல ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கலாம்.

ஏற்கனவே, மோடியைக் கையாளும் நோக்கில் சில நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பூர் அனல் மின்நிலையத்தைக் கட்டியெழுப்புவதிலிருந்த முட்டுக்கட்டைகளை நீக்கியது. மீனவர்கள் விடயத்தில் ஆகக் கூடிய விரைவில் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவது. இவற்றோடு யாழ்ப்பாணத்தில் இந்தியக் கலாசார மண்டபத்தைக் கட்டுவதற்கான ஏற்பாடுகளை வேகப்படுத்தியது.

இம்மூன்றும் உண்மையில் தமிழர் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டவை என்பதைவிடவும் மோடியை மகிழ்விப்பவை என்றுதான் பார்க்க வேண்டும். குறிப்பாக, சம்பூர் விவகாரம் ஒரு நுட்பமான ராஜதந்திரப் பொறியாகும். மோடியை மகிழ்விப்பதற்காக முதலில் பலியிடப்பட்டது சம்பூர் மக்கள் தான்.

இந்தியாவையும் தமிழ் மக்களையும் மோதவிடும் ஒரு நுட்பமான நகர்வு இது. வெளித் தோற்றத்திற்கு இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு விட்டுக் கொடுத்திருப்பது போலவும், குறிப்பாகத் தமிழ்ப் பகுதிகளில் இந்தியா மேலும் ஆழமாகக் காலூன்றத்தக்க பரப்புக்களைத் திறந்துவிட்டது போலவும் ஒரு தோற்றம் இதில் உருவாகிறது. ஆனால், மறைமுகமாக இது சம்பூர் மக்களை நிரந்தரமாக அகதிகளாக்குகிறது. இதன் மூலம் தமிழர்களுடைய நலன்களும் இந்தியாவின் நலன்களும் மோதும் ஒரு நிலை உருவாகிறது.

இதே விதமான ஒரு அணுகுமுறையைத் தான் இனப்பிரச்சினைக்கான தீர்விலும் பின்பற்ற முடியும். தீர்வற்ற ஒரு தீர்வை முன்வைத்து அதில் இந்தியாவையும் பங்காளியாக்குவதன் மூலம் தமிழர்களையும் இந்தியாவையும் மோத விடலாம். அதைவிட முக்கியமாக, அந்த அரைகுறைத் தீர்வைக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளுமாக இருந்தால் அது எதிர்காலத்தில் கூட்டமைப்பை தமிழர்களுடைய நலன்களோடு மோதவிடுவதாக அமையும்.
ஒரு புறம் அது தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை ஒரு அரைகுறைத் தீர்வுக்குள் முடக்கிவிடும் இன்னொரு புறம் அந்தத் தீர்வற்ற தீர்வை ஏற்றுக்கொள்ளும் கூட்டமைப்பு தமிழர்களுடைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்குக் குறுக்கே நிற்கும் ஒரு நந்தி போல மாறும். சில தசாப்தங்களுக்கு முன்பு தமிழர் விடுதலைக் கூட்டணி மாறியது போல.

எனவே, தமிழர்களுடைய பிரச்சினையைப் அரைகுறையாகத் தீர்ப்பது என்பது தமிழர்களையும் இந்தியாவையும் மோதவிடுவது அல்லது தமிழர்களை மேலும் பிளவுபடுத்துவது அல்லது தமிழர்களுடைய அரசியலை தீர்வற்ற தீர்வுக்குள் முடக்குவது போன்ற இறுதி இலக்குகளைக் கொண்டதுதான். தென்னாபிரிக்காவின் மத்தியஸ்தம் இந்தியாவின் வற்புறுத்தல் என்பவற்றின் பின்னணியில் இத்தகைய ஒரு வழிமுறைக்கான வாய்ப்புக்களே பெருகி வருகின்றன. கூட்டமைப்பு இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதில்தான் அந்தக் கட்சியின் எதிர்காலமும் தமிழர்களுடைய அடுத்த கட்ட அரசியலும் தங்கியிருக்கின்றன.

மூன்றாவது, இலங்கை அரசாங்கம் சீனாவுடனான உறவில் தனக்கிருக்கக் கூடிய ”லக்ஸ்மன் ரேகையை’ மிறாதிருப்பது. அதை மீறியதுதான் பிரச்சினையின் மூலகாரணமே.ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாக இலங்கை அரசாங்கம் இது விசயத்தில் இந்தியாவை வேறுவிதமாகக் கையாண்டு வந்திருக்கிறது. தன் மீதான அழுத்தங்கள் அதிகரிக்கப்பட்டால் தான் சீனாவை நோக்கி மேலும் சாயக்கூடும் என்பதைத் தனது பேரசும் பேசும் சக்தியாக வைத்திருக்கும் அதேசமயம் இச்சிறு தீவை இந்தியாவுக்கும் கணிசமான அளவுக்கு திறந்தே வைத்திருக்கின்றது. அதாவது, சீனாவும் வரும் அதைப் போல நீங்களும் வரலாம். ஆனால் சீனாவை வரக்கூடாது என்று சொல்லக்கூடாது என்பதே இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது.

ஆனால், மோடியை அப்படிக் கையாள முடியுமா? என்ற சந்தேகம் சிங்களக் கடுங்கோட்பாளர்கள் மத்தியில் காணப்படுகின்றது. சம்பூர் அனல் மின் நிலையமும், யாழ்ப்பாணத்தில் இ;ந்தியக் கலாசார மண்டபமும் ஏற்கனவே, ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டங்கள். ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத் தரப்பில் இழுத்தடிக்கும் ஒரு போக்கே காணப்பட்டது. இப்பொழுது தடைகள் அகற்றப்பட்டுள்ளன.

அதேசமயம், சீனாவுடன் இணைந்து ஒரு விண்வெளித் திட்டத்திற்கும் கொழும்பு ஏற்கனவே உடன்படிக்கை செய்திருக்கிறது. 2012ஆம் ஆண்டு மே மாதம் சுப்றீம் சற் – supreme SAT – எனப்படும் ஒரு தனியார் நிறுவனம் சீனஅரசுகுக்குச் சொந்தமான கிரேட் வோல் இன்டஸ்றீ கோப்பரேஷன் – Great wall Industry Corporation – என்ற நிறுவனத்துடன் பங்காளியாகச் சேர்ந்து இலங்கை முதலீட்டுச் சபையில் மேற்படி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது. இதன்படி சிறிலங்கா அடுத்த ஆண்டு 320 மில்லியன் டொலர் பெறுமதியுள்ள தனது முதலாவது தொலைத் தொடர்பு செய்மதியை ஏவப்போகிறது. அதோடு கண்டியில் விண்வெளி அக்கடமியுடன் கூடிய ஒரு செய்மதித் தள நிலையமும் நிறுவப்படும் என்று அந்த உடன்படிக்கையில் உள்ளது. இதற்கான பூர்வாங்க வேலைகள் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட வேண்டும்.

