அரசுத்தலைவர் சிறிசேன ஜெனிவாவில் இருந்து திரும்பி வந்தபொழுது அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பும் மரியாதையும் புகழாரமும் நன்கு திட்டமிட்டுச் செய்யப்பட்டவைதான். தமது வெற்றி நாயகர்களை தண்டிக்க முற்படும் வெளிச்சக்திகளை வெற்றிகரமாக தன் வழிக்குக் கொண்டுவந்ததன் மூலம் நாட்டின் இறையாண்மையையும் கௌரவத்தையும் அவர் பாதுகாத்திருப்பதாக ஒரு தோற்றம் கட்டி எழுப்பப்படு;கிறது. அவரும் பிரதமரும் ஜெனிவாவில் இருந்து வந்த பின் ஊடகங்களுக்கும் படைத்துறை பிரதானிகளுக்கும் தெரிவித்துவரும் கருத்துக்களும் அத்தகையவைதான். இதுபோலவே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நாவிலும் ஏனைய வெளிநாட்டுத் தலைநகரங்களிலும் தெரிவித்துவரும் கருத்துக்களும் ஏறக்குறைய அத்தகையவைதான். இவை அனைத்தையும் செறிவாக கூராகச் சொன்னால் போர்க்களத்தில் நாடு பெற்ற வெற்றிகளையும் வெற்றி நாயகர்களையும் இந்த அரசாங்கம் பாதுகாக்க முற்படுகின்றது என்று பொருள். ஆயின் இந்த அரசியலை மனித முகத்துடன் கூடிய யுத்த வெற்றிவாதம் என்று அழைக்கலாமா?
குறிப்பாக அரசுத்தலைவர் உட்பட இந்த அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிக்கும் அனைவரும் ஏற்கனவே ராஜபக்ச தலைமையிலான யுத்த வெற்றிவாதத்தின் பங்காளிகளே என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
வேற்றிவாதம் எனப்படுவது சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தின்; 2009 இற்குப் பிந்திய வளர்ச்சிதான்.ராஜபக்சக்களின் தலைமையின் கீழ் அது அனைத்துலக அளவில் தனிமைப்படுத்தப்பட்டு அபகீர்த்திக்கு உள்ளாகிது. எனவே ஆட்சிமாற்றத்தின் மூலம் அதை 2015 இற்குரியதாக புதுப்பிக்க வேண்டியதொரு தேவை ஏற்பட்டது. ஆட்சிமாற்றத்தின் பின் வெற்றிவாதமானது அனைத்துலக கவர்ச்சிமிக்கதாகவும் மனித முகத்துடன் கூடியதாகவும் தன்னைப்புதுப்பித்துக் கொண்டுவிட்டது.
அதாவது அனைத்துலக அளவில் அபகீர்த்திக்குள்ளாகியிருந்த சிங்களபௌத்த மேலாதிக்கமானது இப்பொழுது அனைத்துலக சமூகத்தால் பாதுகாக்கப்படும் அளவுக்கு ஒரு புதிய வளர்ச்சியைப் பெற்றுவருகின்றது. இதன் விளைவாகவே ஜெனீவாவில் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்திற்கு அதிகம் வலிக்காத விதத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் உருவாக்கப்படும் விசாரணைப் பொறிமுறையில் வெளித்தரப்புக்களின் பங்களிப்பு எவ்வளவு விகிதமாக இருக்கும் என்பது தெளிவாகக் கூறபபட்டிருக்கவில்லை. அதே சமயம் எந்த ஒரு வெளித்தரப்பு அதில் பங்குபற்றினாலும் இறுதியிலும் இறுதியாக அதைக்கட்டுப்படுத்தும் அதிகாரம் இலங்கை அரசாங்கத்திற்கே இருக்கும். இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணியான வி.புவிதரன் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டினார். வுpசாரணைப் பொறிமுறையை கட்டுப்படுத்தும் ஒட்டு மொத்த அதிகாரங்களையும் கொண்ட இலங்கை அரசாங்கமானது உள்நாட்டிலும் வெளியரஙகு;களிலும் எவ்வாறு நடந்துகொள்கிறது? குற்றம் சாட்டப்பட்ட தரப்பை பாதுகாக்க முயல்வதோடு அவ்வாறு பாதுகாப்பது என்பது சாதனைக்குரியது என்பது போலவும் அது நடந்துகொள்கின்றது. அதேசமயம் பாதிக்கப்பட்ட தரப்பாகிய தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கைêட்டும் விதத்தில் எதுவும் செய்யப்பட்டிருக்கவில்லை”. என்று
ரணில் -மைத்திரி அரசாங்கத்தின் இதுவரையிலுமாக கால செயற்பாடுகளை வைத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் முன்னைய அரசாங்கத்தின் பிரதானிகளின் மீது போர்க்குற்றச்சாட்டுக்களைத் தவிர மற்றெல்லா குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி அவர்களை ஒருவித முற்றுகை நிலைக்குள் வைத்திருக்க முற்படுகிறார்கள். ஆனால் அதே சமயம் போர்க்குற்றச்சாட்டுக்களைப் பொறுத்தவரை முன்னைய அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களை நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாக்க முற்படுகிறார்கள். கடைசியாகக் கொண்டுவரப்பட்ட ஜெனீவாத் தீர்மானத்தையும் இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்தே பார்க்க வேண்டும்.
கடைசியாக நிறைவேற்றப்பட்ட ஜெனீவாத் தீர்மானமானது தமிழ் மக்களை மேலும் காத்திருக்க வைக்கும் ஒன்றாகவே காணப்படுகிறது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் கடந்த நான்காண்டுகளாக தமிழ் மக்கள் ஜெனீவாவை நோக்கிக் காத்திருக்கிறாகள். துமிழ் மக்கள் மத்தியில் உள்ள மிகச் சிறுபான்மையினரான அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள் போன்றவர்கள் மட்டும்தான் இவ்வாறு வெளியாருக்காகக்காத்திருக்கும் அரசியலை விமர்சனத்தோடு அணுகிவருகிறார்கள். மற்றும்படி பொதுத் தமிழ் மனோநிலை எனப்படுவது காத்திருப்பு அரசியலாகவே காணப்படுகிறது. இது ஒருவிதத்தில் இயலாமையின் வெளிப்பாடும்தான். இன்னொரு விதத்தில் தமிழ் அரசியல்வாதிகள் செயற்பாட்டாளர்கள் புத்திஜீவிகள், ஊடகங்கள், கருத்துருவாக்கிகள் போன்றோரின் தோல்வியும்தான்.
இம்முறை ஜெனீவாத் தீர்மானத்தை தனத ராஜீய வெற்றியாக மைத்திரி – ரணில் அரசாங்கம் காட்ட முற்படுகிறது. ஆயின் சுமார் நான்கு ஆண்டுகளாக காத்திருந்த தமிழர்களைப் பொறுத்தவரை இது வெற்றியா? தோல்வியா?
வெற்றியோ தோல்வியோ தமிழ்கள் இனிமேலும் காத்திருக்கப் போகிறார்கள் என்பதே இதிலுள்ள கொடுமையாகும். ஏனெனில காத்திப்பதைத் தவிர வேறெதையும் செய்ய முடியாத அளவிற்கு ஈழத்தமிழர்களின் அரசியல் தேங்கிப்போய் நிற்கிறது. குறிப்பாக நடந்து முடிந்த பொதுத் தேர்தலோடு அனைத்துலக விசாரணையைக் கோரும் தரப்புக்கள் ஒப்பீட்டளவி;ல் பலவீனமடைந்துவிட்டன. அனைத்துலக விசாரணையை அதிகம் அழுத்திக் கேட்காத அல்லது அரசுகளின் நீதியை அனுசரித்துபோக விளைகின்ற தரப்புக்கள் தாயகத்திலும் தமிழ் டயஸ்போறாவிலும் கூட்டுச் சேர தொடங்கிவிட்டன. தமிழக சட்டசபையிலும் வடமாகாணசபையிலும் நிறைவேற்றப்;பட்ட தீர்மானங்கள் அவற்றின் அடுத்தடுத்தகட்ட செய்முறை வளர்ச்சிகளை பெறத்தவறிவிட்டன. இவை எல்லாவற்றினதும் திரண்ட விளைவாக தமிழ் மக்களின் காத்திருப்பு அரசியலானது அதன் ஏமாற்றக் கோட்டை நெருங்கத் தொடங்கிவிட்டது.
வெளியாருக்காகக் காத்திருப்பது என்பது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை 2009 மே இக்குப் பின்னர்தான் தோற்றம் பெற்ற ஒரு போக்கு அல்ல. ஈழத்தமிழர்களின் நவீன அரசியலின் தொடக்கத்தில் இருந்தே அதன் மூலக் கூறுகளைக் காண முடியும்.
தமிழ் மக்கள் தங்கள் சொந்த பலத்தில் மட்டும்; நம்பியிராமல் வெளியாருக்காகக் காத்திருக்கும் ஒரு போக்கின் பின்னணி என்ன? ஈழத்தமிழர்களின் புவிசார் அரசியல் அமைவிடமே அதற்குக் காரணம். பெரிய தமிழகத்திற்குக் கீழே சிறிய ஈழத்தமிழர்களின் அமைவிடம் காணப்படுகிறது. தென்னிந்தியப் பெரும்பண்பாட்டின் ஒரு கூறாகவே ஈழத்தமிழர்கள் காணப்படுகிறார்கள். தமிழத்துக்கும் தமக்குமான உறவை தொப்புள்கொடி உறவு என்று ஈழத்தமிழர்கள் வர்ணிப்பதுண்டு. இவ்வாறு பெரிய தமிழகத்தையும் சிறிய ஈழ தமிழர்களையும் ஒன்று சேர்த்து ஒரு திரளாகப் பார்க்கும் பொழுது அந்த பெரும்பான்மைக்கு முன் சிங்கள மக்கள் தம்மை சிறுபான்மையினராகக் கருதுகிறார்கள். இது காரணமாகவே இலங்கைத தீவில் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மைத் தாழ்வுச் சிக்கலோடும் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மைத் தாழ்வுச் சிக்கலோடும் காணப்படுவதாக ஒரு மேற்கத்தேய அறிஞர் கூறியிருக்கிறார். இவ்வாறு இந்தியாவின் நீட்சியாக ஈழத்தமிழர்களைப் பார்ப்பதன் காரணமாகவே சிங்ள பௌத்த தேசியவாதமானது தமிழர்களை பகையுணர்வோடு பார்க்கிறது என்று மு.திருநாவுக்கரசு போன்ற ஆய்வாளர்கள் எழுதி வருகிறார்கள். இந்தியாவைக்குறித்த அச்சமே ஈழததமிழர்களின் மீதான அச்சமாகவும் விரிவடைந்திருப்பதாக அவர்கள் வாதிடுகிறார்கள்.
இவ்வாறாக பெரிய தமிழகத்தின் கீழே அமைந்திருப்பதான தமது அமைவிடம் காரணமாக ஈழத்தமிழர்கள் துன்பம் வரும் வேளைகளில் எல்லாம் தமிழகத்தை நோக்கிக் காத்திருப்பது என்பது ஒரு வகையில் புவிசார் அரசியல் யதார்த்தம் என்று கூறலாம்.
குறிப்பாக ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியோடு இக்காத்திருப்பானது புதிய வளர்ச்சியைப் பெற்றது.. இந்திராகாந்தி கொல்லப்பட்டபோது ஈழத்தமிழர்கள் அதைத் தமது சொந்தத் துக்கமாகக் கொண்டாடினார்கள். பாக்கிஸ்தானில் இருந்து பங்களாதேஸைப் பிரித்தது போல திருமதி காந்தி படையெடுத்து வந்து தமிழீழத்தையும் பிரித்துத் தருவார் என்று சராசரி ஈழத்தமிழர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை அப்பொழுது காணப்பட்டது. ஆனால் எல்லா ஆயுதப் போராட்ட இயக்கங்களும் அந்த நம்பிக்கையைக் கொண்டிருந்தன என்று கூற முடியாது. இது தொடர்பில் இந்தியாவின் நோக்கங்களைக் குறித்து வெளிப்படையாகக் கேள்விகளை எழுப்பிய தொடக்க கால ஆவணங்களில் ஒன்றாக புளொட் இயக்கத்தால் வெளியிடப்பட்ட ‘வங்கம் தந்த பாடம்’என்ற நூலை இங்கு சுட்டிக்காட்டலாம். அதைப் போலவே மு. திருநாவுக்கரசு எழுதிய நூல்களையும் இங்கு சுட்டிக்காட்டலாம். ஆயுதப் போராட்டத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இந்தியாவை நோக்கி காத்திருக்கும் போக்கிலும் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டதுண்டு
ஆயுதப் போராட்டத்தின் நோக்கமே இந்தியப் படைகளை வரவழைப்பதுதான் என்ற ஒரு நம்பிக்கையும் அந்நாட்களில் பரவலாகக் காணப்பட்டது. ஆனால் இந்தியப் படைகளுக்காகக் காத்திருந்த ஈழத்தமிழர்களின் மனதில் அமைதிப்படை என்ற ஒரு தோற்றப்பாடு கனவிலும் தோன்றியிருக்கவில்லை. 1983 யூலைக் கலவரத்தில் இருந்து தொடங்கி 1987 யூலை வரையிலும் அதன் உச்சத்தை நோக்கி வளர்ந்து சென்ற காத்திருப்பு அரசியலானது புலிகளுக்கும் இந்திய அமைதிகாக்கும் படையினருக்கும் இடையிலான மோதல்களோடு அதன் ஏமாற்ற எல்லைளைத் தொட்டது. அதன் பின் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதோடு காத்திருப்பு அரசியலானது அதன் அவல முடிவை எட்டியது. எனினும் தொப்புள்கொடி உறவு அறந்துபோகவில்லை. ஈழத்தமிழர்களுக்கு துயர்வரும் போதெல்லாம் தமிழகம் கொதித்தெழுந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீக்குளித்த தியாகிகளைவிடவும் அதிக தொகையானோர் குறைந்தது -19 பேர்-ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்திருக்கிறார்கள். குறிப்பாக நாலாம்கட்டப் போரின் இறுதிக்கட்டத்தில் மறுபடியும் தமிழகம் கொதித்தெழுந்தது. அதற்குப் பின்னரும் ஜெனீவாத் தீர்மானங்களின் போதெல்லாம் தமிழகம் ஈழத்தமிழர்களுக்காகப் போராடியிருக்கிறது.
ஆனால் இந்த விடயத்தில் ஈழத்தமிழர்கள் வரலாற்னுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடமிருக்கிறது. தமிழ் நாட்டின் தொப்புள்கொடி உறவை தமிழக அரசியல்வாதிகள் பெரும்பாலும் தமது கட்சித்தேவைகளுக்காகவே கையாண்டு வந்திருக்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு மிகப்பெரிய துன்பங்கள் வந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழகத்தின் கொதிப்பை புதுடில்லி கண்டு கொள்ளவேயில்லை. முதலாவது சந்தர்ப்பம், இந்திய – இலங்கை உடன்படிக்கை. இரண்டாவது, நாலாங்கட்ட ஈழப்போரின் இறதிக்கட்டம்.
இப்படியாக தமிழகத்தை நோக்கி காத்திருக்கும் ஒரு போக்கெனப்படுவது இந்திய இலங்கை உடன்படிக்கைக்குப் பின் குறிப்பாக ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்குப் பின் மேற்கை நோக்கிக் காத்திருப்பதாகவும் வளர்ச்சி கண்டது. மேற்கை நோக்கி காத்திருத்தல் அல்லது ஐ.நாவை நோக்கி காத்திருத்தல் என்பதை பின்வரும் பிரதான காரணிகள் தீர்மானித்தன.
01. ரஜீவ்காந்தி கொல்லப்பட்டபின் ஆயுதப் போராட்டத்திற்கும்; இந்திய அரசியலுக்கும் இடையியே ஒரு சட்டப்பூட்டு ஏற்பட்டமை.
02.தமிழ் டயஸ்போறாவின் எழுச்சி.
03.ஆயத மோதல்கள் முடிவுக்கு வந்த போது ஏற்பட்ட பேரழிவை முன்வைத்து தமக்குரிய நீதியைப் பெறலாம் என்று தமிழர்கள் நம்பியது.
04.ராஜபக்ச அரசாங்கம் மேற்கைவிட சீனாவை அதிகம் நெருங்கிச் சென்றதால் அவர்களை வழிக்குக் கொண்டுவருவதற்கு ஈழத்தமிழர்களை ஒரு கருவியாக் கையாள வேண்டியதேவை மேற்கு நாடுகளுக்கு ஏற்பட்டது.
05.ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான தமிழ் அரசியல் அரங்கில் சொந்தப் பலத்தை அதிகம் நம்பும் கட்சிகளோ செயற்பாட்டு அமைப்புக்களோ தோற்றம் பெறாத ஒரு வெற்றிடம்.
மேற்கண்ட காரணங்களின் திரண்ட விளைவாக வெளியாருக்காகக் காத்திருத்தல் என்பது மேற்கு நாடுகளுக்காகவும் காத்திருத்தல் என்ற அதன் அடுத்த கட்ட வளர்ச்சியைப் பெற்றது. மிகச் சரியான வார்த்தைகளில் கூறின் ஜெனீவாவுக்காகக் காத்திருத்தல் என்பது இழப்பிற்கு நீதி கேட்கும் ஒரு அரசியல்தான். ஆல்லது பரிகார நீதியைக் கேட்கும் அரசியல்தான்;. இறுதிக்கட்டப் போரில் ஏற்பட்ட பேரிழப்பையும் பெரும் சேதத்தையும் அனைத்துலக சமூகத்திடம் முன்வைத்து அதற்காக நீதி கோரும் ஒரு அரசியலே இது.
ஐ.நா. ஒரு நீதிமன்றம் இல்லைத்தான். அது அரசுகளின் அரங்கம்தான். எனினும் சாதாரண தமிழ் பொதுமக்கள் மத்தியில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட துன்பங்களுக்கு ஐ.நா.வில் நீதி கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கையை அரசியல்வாதிகளும் ஊடகங்களும் பெருமளவிற்குக் கட்டி எழுப்பின. மேற்கத்தேய நாடுகளும் தமிழ் டயஸ்போறாவுக்கு அதன் கொள்ளளவுக்கு மீறிய முக்கியத்துவத்தைக் கொடுத்து ஊக்கிவித்தன.
ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அந்த மாற்றத்தைப் பலப்படுத்துவதற்காக மேற்கத்தேய நாடுகள் ஐ.நா. தீர்மானத்தை ஒத்தி வைத்தன. முடிவில் ஒத்தி வைக்கப்பட்டு நிறைவேற்றப்படட தீர்மானத்தை ரணில் – மைத்திரி அரசாங்கம் தனது ராஜீய சாதனையாகக் கொண்டாடுகின்றது. தமிழ் மக்களின் காத்திருப்பு அரசியலானது சுமார் 28 ஆண்டுகளின் பின் மறுபடியும் மற்றொரு ஏமாற்றக் கோட்டுக்கு அருகே வந்து நிற்கிறது.
