செம்மணி அகழ்வாராய்ச்சி தொடர்பான பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கை வெளிவந்திருக்கிறது.அது ஒர் இடைக்கால அறிக்கை.இறுதி அறிக்கை அல்ல.ஆனால் பின்வரக்கூடிய முடிவுகளில் அது செல்வாக்குச் செலுத்தக் கூடியது.ஏற்கனவே இரண்டு இடைக்கால அறிக்கைகள் வெளிவந்திருக்கின்றன.இந்த அறிக்கைகளில் பேராசிரியர் என்ன சொல்லி இருக்கிறாரோ அதற்கு முரணான விதத்தில் கடைசியாக வந்த அறிக்கை காணப்படுகிறது.மேலும் கடந்த ஆண்டு வெளிவந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் செம்மணி தொடர்பாகக் கூறப்பட்டிருப்பவற்றோடும் அது முரண்படுகிறது.இந்த முரண்பாடுகளை நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டிப் பேசியிருக்கிறார்.
செம்மணியில் உடல்கள் தாறுமாறாக புதைக்கப்பட்டிருக்கின்றன என்பதைத்தான் அங்கிருந்து எடுக்கப்படும் எலும்புக்கூடுகள் நிரூபித்திருக்கின்றன.அதில் பெரும்பாலான உடல்களுக்கு உரிய பண்பாட்டு மரியாதை செலுத்தப்படவில்லை; வழமையாக உடல்களைப் புதைக்கும்போது பின்பற்றப்படும் பண்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை; என்ற சந்தேகத்தை அறிக்கையும் வெளிப்படுத்துகின்றது.
தமிழ் மக்கள் மத்தியில் அவர்களுடைய பண்பாட்டு நம்பிக்கைகளின் அடிப்படையில் இறந்தவர்களின் உடல்களை ஒன்றாகப் புதைக்கும் வழமை உண்டா? தாயின் உடலும் குழந்தையின் உடலும் ஒன்றாகப் புதைக்கப்படுவது உண்டா? தியானம் இருப்பது போன்ற நிலையில்,உடல்களை இருத்தி சுடலைகளில் புதைப்பது உண்டா? சுடலைகளில் சந்நியாசிகளின் உடல்களை சமாதி வைப்பதுண்டா? ஓர் உடலை அடக்கம் செய்யும்போது அதற்குரிய சவஅடக்கப் பண்பாட்டு நடைமுறைகள் முழுமையாக பேணப்பட்ட எத்தனை எலும்புக்கூடுகள் செம்மணியில் அகழ்ந்து எடுக்கப்பட்டன?
இத்தனைக்கும் செம்மணி ஒரு சுடலை.அங்கே பெரும்பாலும் தகனங்கள்தான் இடம்பெறும்.சில சமயம் சந்தேகத்துக்கிடமான விதங்களில் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படுவதில்லை.புதைக்கப்படுவதுண்டு.ஆனால் அது ஒரு பெரும் போக்கோ அல்லது பொதுப் போக்கோ அல்ல.ஆனால் செம்மணியில் பெரும்பாலான உடல்கள் பண்பாடு வழமைகளின்றிப் புதைக்கப்படக் காரணம் என்ன?
ஒருவருடைய உடல் பண்பாட்டு மரியாதைகள் இன்றி,சடங்குகள் இன்றி எப்பொழுது புதைக்கப்படுகிறது ?
புதைக்கப்படும் காலம் ஓர் அனர்த்த காலமாக இருந்தால் அது அவ்வாறு புதைக்கப்படும்.அல்லது புதைப்பவர்கள் அந்த உடலை மரியாதைக்குரிய ஒன்றாக கருதவில்லை என்றாலும் அது தாறுமாறாகப் புதைக்கப்படும்.மனித உடல்கள்
பேராசிரியர் ராஜ் சோமதேவ கூறுகிறார்,உடல்கள் அவ்வாறு அவசரமாக புதைக்கப்பட்டதற்கு காரணம் பெரும்பாலும் இயற்கை அனர்த்தங்கள் அல்லது பெருந்தொற்று நோய்கள் காரணமாக இருக்கலாம் என்று.ஆனால் யுத்த அனர்த்தத்தை அவர் அங்கே ஓர் ஊகமாகத்தானும் முன்வைக்கவில்லை.
நாட்டின் நவீன வரலாற்றில்,கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் 1934,1935 ஆம் ஆண்டுகளில் நாட்டைத் தாக்கிய மலேரியா ஆயிரக்கணக்கானவர்களை (80,000)கொன்றிருக்கிறது.ஆனால் அதன் தாக்கம் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை என்று அறிக்கைகள் காட்டுகின்றன.அந்த அடிப்படையில் கடந்த சுமார் 90 ஆண்டு கால பகுதிக்குள், மலேரியாவைத் தவிர,2004ஆம் ஆண்டு சுனாமி தாக்கியது.அதன்பின் 2020 ஆம் ஆண்டு கோவிட் பெரும் தொற்று நோய் தாக்கியது. இந்த இரண்டு சந்தர்ப்பங்கள்தான் தமிழ் மக்களின் நவீன வரலாற்றில்,கடந்த 90 ஆண்டுகாலப் பகுதிக்குள் நிகழ்ந்த இயற்கை அனர்த்தங்கள் மற்றும் பெருந் தொற்றுநோய்த் தாக்கங்கள் ஆகும்.
இக்காலப் பகுதியில் இறந்தவர்களின் உடல்கள் உரிய மரியாதைகள் இன்றி புதைக்கப்படும் அளவுக்கு ஒரு காலம் அதாவது யாரும் யாருக்கும் உதவ முடியாத ஒரு காலம் இருந்ததா என்று பார்த்தால்,சுனாமிப் பேரலையில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை கொத்துக்கொத்தாக அகற்ற வேண்டிய நிலைமை இருந்தது.ஆனால் அகாலகட்டத்தில் செம்மணியில் உடல்கள் புதைக்கப்பட்டனவா?சுனாமியில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் செம்மணிக்கு கொண்டுவரப்படவில்லை என்று தெரிகிறது.
2021 பெருந் தொற்றுநோய்க் காலத்தில் உடல்கள் எரிக்கப்பட்டன. புதைக்கப்படவில்லை.அதனால்தான் அப்போதிருந்த அரசாங்கம் முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் முடிவுகளை எடுத்தது.
எனவே தொகுத்துப் பார்த்தால் 1934ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரையிலுமான சுமார் 90 ஆண்டுகால பரப்பிற்குள் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் மற்றும் பெரும் தொற்று நோய்களின்போது ஒருவர் மற்றவருக்கு உதவமுடியாத ஒரு சூழல்,அல்லது இறந்தவர்களை அமைதியாக அவர்களுக்குரிய சடங்குகளோடு மரியாதையாகப் புதைக்கமுடியாத ஒரு கொடிய நிலமை இருந்தது என்று கூறமுடியாது.
ஆனால் இக்காலப் பகுதிக்குள் சோமதேவ ராஜபக்ஷ கூறாத அல்லது கூற விரும்பாத ஒரு விடயம் உண்டு.அதுதான் யுத்தம். யுத்த காலங்களில் அப்படி ஒரு கொடிய சூழல் நிலவியது.இறுதிக் கட்டப் போர்க்காலத்தில் வன்னி கிழக்கில் அச்சூழல் நிலவியது.அதற்கு முன்னரும் படை நடவடிக்கைகளின் போதும் இடப்பெயர்வுகளின் போதும் இறந்தவர்களின் உடல்களை உரிய மரியாதைகளோடு புதைக்க முடியாத கால கட்டங்கள் இருந்தன.அந்தச் சந்தர்ப்பங்களில் உடல்கள் அவசரமாக ஏரிக்கப்பட்டிருக்கலாம்.அல்லது புதைக்கப்பட்டிருக்கலாம்.
அதிலும் குறிப்பாக கைது செய்யப்பட்ட தமிழ் மக்களை காணாமல் ஆக்கியவர்கள் கொல்லப்பட்டவர்களின் உடல்களை அவசரமாகத்தான் அகற்றுவார்கள்.ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை அந்த உடல் ஒரு சான்று.அது ஒரு பூத உடலல்ல.
உறவினர்களுக்குத்தான் அது ஒரு பூத உடல்.அது உயிருடன் இருந்தவரின் தொடர்ச்சி.எனவே உயிருடன் இருந்தவருக்கு உரிய மரியாதைகளை அதற்கும் கொடுத்து அதனை அடக்கம் செய்வார்கள். ஆனால் காணாமல் ஆக்குபவர்கள் தாங்கள் காணாமல் ஆக்கியவரின் உடலை ஒரு பூத உடலாகப் பார்க்க மாட்டார்கள்.அதனை அவர்கள் ஒரு சான்றுப் பொருளாக,மறைக்கப்பட வேண்டிய சான்றுப் பொருளாகத்தான் பார்ப்பார்கள். எனவே அந்தச் சான்றுப் பொருளை எப்படிப் புதைத்து அகற்றலாம் என்றுதான் சிந்திப்பார்கள். அல்லது ஏரிப்பார்கள்.
செம்மணியும் உட்பட மனித புதை குழிகள் இருப்பதாக சோமரட்ன ராஜபக்ச கூறும் இடங்களில் அவ்வாறு தமிழ் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.அதிலும் குறிப்பாக இப்பொழுது அகழ்ந்தெடுக்கப்படும் இடமானது சோமரட்ண ராஜபக்ஷ,கால் நூற்றாண்டுக்கு முன் சுட்டிக்காட்டிய இடமா?அவர் சுட்டிக்காட்டிய ஏனைய இடங்கள் இப்பொழுதும் அகழப்படாதுள்ளன.இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் அகழ்வுப் பணிகள் எதிர்பாராத விதமாக தொடங்கப்பட்டவை.சித்துப்பாத்தி மைதானத்தில் மின்தகன மேடை அமைப்பதற்காக நிலத்தைக் கிண்டிய பொழுது எலும்புக்கூடுகள் வெளிப்பட்டன.அங்கிருந்துதான் இந்தப் புதைகுழி அடையாளம் காணப்பட்டது.நிச்சயமாக சோமரட்ண ராஜபக்ச கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அல்ல.அல்லது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக தமிழ் மாந்திரீகர்கள் செய்த பில்லி சூனியத்தின் விளைவும் அல்ல.
சோமரட்ண ராஜபக்சவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இப்பொழுதும் கிண்டப்படாத இடங்கள் உண்டு.பேராசிரியர் சோமதேவவின் அறிக்கை அந்தப் பிரதேசத்தில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் என்ற ஊகத்தை முன்வைக்கின்றது.அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட அன்று குற்றப் புலனாய்வுத் துறையினர் நீதிமன்றத்திடம் சோமரட்ன ராஜபக்சவையும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.அது ஒரு நல்ல திருப்பம்.அவர் வாய் திறந்தால் கடந்த சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக புதைக்கப்பட்டிருக்கும் எலும்புக்கூடுகள் பேசத் தொடங்குமா?
எனினும் கடந்த வாரம் வெளிவந்த பேராசிரியரின் இடைக்கால அறிக்கையானது தமிழ்மக்கள் மத்தியில் ஏற்கனவே அவர் தொடர்பாக நிலவிய சந்தேகங்களை உருப்பெருக்கியிருக்கிறது. பேராசிரியர் சோமதேவ ஏற்கனவே மன்னார்,சதோச வளாகத்தில் உள்ள மனிதப் புதை குழி தொடர்பாகத் தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மக்கள் அவர் மீது சந்தேகப்படக் காரணமாயின. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உடல்கள் புதைக்கப்பட்டதாக அவர் அடையாள கண்ட அந்த புதைகுழிக்குள்,1954 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மலிபன் பிஸ்கட் கொம்பனியின் பிஸ்கற் பக்கற் ஒன்றின் உறை காணப்பட்டது.மேலும் அவர் கோத்தபாய ராஜபக்சவின் காலத்தில் உருவாக்கப்பட்ட சர்ச்சைக்குரிய செயலணிகளில் ஒன்றில் அங்கத்தவராக இருந்தவர்.அது கிழக்கிற்கான பௌத்த மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கான செயலணியாகும்.
இப்படியாக ஏற்கனவே சோமதேவ மீது தமிழ்ச் சமூகத்துக்கு இருந்த சந்தேகங்களை கடந்த வாரம் வெளிவந்த அறிக்கை மேலும் பலப்படுத்தி இருக்கிறதா? அது ஓர் இடைக்கால அறிக்கைதான்.அதுவே இறுதியானது அல்ல.அதை அந்த அறிக்கை தெளிவாகக் கூறுகிறது.ஏனைய துறைசார் நிபுணத்துவ ஆய்வு முடிவுகளின் பின்னரே இறுதி முடிவுக்கு வரலாம் என்றும் அங்கே கூறப்படுகிறது.பேராசிரியர் சோமதேவ போலவே ஏனைய துறைசார் நிபுணர்களும் செயற்படலாம் என்று தமிழ்மக்கள் சந்தேகிக்கக்கூடிய வாய்ப்புகள் இப்பொழுது அதிகமாக தெரிகின்றன.
எனவே,தமிழ் மக்கள் தங்களுக்கு நீதி வழங்கப்பட்டதாக நம்ப வேண்டும். அப்படிப் பார்த்தால் தமிழ் மக்களின் பிரதான கோரிக்கை ஆகிய பன்னாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றுக்கூடாக உண்மையைக் கண்டறிவதுதான் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு அரசாங்கத்துக்கு உள்ள ஒரே வழியாகும்.நாட்டில் இனவாதம் இல்லை என்பதை நிரூபிப்பதற்கும் அதுதான் வழி.