இந்தியா இந்த விண்வெளித் திட்டத்தை எச்சரி;க்கையோடு அணுகுகிறது. இலங்கைத்தீவில் இதற்கு முந்திய சீனக் கட்டுமானங்களில் பெரும்பாலானவை சிவில் நோக்கத்துடனான உட்கட்டுமானத் திட்டங்களே என்று கூறப்பட்டது. ஆனால், கண்டியில் அமையவிருக்கும் செய்மதித் தள நிலையம் தொலைத் தொடர்பு நோக்கங்களுக்கானது என்று கூறப்படுவதை இந்திய பாதுகாப்புத்துறை நிபுணர்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். அப்படியொரு தள நிலையம் சீன உதவியுடன் கண்டியில் நிறுவப்பட்டால் அதன் பின் இப்பிராந்தியத்தில் இடம்பெறும் தகவல் தொடர்பாடல்களை சீனா இலகுவாகக் கண்காணிக்கக்கூடும் என்ற அச்சம் இந்தியத் தரப்பிடம் உண்டு. இது தொடர்பில் இந்தியா முன்வந்து இலங்கைக்கு செய்மதியை உருவாக்கி அதை விண்வெளியில் ஏவியும் கொடுக்க வேண்டும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இந்திய அரசாங்கத்துக்கு ஏற்கனவே ஆலோசனை கூறியிருக்கின்றது. இதன் மூலம் இரு நாடுகளும் இணைந்து தொலைத் தொடர்பு செய்மதியை ஏவி நிர்வகிக்கலாம் என்றும் இஸ்ரோ ஆலோசனை கூறியிருக்கிறது. அதாவது, இந்தியா இது விசயத்தில் இலங்கைக்கு தானாக முன்வந்து உதவுவதன் மூலம் சீனாவைக் கழட்டிவிடுவதே இதன் உள்நோக்கமாகும்.

மோடியின் வருகைக்குப் பின் இது சம்பந்தமாக கொழும்பு எத்தகைய முடிவுகளை எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஆனால், வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கும் ஓர் அரசாங்கம் மேற்கு நாடுகள் மற்றும் இந்தியாவை விடவும் சீனாவுக்கே அதிகம் நெருக்கமாக இருக்க முடியும். சீனா, மேற்கு நாடுகளைப் போல போர்க் குற்றங்களைப் பற்றிக் கதைப்பதில்லை. மனித உரிமைகள் தொடர்பில் வகுப்பெடுப்பதுமில்லை. தவிர மனித உரிமைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக அரங்கில் அது இலங்கையை தொடர்ச்சியாக நிபந்தனையின்றி பாதுகாத்து வருகிறது.

மேற்கு நாடுகளில் பலம் பொருந்திய தமிழ் டயஸ்பொறா உண்டு. இந்தியாவில் தமிழகம் உண்டு. இவையிரண்டும் தமிழர்கள் தொடர்பில் மேற்படி நாடுகளின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியும்.

எனவே, சக்திமிக்க தமிழ் டயஸ் பொறாவையும் தமிழகத்தையும் முழுக்க முழுக்கப் புறக்கணித்துவிட்டு மேற்கும், இந்தியாவும் முடிவுகளை எடுக்க முடியாது. அதாவது வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கிக் கொண்டு இலங்கை அரசாங்கம் மேற்கையும் இந்தியாவையும் ஒரு கட்டத்துக்கும் மேல் நெருங்கிச் செல்வதில் வரையறைகள் உண்டு.

ஆனால், சீனாவின் விசயத்தில் அப்படியல்ல. வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கும் ஒரு அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவைத் தரக்கூடிய ஒரு நாடாக சீனாவே காணப்படுகின்றது. எனவே, அழுத்தங்களைப் பிரயோகிக்கவல்ல தமிழ்ச் சமூகங்களைத் தம்முள் கொண்டிருக்கும் மேற்கையும், இந்தியாவையும் நம்பி சீனாவைக் கைவிட முடியாது. அரசனை நம்பிப் புருசனைக் கைவிட முடியாது.

இத்தகையதொரு பின்னணியில் மேற்கும் இந்தியாவும் அழுத்தங்களைப் பிரயோகித்தால் இச்சிறு தீவை அவர்களுக்கும் பெருமளவுக்குத் திறந்துவிடுவதே நடைமுறைச் சாத்தியமாக இருக்கும். அதாவது, சீனாவை கைவிட முடியாது. சீனாவும் இருக்கும். நீங்களும் வரலாம் என்று பொருள்.

இந்த விளக்கத்தின் அடிப்படையிலேயே நாலாவது வழிமுறையைப் பார்க்க வேண்டும். அதாவது சீனாவை ஒரு கவசமாக வைத்துக் கொண்டு மேற்கையும், இந்தியாவையும் கையாள்வது.

இலங்கைத்தீவின் உள்நாட்டு யதார்த்தத்தைப் பொறுத்த வரை அதாவது, அரசாங்கம் வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கும் வரை இவ்வழிமுறைக்கான வாய்ப்புக்களே அதிகம் தெரிகின்றன. அதோடு சீனா விரிவாக்கமானது ஒரு வர்த்தக விரிவாக்கம்தான். நேற்றோ விரிவாக்கம் போல இரத்தம் சிந்தும் படைத்துறை விரிவாக்கம் அல்ல. சீன விரிவாக்கம் அதிகபட்சம் ஒரு வர்த்தக விரிவாக்கமாகவே இருப்பது இலங்கை அரசாங்கத்திற்கு அனுகூலமான ஒரு விடயம்.

மோடியின் வருகைக்குப் பின் உலகம் அமிற்றாவ் ஆச்சார்யா கூறுவது போல பல துருவங்களின் கூட்டொழுங்கினை நோக்கிப் போகுமாயிருந்தால் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் நின்று பிடிக்கக்கூடிய வாய்ப்புக்களும் இருக்கும். ஆனால், அமெரிக்காவும் அதன் எதிரிகளும் அல்லது அமெரிக்கா எதிர் சீனா என்ற விதமாக கறுப்பு – வெள்ளையாக இரு துருவப் போக்குகள் அதிகரிக்குமாயிருந்தால் இலங்கை அரசாங்கத்திற்கு ஒப்பீட்டளவில் நெருக்கடிகள் அதிகரிக்கும். மோடியைக் கையாள்வது மேலும் கடினமானதாக மாறும்.

1987 யூலையில் அப்படியொரு நெருக்கடி நிலை வந்தபோது ஜெயவர்த்தன அதை மிகத் தந்திரமாக திசைதிருப்பினார். தன்னை நோக்கி வீசப்பட்ட வாளை அவர் எதிரியை நோக்கித் திருப்பிவிட்டார். ஒப்பரேஷன் பூமாலையை அவர் ஒப்பரேஷன் பவானாக மாற்றினார். ஒப்பரேஷன் பூமாலை எனப்படுவது இந்திய வான்படை இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக, தமிழர்களுக்கு உணவுப் பொதிகளைப் போட்ட ஒரு மென்படை நடவடிக்கை. ஒப்பரேஷன் பவான் என்பது IPKF மேற்கொண்ட யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான படை நடவடிக்கை. ஜெயவர்த்தனா வென்று கொடுத்த கனிகளைத்தான் சிங்கள மக்கள் நந்திக் கடற்கரையில் சாப்பிட்டார்கள். இன்று வரையிலும் சாப்பிடுகிறார்கள்.

இப்பொழுது டில்லியில் மோடி வந்திருக்கிறார். கொழும்பில் அவரை கையாள்வதற்கு ஜெயவர்த்தனாக்கள் இல்லை. பதிலாக தனது சொந்த வெற்றியின் கைதியாகவுள்ள ஓர் அரசாங்கமே உண்டு. அது உள்ளுரில் பிரமாண்டமாகக் கட்டியெழுப்பி வைத்திருக்கும் வீரப்படிமத்தை விட்டுக் கீழிறங்கி தமிழர்களோடு ஒப்புக்காகவேனும் ஓர் இணக்கத்துக்கும் வர முடியுமா?

வெற்றிவாத்திற்குத் தலைமை தாங்கும் வரை சீனாவை நோக்கித்தான் வளைய வேண்டியிருக்கும். இந்தியாவை நோக்கி ஒரு கட்டத்துக்கு மேல் வளைய முடியாது. வளைந்தால் அது முறியும்.

13-06-2014

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *