83 ஜூலை : இறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவு

83 ஜூலை தொடர்பில் பசில் பெர்னாண்டோ கொழும்பு டெலிகிராப்பில் அண்மையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் அந்த இன அழிப்புக்கு சூத்திரதாரி அப்போது இருந்த அரசுத் தலைவர் ஜெயவர்தனவே என்று குற்றம் சாட்டியுள்ளார்.

கொல்லப்பட்ட 13 ராணுவத்தினரின் உடல்களை கொழும்புக்கு கொண்டு வந்து கூட்டாகத் இறுதிக் கிரியைகளை செய்ய வேண்டும் என்று படைத் தரப்பும் ஏனைய சில தரப்புக்களும் கேட்ட பொழுது ஜெயவர்த்தனா அதற்கு சம்மதித்தார். ஆனால் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் அருகருகே வாழும் கொழும்பில் அவ்வாறு கூட்டாக இறுதிக் கிரியைகளை செய்ய அனுமதிக்க வேண்டாம் என்று அப்போதிருந்த கொழும்பு நகர மேயர் – இவர் அப்போதைய பிரதமர் பிரேமதாசவுக்கு நெருக்கமானவர் – ஜெயவர்தனவிடம் கோரியிருக்கிறார். அவ்வாறு செய்தால் அது இன வன்முறைக்கு இட்டுச் செல்லக்கூடும் என்று தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாகவும் அவர் ஜெயவர்தனவிக்கு கூறியிருக்கிறார். அவர் கேட்டுக்கொண்டதன் பிரகாரம் ஜெயவர்த்தன கூட்டுத் தகனத்தை நிறுத்தலாம் என்றும் உறுதியளித்துள்ளார். அவ்வுறுதிமொழியைப் பெற்றுக் கொண்ட பின்னரே கொழும்பு மாநகரசபை முதல்வர் தனது வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். ஆனால் பின் நடந்தவை என்ன?


அப்பொழுது போலீஸ் மா அதிபராக இருந்தவர் ருத்திரா ராஜசிங்கம். ஒரு தமிழர் போலீஸ் மாஅதிபராக இருந்த போதிலும் தமிழர்களைக் காப்பாற்ற முடியவில்லை. சிங்களத் தலைவர்கள் தமிழர்களுக்கு உயர் பதவிகளை வழங்குவது என்பது வெறும் சோடினைதான். இனவாதக் கட்டமைப்பில் அப்பதவிகளால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதற்கு ஜூலை 83 ஒரு சான்று. ருத்திரா ராஜசிங்கம் நிலமையைக் கட்டுப்படுத்த ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று ஜெயவர்தனவிடம் கோரினார். ஆனால் ஜெயவர்த்தன தமிழர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற திட்டத்தோடிருந்தார் .

அவர் படை வீரர்களின் உடல்களைக் கொழும்பில் தகனம் செய்ய அனுமதி அளித்தார் . அதோடு சிறில் மத்தியூவும் உட்பட தனது சில அமைச்சர்களின்; ஆட்கள் தமிழ் மக்களை வேட்டையாடிய போது அதை கண்டும் காணாமலும் விட்டார் என்று பசில் பெர்னாண்டோ தனது கட்டுரையில் எழுதியிருக்கிறார்.

அவர் கூறுவது சரி. ஜூலை 83இல் இடம்பெற்றது இனக்கலவரம் அல்ல. அது இனக்கலவரம் என்றால் அதில் இரண்டு இனங்களும் ஆளுக்காள் மோதிக்கொண்டு கலவரம் செய்ய வேண்டும்.ஆனால் தென்னிலங்கையில் இடம்பெற்றது இன அழிப்பு. அங்கே பெரிய இனம் சிறிய இனத்தை வேட்டையாடியது. எனவே அதை இனக்கலவரம் என்று அழைக்க முடியாது. அப்படி அழைத்தால் அது தேரவாத சிங்கள பௌத்த பண்பாட்டை இகழ்வதாக அமையும். ஏனெனில் தமிழ் மக்களின் மீது தாக்குதலைத் தொடுத்தது சாதாரண சிங்கள மக்களா? அல்லது அரசியல் வாதிகளா?

அந்தத் தாக்குதலைத் தொடுத்தது நன்கு நிறுவனமயப்பட்ட குண்டர்கள் ஆகும். அவர்களை அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகள் சிலர் பின்னிருந்து இயக்கியதாக பசில் பெர்னாண்டோ போன்ற சிங்கள புத்திஜீவிகள் ஏற்றுக் கொள்கிறார்கள. தமிழ் மக்களின் குடியிருப்புக்களும் பொருளாதார இலக்குகளும் முன்கூட்டியே அடையாளம் காணப்பட்டுத் திடடமிட்டுத் தாக்கப்பட்டன. தமிழ்ச் சிறைக் கைதிகள் நன்கு திட்டமிட்டுக் கொல்லப்பட்டார்கள்;. எனவே அது சிங்களத் தலைவர்கள் சிலரால் தமிழ் மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு கூட்டுப் பழிவாங்கல். ஒரு கூட்டுத் தண்டணை. ஓர் இன அழிப்பு நடவடிக்கை. அதனை அரசாங்கம் மறைமுகமாக அனுமதித்தது.

இப்படிப் பார்த்தால் அந்த இன அழிப்பிற்கு அரசியல்வாதிகளே பொறுப்பேற்க வேண்டும். அதைப் பின்னிருந்து திட்டமிட்டவர்களும் அதை மறைமுகமாக ஆதரித்தவர்களும் தடுக்காமல் விட்டவர்களும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். அவ்வாறு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு மெய்யான தேரவாத பௌத்தர் அப்படித்தான் செய்வார. ஆனால் இதுவரையிலும் எந்த ஒரு சிங்கள அரசியல்வாதியும் அதற்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்கவில்லை. பொறுப்பேற்கா விட்டாலும் பரவாயில்லை குறைந்த பட்சம் மன்னிப்பாவது கேட்டிருக்கலாம். சில தசாப்தங்களுக்கு பின் யாழ் நூலக எரிப்புக்கு ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கேட்டிருந்தார். அதைப் போல ஜூலை 83 இற்கும் சிங்களத் தலைவர்கள் எப்பொழுது மன்னிப்புக் கேட்கப் போகிறார்கள்?

அவ்வாறு மன்னிப்பு கேட்கத் தயாரில்லை என்றால் இந்த நாட்டில் பொறுப்புக் கூறலைப் பற்றி யாரும் கதைக்க முடியாது. ஏனெனில் குற்றங்களுக்கு பொறுப்பேற்றால்தான் பொறுப்புக் கூறலாம். மன்னிப்பு கேட்கலாம். ஆனால் 83 ஜூலைக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இவ்வாறு உள்நாட்டில் பொறுப்பேற்கத் தவறிய அல்லது பொறுப்புக்கூறத் தவறிய சிங்கள பௌத்த பெருந் தேசியவாதக் கட்டமைப்பானது இப்பொழுது உலக சமூகத்துக்குப் பொறுப்புக் கூற வேண்டியிருக்கிறது. ஏனெனில் எண்பதுகளில் பொறுப்புக் கூறியிருந்திருந்தால் 2019இல் உலக சமூகத்திற்கு பொறுப்புக் கூறும் ஒரு நிர்ப்பந்தம் சிங்களத் தலைவர்களுக்கு ஏற்பட்டிருக்காது.

இன்று சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு உலக சமூகத்தின் முன் பொறுப்பு கூறவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக அவர்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்து வருகிறார்கள. எனினும் 2015 இல் நிறைவேற்றப்பட்ட 30இன் கீழ் ஒன்று ஐநாத் தீர்மானமானது பொறுப்பு கூற வேண்டிய ஒரு நிர்ப்பந்தமே ஆகும். அத்தீர்மானத்தின்படி அரசாங்கம் நிலைமாறு கால நீதி நீதியை ஸ்தாபிப்பதற்குரிய பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டது. நிலைமாறு கால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பொறுப்புக் கூறல் தான்.

1983இல் மாமன் செய்த செய்த தவறின் விளைவுகளின் விளைவுகளுக்கு அவருடைய மருமகன் 2015 இல் பொறுப்புக் கூற வேண்டி வந்ததிருக்கிறது. இதை இன்னும் ஆழமாகச் சொன்னால் இலங்கை இனப்பிரச்சினை அனைத்துலக மயப்பட்டதன் மற்றொரு கட்டமே 2015 ஜெனிவாத் தீர்மானம் ஆகும்.

1983லேயே இனப்பிரச்சினை நாட்டுக்கு வெளியே சென்று விட்டது. உள்நாட்டில் பொறுப்புக் கூறத் தயாரற்ற தலைவர்களே பிரச்சினை பிராந்திய மயப்பட்ட காரணமாகும். 83இன அழிப்பைத் தொடர்ந்து இந்தியா இச் சிறிய தீவினுள் இராஜதந்திர ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் தலையிடும் ஒரு கட்டம் உருவாகியது. 83 ஜூலையைத் தொடர்ந்து இந்தியாவின் உத்தியோகபூர்வ தூதுவர்கள் கொழும்பிற்கு வந்தார்கள் அதேசமயம் தமிழ் இயக்கங்களுக்கு இந்தியா பயிற்ச்சி வழங்கத் தொடங்கியது. ஆயுதங்களும் வழங்கியது. இத்தலையீட்டின் இறுதிக் கட்டமானது இலங்கை வான் பரப்பில் இந்தியப் போர் விமானங்கள் நுழைந்து உணவுப் பொதிகளை போடுவதில் முடிவடைந்தது. அதன் விளைவாக உருவாக்கியதே இந்திய-இலங்கை உடன்படிக்கை. அது இச்சிறிய தீவில் இந்திய அமைதி காக்கும் படைகளை உள்ளிறங்கியது.

இவ்வாறு முதலில் பிராந்திய மயப்பட்ட இனப்பிரச்சினையானது அடுத்தடுத்த தசாப்தங்களில் அனைத்துலக பயப்பட்டது. அது பிராந்திய மயப்பட முன்பே தமிழ் மக்களுக்கு சிங்களத் தலைவர்கள் பொறுப்புக் கூறியிருந்திருந்தால் அது இப்போது அடைந்திருக்கும் அனைத்துலகப் பரிமாணத்தை அடைந்திருக்காது. 83 யுலைக்குப் பொறுப்புக் கூறியிருந்திருந்தால் 2009 மேயில் இனப்படுகொலை நடந்திருக்காது. அவ்வினப்படுகொலை இலங்கை அரசுக் கட்டமைப்பை உலக சமூகத்துக்குப் பொறுப்புக்கு கூறும் ஒரு நிர்பந்தத்தை உருவாக்கியுள்ளது.
ஆனால் 36 ஆண்டுகளின் பின்னரும் சிங்கள பௌத்த பெருந் தேசிய வாதமானது நடந்த தவறுகளுக்காக குற்ற உணர்ச்சி கொள்வதாகவும் தெரியவில்லை. பொறுப்புக் கூறத் தயாராக இருப்பதாகவும் தெரியவில்லை.

ஜூலை 83இல் எடுக்கப்பட்ட ஒளிப் படங்கள் காணொளிகள் என்பவற்றைப் பார்க்கும் எவரும் ஒன்றைக் கவனிக்கலாம். அக்காட்சிகளில் தமிழ் மக்களைக் கொல்பவர்கள், சொத்துக்களைச் சூறையாடுபவர்கள், வாகனங்களைக் கொழுத்துபவர்கள் பெரும்பாலும் பெல் போட்டம் எனப்படும் நீளக் காற்சட்டைகளை அணிந்திருக்கிறார்கள். அக்கால கட்டத்தில் அதுதான் ஃபஷன். நீளக் காற்சட்டையின் அடிப்பகுதி விரிந்து அகன்றிருக்கும். அதன் பின் ஃபஷன் நிறைய மாறிவிட்டது. தொள தொள என்று காணப்பட்ட எம்.ஜி.ஆர் காலத்து நீளக் காற்சட்டைகள். ஒடுங்கியவை, உடம்போடு ஓட்டிக் கொண்டிருப்பவை, இடையிடை கிழிக்கப்பட்டிருப்பவை, இடுப்புக்குக் கீழ் வழிபவை…….என்று நீளக் காற்சட்டைகள் பல தினுசுகளாக மாறியிருக்கின்றன. கடந்த 36 ஆண்டுகளாக நீளக் காற்சட்டைகள் நிறைய மாறியிருக்கின்றன. ஆனால் சிங்கள பௌத்த பெருந் தேசிய மனோநிலையில் ஏதும் மாற்றங்கள் ஏறப்பட்டிருக்கின்றனவா?

இச்சிறிய தீவானது கடந்த 36 ஆண்டுகளில் இறந்த காலத்தில் இருந்தும் அழிவுகளில் இருந்தும் எதையுமே கற்றிருக்கவில்லை. அவ்வாறு கற்கத் தவறியதன் விளைவாகத்தான் இப்பொழுது இலங்கைத் தீவானது பேரரசுகள் பங்கிடும் ஓர் அப்பமாக மாறியிருக்கிறது.

அந்த அப்பத்தில் சீனா ஒரு தாமரைக் கோபுரத்தை கட்டியிருக்கிறது. அதற்கு பதிலாக இந்தியா யாழ்ப்பாணத்தில் ஒரு கலாச்சார மண்டபத்தைக் கட்டி வருகிறது. கொழும்பில் சீனா ஒரு செயற்கை நகரத்தை சிருஷ்டிக்கிறது. அதற்காகக் கடலை மண்ணால் நிரப்பி இலங்கைத் தீவின் வரை படத்தையும் மாற்றியிருக்கிறது. இப்பொழுது இலங்கைத் தீவின் அடிவயிற்றில் ஒரு சீனக்கட்டி வளர்கிறது. சீனாவின் கடன் பொறிக்குள் மீள முடியாதபடி வீழ்ந்திருக்கும் ஒரு நாட்டை இறைமையுள்ள நாடு என்று எப்படி அழைக்கலாம்?

அது மட்டுமல்ல அம்பாந்தோட்டையில் ஒரு துறைமுகத்தையும் பல ஏக்கர் நிலப்பரப்பையும் சீனா நீண்ட காலக் குத்தகை அடிப்படையில் பெற்று விட்டது. அதேசமயம் அத் துறைமுகத்தில் அமெரிக்காவும் உள் நுழைகிறது. துறைமுகத்திலிருந்து 20 நிமிட ஓட்டத்தில் காணப்படும் மத்தள விமான நிலையத்தை இந்தியா கேட்கிறது. மேலும் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தையும் இந்தியா கேட்கிறது. இவற்றுடன் காங்கேசன் துறைமுகத்தையும் பலாலி விமான நிலையத்தையும் மன்னரின் பியர் துறைமுகத்தையும் இந்தியா தன்னுடைய செல்வாக்கு வலையத்துக்குள் கொண்டுவர எத்தனிக்கிறது.

இவை மட்டுமல்ல இலங்கைத்தீவின் அடுத்த அரசுத் தலைவர் யார் என்பதை ஒருபுறம் சீனாவும் இன்னொருபுறம் அமெரிக்காவும் தீர்மானிக்க முயற்சிப்பதாக செய்திகள் கிடைக்கின்றன. அமெரிக்காவின் “மில்லீனியம் சலேன்ஞ்” எனப்படும் நிதி உதவியும் “சோபா” என்று அழைக்கப்படும் பாதுகாப்பு உடன்படிக்கையை புதுப்பிக்கும் முயற்சிகளும் இச் சிறிய தீவு பேரரசுகளின் தப்ப முடியாத இழு விசைகளுக்குள் சிக்கியிருப்பதை காட்டுகின்றன.

ஆனால் அண்மையில் ஞானசார தேரர் கூறியிருக்கிறார் இது சிங்களவர்களின் தீவு என்று. கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் அப்படித்தான் கூறுகிறார். இல்லை. நடைமுறையில் இது பேரரசுகளால் பிய்த்துத் தின்னப்படும் ஒர் அப்பமே. நிச்சயமாக அது ஞானசார தேரரை விடுவித்த மைத்திரிபால சிறிசேன 2015இல் சாப்பிட்ட அப்பம் அல்ல.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *