

குலம் அக்கா
கடந்த மாதம் யாழ்ப்பாணம் குருநகரில் குலம் அக்கா இயற்கை எய்தினார். 1980களின் நடுப்பகுதியில் அவருடைய வீட்டை ஒர் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆதரவாளரின் வீடாகவே பார்த்த ஞாபகம். அவருடைய ஒரு மகள் வரதராஜப்பெருமாளின் மனைவி என்ற அடிப்படையில் அவர்கள் இருந்த அந்த கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் வீடு ஈ.பி.ஆர்.எல்.எப். ஆதரவாளர்களின் வீடாகவே பார்க்கப்பட்டது. ஆனால் குலம் அக்காவின் அரசியல் ஈ.பி.ஆர்.எல்.எப். என்ற ஆயுதப்போராட்ட அமைப்புக்கும் முன்னரே தொடங்கி விட்டது. அவர் தமிழரசுக் கட்சிக்குள் துருத்திக்கொண்டு தெரிந்த பெண் ஆளுமைகளில் ஒருவர்.
அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையற்கரசியைப் போல அங்கயற்கன்னியைப் போல புஷ்பராணியைப் போல குலம் அக்காவும் அவருடைய காலத்தில் துணிந்து அரசியல் பேசிய அதற்காக ரிஸ்க் எடுத்த பெண்களில் ஒருவர். ஒரு காலக்கடத்தில் தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் சந்திக்கும் வீடுகளில் ஒன்றாக இருந்த அவ்வீடு பிந்நாளில் ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்ற பொழுது பெரும்பாலான இயக்கத்தவர்கள் போய்ப் பழகிய ஒரு வீடாகக் காணப்பட்டது. டெலோ இயக்கத்தை தவிர ஏனைய எல்லா இயக்கத் தலைமைகளும் அவருடைய வீட்டில் கை நனைத்திருக்கிறார்கள் என்று வரதராஜபெருமாள் கூறினார்.
குலம் அக்காவைப் போல பல பெண்கள் வெவ்வேறு இயக்கங்களுக்கு புகலிடமாக இருந்திருக்கிறார்கள். குறிப்பாக ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளில் இருந்து தொடங்கி போரின் இறுதிக்கட்டம் வரையிலும் இயக்கங்களை ஆதரித்த அல்லது இயக்கங்களுக்கு புகலிடமாக இருந்த அக்காக்களையும் அம்மாக்களையும் நிறையக் காட்ட முடியும். குறிப்பாக ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் படைத்தரப்பு தெருக்களில் பயமின்றி திரிந்த ஒரு காலகட்டத்தில் துணிந்து தமது வீடுகளில் போராளிகளை பதுக்கி வைத்துப் பாதுகாத்த பல பெண்கள் உண்டு. அக்காலகட்டத்தில் நடு இரவில் கிராமத்தில் எங்கேயோ ஒரு வீட்டில் முட்டை பொரிக்கும் வாசம் அல்லது குழம்பு கொதிக்கும் வாசம் வருமாக இருந்தால் அந்த வீட்டில் யாரோ ஒரு போராளி அல்லது பல போராளிகள் நடு இரவில் வந்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.
இந்த அம்மாக்களும் அக்காக்களும் அனேகமாக ஏதோ ஒரு இயக்கத்துப் போராளியின் தாயாக இருப்பார்கள். அல்லது சகோதரியாக இருப்பார்கள். அல்லது பொதுவில் குறிப்பிட்ட இயக்கத்தின் தீவிரமான ஆதரவாளர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட வீடுகளுக்குள்தான் போராட்டத்தின் ஆரம்ப கட்டத் தலைவர்கள் அனேகமானவர்கள் மறைந்திருந்தார்கள். இந்த வீடுகளில்தான் அவர்கள் ரகசியமாகச் சாப்பிட்டார்கள். அவர்கள் எப்பொழுது போனாலும் அந்த வீடுகளின் படலைகள் அவர்களுக்காக ரகசியமாக திறந்தன. இந்த வீட்டின் அடுப்புகள் அவர்களுக்காக நடு இரவிலும் எரிந்தன. அந்த வீடுகளுக்குள்தான் அக்காலகட்டத்தில் ஆயுதப் போராட்டத்தின் பெரும்பகுதி அடைகாக்கப்பட்டது . பின்னாளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒரு பாடலில் ‘அடைக்கலம் தந்த வீடுகளே’ என்று மகிமைப்படுத்தப்படும் வீடுகளுக்குரிய அம்மாக்களும் அக்காக்களும் இவர்கள்தான்.
இவர்களிற் சிலர் படையினரின் சுற்றிவளைப்புக்களின் போது அதிகம் ரிஸ்க் எடுத்ததும், கடத்தப்பட்டதும், காணாமல் ஆக்கப்பட்டதும் சிறைக்குப் போனதுமுண்டு. இவர்கள் இல்லையென்றால் ஆயுதப் போராட்டம் அதன் பிந்திய வளர்ச்சிகளை பெற்றிருக்காது. இவர்களால் பாதுகாக்கப்பட்ட பல இளம் போராளிகள் பின்னாட்களில் பெரும் தளபதிகளாக அரசியற் பிரமுகர்களாக மேலெழுந்தார்கள்.
இந்த அக்காக்களும் அம்மாக்களும் தமக்கு விருப்பமான போராளிகளுக்காக விரதம் இருந்தார்கள். சிலர் ஒருவேளை உணவை அருந்தினார்கள். வேறு சிலர் பாண் மட்டும் சாப்பிட்டார்கள். இன்னும் சிலர் மச்சம் சாப்பிடாமல் விட்டார்கள். இவருடைய விரதங்கள் பல வகைப்படும். முழுமையாக அல்லது பகுதியாக உணவைக் குறைப்பது, தீச்சட்டி சுமப்பது, பிரதட்டை, அடி அளப்பது என்று எல்லாவிதமான விரதங்களையும் இவர்கள் அனுஸ்டித்தார்கள். பெரும்பாலான எல்லாக் கோயில்களிலும் இவர்கள் நேர்த்தி வைத்தார்கள். இந்த அம்மாக்கள் அக்காக்களின் வயிற்றில் விடாது எரிந்த அந்த விரத நெருப்பு போராட்டத்திற்கான ஒரு ஆன்மீகப் பலமாக இருந்தது.
இந்த அம்மாக்கள் அக்காக்களில் அனேகர் அரசியலை ஓர் அறிவியல் ஒழுக்கமாக பார்த்ததில்லை. தமக்கும் குறிப்பிட்ட ஒரு போராளிக்கும் அல்லது போராட்ட இயக்கத்துக்கும் இடையில் உள்ள உறவினடிப்படையில் தாய்மை பாசம் போன்ற உணர்வுகளுக்கூடாகவே அவர்கள் போராட்டத்தையும் அரசியலையும் அணுகினார்கள். போராட்டத்துக்கும் அவர்களுக்குமான உறவு அதிகபட்சம் உணர்ச்சிகரமானது. அப்பாவித்தனமானது. உண்மையானது.
அதேசமயம் இவர்களைப் போலன்றி அரசியலை சமூகச் செயற்பாட்டை அறிவியல் ஒழுக்கமாக அல்லது வாழ்க்கை ஒழுக்கமாக விளங்கிக் கொண்ட செயற்பாட்டாளர்களின் வீடுகளும் அக்காலகட்டத்தில் தமிழ்ப் பகுதிகள் எங்கும் நிறைந்திருந்தன. இந்த வீடுகள் ஒன்றில் இடதுசாரி இயக்கங்களுடன் தொடர்புற்றிருந்தன அல்லது தமிழ் கட்சிகளுடன்,இயக்கங்களுடன் தொடர்புற்றிருந்தன. அல்லது ஏதோ ஒரு துறைசார் ஆளுமையின் வீடுகளாக காணப்பட்டன.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சில வீடுகளைக் குறிப்பிட்டு செல்லலாம். மு.தளையசிங்கத்தின் புங்குடுதீவு வீடு, மகாகவியின் அளவெட்டி வீடு, ஏ.ஜே.கனகரட்ணா வசித்த வீடு, ராஜசிங்கம் மாஸ்டரின் வீடு, பேராசிரியர் சிவத்தம்பி வசித்த வீடு, குழந்தை.மா.சண்முகலிங்கத்தின் வீடு, மு.திருநாவுக்கரசு வசித்த வீடு, சிதம்பரநாதன் வீடு……..என்று பல வீடுகள் அந்நாட்களில் செயற்பாட்டாளர்களின் சந்திப்பு மையங்களாக காணப்பட்டன. இந்தப் பட்டியலில் முழுமையானது அல்ல. எதிர் காலத்தில் இப்பட்டியல் முழுமையாக்கப் படவேண்டும். என்னுடைய பழகு வட்டத்துக்குளிருந்து தெரிவு செய்யப்பட்ட பட்டியல் இது. இங்கு யாரையும் திட்டமிட்டு, கட்சி சார்ந்து, இயக்கம் சார்ந்து நான் நீக்கவில்லை என்பதை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும்.


குறிப்பாக ஏ.ஜே.கனகரட்ணா வசித்த வீடு வித்தியாசமானது. அதில் ஒரு பல்வகைமை இருக்கும். இத்தனைக்கும் அந்த வீடு ஏ.ஜே.யின் சொந்த வீடு இல்லை. தனது நண்பர்களின் வீட்டில் அவர் தங்கியிருந்தார். கூடுதலான காலம் அவர் குகமூர்த்தியின் வீட்டில் தங்கியிருந்தார். குகமூர்த்தி கொழும்பில் காணாமல் போன பின் ஏஜே, கிருஷ்ணகுமாரின் வீட்டில் தங்கியிருந்தார்.
குகமூர்த்தியின் வீட்டில் ஏ.ஜே.தங்கியிருந்த காலகட்டங்களில் அந்த வீட்டில் பலதரப்பட்டவர்களும் வருவர். இடதுசாரிகள், சிங்களச் செயற்பாட்டாளர்கள் வருவர். இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் வருவர் இயக்கங்களுக்கு எதிரானவர்களும் வருவர். இயக்கங்களில் இருந்து விலகியவர்களும் வருவர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதித் தலைவராக இருந்த மாத்தையாவும் வருவார். பேராசிரியர் ராஜன் கூலும் வருவார. சிலவேளைகளில் மாத்தையாவும் ராஜன் கூலும் ஒரே நேரத்தில் வருவதுண்டு. கொழும்பில் நெருக்கடி ஏற்பட்ட போது ஆசிரியர் தொழில் சங்கவாதியான எச்.என்.பெர்னாண்டோ யாழ்பாணத்துக்கு வந்தார். அவரும் ஏ.ஜேயின் வீட்டிலிருப்பார்.ஏ.ஜே.வசித்த வீடு எனப்படுவது பல்வகைமைகளின் இருப்பிடமாக இருந்தது. அப்படிப்பட்ட வீடுகள் யாழ்ப்பாணத்தில் மிக அரிதானவை.
மற்றொரு வீடு ராஜசிங்கம் மாஸ்டருடையது. அவருடைய புதல்விகள் செயற்பாட்டாளர்களாகக் காணப்பட்டார்கள். குறிப்பாக நிர்மலா இயக்கத்தோடு தொடர்புடையவராக இருந்தார். அக்காலகட்டத்தில் அந்த வீட்டில் இடதுசாரிகளும் கூடினர். புலிகள் இயக்கத்தின் பிரமுகர்களும் வந்து போயினர். அந்த இயக்கத்தின் முதலாவது தியாகியான சங்கர் அந்த வீடு சுற்றி சுற்றி வைக்கப்பட்ட போது அங்கிருந்து தப்பி ஓடினார். அதைத்தொடர்ந்து நிர்மலாவும் அவருடைய கணவரும் கைது செய்யப்பட்டாரகள்.ஒரு கால கட்டத்தில் அந்த வீடு ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவாக காணப்பட்டது. பின்னாளில் அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தோடு கருத்து ரீயாக முரண்பட்டார்கள். அந்த வீட்டுப் பெண்களில் ஒருவரான ரஜனி திரணகம தெருவில் வைத்துச் சுடப்பட்டார். அதன்பின் அந்த வீடு பெருமளவிற்கு போராட்டத்துக்கு ஆதரவற்றதாக மாறியது. பின் வந்த தசாப்தங்களில் அந்த வீடு போராட்டத்தைக் குறித்தும் தமிழ் தேசியத்தை குறித்தும் விமர்சனமுடையவர்கள் சந்திக்கும் ஒரு வீடாக மாறியது.
பேராசிரியர் சிவத்தம்பியின் வீடு சமூகத்தின் பலதரப்படடவர்களும் கூடும் ஓரிடம். இடது சாரிகள், செயற்பாட்டாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் என்று பலரும் அங்கே வருவார்கள். அதுவும் வாடகை வீடுதான்.
குழந்தை.ம.சண்முகலிங்கம், மு.திருநாவுக்கரசு, க.சிதம்பரநாதன், பத்மநாப அய்யர் போன்றோரின் வீடுகளும் துறைசார் ஞானமுடையவர்களும் துறைசார் ஈடுபாடு கொண்டவர்களும் மாணவர்களும் கூடும் இடங்களாகத் திகழ்ந்தன.


குழந்தை.ம.சண்முகலிங்கத்தின் வீடு அரங்க செயற்பாட்டாளர்கள் கூடும் இடமாக காணப்பட்டது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளின் பின்பகுதியிலிருந்து தொடக்கி எண்பதுகளில் பலமாகக் காணப்பட்ட கல்வியியல் அரங்கின் மையமாக அந்த வீடு காணப்பட்டது. சிதம்பரநாதனின் வீடும் அப்படித்தான்.
மார்க் மாஸ்டரின் வீடு ஓர் ஓவியக் கூடமாக திகழ்ந்தது. அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் சித்திரமும் வடிவமைப்பும் என்று ஒரு துறை ஓர் அறிவியல் ஒழுக்கமாக விருத்தியுற்றிருக்கவில்லை. மார்க் மாஸ்டரின் வீட்டில் ஓவியர்களும் ஓவிய ஆர்வலர்களும் மாணவர்களும் ஒவ்வொரு நாளும் பின்நேரங்களில் கூடுவார்கள். யாழ்.பற்றிக்ஸ் வீதியில் அமைந்திருந்த ஒரு சிறு ஒழுங்கையில் மார்க்கு வசித்தார். ஓவியம் தொடர்பில் கோட்பாட்டு விவாதங்களும் செயற்பாட்டு விவாதங்களும் அதிகம் நடந்த ஒரு வீடு அது.


மார்க் மாஸ்டர்
திருநாவுக்கரசுவின் வீடும் அப்படித்தான். அரசறிவியல் தொடர்பிலும் இயக்க அரசியல் தொடர்பிலும் அதிகம் அறிவுபூர்வமான உரையாடல்களும் விவாதங்களும் நடந்த சில தனிநபர் வீடுகளில் அதுவும் ஒன்று. போராட்ட அமைப்புகளின் முன்னோடிகள் பலர் வந்து போன ஒரு வீடு. அதுவும் திருநாவுக்கரசுவின் சொந்த வீடு அல்ல. வாடகை வீடு.
இவைதவிர சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டம், தேசிய கலை இலக்கியப் பேரவை போன்றவற்றின் சந்திப்பிடங்கள், பருத்தித்துறையில் அறிவோர் அரங்கம் என்ற பெயரிலான ஒன்றுகூடல் போன்ற நிறுவனமயப்பட்ட சந்திப்பிடங்களும் இருந்தன.
பின் வந்த தசாப்தங்களில் தமிழ் மக்களின் துறைசார் வளர்ச்சிகள் பலவற்றுக்கும் காரணமாக இருந்த பலதரப்பட்ட உரையாடல்கள் மேற்படி வீடுகளில் நிகழ்ந்தன. துறைசார் உயர்கல்வி நிறுவனங்களுக்கு வெளியே தனிநபர் நிறுவனங்களாக மேற்படி வீடுகள் திகழ்ந்தன. இந்த வீடுகளில் பலவற்றில்தான் தமிழ் மக்களின் போராட்டம் ஒரு பகுதி அடை காக்கப்பட்டது. தமிழ் மக்களின் சமூக அரசியல் கலை பண்பாட்டு விவகாரங்கள் பல விவாதிக்கப்பட்டன. முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஆனால் ஆயுதப் போராட்டம் பெருக்கப் பெருக்க இடப்பெயர்வின் அளவும் பெருத்துக் கொண்டே போனது. அப்பேரிடப்பெயர்வுகளின் போது மேற்படி வீடுகள் இடம் பெயர்ந்தன. கைவிடப்பட்டன. அல்லது சிதைந்தன. அல்லது அந்த வீடுகளில் மையமாக இருந்த ஆளுமைகள் இல்லாமல் போயின.புலம் பெயர்ந்தன.
இப்பொழுது ஆயுதப் போராட்டம் இல்லை. அப்போராட்டத்தை அடைகாத்து பாதுகாத்த அம்மாக்கள் அக்காக்கள் பலரும் இப்பொழுது இல்லை. அப்போராட்டத்துக்கு முன்பின்னாக அரசியல் கலை பண்பாட்டுத் தளங்களில் விவாதங்களும் சந்திப்புகளும் நிகழ்ந்த மையங்களாக காணப்பட்ட பல வீடுகளில் பழைய தலைமுறை இல்லை. இப்பொழுது அந்த வீடுகளில் வசிக்கும் புதிய தலைமுறைக்கு அந்த வீடு ஒரு காலகட்டத்தில் எப்படிப்பட்ட ஒர் அடைகாப்பு மையமாக திகழ்ந்தது என்ற விவரம் தெரியாது.
பேராசிரியர். சிவத்தம்பி, மார்க் மாஸ்டர்,ராஜசிங்கம் மாஸ்டர்,குலம் அக்கா போன்றவர்கள் இயற்கை எய்தி விட்டார்கள். குழந்தை.ம.சண்முகலிங்கம் இப்பொழுதும் யாழ்ப்பாணத்திலிருக்கிறார். அந்த வீட்டில் ஒரு காலம் அடிக்கடி வந்து போன இளம் மாணவர்கள் பலர் இப்பொழுதும் புலமையாளர்களாக துறைசார் விற்பன்னர்களாக நாட்டின் உலகின்
வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் பணிபுரிகிறார்கள். கலாநிதி.க.சிதம்பரநாதன் யாழ்பாணத்தில் பண்பாட்டு மறுமலர்ச்சிக் கூடத்தை நடாத்துகிறார்.திருநாவுக்கரசு இந்தியாவில்.
இவ்வாறு தமிழ்ச் சமூகத்தின் அரசியல் கலை பண்பாட்டுச் செயற்பாடுகளை முன்னெடுத்த நிறுவனங்களை உருவாக்கிய அல்லது அந்த நிறுவனங்களின் செயல்வழியைப் பெருமளவுக்குத் தீர்மானிக்கும் சிந்தனை வீச்சைக் கொண்ட தனிநபர் ஆளுமைகளின் வீடுகள் யாவும் சந்திப்பு மையங்களாகவும் உரையாடல் மையங்களாகவும் விவாத மையங்களாகவும் திகழ்ந்தன.
அவை வீடுகள் என்பதை விடவும் அடைகாப்பு மையங்கள் என்பதே சரி. ஒரு சமூகம் எந்த அளவிற்கு இப்படிப்பட்ட அடைகாப்பு மையங்களை அதிகமதிகம் கொண்டிருக்கிறதோ அந்த அளவிற்கு அந்த சமூகத்தின் அரசியல் சமூக கலை பண்பாட்டு அசைவுகளும் செழிப்பாக அமையும்.
ஒரு காலகட்டத்தில் தமிழ்ப் பகுதிகளில் இது போன்ற வீடுகள் காணப்பட்டன என்பது அந்த வீடுகளை அடைகாக்கும் மையங்களாகப் பேணிய மகத்தான ஆளுமைகள் தனிமனித இயக்கங்களாக வாழ்ந்தார்கள் என்பதைத்தான் காட்டுகிறது. அப்படிப்பட்ட அர்ப்பணிப்பு மிக்க துணிச்சலான முன்னுதாரணமான ஆளுமைகள்தான் தமிழ் மக்களின் பின்வந்த தசாப்தகால அரசியல் சமூக கலை பண்பாட்டுச் செயற்பாடுகளின் மீது தாக்கம் செலுத்தினர்.
இப்பொழுதும் அப்படிப்பட்ட அர்ப்பணிப்பும் துறைசார் நிபுணத்துவமும் மிக்க ஆளுமைகள் முன் னுதாரணங்களாக மேலெழுவார்களாக இருந்தால் இளைஞர்கள் வாள் தூக்க மாட்டார்கள். போதைப்பொருள் நுகர மாட்டார்கள. இலட்சியப் பிடிப்புள்ள சமூகப் பிரக்ஞை உள்ள இளம் தலைவர்களாக மேலெழுவார்கள்.
எனவே தமிழ் மக்களுக்கு இப்போது தேவையாக இருப்பது முன்னுதாரணம் மிக்க துறை சார் நிபுணர்களே. முன்னுதாரணம் மிக்க சமூகப் பெரியார்களே. முன்னுதாரணம் மிக்க சமயப் பெரியார்களே. முன்னுதாரணம் மிக்க படைப்பாளிகளே, ஊடகவியலாளர்களே. முன்னுதாரணம் மிக்க நிறுவன உருவாக்கிகளே.
தமிழர் தளம் ஓகஸ்ட் மாத இதழில் வெளிவந்த கட்டுரை
1 Comment