2013ஆம் ஆண்டு தமிழ் சிவில்சமூக அமையம் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளுக்கிடையே ஒரு சந்திப்பை மன்னாரில் ஒழுங்குபடுத்தியது. அப்பொழுது மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக இருந்த அமரர் ராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் சிவில் சமூக அமையத்தின் அழைப்பாளராக இருந்தார்.அவருடைய தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் சிவில் சமூகத்தில் பிரதிநிதிகளும் ஆர்வமுடையவர்கள் பங்குபற்றினார்கள். இக்கூட்டத்தில்தான் ஒரு தமிழ் தேசியப் பேரவையை உருவாக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்காக ஒரு ஏற்பாட்டுக்குழு உருவாக்கப்பட்டது.அதில் கூட்டமைப்பின் சார்பாக சுமந்திரனும் மக்கள் முன்னணியின் சார்பாக கஜேந்திரகுமாரும் சிவில் சமூகத்தின் சார்பாக சட்டவாளர் புவி தரனும் குருபரனும் அடங்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டது. ஆனால் அந்தக் குழு தொடர்ந்தும் செய்யப்படவில்லை. தமிழ் தேசிய பேரவை உருவாக்கப்படவில்லை.
அப்படி ஒரு தமிழ் தேசிய பேரவை உருவாக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது ? ஏனெனில் 2009ஆம் ஆண்டுக்குப்பின் கூட்டமைப்பு செல்லும் வழி பிழையானது என்ற காரணத்தால் எனைய கட்சிகளும் சிவில் சமூக பிரதிநிதிகளோடும் இணைத்து ஒரு மக்கள் அமைப்பை உருவாக்குவதன் மூலம் கூட்டமைப்பை மாறாத கொள்கைகளுக்கும் இலக்குகளும் பொறுப்புக்கூற வைப்பதே தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு கனவின் நோக்கமாகும்.
இந்த கனவுக்குள் கூட்டமைப்பைத் திருத்தலாம்;கூட்டமைப்பை அரவணைத்து மாற்றலாம் என்ற ஒரு நப்பாசை உண்டு என்பதை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. கூட்டமைப்பின் வர்க்க குணமது ; அதை மாற்ற முடியாது; அதனிடம் புரட்சிகரமான மாற்றங்கள் எதனையும் எதிர்பார்க்க முடியாது; அந்த கட்சிக்கு பதிலாக ஒரு புதிய கட்சியை அல்லது அமைப்பை உருவாக்குவதே புரட்சிகரமான மாற்று தெளிவாக இருக்கும் என்ற விவாதத்தை இக்கட்டுரை நிராகரிக்கவில்லை. ஆனால் அப்பொழுது மக்கள் ஆணையைப் பெற்ற ஏகப் பிரதிநிதியாக கூட்டமைப்பே காட்சியளித்தது. எனவே மக்கள் ஆணையை மீறி ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்க தேவையான வாழ்க்கை ஒழுக்கமோ அல்லது அரசியல் ஒழுக்கமோ அப்பொழுது சிவில் சமூக பிரதிநிதிகளிடம் இருக்கவில்லை என்ற இயலாமையையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
ஆனால் கூட்டமைப்பு அதன் ஏக பிரதிநிதித்துவம் காரணமாகவே அந்த கனவோடு சேர்ந்து உழைக்க மறுத்தது. கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் வரையிலும் அக்கட்சி ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கவில்லை.கடந்த பொதுத்தேர்தலில் ஏற்பட்ட தோல்விகளின் விளைவாகத்தான் அது ஏதோ ஒரு இணக்கத்துக்கு வருவது போல ஒரு தோற்றத்தைக் காட்டியது.எனவே கூட்டமைப்பு தமிழ்மக்களின் ஏக பிரதிநிதியாக தோற்றம் காட்டிய ஒரு காலகட்டத்தில் அக்கட்சியை மாறா இலட்சியத்துக்கும் அரசியல் இலக்குகளுக்கும் பொறுப்புக்கூற வைக்கும் உள்நோக்கத்தோடு திட்டமிடப்பட்டதே தமிழ்தேசிய பேரவை ஆகும். ஆனால் அந்தக் கனவு இன்றுவரையிலும் நிறைவேறவே இல்லை.
அதன்பின் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது. ஆனால் அது தமிழ் தேசிய பேரவை அல்ல. தமிழ் மக்கள் பேரவையில் கூட்டமைப்பு இணையவில்லை. எனினும் அதன் பங்காளிக் கட்சிகள் சில இணைந்திருந்தன. கூட்டமைப்பின் பிரதான கட்சி ஆகிய தமிழரசுக் கட்சி அந்த தமிழ் மக்கள் பேரவைக்குள் சேரவில்லை. தமிழ் மக்கள் பேரவையின் தொடக்கமும் ஏறக்குறைய கூட்டமைப்புக்கு எதிரானதுதான்.ஏனெனில் கூட்டமைப்பில் அதிருப்தியடைந்த விக்னேஸ்வரனே பேரவையின் மையமாக இருந்தார். அதாவது 2013ஆம் ஆண்டு சிந்திக்கப் பட்டதைப் போன்று ஒரு தமிழ்த் தேசிய பேரவையை உருவாக்க முடியவில்லை.அதற்கு கூட்டமைப்பு குறிப்பாக தமிழரசுக்கட்சி ஒத்துழைக்கவில்லை.அதனால் கூட்டமைப்பில் அதிருப்தி கொண்ட விக்னேஸ்வரனை மையமாகக்கொண்டு ஒரு தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது பேரவையில் அங்கம் வகித்த இரண்டு கட்சிகளையும் ஒருங்கிணைக்க பேரவையால் முடியவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஈபிஆர்எல்எப்பும் ஒன்றுக்கொன்று முரண் நிலைக்கு போயின. தமிழ் தேசிய மக்கள் முன்னணி விக்னேஸ்வரனுக்கு எதிராக திரும்பியது.அதன் தர்க்கபூர்வ விளைவாக பேரவைக்கும் எதிராகத் திரும்பியது. அதோடு உள்ளூராட்சி சபை தேர்தலில் அக்கட்சி பேரவை என்ற பெயரை தனது அணிக்கு பயன்படுத்தியது. எனினும் அதற்குப் பின்னரான தேர்தல்களில் அந்த பெயரை அக்கட்சி பயன்படுத்தவில்லை.
அதற்கும் சில ஆண்டுகளுக்குப்பின் அதாவது கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பின் பிரமுகர்கள் சிலர் தோல்வியடைந்தனர். இவ்வாறு தோல்வியடைந்த மாவை சேனாதிராஜா கட்சிக்குள்ளேயே தனது தலைமைத்துவத்தை காப்பாற்றுவதற்காக தமிழ்த்தேசிய பேரவை என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்க போவதாகவும் அதில் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு ஆதரவான அரசியல் மற்றும் சட்ட செயற்பாட்டாளர்களையும் இணைக்கப் போவதாக ஒரு தகவலை தனது நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.எனினும் அது மாவை கண்ட ஒரு கனவாகவே முடிந்தது.
இவ்வாறாக தமிழ்ப் பேரவை அல்லது தமிழ் மக்கள் பேரவை அல்லது தமிழ்த் தேசிய பேரவை போன்ற வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படும் ஏதோ ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கனவு தமிழ் தேசிய அரசியலில் கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக நிலவிவருகிறது. ஆனால் அது தொடர்ந்தும் ஒரு நிறைவேறாத கனவாகவே காணப்படுகிறது. அந்தக் கனவை கருக்கொண்ட தமிழ் சிவில்சமூக அமையத்தின் அழைப்பாளராக இறக்கும் வரையிலும் பொறுப்பை வகித்த ஆயர் ராயப்பு ஜோசப் இப்பொழுது இல்லை. கனவு மட்டும் தொடர்ந்தும் நிறைவேறாமலே தொங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழ் சிவில்சமூக அமையம்தான் அந்தக் கனவை கருக்கொண்டது. அதேசமயம் பலஸ்தீன விடுதலை இயக்கத்திடம் பயிற்சி பெற்ற ஈபிஆர்எல்எஃப் உள்ளிட்ட இயக்கங்களிடம் அதுபோன்ற ஒரு கட்டமைப்பை குறித்த சிந்தனை ஏற்கனவே இருந்துள்ளது.பாலஸ்தீனனத்தில் பல்வேறு அமைப்புக்களையும் ஒன்றிணைத்து ஒரு தேசிய பேரவை உருவாக்கப்பட்டதை போன்று தமிழ் அரசியலிலும் அப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று கனவு காணப்பட்டது.
அப்படி ஓர் ஐக்கியத்தை முதலில் ஏற்படுத்தியது இந்தியாதான் என்பது இங்குள்ள முரண்நகை ஆகும். திம்பு பேச்சுவார்த்தையின் போது தமிழ் தரப்பை ஓரணியாக திரட்டுவதற்கு இந்தியாவும் பின்புலமாக நின்றது ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் முதலில் தோன்றிய குறிப்பிட்டுச் செல்லக்கூடிய ஓர் ஐக்கியம் அதுவெல்லாம்.எனினும் அதில் இணைந்த இயக்கங்களுக்குள் புளட் இருக்கவில்லை.ஆனால் 2015 இல் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவைக்குள் புளட் இருந்தது.பின்னாளில் அது விலகிச் சென்றது.
தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் என்பது ஒருவிதத்தில் விக்னேஸ்வரனின் எழுச்சியின் விளைவுதான்.இன்னொரு விதமாகச் சொன்னால் கூட்டமைப்பின் பலம் உடையும்போது இப்படிப்பட்ட அமைப்புகள் தோன்றுகின்றன.அல்லது இப்படிப்பட்ட அமைப்புகளைப் பற்றி சிந்திக்கப்படுகிறது.மாவை சேனாதிராஜாவின் பேரவையும் அப்படிப்பட்டதுதான். அதாவது தொகுத்துப் பார்த்தால் கூட்டமைப்பு பலவீனம் அடையும் பொழுது இப்படிப்பட்ட அமைப்புகளுக்கான தேவை அல்லது ஏதோ ஒரு ஐக்கியம் உருவாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது தான் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. ஜெனிவாவை நோக்கி மூன்று கட்சிகள் அனுப்பிய கூட்டு ஆவணமும் அப்படிப்பட்டதுதான். கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற தோல்விகள் கூட்டமைப்பின் ஏகபோகத்தை கேள்விக்குள்ளாக்கின. எனவே மாற்று அணியை சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து ஐநாவுக்கு ஒரு பொதுஆவணத்தை அனுப்ப கூட்டமைப்பு ஒப்புக்கொண்டது.
தமிழ்தேசிய பரப்பில் உள்ள எல்லாத் தரப்புப்களையும் ஒன்றிணைக்கும் முயற்சிகள் என்று பார்த்தால் கடந்த 12 ஆண்டுகளில் அதை ஒரு முக்கியமான அடைவு எனலாம். ஆனால் அது 2013ல் கனவு காணப்பட்ட தமிழ் தேசிய பேரவை அல்ல. அதுமட்டுமல்ல அந்த அடைவு தற்காலிகமானதே என்பதனை அடுத்த மாதம் வெளிவந்த பூச்சிய வரைபுக்கு எதிர்வினையாற்றும் விடயத்தில் கூட்டமைப்பு நிரூபித்தது.அதோடு அப்பொது ஆவணத்தை தயாரிக்கும் சந்திப்புகளின் போது இனப்படுகொலை என்ற வாசகத்தை இணைக்க ஒப்புக்கொண்ட சுமந்திரன் இப்போது பழைய பல்லவியை பாடத் தொடங்கிவிட்டார்.
எனவே கடந்த பத்தாண்டுகளில் தமிழ்தேசிய அரசியலை ஒரு பொது அடித்தளத்தின் மீது கூட்டிக்கட்டும் முயற்சிகளை தொகுத்துப் பார்த்தால் மிகத் தெளிவாக சில விடயங்கள் தெரியவரும்.
முதலாவது கூட்டமைப்பு பலவீனமடையும் பொழுது அல்லது அதில் உடைவு ஏற்படும் பொழுது இது போன்ற முயற்சிகளுக்கு அவர்கள் ஒத்துக் கொள்வார்கள். இரண்டாவது அவ்வாறு ஏதோ ஓர் உடன்பாட்டுக்கு வந்த பின்னரும் அந்த ஐக்கியத்தை கூட்டமைப்பே பெரும்பாலும் உடைக்கிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட பதின்மூன்று அம்ச ஆவணத்திற்கு அதுதான் நடந்தது. கடந்த ஜனவரி 15ஆம் திகதி அனுப்பப்பட்ட ஜெனீவாவுக்கான பொது ஆவணத்துக்கும் அதுவே நடந்தது.அதாவது எந்த ஒரு பொது ஏற்பாட்டுக்கும் கூட்டமைப்பை பொறுப்புக்கூற வைப்பதில் அடிப்படையான சவால்கள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.
இந்தச் சவால்களை கடந்து மேற்படி கட்சிகளை ஒரு பொது மேசைக்கு அழைத்துக் கொண்டுவரத்தக்க சிவில் ஆளுமைகள் தற்பொழுது பலமாக இல்லை என்பதே தமிழ் அரசியலில் உள்ள மிகப் பாரதூரமான ஒரு வெற்றிடம் ஆகும். தமிழ் மக்கள் பிரதிநிதிகளையும் சிவில் சமூகங்களையும் சந்திக்கும் பெரும்பாலான வெளிநாட்டு தூதுவர்கள் ஒரு குரலில் பேசுங்கள் ஓரணியாக வாருங்கள் என்று கேட்கிறார்கள். ஆனால் அவ்வாறு தமிழ்த் தரப்பை ஒரு பெரும் திரளாகக் கூட்டிக்கட்டவல்ல சிவில் கட்டமைப்புக்கள் எவையும் கிடையாது. சிவில் தலைவர்களும் கிடையாது. மறைந்த ஆயர் அப்படியொரு ஆளுமையாக காணப்பட்டார். கட்சிகளை அழைத்து கூட்டம் கூட்டி தன் கருத்தை வலிமையாக முன்வைக்கத்தக்க பலம் அவருக்கு இருந்தது. அது அவருக்கு பதவி வழியாகக் கிடைத்தது. அதே சமயம் தனது அரசியல் நிலைப்பாட்டின் காரணமாகவும் செயல்பாட்டின் காரணமாகவும் அவரும் தனது பலத்தை அதிகப்படுத்திக் கொண்டார்.
ஆனால் தற்பொழுது அவ்வாறான ஆளுமைகள் இல்லை.அது மட்டுமல்ல தமிழ் சிவில் சமூகங்களில் பெரும்பாலானவை அறிக்கை விடும் அமைப்புக்களாகவும் செயற்பாட்டு ஒழுக்கம் பெருமளவுக்கு இல்லாதவைகளாகவும் காணப்படுகின்றன.அதிலும் குறிப்பாக கடந்த 12 ஆண்டுகளில் பல்வேறு பெயர்களில் பல்வேறு சிவில் சமூகங்கள் தோன்றி மறைந்துவிட்டன.பல்வேறு தரப்புகளின் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதற்காக இவ்வாறு சிவில் சமூகங்கள் அவ்வப்போது உருவாக்கப்படுகின்றன. பின்னர் காணாமல் போய்விடுகின்றன.சில அமைப்புகள் தொடர்ந்தும் கடிதத் தலைப்பு அமைப்புகளாக காணப்படுகின்றன. இதில் ஆகப் பிந்திய ஓர் அமைப்பே அண்மையில் ஜெனிவா கூட்டத் தொடரையொட்டி நல்லூரில் மேடை அமைத்த ஓரமைப்பும் ஆகும்.பலமான சிவில் சமூகங்களற்ற ஒரு வெற்றிடத்தில் அதுபோன்ற அரசின் முகவரமைப்புக்கள் உருவாகின்றன.
இதுவிடயத்தில் தமது செயட்பாட்டு ஒழுக்கம் காரணமாக ஒரு சக்தி மூலமாக மேலெழுந்து அதன் காரணமாகவே அரசியல்வாதிகளையும் செயற்பாட்டாளர்களையும் தன்னை நோக்கி ஈர்க்கவல்ல ஆளுமைகள் அல்லது அமைப்புக்கள் தமிழ் அரசியல் பரப்பில் மிகக் குறைவு .
2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின்போது இலங்கையில் சிவில் சமூகங்களின் பங்களிப்பை குறித்து பேசும்போது கலாநிதி உயாங்கொட அதை “அரசியலின் மீது சிவில் சமூகங்களின் தார்மீக தலையீடு ” என்று வர்ணித்தார். அப்படி ஒரு தலையிட்டு செய்யக்கூடிய பலம் மறைந்த ஆயர் ராயப்பு ஜோசப்பிடம் இருந்த காரணத்தால்தான் அவரால் கட்சிகளை மன்னாருக்கு அழைக்க முடிந்தது. ஆனால் 2013ஆம் ஆண்டு நடந்த அச்சந்திப்பின் முடிவில் உரை நிகழ்த்திய சம்பந்தர் மறைந்த ஆயரை பார்த்து பின்வரும் தொனிப்பட சொன்னார்” பிஷப் நீங்கள் சொல்லுங்கோ ஆனால் இறுதிமுடிவை நான்தான் எடுப்பேன்” என்று. ஆனால் கடந்த ஜனவரி மாதம் மூன்று கட்சிகளையும் பொது மேசைக்கு கொண்டு வந்தபொழுது அச்சந்திப்பில் பிரசன்னமாகியிருந்த திருமலை ஆயர் நோயல் இமானுவல் அவர்கள் கட்சிப் பிரதிநிதிகளை நோக்கி கண்டிப்பான குரலில் உரை நிகழ்த்திய பொழுது யாரும் அவரை எதிர்த்து கதைக்கவில்லை.அதன் அர்த்தம் சிவில் சமூகங்களின் தார்மீக தலையீட்டுக்கு கட்சிகள் அடங்கிப்போயின என்பதல்ல. ஏனெனில் அந்த ஆவணத்தை ஒன்றாக அனுப்பிய கட்சிகள் பின்னர் எவ்வாறு நடந்துகொண்டன?
எனவே தமிழ் அரசியலின்மீது தார்மீகத் தலையீட்டைச் செய்யவல்ல சிவில்சமூகங்களை கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு கட்டியெழுப்புவதுதான் மறைந்த ஆயிருக்கு சிவில் சமூகங்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் செய்யக்கூடிய மெய்யான அஞ்சலியாக இருக்கும்.