தமிழ் மக்களின் காத்திருப்பு அரசியலின் முதலாவது கட்டத்தை இந்தியா தனது பிராந்திய நலன்களுக்காகக் கையாண்டது. இப்பொழுது இரண்டாவது கட்டத்தை அமெரிக்க – இந்திய பங்காளிகள் உலகளாவிய நலன்களுக்காகக் கையாண்டிருக்கிறார்கள்.
இவ்வாண்டின் தொடக்கத்தில் இக்கட்டுரை ஆசிரியர் ஐரோப்பாவிற்கு பயணம் செய்த போது அங்கே ஒரு தமிழ் நண்பர் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினார் ‘எமது சமையலறைகளில் கறிவேப்பிலைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. ஆனால் ஐரொப்பாவிற்கு வரும் கறிவேப்பிலைகள் அவற்றுக்குரிய சுகாதார நியமங்களின்படி பொதி செய்யப்படவில்லை என்று கூறி சில நாடுகள் கறிவேப்பிலையைத் தடைசெய்திருக்கின்றன” என்று.
சுpல மேற்கு நாடுகள் கறிவேப்பிலையைத் தடை செய்திருந்த போதிலும் தமது அரசியல் இலக்குகளுக்காக தமிழ் மக்களின் பிணங்களையும், காயங்களையும் கறிவேப்பிலை போல பயன்படு;த்தினவா? இப்பொழுது கறி ஆக்கப்பட்டுவிட்டது. இனிக் கறிவேப்பிலையைத் தூக்கி வீச முடியும். ஆனால் அதன் மணம் கறியில் நீங்காது நிற்கும். ஆதைப் போலவே தமிழ் மக்களை ஒரு கருவியாகக் கையாண்டு மேற்குநாடுகள் தமது அரசியல் இலக்குகளை அடைய முற்பட்டாலும் கூட ஈழத்தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பது ஓர் உலக அபிப்பிராயமாகத் திரண்டு வருகிறது. அந்த அபிப்பிராயத்தை அதை உருவாக்கிய மேற்கு நாடுகளினாலும் இனி எளிதில் அகற்றிவிட முடியாது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது நிகழ்ந்த விவாதத்தில் மனித உரிமைகள் ஆணையாளரும் அந்த அபிப்பிராயத்தையே பிரதிபலித்தார். அந்தத் தீர்மானம் அரசுகளின் நீதிதான். ஆனாலும் உலக சமூகத்தின் மனச்சாட்சியின் நலிந்த குரலையாவது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஒலித்திருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மெல்லத் திரண்டு வரும் உலக அபிப்பிராயமானது ஒருநாள் அனைத்துலக நீதியாகக் கனியும். இவ்வாறு அனைத்துலக அபிப்பிராயமானது அனைத்துலக நீதியாக கனியும் வரை ஈழத்தமிழர்கள் மேலும் எவ்வளவு காலத்திற்கு காத்திருக்கவேண்டியிருக்கும்?
கடந்த சுமார் நான்கு தசாப்த காலகட்டத்துள் ஈழத்தமிழர்களின் காத்திருப்பு அரசியலானது ஏன் அதன் ஏமாற்ற எல்லைகளைத் தொட்டது?.தமிழகத்தின் தொப்புள் கொடி உறவானது மிகவும் நிர்ணயகரமரன தருணங்களில் ஏன் ஈழத்தமிழர்களுக்கு உதவ முடியாது போயிற்று? வெளியாராருக்காகக் காத்திருக்கும் அரசியல் எனப்படுவது வெளியாரால் கையாளப்படும் ஓர் அரசியலாகக் காணப்பட்டதன் விளைவா இது?. ஆயின் வெளியாரால் கையாளப்படுவதற்குப் பதிலாகத் தமிழ் மக்கள் வெளியாராரைக் கையாள முடியாமல் போனதற்கு காரணங்கள் எவை.? அக்காரணங்களைக் கண்டு பிடித்து இறந்த காலத்தில் இருந்து பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் தமிழ் மக்கள் வெளியாரை வெற்றிகரமாக கையாளப்போவது எப்பொழுது?
09.10.2015