மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியலை முக்கியமாக இரண்டு தளங்களில் பார்க்க வேண்டும்.
முதலாவது-அரங்கிற்கு வெளியே அதாவது அனைத்துலக மற்றும் பிராந்திய அரசியலில் தமிழர்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பது.
இரண்டாவது- அரங்கிற்குள்ளே தமிழ் மக்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பது.
அரங்கிற்கு வெளியே தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியானது மாற்றத்திற்கு முன்பு காணப்பட்டதை விடவும் இப்பாழுது ஒப்பீட்டளவில் குறைந்துபோயுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கை பிற்போடப்பட்டிருப்பது அதனால்தான். மாற்றத்திற்கு முன்னரும் பின்னரும் மேற்கு நாடுகள் மற்றும் இந்தியாவின் இலக்கு எனப்படுவது தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதல்ல. மாறாக கொழும்பைக் கையாழுவதுதான். மாற்றத்திற்கு முன்புவரை கையாளக் கடினமாக இருந்த கொழும்பின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்குத் தமிழ் மக்கள் தேவைப்பட்டார்கள். மாற்றத்திற்குப்பின் இப்பொழுது மாற்றத்தைப் பாதுகாப்பதற்குத் தமிழ் மக்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் மாற்றத்திற்காகக் கையாளப்பட்டபோது தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியானது உயர்வாகக் காணப்பட்டது.
மாற்றத்திற்கு முன்புவரை ராஜபக்~ அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் மக்களை ஒரு கருவியாகக் கையாண்டு அந்த அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பதே சக்திமிக்க நாடுகளின் பிரதான உத்தியாகக் காணப்பட்டது. அதாவது அரசாங்கத்திற்கு எதிரான ஒரு கருவியாகத் தமிழ் மக்கள் அப்பொழுது கையாளப்பட்டார்கள். அந்தப் பொறிமுறைக்கூடாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியானது அனைத்துலக அரங்கில் பேசப்படுவதற்குரிய அரங்குகள் அகலத் திறக்கப்பட்டன. ஆனால் இப்பொழுது மாற்றத்திற்குப் பின் தமிழ் மக்கள் புதிய அரசாங்கத்தோடு ஏதோ ஒரு விதத்தில் இண்ங்கிப் போவதையே மேற்கு நாடுகளும், இந்தியாவும் முன்மொழிகின்றன. மாற்றத்தைப் பாதுகாப்பதென்றால் தமிழ் மக்கள் மாற்றத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் வலுச்சமநிலையை அல்லது ஸ்திரத்தன்மையை குழப்பக் கூடாது என்று மேற்கு நாடுகளும் இந்தியாவும் எதிர்பார்க்கின்றன.
அதாவது, மாற்றத்திற்கு முன்பு தமிழ் மக்களை இலங்கை அரசாங்கத்திற்கு எதிர் நிலையில் வைத்துக் கையாண்டார்கள். மாற்றத்திற்குப் பின்பு தமிழ் மக்களை இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பற்ற ஒரு நிலையில் வைத்து கையாள முற்படுகின்றார்கள். மொத்தத்தில் கொழும்பைக் கையாள்வதற்கு உரிய கருவிகளாக தமிழ் மக்களைப் பயன்படுத்தி வருகின்றார்கள் என்பதே சரி;.
இந்தியாவும் மேற்கு நாடுகளும் பூகோளப் பங்காளிகளாக காணப்பட்ட போதிலும் மாற்றத்திற்குப் பின்னரான நிலைமைகளைக் கையாள்வதில் இரண்டு தரப்புக்களுக்கும் அவற்றுக்கேயான தனித்துவமான இறுதி இலக்குகள் இருக்கக் கூடும். மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை இச்சிறிய தீவில் சீனாவுக்குள்ள உரித்துரிமையைக் கட்டுப்படுத்தினால் சரி. இந்தியாவுக்கும் அதுதான் பிரதான இலக்கு. அதே சமயம் ஈழத்தமிழர்களின் மீது அதிகரித்த செல்வாக்கைச் செலுத்துவதற்கு இக்காலகட்டம் அதிக வாய்ப்பானது என்று இந்தியா கருதமுடியும். ஈழத் தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் சக்திகள் மிகப் பலவீனமாகக் காணப்படும் இச்சூழலில் கொழும்பிலும் ஒப்பீட்டளவில் ஸ்திரமற்ற ஓர் அரசே காணப்படுகின்றது. இத்தகைய ஓர் அரசியல் சூழலில் ஈழத்தமிழர்கள் மீது ஆகக் கூடிய பட்ச செல்வாக்கைப் பிரயோகிப்பதற்கு இந்தியா முற்படும். உத்தேச ஆசிய நெடுஞ்சாலைத் திட்டமும் இது விடயத்தில் இந்தியாவிற்கு அதிகரித்த வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தரும். ஆசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின்படி தமிழ் நாடும் மன்னாரும் படகுச்சேவை மூலம் இணைக்கப்பட்டுவிடும்.
மாற்றத்தைப் பலப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழும் ஈழத்தமிழர்களின் மீது ஆகக்கூடியபட்ச செல்வாக்கைச் செலுத்தவேண்டிய தேவை இந்தியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் உண்டு. ஏனெனில் மாற்றத்தை பலப்படுத்துவது என்ற நிகழ்ச்சி நிரலானது வரப்போகும் பொதுத் தேர்தலில் மற்றொரு சோதனையைக் கடக்கவேண்டியிருக்கும். தமிழர்களையும் அணி சேர்த்துக் கொண்டால்தான் அச்சோதனையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். மாற்றத்தின் பின்னரும் மகிந்த ராஜபக்~ பலமாகவே காணப்படுகின்றார் என்பதைத்தான் அவருக்கு ஆதரவாக நடந்த மூன்று பெரும் கூட்டங்களும் வெளிக்காட்டியிருக்கின்றன. எனவே ராஜபக்~ சகோதரர்களுக்கு எதிரான தமிழ் மக்களின் கோபமானது மாற்றத்தைப் பலப்படுத்துவதற்கும் அவசியமானது.
ஆனால் அதே சமயம் தமிழ் மக்களின் கோபத்தைக் கையாழ்வது என்பது சிங்களக் கடும்போக்காளர்களை சீண்டுவதாக அமையக் கூடாது என்றும் மேற்குநாடுகள் சிந்திக்கின்றன. சிங்களக் கடும்போக்காளர்கள் சீண்டப்படுவார்களாக இருந்தால் அது ராஜபக்~ சகோதர்களுக்கு அனுகூலமாக மாறிவிடும் என்ற ஓர் அச்சம் மேற்கு நாடுகளிடமும் இந்தியாவிடமும் காணப்படுகின்றது. அதாவது சிங்களக் கடும்போக்காளர்களை சீண்டாத ஒரு எல்லைவரை தமிழ் மக்களை அரவணைப்பதற்கு மேற்கு நாடுகளும் இந்தியாவும் தயாராகக் காணப்படுகின்றன. ஆனால் அதேசமயம் சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்~ல் விருது வழங்கப்பட்டமையானது தமிழ் மக்கள் மத்தியில் எத்தகைய உணர்வலைகளைத் தோற்றுவிக்கும் என்பதைக் குறித்து மாற்றத்தின் பின்னாலிருக்கும் சக்திமிக்க நாடுகள் கவனத்தில் எடுத்திருப்பதாக் தெரியவில்லை. தமிழ் மக்களுக்கு இப்போதுள்ள பேரம் பேசும் சக்தி இவ்வளவுதான். அதாவது, சிங்களக் கடும்போக்காளர்களை சீண்டாத ஒரு எல்லைவரை தமிழ் மக்களை கையாள வேண்டிய ஒரு தேவை சக்திமிக்க வெளிநாடுகளுக்கு உண்டு என்பது. அதே சமயம் தீவிர தமிழ்த்தேசிய சக்திகளை அவை அச்சுறுத்தலாகப் பார்க்கவில்லை. இதுதான் மாற்றத்தின் பின்னரான வெளியரங்க நிலவரம்.
அடுத்ததாக உள்ளரங்க நிலவரத்தைப் பார்க்கலாம். உள்ளரங்கில் மூன்று முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
முதலாவது – மாற்றத்தின் பின் கூட்டமைப்பின் உயர் மட்டம் தொடர்பில் படித்த நடுத்தரவர்க்கத் தமிழர்கள் மத்தியில் கேள்விகள் அதிகரித்து வருகின்றன.
இரண்டாவது – வடமாகாண முதலமைச்சர் தீவிர தமிழ்த்தேசிய சக்திகளுக்கு மகிழ்ச்சியூட்டும் விதத்தில் நடந்துகொள்வது.
மூன்றாவது – தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது அதன் அரசியற் செயற்பாடுகளை முடுக்கிவிட்டிருப்பதோடு புதிய எதிர்பார்ப்புக்களோடு செயற்பட்டு வருகிறது.
நான்காவது- தமிழ் சிவில் வெளியானது ஒப்பீட்டளவில் அதிகரித்திருப்பது போல ஒரு தோற்றம் உருவாகியுள்ளது.
இவற்றைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
மாற்றத்தின் பின் கூட்டமைப்பானது புதிய அரசாங்கத்தோடு ஒருவித இணக்கத்திற்கு வந்தது போல ஒரு தோற்றம் ஏற்பட்டது. தமிழ்தேசிய அரசியல் எனப்படுவது கடந்த சுமார் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக எதிர்ப்பு அரசியலாகவே இருந்து வருகின்றது. இத்தகைய ஓர் நீண்டகால எதிர்ப்பு அரசியல் பாரம்பரியத்தின் பின்னணியில் இணக்க அரசியல் எனப்படுவது சரணாகதியாகவோ அல்லது துரோகமாகவோதான் பார்க்கப்பட்டு வந்துள்ளது. மாற்றத்தைப் பலப்படுத்தும் நிகழ்ச்சி நிரலின்படி கூ;ட்டமைப்பானது மைத்திபால சிறிசேனாவின் அரசாங்கத்தோடு எதிர்ப்பற்ற ஒரு போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கியபோது எதிர்ப்பு அரசியலுக்கு பழக்கப்பட்ட படித்த நடுத்தரவர்க்க மக்கள் மத்தியில் கேள்விகளும் அதிருப்தியும் அதிகரித்தன. இது தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குச் சாதகமான ஓரு நிலைமைதான். அதை அவர்கள் உணர்ந்து செயற்படுவதாகவே தெரிகின்றது.
ஆனால் அதே சமயம் கூட்டமைப்பின் எதிர்ப்புக்காட்டா அரசியலுக்கு புறநடையாக வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. மாற்றத்திற்குப் பின்னரான முதலமைச்சரின் நடவடிக்கைகள் பெருமளவிற்கு எதிர்ப்பு அரசியல் தடத்திலேயே செல்கின்றன. இது ஒருபுறம் தீவிர தமிழ்தேசிய சக்திகளைச் சந்தோ~ப்படுத்துகின்றது. இன்னொரு புறம் அவருடைய கட்சியின் நிலைப்பாட்டால் விசனமுற்றிருக்கும் தமிழ் மக்களுக்கு புதிய எதிர்பார்ப்புக்களை அது தோற்றுவித்திருக்கிறது. இதை இன்னும் கூராகச் சொன்னால் தீவிர தமிழ்த்தேசிய சக்திகளின் ஆதரவுத்தளத்தை முதலமைச்சர் தன்னுடையதாக கவர்ந்துசெல்ல முற்படுகின்றார் என்றும் கூறலாம்.
இது தொடர்பில் வேறுபட்ட வியாக்கியானங்கள் உண்டு. எதையும் நேர்மறையாகப் பார்க்கும் ஒரு பகுதி விமர்சகர்கள் கூறுகிறார்கள், முதலமைச்சர் கடந்த ஒன்றரை ஆண்டுகால அனுபவத்தில் இருந்து படிப்படியாக கற்றுணர்ந்தவைகளின் அடிப்படையிலேயே இப்படிப்பட்ட முடிவுகளுக்கு வந்திருக்கிறார் என்று. மகாணாசபை உருவாக்கியபோது அதை அபிவிருத்திக்கான ஓர் அரங்காகவே கூட்டமைப்பின் தலைமைப்பீடம் திட்டமிட்டிருந்தது. அப்பொழுது முதலமைச்சரின் நிலைப்பாடும் அதுவாகத்தான் இருந்தது. மாகாணசபை உருவாகிய புதிதில் ராஜபக்~ அரசாங்கத்தோடு இணக்கமான ஒரு போக்கை கடைப்பிடித்த அவர் அதில் வெற்றிபெறாதபோது படிப்படியாக எதிர்ப்பு அரசியல் தடத்திலேயே இறங்கிவிட்டார் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். அவர் ஒர் தொழில்சார் அரசியல்வாதி இல்லையென்பதினாலும் அதிக பட்சம் அறநெறிகளின்பாற்பட்டுச் சிந்திப்பவர் என்பதினாலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகப் படிப்படியாக அவர் கற்றுக்கொண்டவைகளின் விளைவாகவே இவ்வாறு தீவிரமாக நடந்துகொள்கின்றார் என்பது அவர்களுடைய விளக்கம்.
ஆனால், எதையும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பவர்கள் இதை வேறுவிதமாக வியாக்கியானம் செய்கின்றார்கள். மாற்றத்தின் பின்னரான கட்சித் தலைமையின் நிலைப்பாட்டால் கட்சிக்கு எதிராகத் சிந்திக்கக் கூடிய வாக்காளர்களை கவர்வதற்காக முதலமைச்சர் ஒரு கருவியாகக் கையாளப்படுகிறார் என்று அவர்கள் கூறுகிறார்கள். தீவிர தேசியவாத சக்திகள் கூட்டமைப்புக்கு வெளியே பலமடைவதைத் தடுத்து கூட்டமைப்புக்குள்ளேயே அவற்றுக்கு ஒரு தலைமையை உருவாக்குவதன் மூலம் தமிழ் அரசியல் அரங்கை தமது பூரணக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பும் சக்திமிக்க வெளித்தரப்புக்களின் கருவியாகவே முதலமைச்சர் செயற்படுகின்றார் என்றும் அவர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.
எதுவாயினும் தற்பொழுது தமிழ் எதிர்ப்பு அரசியலின் கூர்முனைகளில் ஒன்றாக முதலமைச்சர் காணப்படுகின்றார்.
ஆனால் மாற்றத்தின் பின்னரான ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவிலான ஒரு சிவில் வெளிக்கு முதலமைச்சர் தலைமை தாங்குவாரா?
மாற்றத்தின் பின் தமிழ் பகுதிகளில் ஒப்பீட்டளவில் அதிகரித்த ஓர் அசுவாசச் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. 2009 மேக்குப் பின் வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில் ஆகப் பெரியது என்று வர்ணிக்கத்தக்க ஓர் எதிர்ப்பு ஊர்வலம் மாற்றத்தின் பின்னரே நிகழ்ந்தது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட அவ் ஊர்வலத்தில் பொலிசார் நடந்துகொண்ட விதம் காரணமாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஊர்வலத்தின் பின் வெளியிட்ட அறிக்கையில் பொலிஸாருக்கு நன்றி தெரிவித்திருந்தது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். மாற்றத்தின் பின் தமிழ் மக்களுக்கு அதிகரித்த அளவில் ஒரு சிவில்வெளி வழங்கப்பட்டிருக்கின்றது என்பதை குறைந்த பட்சம் ஒரு தோற்றமாகவேனும் வெளி உலகிற்குக் காட்ட வேண்டிய ஓர் தேவை புதிய அராங்கத்திற்கு உண்டு. இப்புதிய அரசாங்கத்தை பின்னிருந்து இயக்கும் மேற்கு நாடுகளும் அதை வலியுறுத்தும்.
இத்தகையதோர் பின்னணியில் அதிகரித்திருக்கும் சிவில் வெளியை கையாளப்போவது யார்? என்பதில்தான் ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் பெருமளவிற்குத் தங்கியிருக்கின்றன. தற்பொழுது அரங்கில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளும் அது தொடர்பான செயலூக்கம் மிக்க தரிசனங்கள் எதையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. இவ்விரண்டு கட்சிகளுக்கும் வெளியே நம்பிக்கையூட்டும் செயற்பாட்டு இயக்கங்கள் எதையும் காண முடியவில்லை.
சுன்னாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீரில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது தொடர்பாக ஆங்காங்கே சிவில் எதிர்ப்புக்கள் காட்டப்பட்டு வருகின்றன. ஆனால் இவை யாவும் மாகாணசபைக்கு எதிரானவை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
இத்தகையதோர் பின்னணியில் கிடைத்திருக்கும் சிவில் வெளியை மேலும் அகட்டி ஆழப்படுத்தும் விதத்திலான சிவில் செயற்பாடுகள் எவற்றையும் காண முடியவில்லை. பலமான செயற்பாட்டு இயக்கங்கள் இல்லாத ஓர் வெற்றிடத்தில் முதலமைச்சரின் எதிர்ப்பு அரசியலே கவர்ச்சிமிக்கதாகத் துருத்திக்கொண்டு தெரிகிறது. ஒரு மக்கள் கூட்டத்தின் பேரம் பேசும் சக்தியை செயற்பாட்டு இயக்கங்கள் கட்டுப்படுத்துவதை விடவும் அரசியல் கட்சிகள் கட்டுப்படுத்துவதையே அரசுகளும் அனைத்துலக சமூகமும் அதிகம் விரும்புவதுண்டு. தமிழ் நாட்டில் ஈழ ஆதரவு அரசியலை செயற்பாட்டு இயக்கங்களும் மாணவர்களும் முன்னெடுப்பதைவிடவும் இரண்டு பெரிய கட்சிகளில் ஏதாவது ஒன்று முன்னெடுப்பதைத் தான் மத்திய அரசாங்கமும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் விரும்புகிறார்கள். இலட்சியப் பற்றுமிக்க செயற்பாட்டு இயக்கங்களைவிடவும் பாரம்பரிய மிதவாதிகளால் முன்னெடுக்கப்படும் ஓர் அரசியலையே உலகின் சக்தி மிக்க நாடுகள் மிகவும் ஆர்வத்தோடு நெருங்கிவருகின்றன. மாற்றத்தைப் பலப்படுத்த விளையும் சக்திமிக்க நாடுகள் சில சமயம் முதலமைச்சரின் தீவிரத்தால் எரிச்சலடைந்தாலும் கூட அத்தகைய ஒரு தீவிரமான அசியலை செயற்பாட்டு இயக்கங்கள் முன்னெடுக்காதது குறித்து சற்று ஆறுதலடையக் கூடும்.
இதுதான் மாற்றத்தின் பின்னரான இப்போதுள்ள தமிழ் அரசியல் சூழல். மாற்றத்தைப் பலப்படுத்த விளையும் நாடுகள் மாற்றமானது திரும்பிச் செல்லவியலாத ஓர் எல்லையை அடையும் வரை அதாவது ராஜபக்~ சகோதரர்கள் மீள எழுச்சி பெறாதபடி தோற்கடிக்கப்படும் ஒரு எல்லைவரை தமிழ் மக்களுடைய எதிர்ப்பு அரசியலை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே முற்படும். அவர்களுக்கு மாற்றம் முக்கியம். ஆனால் தமிழ் மக்களுக்கு எது முக்கியம்? தமிழ் மக்களுக்கு எது முக்கியம் என்பதை சக்தி மிக்க வெளித்தரப்புக்களுக்கு யார் உணர்த்துவது? எப்படி உணர்த்துவது?
27.03.2015
1 Comment