ஜூலை 83 நடந்து 43 ஆண்டுகளாகிவிட்டன.இன்றுவரை எந்த ஒரு சிங்களத் தலைவரும் அதற்காக மன்னிப்புக் கேட்கவில்லை.1981இல் யாழ்.நூலகம் எரிக்கப்பட்டது.அது நடந்து கிட்டத்தட்ட 35ஆண்டுகளுக்குப் பின்பு,2016 டிசம்பரில் ரணில் விக்கிரமசிங்க அதற்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்டிருந்தார்.கடந்த சுமார் ஒரு நூற்றாண்டு கால இன முரண்பாட்டின் வரலாற்றில் ஒரு சிங்களத் தலைவர் அப்படி மன்னிப்புக் கேட்டது அதுதான் முதல் தடவை.ரணில் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்.ஆனால் அவர் மன்னிப்பு கேட்டார்.அவருக்கு முன்னரும்,பின்னரும் யாரும் இதுவரை மன்னிப்புக் கேட்கவில்லை.
ஜூலை 83க்கு ரணிலும் உட்பட அவர் அங்கம் வகித்த ஜெயவர்த்தனாவின் அரசாங்கம்தான் பொறுப்பு என்று இப்போதுள்ள அரசாங்கம் கூறுகிறது. அண்மையில் நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சர் அதைத் தெரிவித்தார்.அது மட்டுமல்ல, அது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் “அரச பயங்கரவாதம்” என்றும் அவர் சொன்னார்.நாட்டின் நீதி அமைச்சர் ஒருவர் முன்னைய அரசாங்கத்தின் ஒரு நடவடிக்கையை அரச பயங்கரவாதம் என்று அழைத்தமை இதுதான் முதல் தடவை.ஆனாலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது 83 ஜூலைக்காக மன்னிப்பு கேட்கவில்லை.ஏன் கேட்கவில்லை?அவர்கள் கூறுவார்கள்,அது நாங்கள் செய்யவில்லை,முன்னம் இருந்த யு.என்.பி அரசாங்கந்தான் செய்தது என்று.
இந்த விடயத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கூட்டுப் பொறுப்பு உண்டு. அவரும்கூட ஜூலை 83க்காக இன்றுவரை மன்னிப்புக் கேட்கவில்லை. கேட்கக்கூடிய பதவியில் அவர் இருந்த போதும் கேட்கவில்லை.நூலக எரிப்புக்கு அவர் மன்னிப்புக் கேட்டபோது அப்போதிருந்த கூட்டு எதிரணியை நோக்கி நீங்கள் கடந்த அரசாங்கத்தில் செய்த குற்றங்களுக்கு மன்னிப்புக் கேட்பீர்களா என்றும் கேதார்.அதாவது கூட்டு எதிரணியை நெருக்கடிக்குள் தள்ளும் உள்நோக்கத்தோடுதான் அவர் அவ்வாறு மன்னிப்புக் கேட்டவரா? இப்பொழுது அவர் அநேகமாக ஓய்வுபெற்று விட்டார்.அவரைப்போல அன்றைக்கு ஜேஆரின் அரசாங்கத்தில் பிரதானிகளாக இருந்த பலரும் உயிருடன் உள்ளார்கள்.யாருமே யூலை 83க்கு மன்னிப்புக் கேட்கவில்லை.
இவ்வாறு நாட்டின் தலைநகரமும் உட்பட முக்கிய தென்னிலங்கை நகரங்களில் இடம்பெற்ற இன அழிப்புக்கு இதுவரை எந்த ஒரு சிங்களத் தலைவரும் மன்னிப்பு கேட்காத, அதாவது பொறுப்புக்கூறாத ஓர் அரசியல் சூழலில், ஏழு ஆண்டுகளுக்கு முன் நடந்த ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு இப்போதுள்ள அரசாங்கம் பொறுப்புக் கூறுகிறதா?
நாட்டின் 160 ஆண்டுகால போலீஸ் வரலாற்றில் ஒரு முன்னாள் பொலிஸ்மா அதிபருக்கு மரண தண்டணை விரிக்கப்பட்டது இதுதான் முதல் தடவை. அப்படித்தான் ஒரு முன்னாள் பாதுகாப்புத் துறை செயலருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.ஈஸ்டர் குண்டு வெடிப்பைத் தடுக்கத் தவறியதற்காக அந்தத் தண்டனை.தங்கள் பொறுப்புகளின் அடிப்படையில் அந்த குற்றச்செயல்களை தடுக்க தவறியதற்காக அவர்கள் இருவருக்கும் தண்டனை வழங்கலாம் என்றால்,ஜூலை 83க்காக அப்பொழுது பொறுப்பில் இருந்தவர்களில் இப்பொழுது உயிருடன் இருக்கும் யாராவது அதற்காகத் தண்டிக்கப்படுவார்களா? அவ்வாறு தண்டிக்கத் தேவையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயாரா?
ஜூலை 83ல்தான் தமிழ் மக்கள் தென்னிலங்கை நகரங்களில் தாக்கப்பட்டார்கள் என்பதல்ல. அதற்கு முன்னரும் தென்னிலங்கை நகரங்களில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.தமிழ் மக்கள் தாக்கப்படுவதற்கு முன்பு கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள். அதற்கு முன்பு,அதற்கு முந்திய நூற்றாண்டில் இறுதியில் கத்தோலிக்கர்கள் தாக்கப்பட்டார்கள்.கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இந்த நாடு சிறிய இனங்கள்,சிறிய மதங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் ஒரு நாடாகவே இருக்கிறது.அந்த தாக்குதல்களில் பெரும்பாலானவை திட்டமிட்டுச் செய்யப்பட்டவை.நன்கு ஒழுங்கமைக்கப்பட்டவை.அவற்றில் சிலவற்றின் பின்னணியில் அப்போது இருந்த அரசாங்கங்கள் அல்லது அரசியல்வாதிகள் இருந்ததாக தமிழ் மக்கள் குற்றம் காட்டுகிறார்கள்.குறிப்பாக ஜூலை 83க்கு, நூலகம் எரிக்கப்பட்டதற்கு அப்போது இருந்த அரசாங்கமே பொறுப்பு என்று அமைச்சர் பிமல் ரட்டநாயக்க கூறுகிறார்;நீதி அமைச்சர் கூறுகிறார்.அதுவும் அவர்கள் அதை நாடாளுமன்றத்தில் வைத்துக் கூறியிருக்கிறார்கள்.
ஈஸ்டர் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதால் பேராயர் மல்கம் ரஞ்சித்தைத் திருப்திப்படுத்தலாம்.நாட்டின் 5.6விகித கத்தோலிக்க சனத்தொகையை திருப்திப்படுத்தலாம்.கத்தோலிக்க சமூகத்துக்கு மட்டுமல்ல,ஈஸ்டர் குண்டு வெடிப்பின் விளைவாக நீதியற்ற முறையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் பொறுப்புக் கூறலாம்.
ஆனால் அதற்கு முன்னரே நடந்த 83 ஜூலைக்கு கடந்த 43 ஆண்டுகளாக யாருமே பொறுப்புக் கூறவில்லை.அந்தக் குற்றப்பழியை அப்போது இருந்த யு.என்.பி அரசாங்கத்தின் மீது போடுவதன்மூலம் இப்போதுள்ள அரசாங்கம் அந்தப் பொறுப்புக்கூறலில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளப் பார்க்கிறது.
83 ஜூலை,ஈஸ்டர் குண்டு வெடிப்பு,இறுதிக் கட்டப் போரில் நிகழ்ந்த இன அழிப்பு,அதற்கு முன்னர் நிகழ்ந்த இன அழிப்பு..போன்றவைகள் யாவும் அந்தக் காலங்களில் இருந்த அரசாங்கங்கள் விட்ட தவறுகளின் விளைவுகள் மட்டுமல்ல.அதைவிட ஆழமான பொருளில்,அது சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பு சார்ந்த குற்றங்கள்.அதாவது அதற்குப் பொறுப்பு அரசுதான். அரசாங்கங்கள் மட்டுமல்ல.அரசாங்கங்கள் அவ்வாறு சிறிய தேசிய இனங்கள், சிறிய மதப் பிரிவினர்களுக்கு எதிராக குற்றம் இழைக்கும்போது அதற்கு அரசுக் கட்டமைப்பு அனுமதித்தது. எனவே அதற்கு அரசுக் கட்டமைப்புத்தான் முழு முதல் பொறுப்பு. அரசுக் கட்டமைப்புத்தான் பொறுப்புக்கூற வேண்டும்.அந்தக் கட்டமைப்பில்தான் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.அரசாங்கங்களை மாற்றுவதன்மூலம் பொறுப்புக்கூற வைக்க முடியாது என்பதைத்தான் 2015ல் நிறைவேற்றப்பட்ட நிலை மாறுகால நீதிக்காண ஐநா தீர்மானத்தின் பின்னரான நிலைமைகள் நமக்கு உணர்த்துகின்றன.அக்காலகட்டத்தில்தான் ஈஸ்டர் குண்டுபிடிப்பு நிகழ்ந்தது என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். நிலை மாறுகால நீதிச் சூழலில் ஈஸ்டர் குண்டுவெடிப்பை நிறுத்த முடியவில்லை என்பதே அதன் தோல்விக்குச் சான்று.
ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பான குற்றச்சாட்டுக்கு இலக்காக இருப்பவர்கள் இப்பொழுது தண்டிக்கப்பட்டிருப்பவர்கள் யார் யார் என்று பார்த்தால், அனைவருமே நாட்டின் சட்டம்,ஒழுங்கு,புலனாய்வு போன்ற கட்டமைப்புகளுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள்.குற்றஞ் சாட்டப்பட்டிருக்கும் சுரேஷ் சலே சக்திமிக்க புலனாய்வுக் கட்டமைப்பின் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் தர தளபதி ஆகும்.இப்பொழுது ஒரு முன்னாள் போலீஸ் மா அதிபரும் ஒரு முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலரும் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.இவர்கள் அனைவரும் அரசுக் கட்டமைப்பின் பிரதானிகள்.அரசாங்கத்தின் பிரதானிகள் அல்ல.அல்லது அவர்களை அரசாங்கங்களின் பிரதானிகளாகக் கருதும் அளவுக்கு அரசுக் கட்டமைப்பு குற்றப் பண்புடையதாக இருந்ததா? அல்லது குற்றச் செயல்களுக்கு விட்டுக் கொடுப்பதாக இருந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா ?
எனவே மன்னிப்புக் கேட்க வேண்டியது,பொறுப்புக்கூற வேண்டியது அரசாங்கங்கள் மட்டுமல்ல.அரசுக் கட்டமைப்பும்தான்.இந்தத் தர்க்கத்தின் அடிப்படையில் கேட்டால்,அந்த அரசுக் கட்டமைப்பை இப்பொழுது பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஜூலை 83க்கு மன்னிப்பு கேட்குமா?அல்லது இதற்கு முன்பிருந்த அரசாங்கங்களின் குற்றங்களுக்குத் தான் பொறுப்பில்லை என்று கூறிவிட்டுத் தப்பப் பார்க்குமா?ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களின் மீது பழியைப் போட்டுவிட்டுத் தப்பியதுபோல?
தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது இன அழிப்புப்போர் அல்ல அது பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு படை நடவடிக்கை என்று பேராயர் மல்கம் ரஞ்சித்தின் ஊடகத்துறை முக்கியஸ்தர் கூறுகிறார்.நாட்டிலுள்ள ஒரு தேசிய இனத்துக்கு எதிராக இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கு நீதி தேவையில்லை என்று கருதும் ஒரு பேராயர்,ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு நீதி வேண்டும் என்று கேட்கிறார்.ஆனால் கடந்த வாரம் யாழ்.மறை மாவட்டத்தைச் சேர்ந்த மத குருக்கள் செம்மணிப் புதைகுழிக்கு அனைத்துலக விசாரணை கேட்டு ஊர்வலம் போனார்கள்.நாட்டின் கத்தோலிக்கத் திருச்சபை இனரீதியாக இரண்டாக நிற்கிறதா?
ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு நீதி கிடைக்கலாம் என்றால் அதன் சூத்திரதாரிகள்-கவனிக்கவும்,கருவிகள் அல்ல சூத்திரதாரிகள்- தண்டிக்கப்படுவார்களாக இருந்தால்,தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களுக்கும் நாட்டின் அரசுக் கட்டமைப்பு பொறுப்புக் கூறுமா?
அல்லது அனுர பதவிக்கு வர முன்பு அசோசியேடட் நியூஸ் பிரஸ் நிறுவனத்துக்கு வழங்கிய ஒரு நேர்காணலில் கூறியதுபோல, பாதிக்கப்பட்ட மக்கள் குற்றவாளிகளை விசாரிக்க வேண்டும் என்று கேட்கிறார்களே தவிர குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று கேட்கவில்லை என்பதுதான் அரசாங்கத்தின் நிலைப்பாடா ?





