கடந்த வாரம் யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. வழமையாக சமூகவலைத்தளங்களில் பட்டம் பெற்றவர்களின் கொண்டாட்டப் படங்கள் பகிரப்படும்.ஆனால் இம்முறை வேலையற்ற பட்டதாரிகளை முன்வைத்து ஒரு விவாதப் பரப்பு திறக்கப்பட்டது.
பல்கலைக்கழகங்கள் ஆண்டு தோறும் பட்டதாரிகளை உருவாக்குகின்றன. ஆனால் நாட்டில் இப்பொழுது 42000க்கும் குறையாத வேலையற்ற பட்டதாரிகள் உண்டு.நாட்டில் வேலையில்லாத 365,951 தனி நபர்களில், பட்டதாரிகள் அல்லது அதையொத்த கல்வித் தகமையுடையவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 42,254 என்று பிரதமர் ஹரிணி கடந்தநொவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் கூறினார்.
அவர்களை வேலையற்ற பட்டதாரிகள் என்று அழைப்பதை விடவும் அரச வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகள் என்று அழைப்பது நல்லது என்று எனது நண்பர் ஒருவர் கூறுவார். கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் நிகழ்ந்த வாதப்பிரதிவாதங்களும் அந்த வகைப்பட்டவைதான். பட்டதாரிகள் பட்டம் பெற்ற பின் வேலை இன்றி தெருவில் நிற்கப் போகிறார்கள் அல்லது அரச வேலை கேட்டு ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறார்கள் என்ற பொருளில் வாதப் பிரதிவாதங்கள் நடந்தன. இத்தகையதோர் பின்னணியில்,புதிய தொகுதி பட்டதாரிகள் வெளியேறுவது என்பது வெளியேற்றப்பட்டதாரிகளின் எண்ணிக்கையில் ஒரு புதிய தொகுதி இணைவதைக் குறிக்கும் என்றும் அங்கு விமர்சிக்கப்பட்டது.
பல்கலைக்கழக அனுமதி கிடைக்கும்பொழுது வாழ்வின் முக்கிய பேறு ஒன்றை அடைந்து விட்டதாக ஒவ்வொரு பிள்ளையும் பெருமைப்படுகிறது.அது உண்மைதான். பொன்னிறக் கனவுகளோடு அவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் வருகிறார்கள். பட்டம் கிடைத்ததும் அவர்கள் அதைக் கொண்டாடும் விதத்தில், எடுக்கும் ஒளிப்படங்களில் அதை அவர்கள் எந்தளவு பெருமைக்குரியதாகக் கொண்டாடுகிறார்கள் என்பது தெரியும்.ஆனால் பட்டம் எடுத்த பின் வேலை தேடி அலையும் போதுதான் அவர்களுடைய பொன் நிறக் கனவுகள் நிறமிழக்கத் தொடங்குகின்றன.
ஆனால் அதற்கு அவர்கள் மட்டும் பொறுப்பல்ல.பின்வரும் அடிப்படைக் காரணங்கள் உண்டு.
முதலாவது,சந்தைப் பெறுமதி மிக்க, தொழில் வாய்ப்புகள் அதிகமுடைய பட்டதாரிகளை உருவாக்கும் விதத்தில் கல்விக் கொள்கை திட்டமிடப்படாமை.
இரண்டாவது,புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதில் தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் தோல்வியடைந்தமை.
மூன்றாவது,தொழில் தொடர்பாக சமூகத்திடம் இருக்கும் அளவுகோல்கள்,பிரமைகள்.
நான்காவது,தொழில் முனைவோரை உருவாக்காத கல்வி முறை. இதை வேறு வார்த்தைகளில் சொன்னால் அரசு அலுவலர்களை அதிகமாக உற்பத்தி செய்யும் கல்வி. அதாவது ரிஸ்க் எடுக்கக் கற்றுக் கொடுக்காத கல்வி.
எனவே பட்டதாரிகள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்பதற்கு தனிய அவர்கள் மட்டும் பொறுப்பல்ல. மேற்சொன்ன காரணங்களும் பொறுப்பு அது ஒரு கூட்டுத் தோல்வி.
பட்டதாரிகளில் பெரும் பகுதியினர் ஏன் அரச வேலையை நாடுகிறார்கள் ? அதற்குப் பின்வரும் காரணங்கள் கூறப்படுகின்றன.
முதலாவதாக அங்கே கஷ்டப்பட்டு வேலை செய்யத் தேவையில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு.சும்மா இருந்து சம்பளம் எடுக்கலாம்,தடை தாண்டிப் பரீட்சைகளில் சித்தி பெறுவதன் மூலம் பதவி உயர்வுகளையும் சம்பள உயர்வுகளையும் பெறலாம் என்று பட்டதாரிகள் நம்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டு.
இரண்டாவது காரணம்,ஓய்வூதியம் கிடைக்கும்.எனவே முதிய வயதில் பாதுகாப்பு உண்டு.
மூன்றாவது காரணம்,அரசாங்கம் என்றால் பலமானது. மக்களைப் பாதுகாப்பது. அதிகாரம் மிக்கது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அரச ஊழியராக இருப்பது அதாவது அரச அதிகாரத்தை சமூகத்தில் அமுல்படுத்துவோராக இருப்பது கௌரவமானது,உயர்வானது என்ற சமூக நம்பிக்கை.
நான்காவது காரணம்,அரசாங்கத்தை மட்டுமல்ல யாரையும் பார்த்துக் கொண்டிருக்காமல்,யாரிடமும் கையேந்தாமல் தன் திறமைகளை நம்பி, தான் கற்றவைவைகளை அடிப்படையாக வைத்து தொழில் முனைவோராக மேல் எழத் தேவையான துணிச்சலும் வைராக்கியமும் இல்லாமல் இருப்பது.
இந்த நான்கு காரணங்களிலும் முக்கியமானது நாலாவது. பட்டதாரிகள் ஏன் தொழில் முனைவோராக மேலெழ முடியவில்லை?அல்லது மேலெழ விரும்பவில்லை? இந்தக் கேள்விக்குப் பதில், கல்வி முறையின் தோல்விக்குள் இருக்கிறது. நமது கல்வி முறைமை தொழில் முனைவோருக்குத் தேவையான துணிச்சலையும் படைப்புத்திறனையும் தெரிவுகளையும் பட்டதாரிகளுக்கு வழங்கத் தவறிவிட்டதா?
அரச ஊழியத்துக்குள் கிடைக்கும் பாதுகாப்பு,அரசு ஊழியர் என்பதால் கிடைக்கும் மரியாதை இவை இரண்டையும் தவிர ஒரு தொழில் முனைவோர் அல்லது புதிதாகச் சிந்திக்கும் ஒரு பட்டதாரி அதிகம் சம்பாதிக்கலாம்,அதிகம் சாதிக்கலாம்,அதிகம் பிரபல்யமாகலாம் என்பதற்கு நமது சமூகத்துக்குள்ளேயே உதாரணங்கள் உண்டு.
ஆனால் பட்டங்கள் தொடர்பாகவும் தொழில் தெரிவுகள் பொறுத்தும் தமிழ்ச் சமூகத்தில் காணப்படும் இறுகிக் கட்டிபத்திய சிந்தனைகளை உடைத்துக் கொண்டு வெளிவர பெரும்பாலான பட்டதாரிகள் தயாராக இல்லை.ஒரே வசனத்தில் சொன்னால் ரிஸ்க் எடுக்கத் தயாரில்லை.
ஒரு காலம் யுத்த களத்தில் அதி உச்ச ரிஸ்க் எடுத்த ஒரு சமூகம். அதைவிட முக்கியமாக அவ்வாறு ரிஸ்க் எடுக்கலாம் என்ற முன்னுதாரணத்தை காட்டிய பெரும்பாலானவர்கள் முறைசார் கல்விக்கூடாக வந்தவர்கள் அல்ல. ஆயுதப் போராட்டம் தமிழ் சமூகத்தில் பல வெடிப்புகளை ஏற்படுத்தியது. சமூகத்தின் பாரம்பரியக் கல்வி தொடர்பான நம்பிக்கைகளை அது தகர்த்தெறிந்தது. கல்வித் தகமைக்கும் துணிச்சலுக்கும், கல்வித் தகமைக்கும் சாதனைகளுக்கும் இடையே கண்டிப்பாகத் தொடர்பு இருக்கத் தேவையில்லை என்பதையும் அது நிரூபித்தது.பட்டப் படிப்புக்களை அடிப்படைத் தகைமைகளாகப் போற்றாத விடுதலை இயக்கங்கள் சமூகத்தின் தலைவிதியைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டன. சமூகத்தின் மூன்றில் ஒரு பகுதியை புலம்பெயர வைத்தன. உலகமே வியக்கும் தியாகங்களையும் வீரத்தையும் நிரூபித்த ஒரு போராட்டம் அது.
ஆயுதப் போராட்டத்தின் தொடக்கத்தில் “சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது”, “கல்வித் தகுமையற்ற போராளிகள் வெற்றிபெற மாட்டார்கள்” என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது.ஆனால் கடந்த நான்கு நூற்றாண்டு காலப்பகுதிக்குள் அரசற்ற தமிழ் மக்கள் மத்தியில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் நிலைத்திருந்த கருநிலை அரசானது மேற்படி நம்பிக்கைகளை விவாதத்துக்கு உள்ளாக்கியது. எனினும் ஆயுதப் போராட்டத்தின் தோல்விக்கு பின் மீண்டும் படிப்பு,செல்வம்,செல்வாக்கு… போன்றவை தலைமையைத் தீர்மானிக்கும் அளவுகோல்களாக மேலெழுந்தன.அதிகம் பட்டப் படிப்புகள் இல்லாதவர்கள் நடத்திய போராட்டம் தோல்வியடைந்தது என்று கூறுவோர் இப்பொழுது உண்டு.
ஆனால் அவர்கள் வசதியாக மறந்துவிடும் ஒரு விடயம் என்னவென்றால், ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரும் பின்னருமான அப்புக்காத்துக்களின் அரசியல் தமிழ் மக்களை மட்டுமல்ல, அவர்களுடைய கட்சிகளையே எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது? என்பதுதான்.ஆங்கிலம் தெரிந்த, சிங்களம் தெரிந்த,கற்றறிந்த தமிழ்த் தலைவர்களும் இறுதி வெற்றியைப் பெறவில்லை.அவர்களை மீறி எழுந்த ஆயுதப் போராட்டமும் இறுதி வெற்றியைப் பெறவில்லை.
இப்படிப்பட்டதோர் அரசியல்,பொருளாதார,சமூக உளவியல் பின்னணிக்குள், கடந்த 16ஆண்டுகளையும் தொகுத்துப் பார்த்தால் தமிழ் மக்களின் சுதந்திரத்துக்கான போராட்டத்தில் இருந்து அடுத்து வந்த தலைமுறை கற்றுக்கொண்டவை எவை? என்று கேள்வி வலிமையாக மேல் எழுகிறது.ஆயுதப் போராட்டம் கற்றுக்கொடுத்த துணிச்சல்,தியாக முன்னுதாரணம்,ரிஸ்க் எடுக்கும் மனோநிலை போன்றவற்றில் இருந்து பட்டதாரிகள் எந்தளவுக்குக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்?
அவர்கள் உயிரைக் கொடுக்க வேண்டாம்.பெரிய அளவில் அர்பணிக்கவும் வேண்டாம்.தொழில் ரீதியாக ரிஸ்க் எடுத்தாலே,துணிகர தொழில் முயற்சிகளில் இறங்கினாலே போதும்.செல்வந்தர்களாகலாம்.புதிய முன்னுதாரணங்கள் ஆகலாம்.ஆனால் ஏன் தங்களுடைய சௌகரிய வலையங்களை விட்டு வெளியே வரப் பயப்படுகிறார்கள்?
“துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிற்பது கப்பலுக்குப் பாதுகாப்பானது.ஆனால் கப்பல் அதற்காகக் கட்டப்படுவதில்லை” என்று ஆங்கில மேற்கோள் ஒன்று உண்டு.அது போலவே “அமைதியான கடல் சிறந்த படகோட்டிகளை உருவாக்குவதில்லை” என்றும் ஆங்கிலம் மேற்கோள் ஒன்று உண்டு.இந்த இரண்டு மேற்கோள்களில் இருந்தும் கற்றுக் கொண்டால் பட்டதாரிகளுக்கு அவர்களுடைய பட்டங்களே சிறைகளாக மாறாது.






