தனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்?

  

சில வாரங்களுக்கு முன்பு டான் டிவியின் அதிபர் குகநாதன் முகநூலில் பின்வருமாறு ஒரு குறிப்பை எழுதி இருந்தார்………
“சிங்கள மக்கள் தெரிவு செய்யப் போகும் அடுத்த ஜனாதிபதி!
சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லாமல் யாரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று பலரும் எழுதி வருகின்றனர்.ஒரு சின்னக் கணக்கு.
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்-15,992,096.
வாக்களிப்பவர்கள் அதிகபட்சம் 80 வீதம்-12,793,676.
வெற்றிபெறத் தேவையானது-6,396,839.
தனிச்சிங்கள் வாக்காளர்கள்-11,302,393.
அவர்களில் வாக்களிப்பவர்கள் 80 வீதம்-9,041,914.
இந்த வாக்குகளில் 70.74 வீதம்-6,396,839.
ஆக சிங்கள மக்களின் வாக்குகளில் 70.74 வீத வாக்குகளைப் பெறுகின்ற ஒருவரால் சிறுபான்மையினர் வாக்குகள் ஒன்று கூட இல்லாமல் ஜனாதிபதி ஆகிவிடமுடியும்.இந்தத் தேர்தலிலும் சிறுபான்மையினர் வாக்குகள் ஜனாதிபதியை தீர்மானிப்பதை பெரும்பான்மையான சிங்கள மக்கள் விரும்பவில்லை என்று தெரிகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்!”

குகநாதனின் கணக்கில் ஒரு தர்க்கம் உண்டு. 2015ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளை இலங்கை வரைபடத்தில் நிறந்தீட்டிப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியவரும். மைத்திரிபால சிறிசேனவின் கூட்டு எதிரணி தமிழ் பகுதிகளில்தான் பெருமளவு வெற்றி பெற்றது. அதேசமயம் சிங்களப் பகுதிகளில் அக்கூட்டு எதிரணி கொழும்பு, கண்டி,கம்பகா திகாமடுல்ல ஆகிய பகுதிகளில்தான் வெற்றி பெற்றிருக்கிறது. மஹிந்த 47.58 வீத வாக்குகளைப் பெற்றார். மைத்திரிபால சிறிசேன 51.28 விகிதத்தை பெற்றார். அதாவது மஹிந்த 3.07 விகித வாக்குகளால் தோல்வியுற்றார்.
இது ஓர் அரும்பொட்டு வெற்றி இந்த வெற்றிக்கு பெருமளவு காரணம் தமிழ் முஸ்லிம் மலையக வாக்குகளே

அதே ஆண்டு ஓகஸ்ற் மாதம் நிகழ்ந்த நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் சிங்கள மக்கள் மத்தியில் மாற்றத்தின் அலை ஒன்று வீசியது. எனினும் நல்லாட்சிக்கான ரணில்-மைத்திரி கூட்டுக்கு கிடைத்தது 45.66 விகிதமாகும். மகிந்த ராஜபக்ஷ அணிக்கு கிடைத்தது 42.38 விகிதமாகும். அதாவது 3.28 விகித வேறுபாட்டில் ரணில் மைத்திரி அணி வெற்றி பெற்றது. ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் ஒரு வெற்றி அலை வீசிய போதிலும் மகிந்த அணிக்கும் ரணில் மைத்திரி அணிக்கும் இடையிலான வாக்கு விகித வித்தியாசம் எனப்படுவது 3.28 விகிதம்தான்.

அதன் பின் நிகழ்ந்த கூட்டுறவு சபைகளுக்கான தேர்தலில் ராஜபக்ச அணி பெருவெற்றி பெற்றது. அந்த வெற்றியைப் கண்டு அஞ்சியே ரணல் – மைத்திரி அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை ஒத்திவைத்தது. முடிவில் கடந்த ஆண்டு தேர்தல்களை நடாத்தியது. அத்தேர்தலில் ராஜபக்ச அணி தாமரை மொட்டுச் சின்னத்தின் கீழ் பொது ஜன பெரமுன என்ற கட்சியாக போட்டியிட்டு பெருவெற்றி பெற்றது. அந்த வெற்றிதான் மைத்திரியைக் குழப்பியது. அதன் விளைவே கடந்த ஒக்டோபர் மாதம் நிகழ்ந்த ஆட்சிக் குழப்பம் ஆகும்.

பொது ஜன பெரமுன எனப்படுவது யுத்த வெற்றியின் குழந்தை. யுத்த வெற்றியை நிறுவன மயப்படுத்தி அதைக் கட்டிறுக்கமான ஒரு கட்சியாக மகிந்த கட்டி எழுப்பியுள்ளார். மகிந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாரம்பரியத்தில் வந்தவர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டி எழுப்பியதில் ராஜபக்ஷக்களுக்கு பெரிய பங்கு உண்டு. எனினும் சந்திரிக்காவின் கண்டிச் சிங்கள மேட்டுக்குடி வம்சத்துக்கு நிகராக நின்று பிடிப்பதில் ராஜபக்ஷக்களுக்கு அடிப்படையான சவால்கள் முன்பு இருந்தன. ஆனால் யுத்த வெற்றியின் மூலம் தனக்கு முன்பு ஆட்சி செய்த மேட்டுக்குடி கண்டிச் சிங்கள வம்சங்கள் எதனாலும் முடியாத ஒன்றை ராஜபக்ச சாதித்துக் காட்டினார்.

வெல்ல முடியாது ஒர் அமைப்பு என்று நம்பப்பட்ட புலிகள் இயக்கத்தை அவர் தோற்கடித்தார். அதன்மூலம் தனக்கு முன்பு ஆட்சி செய்த கண்டிச் சிங்கள மேட்டுக்குடிகளுக்கு எதிராகத் தன்னை தோற்கடிக்கப்பட முடியாத ஒருவராக ஸ்தாபித்தார். பண்டாரநாயக்காக்களின் கட்சியாகக் காணப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தனது முதன்மையை ஸ்தாபிப்பதை விடவும் தனது யுத்த வெற்றிகளையே ஒரு கட்சியாகக் கட்டியெழுப்புவது என்று அவர் முடிவெடுத்தார். அப்படி முடிவெடுத்துக் கட்டி எழுப்பப்பட்டதே தாமரை மொட்டுக் கட்சியான பொது ஜன பெரமுன. இதன் மூலம் ராஜபக்சக்கள் யுத்த வெற்றியைத் தமது குடும்பச் சொத்தாக்கி அதை நிறுவனமயப்படுத்தியும் விட்டார்கள்.

“கடந்த உளூராட்சி மன்றத் தேர்தலில் இக்கட்சி ஐந்து மில்லியன் வாக்குகளைப் பெற்றது. ஆசியாவிலேயே சீனக் கொம்மியூனிஸ்ட் கட்சிக்கு அடுத்த படியாக இரண்டாவது பெரிய கட்சி அதுவென்றும் டிஜிட்டல் தளங்களிலில் அது பெரிய செல்வாக்கைச் செலுத்துகின்றது என்றும்” சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேற்கண்டவை அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரியவரும் 2009 இல் இருந்து மஹிந்ததான் சிங்கள-பௌத்த பெருந் தேசிய வாதத்தின் கேள்விக்கிடமற்ற தலைவராக காணப்படுகிறார். 2015இல் அவரைத் தோற்கடித்தது தமிழ் முஸ்லிம் வாக்குகள்தான். சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தை பொறுத்தவரை மஹிந்த தான் அதன் தலைவர்.

2015இல் மைத்திரி கட்சியை இரண்டாக உடைத்தார். அதுதான் மஹிந்தவின் தோல்விக்கான வழிகளைத் திறந்து விட்டது .ஆனால் 2015இலிருந்து தொடர்ச்சியாக நடந்த எல்லா தேர்தல்களிலும் மஹிந்ததான் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் இதயத்தில் அமர்ந்து இருக்கிறார் என்ற செய்தி தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டது.

இப்பொழுது மகிந்த யுத்த வெற்றி வாதத்தை நன்கு நிறுவன மயப்படுத்தி அதை ஒரு கட்சியாகக் கட்டி எழுப்பி விட்டார். பிளவுண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெருந்துண்டு மகிந்தவிடம் சென்று விட்டது. அக் கட்சியின் சிதைவின் மீது பொது ஜன பெரமுன கட்டியெழுப்பப்படுகிறது. பொது ஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக யுத்த வெற்றி நாயகர்களில் ஒருவரான கோத்தபாயவை அறிவிக்கப்பட்ருக்கிறார்.

யுத்த வெற்றி வாதம் எனப்படுவது 2009 க்குப் பின்னரான சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் ஆகப் பிந்திய வளர்ச்சிதான். எனவே யுத்த வெற்றி வாதத்தை ஒரு கட்சியாகக் கட்டியெழுப்பியதன் மூலம் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாக்;குகளை அப்படியே கொத்தாக அள்ளியெடுக்க ராஜபக்ச சகோதரர்கள் திட்டமிடுகிறார்கள். இவ்வாறு ராஜபக்ச சகோதரர்கள் தனிச் சிங்கள வாக்குகளை இலக்கு வைத்து தமது வியூகத்தை வகுக்கும் வகுத்திருக்கும் ஒரு பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க என்ன செய்யப் போகிறார்?

அவர் இன்னமும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அந்த அறிவிப்பை காலம் தாழ்த்துவதன் மூலம் சஜித்தின் ஆதரவாளர்களை எப்படிச் சமாளிக்கலாம் என்று அவர் சிந்திக்கிறார். கட்சித் தலைமையை அவர் வேறு யாரிடமாவது கையளிக்கத் தயாரா?

அவருடைய தரப்பு வேட்பாளர் யாராகவும் இருக்கலாம் ஆனால் அந்த வேட்பாளர் மூவின வாக்குகளை திரட்டும் ஒருவராக இருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு மூவின வாக்குகளைத் திரட்டப்போகும் வேட்பாளருக்குப் பின்வரும் சவால்கள் உண்டு.

முதலாவது சவால் – ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப் பின் ஒரு பகுதி சிங்களப் பொதுக் கூட்டு உளவியல் எனப்படுவது உறுதியான ஒரு தலைமைத்துவத்தை கோரத் தொடங்கிவிட்டது. அப்படி ஓர் உறுதியான தலைமை யுத்த வெற்றி வாதிகள் மத்தியில்தான் உண்டு. லிபரல் ஜனநாயக முகமூடி அணிந்த சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதிகள் மத்தியில் உண்டா?

இரண்டாவது சவால் – ஒரு புதிய மாற்றத்தை அல்லது பெருந்திருப்பத்தை ஏற்படுத்தத் தேவையான ஒரு புத்துணர்ச்சி மிக்க கூட்டு உளவியலைக் கட்டியெழுப்ப வல்ல ஆளுமை மிக்க தலைவர்கள் எவரும் அந்த அணியிடம் இல்லை. 2015இல் மைத்திரிபால சிறிசேன அப்படி ஒரு வேட்பாளர் போல தோன்றினார். அப்பொழுதும் கூட அவருடைய அமைச்சின் கீழ் வேலை செய்த சில தமிழ் மருத்துவர்கள் சொன்னார்கள்…….அவர் காட்டும் லிபரல் ஜனநாயக முகம் ஒரு முகமூடி என்று. தென்னிலங்கையில் நடந்த ஒரு கருத்தரங்கில் உரைகள் யாவும் சிங்களத்தில் அமைந்திருந்த பொழுது அதைச் சுட்டிக்காட்டிய தமிழ் மருத்துவர்களிடம் நீங்கள் சிங்களம் பழகுங்கள் என்று அவர் கூறியதாகத் தகவல் உண்டு.

இப்பொழுது மைத்திரியின் முகமூடி கிழிந்து விட்டது. இனி அவரைப் போல யாரைக் கொண்டு வந்தாலும் அது முகமூடியா நிஜமா என்று தமிழ் மக்கள் சந்தேகிப்பார்கள். முஸ்லிம் மக்களும் சந்திப்பார்கள். ஏன் மைத்திரி வாக்களித்த சிங்கள மக்களும் சந்திப்பார்கள்.அதாவது மாற்றத்தை குறித்து புத்துணர்ச்சி மிக்க எதிர்பார்ப்புக்களும் நம்பிக்கைகளும் நாட்டில் இப்பொழுது இல்லை. இது ரணில் அணிக்குப் பாதகமான அம்சம்.

மூன்றாவது சவால் – 2015இல் பிளக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது இப்பொழுது பெருமளவுக்கு மீள இணைக்கப்பட்டு அதில் பெரும்பகுதி மகிந்தவோடு நிற்கிறது. சிறு துண்டு மைத்திரியோடு நிற்கிறது.

நாலாவது சவால் – தமிழ் மக்களின் கூட்டுக் உளவியல் 2015ல் காணப்பட்டதை போல இப்பொழுது இல்லை. கூட்டமைப்பின் மீதும் ரணிலின் மீதும் அதிருப்தியும் கோபமும் அதிகரித்துக் காணப்படுகின்றன. கம்பெரலிய துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட விதிகள் மைதானங்கள் கட்டப்பட்ட கட்டிடங்கள் எல்லாவற்றையும் மேவிக்கொண்டு நாவற்குழியில் கட்டப்பட்டு வரும் விகாரை தெரிகிறது, கன்னியா தெரிகிறது, பழைய செம்மலை தெரிகிறது. எனவே தமிழ் மக்களின் கூட்டுக் உளவியலை ராஜபக்சவுக்கு எதிராக திரட்டுவது என்ற ஓர் உத்தியில் மட்டுமே கூட்டமைப்பும் ரணிலும் தொங்க வேண்டி இருக்கும்.

ஐந்தாவது சவால் – முஸ்லிம் வாக்குகள். ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின் முஸ்லிம் சமூகம் பெருமளவிற்கு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. வெல்ல முடியாத பேரினவாதத்தோடு மோதுவதை விடவும் அதோடு சுதாகரித்துக் கொள்ளலாம் என்று ஒரு தரப்பு முஸ்லிம்கள் யோசிக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு முன்னாள் கிழக்கு முதலமைச்சர் ஆற்றிய உரையில் வெற்றி பெறும் தரப்பு எது என்று பார்த்துத் தாம் முடிவெடுக்க போவதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் 2015இல் மாற்றத்துக்காக விழுந்த வாக்குகளில் முஸ்லிம்களின் வாக்குகளும் கணிசமானவை. முஸ்லிம் கூட்டுக் உளவியல் 2015இல் காணப்பட்டதை போல இப்பொழுதும் காணப்படுகிறதா?

ஆறாவது சவால் – 2015இல் ஆட்சி மாற்றத்திற்காக ஒரு பகுதி மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் லிபரல் ஜனநாயக வாதிகளும் பல்கலைக்கழக புத்திஜீவிகளும் கருத்துருவாக்கிகளும் படைப்பாளிகளும் மத குருக்களும் தென்னிலங்கையில் ஒரு கூட்டாகத் திரண்டு வேலை செய்தார்கள. ஆனால் இம்முறை அப்படி மாற்றத்தை குறித்த ஓர் அலையை உருவாக்குவது யார்? அக்காலகட்டத்தில் அரசியல்வாதிகள் மீதும் வாக்காளர்கள் மீதும் தார்மீகத் தலையீட்டை மேற்கொள்ளவல்ல சோபித தேரர் போன்றவர்கள் இருந்தார்கள். ஆனால் இப்பொழுது சோபித தேரர் இல்லை. இருப்பதெல்லாம் ஞானசார தேரர்களும் ரத்தின தேரர்களும்தான.இதுவோர் எதிர் மறை வளர்ச்சி.

எனவே மேற்கண்ட அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் ராஜபக்ச அணியின் யுத்த வெற்றி வாதத்திற்கு எதிராக நின்று பிடிக்கக்கூடிய ஒரு வேட்பாளருக்குப் பாதகமான அம்சங்களே அதிகம் உண்டு. இப்பாதகமான அம்சங்களை எதிர்கொண்டு மூவினத்து வாக்குகளைக் கொத்தாகத் திரட்டக் கூடிய ஒரு வேட்பாளர் யார்?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *