சடங்குகள் இல்லாத தகனங்கள் ; சடங்குகள் இல்லாத சவ அடக்கங்கள்

 

கவிஞர் பொன்னம்பலத்தின் கவிதை ஒன்று உண்டு. அதன் தலைப்பு “சடங்குகள் நீத்த தகனங்கள்”.போர்க் காலத்தில் கடலில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் கரைகளில் ஒதுங்கும்.அடையாளம் காண முடியாத அந்த உடல் சிலசமயம் போலீசாரிடம் ஒப்படைக்கப்படும்.உடல் ஒதுக்கும் கடற்கரை யாருடைய கட்டுப்பாடுக்குள் உள்ளது என்பதைப் பொறுத்து அது அமையும்.சிலசமயம் கடற்கரையிலேயே யாராவது அந்த உடலை அகப்பட்ட விறகுகளை,காவோலைகளைப் போட்டு எரிப்பார்கள்.

ஆனால் அவ்வாறு எரிக்கப்படும் அந்த உடலுக்கு உரியவரின் உறவினர்கள் அவருடைய கிராமத்தில் இருப்பார்கள்.தனது பிள்ளை எங்கேயோ அனாதையாக எரிக்கப்படுகிறது என்பதைத் தெரியாமலேயே தாய் வழமை போல சமைத்துக் கொண்டிருக்கக்கூடும். தன் கணவனின் உடலை யாரோ சடங்குகள் இல்லாமல் தகனம் செய்கிறார்கள் என்பதைத் தெரியாமலேயே மனைவி வழமைபோல சாமித் தட்டில் பூ வைத்துக் கொண்டிருக்கக் கூடும்.கொள்ளிவைக்க வேண்டிய பிள்ளை இருக்கத்தக்கதாக,யாரோ ஒருவர், யாருடையதோபோல,அந்த உடலுக்குக் கொள்ளி வைப்பார்கள்.அதைக் கொள்ளி வைத்தல் என்றுகூடச் சொல்ல முடியாது.கவிஞர்மு. பொன்னம்பலத்தின் வார்த்தைகளில் “சடங்குகள் நீத்த தகனம்”.

அது யுத்த காலம். யுத்த காலத்தில் சடங்குகள் இல்லாமல் தகனங்கள் இடம் பெற்றன.சடங்குகள் இல்லாமல் சவ அடக்கங்கள் இடம்பெற்றன.இவ்வாறு சடங்குகள் இன்றித் தகனம் செய்தால் சாம்பல் மிஞ்சும்.வேறு எதுவும் மிஞ்சாது.ஆனால் புதைத்தால் எலும்புக்கூடுகள் மிஞ்சும்.அந்த உடல் அணிந்திருந்த ஆடைகள் ஆபரணங்கள் போன்றவை உக்கவில்லை என்றால் அவையும் மிஞ்சும்.எனவே எலும்புக்கூடுகளை வைத்து அது சடங்குகள் இல்லாமல் புதைக்கப்பட்டதா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.

சடங்குகள் இன்றி ஓருடலை புதைப்பது என்பது அந்த உடலை அதற்குரிய பண்பாட்டு மரியாதைகள் இன்றிப் புதைப்பதுதான்.சக மனிதரின் பூத உடலுக்கு மரியாதை செய்வது என்பது மனிதர்களை ஏனைய விலங்குகளிலிருந்து வேறுபடுத்துகிறது மட்டுமல்ல,மனித நாகரீகத்தின் பண்பாட்டுத் தொடக்கப் புள்ளிகளில் அதுவும் ஒன்று.

விலங்குகள் இறந்துபோன சக விலங்கின் உடலை ஒன்றில் தாங்களே  உண்பதுண்டு.அல்லது அந்த உடலை இயற்கையிடம் lகையளித்துவிட்டுச் செல்கின்றன. ஆனால் மனிதர்கள் இறந்த சக மனிதரின் உடலை அவர்களுக்கு உரிய பண்பாட்டு நம்பிக்கைகளின் அடிப்படையில் பண்பாட்டு மரியாதைகளோடு புதைக்கிறார்கள்.

அவ்வாறு புதைக்கும்பொழுது அந்த உடலை எப்படிக் கிடத்துவது;எந்தத் திசையில் தலையை வைப்பது; அந்த உடலுக்கு என்னென்ன உடைகளை அணிவிப்பது;என்னென்ன ஆபரணங்களை அணிவிப்பது அல்லது அகற்றுவது;  அந்த உடலின் தலைமாட்டில் எதை வைப்பது;அந்த உடலின் கால்மாட்டில் எதை வைப்பது….போன்ற எல்லா விடயங்களையும் அந்த உடலுக்கு உரியவர் சார்ந்த பண்பாடுதான் தீர்மானிக்கின்றது.இறந்தவரைப் புதைப்பது என்பது ஒரு பண்பாட்டு நிகழ்வு. தகனம் செய்வதும் ஒரு பண்பாட்டு நிகழ்வு.

அவ்வாறு சடங்குகள் இன்றி அதாவது பண்பாட்டு நடைமுறைகளைப் பேணாமல்  ஒரு மனித உடலைத் தாறுமாறாக,அவமரியாதையாகப் புதைக்கும் போது,அல்லது இருந்த நிலையில் புதைக்கும் போது, அல்லது நின்ற நிலையில் புதைக்கும் போது,அல்லது தாயையும் பிள்ளையையும் ஒன்றாகப் புதைக்கும் போது,அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உடல்களை ஒன்றாகப் புதைக்கும் போது, அங்கே பண்பாட்டை அதாவது சடங்குகளைப் பேணமுடியாத அல்லது பேண விரும்பாத ஏதோ ஒரு காரணம் இருந்திருக்கவேண்டும்.

அது அனர்த்த காலமாக இருக்கலாம்.இயற்கைப் பேரழிவு அல்லது பெருந்தொற்று அல்லது உயிரச்சம் மிகுந்த யுத்த காலம்,எதுவாகவும் இருக்கலாம்.குறிப்பிட்ட உடலைப் புதைத்தவர்கள் அதற்குரிய மரியாதையைக் கொடுக்க,உரிய பண்பாட்டு மரியாதையைக் கொடுக்க விரும்பாமல் இருந்திருக்கலாம்.

இன அழிப்புக் களங்களில் உடல்கள் அவ்வாறு பண்பாட்டு மரியாதைகள் இன்றிப் புதைக்கப்பட்டன.அங்கே புதைத்தல் என்பதும் இன அழிப்பின் ஒரு பகுதியாகவே காணப்பட்டது. எரித்தலும் அப்படித்தான்.

எனவே மனித உடல்களை பண்பாட்டு வழமைகளுக்கு மாறாக, கொடுக்க வேண்டிய மரியாதைகளைக் கொடுக்காமல் புதைப்பது என்பது அசாதாரண நிலைமைகளின் கீழேதான் இடம்பெறுகின்றது.கோவிட் பெருந் தொற்றுக் காலகட்டத்தில் முஸ்லிம்களின் உடலைப் புதைப்பதா எரிப்பதா என்ற விவாதம் நடந்தது.பெருந்தொற்று நோய்க்காலம் ஒன்றில் ஒரு பூத உடல் குறித்து மருத்துவ நோக்கு நிலையில் இருந்து முடிவெடுப்பதா?அல்லது மதப் பண்பாட்டு நோக்குநிலையில் இருந்து முடிவெடுப்பதா?என்ற விவாதம் வந்தபொழுது அப்போது இருந்த கோட்டபாய அரசாங்கம் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் முடிவுகளை முதலில் எடுத்தது.

அவ்வாறான தொற்றுநோய்க் காலங்களில் உடல்களைப் புதைக்கும் பொழுது பண்பாட்டு வளமைகளை,சடங்குகளைப் பின்பற்ற முடியாமல் இருக்கலாம். ஆனால் உறவினர்கள் குறிப்பிட்ட ஒரு தூரத்தில் நின்றபடி அந்தச் சவ அடக்கத்தைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவதுண்டு. உறவினர்கள் பார்த்துக் கொண்டிருக்க ஒர் உடலைப் புதைக்கும்போது அதனை அவமரியாதையாக, அலங்கோலமாக,தாறுமாறாகப் புதைக்கமுடியாது.அதை அதற்குரிய மரியாதையோடுதான் புதைக்கலாம்.

ஆனால் தமிழ்ப் பகுதிகளில் இதுவரை கிண்டப்பட்ட மனிதப் புதை குழிகளில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் எத்தனை அவ்வாறு சடங்குகளோடு அல்லது பண்பாட்டு மரியாதைகளோடு புதைக்கப்பட்டுள்ளன?அப்படி புதைக்கப்படவில்லை என்றால் அவற்றைப் புதைத்தது யார் ? எதற்காக அப்படிப் புதைத்தார்கள் ? அப்படிப் புதைக்கும்போது உறவினர்கள் அருகில் இருந்துபார்க்க அனுமதிக்கப்பட்டார்களா? உறவினர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றால் ஏன் அனுமதிக்கப்படவில்லை? உறவினர்களும் இன்றி, எனவே சடங்குகளும் இன்றி,உடலுக்கு உரிய பண்பாட்டு மரியாதை இன்றி, ஓர் உடல் புதைக்கப்படுகிறது என்றால் அது யாரும் யாருக்கும் உதவமுடியாத ஒரு காலமாக இருக்க வேண்டும்.தமிழ் மக்கள் மத்தியில் இந்த நூற்றாண்டில் அல்லது கடந்த நூற்றாண்டில் அவ்வாறான யாரும் யாருக்கும் உதவ முடியாத பேரழிவு அல்லது பேரச்சமான சூழல் எனப்படுவது போர்க்களங்களில் மட்டும்தான் காணப்பட்டது.பெருந் தொற்று நோய்க் களங்களிலோ அல்லது இயற்கை அழிவுகளின் போதோ அல்ல.

அதாவது அந்த உடலைப் புதைத்தவர்கள் எதையோ மறைக்க ஏதோ ஒரு ரகசியத்தைப் புதைக்க அல்லது எதோ ஒரு சான்றுப் பொருளை மறைக்க ,அல்லது அழிக்க முயற்சித்திருக்கலாம்.அவ்வாறு தமிழ் மக்களின் உடல்களைப் புதைத்தவர்கள் மறைக்க விரும்பிய ரகசியத்தை,அல்லது அரசியல் காரணத்தை வெளியே கொண்டுவர வேண்டும் என்று கேட்டுத்தான் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள்.அதற்குத்தான் பன்னாட்டு விசாரணைப் பொறிமுறை வேண்டும் என்றும் கேட்டு வருகிறார்கள்.அந்த ரகசியத்தை மறைக்க அல்லது எலும்புக் கூடுகளின் கதையை மாற்றி எழுத யாராவது முரற்சிக்கக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாகத்தான் தமிழ் மக்கள் பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று கேட்கிறார்கள்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *