மடுவுக்குப் போதல் – பயணக்குறிப்புகள்

1.
காலை 8-00 மணி

நட்டாங்கண்டல் காடு
காட்டுவாசம் நாசியுள் நிறைகையில்
மனம்
காட்டுக் கோழியாய்ப் பறக்கும்
பாதையினிரு மருங்கிலும்
ராங்கிகள் உழுத வயலாய்
இறந்த காடு

யாரும் நடாத மரங்கள்
யாரும் நீர்விடாத புல்வெளிகள்
யாருக்கும் திறைகொடாத காடு

ஒரு காலம்
கைலாய வன்னியனின்
கம்பீரம் கண்டு
கர்வமுற்றிரந்த காடு
பிறகொருநாள்
பண்டார வன்னியனின்
யானைகள் பிளிறும் போது
புளகாங்கிதமுற்ற காடு
இன்று
யாரோ ஒரு சூனியக்காரியின்
கண்பட்டுக் கருகியது போல
சோகமாய் நின்றது.

2.
காலை 9-00 மணி

வற்றிய பறங்கியாற்றின்
பாறைத் தொடரின் மீதிருக்கிறேன்
ஆற்றின் புராதன வளைவுகளிற்கப்பால்
எங்கேயோதான்
அந்த அரண்மனையிருக்கிறது
பண்டாரவன்னியன் கட்டியது

ஆறு துயிலும் இரவில்
அரசர்கள் காலாற நடக்கும் போது
சருகுகள் நொறுங்குமரவம் கேட்பதாக
வேவு வீரர்கள் கூறுகிறார்கள்
பாதி புதைந்த அரண்மனையின்
சிதிலங்களினடியில்
மறைத்து வைக்கப்பட்டிருக்கும்
பண்டாரவன்னியனின் வாளை எடுக்க
யாரோ ஒர வீரன் வருவானென்று
ஆறும் காடும் காத்திருப்பதாக
ஒரு வேட்டைப்பாடல் கூறுகிறது.

3.
ஒரு கோடையிரவில்
சுடலைக் குருவி
மரணத்தை முன்னறிவித்து
பெருமூச்செறிந்த பிறகு
ராங்கிகள் உறுமியபடி
காட்டினுள் புகுந்தன

காடு பயந்து
வேட்டைத் தடங்களை மூடியது
வேட்டைக்காரர் அகதிகளாயினர்
குளங்கள் உடைப்பெடுத்து
வீணே ஆற்றில் போய் வீழ்ந்தன

ஆறு சினந்து
சிப்பியாற்றுக் கழிமுகத்தில்
போய்க் குதித்தது

பிறகெலாம்
பண்டாரவன்னியன்
காலாற நடவாதே விட்டான்

பறவைகள்
காடு மாறிப் போயின
கைவிடப்பட்ட சேனைப் புலங்களில்
கால் நடைகள் காடேகின
இடிந்த அரண்மனை மேட்டில்
வன்னியரின் வீரவாள்
துருவேறிக் கிடந்தது
வேவு வீரர்கள் மட்டும்
துயிலுமாற்றின்
மருதமர மறைவில்
துயிலா துலவினர்.

4.
பகல் 11-00 மணி

யுத்த முன்னரங்காகிய காடு
எரிந்த காவலரண்கள்
வாய்பிளந்த
ஏவு தளங்கள்
நாயாற்றில்
அவர்களே கட்டி
அவர்களே தகர்த்த
பெரிய இரும்புப் பாலம்
ஏதோ ஒரு இடுகாட்டை நோக்கியெம்மை
மயக்கி அழைத்துச் செல்வன போன்ற
விநியோக வழிகள்
அச்சத்திலிருந்து முற்றாக விடுபடாத
காடு
நெட்டுயிர்த்தது

ராங்கிகள் போய் விட்டன
மழைக் குளிரில் சிலிர்த்து நின்ற
மரங்களில் மோதியபடி
ராங்கிகள் ஓடித் தப்பின

திறைகொடா அரசனின் வாள்
நிலவொளியில்
திசைகளை வென்று ஜொலித்தது
ஆறு
கனவு காணத் தொடங்கியது
காடு மகிழ்ந்து
வேட்டைத் தடங்களைப் புதுப்பிக்கலானது.

5.
பகல் 12-00 மணி

ராங்கிகள் புதைந்த காட்டின்
வேர்கள் இடறும்
வழி நெடுக
காடுகளின் சூரியன்
உருகி வழிகிறான்

மடுமாதா
மருதமர நிழலில்
காட்டின் ஒளியாய்
மிளிர்கிறாள்
திறைகொடாக் காட்டின்
மூர்த்தமவள்
ஆறு கண்ட கனவு அவள்
நிழலற்ற வழிகளில் வரும்
பயணிகளின் ஆறதலுமவள்

ராங்கிகள் அவளை உறுமிக் கடந்தன
பீரங்கிகள்
அவளது பிரகாரத்தில் வெடித்தன
குருதி சிந்தி
விழிகளில் தெறித்தது
நரிகள் ஊளையிட்டு
இரவுகளைப் பகைவரிடம் கையளித்தன

அவள் அசையவில்லை
ஒரு முதுமரம் போலே
அமைதியாயிருந்தாள்

வெற்றிக்கும் தோல்விக்கும்
இலையுதிர் காலத்துக்கும்
சாட்சியவள்
முற்றுகைகள் தோறும்
பிரகாசித்தாள்
மூன்று நூற்றாண்டுகளாய்
ஆறுகளின் தாகமாய்
அகதிகளின் அழுகையாய் பெருமூச்சாய்
காடுகளில்
காணாமல் போன எல்லா
வேட்டைக்காரரிற்கும் தாயாய்
காடுகளை மீட்டு வரும்
வீர வாளின் கூராய்
காடுகளின் கேந்திரத்தே
வீற்றிருக்கின்றான்
நிச்சலனமாக.

6.

மடுமாதாவின் பூர்வீகம் மாந்தை. கோட்டைகள் கட்டிய ஒல்லாந்தர் மன்னாரில் கத்தோலிக்கர்களை வேட்டையாடிய நாளில் மாதா மாந்தையிலிருந்து மடுக்காட்டுக்கு தலைமறைவாக வந்தாள்.

தொடக்கமே தலைமறைவும் இடம்பெயர்வும் என்றானது. அன்றிலிருந்து அகதிகளுக்கும் புகலிடந்தேடிகளுக்கும் மாதா அபயமளிக்கலானாள். அவளமர்ந்த காட்டில் பிறகெவரையும் விசந் தீண்டவில்லை. வேறெங்காவது விசந் தீண்டினாலும் அவளது காலடிமண் மருந்தாயானது.

மூன்றாவது ஈழப்போர் அவளை அநேகமாக அகதிகளின் மூர்த்தம் என்றாக்கியது. குறிப்பாக மடுவையும் அதன் காட்டுப்புறங்களையும் சுற்றிவளைத்த ரணகோஷ (யுத்தகோஷ) படை நடவடிக்கை அவளைத் தேர்தல்கால யுத்த வீயூகமொன்றில் சிக்க வைத்தது.

சூதான சமாதானம் ராங்கிகள் பீரங்கிகள் சகிதம் அவளைச் சூழ்ந்து கொண்டது. ரணகோஷ அவளை அவளது சொந்தக் காட்டிலேயே கைதிபோலாக்கியது.

பிறகு காடுகளை மீட்கக் கிராமங்கள் எழுந்தன. மடுவுக்குப் போகும் வழிகளை மறித்து நின்ற முட்கம்பியரண்களை மோதியுடைத்துக்கொண்டு கிராமங்கள் முன்னேறிய வேகங்கண்டு ராங்கிகள் வெருண்டு ஓடின.

ராங்கிகள் பின்வாங்கிய இரவு மாதாவுக்கு வியாகுல இரவாய் முடிந்தது.

பீரங்கிகள் அவளது காலடியில் வெடித்தன. வெடிமருந்து நெடி கிளம்பி அவளது மேனியெலாம் படிந்தது. வியூகத்துட் சிக்கினாள் மாதா. புலம்பும் அகதிகளின் நடுவே தனித்திருந்தாள் ராமுழுதும்.

ஒல்லாந்தர் காலத்துக்குப் பின் அவள் அதிகம் உத்தரித்த காலமாக ரணகோஷ காலமும் அதன் பின் வந்த காலமும் அமைந்தன, ஆனால் அவள் முகம் வாடியதில்லை. விழிகளில் புதிரான பேரமைதியோடும் பிறகும் பிறகுமவள் மரித்தோரின் மத்தியிலிருந்து எழுந்தாள். எல்லாக் காயங்களும் எல்லாப் பாடுகளும் எல்லா வியூகங்களும் அவளது பெருமைகளை நிரூபிப்பதிற்தான் முடிந்தன.

விசந்தீண்டாத காட்டின் மூலிகையாய் அவளது வீற்றிருப்பை விசப்பாம்புகளோ ராங்கிகளோ பீரங்கிகளோ எதுவும் அசைப்பதில்லை.

காடுகளின் இதயத்தில் சுமார் மூன்று நூற்றாண்டுகளாய் அவளது பிரசன்னம் யாருக்கும் உறுத்தலாயிருந்ததில்லை. அவளை அகதியாக்கித் துரத்திய ஒல்லாந்தருக்கும் அவளை சந்தேகித்த ஆங்கிலேயருக்கும் அவளை வியூகத்துள் வீழ்த்திய சிங்களவருக்கும் யாருக்கும் அவள் உறுத்தலாயிருந்ததில்லை.

பிற்குறிப்பு: வேட்டைப்பாடல்

வேட்டைக்காரர் வருகிறார்
புதிய வேட்டைப் பாடல்களோடு

காட்டுவாசத்தில், கிறங்கி
காட்டுப்புறாக்களின் கழுத்தசைவில்
மன மழிய
வேட்டைக்காரர் வருகிறார்
புதிய வேட்டைப்பாடல்களோடு

இனிக் குளங்கள் முறித்துப் பாயாது
ராங்கிகள் நெரித்து
நாயாறு
தாகமாயிராது
வேட்டைக்காரர் வருகிறார்
புதிய வேட்டைப்பாடல்களோடு

காடு மாறிய பறவைகளே
வீடு திரும்புங்கள்
அரசர்கள்
ஆற்றங்கரையில்
காலாற நடப்பாரினி
அரண்மனை மேட்டில்
யானைகள் பிளிறுமினி

வேட்டைக்காரர் வருகிறார்
புதிய வேட்டைப் பாடல்களோடு.

 

18-09-2000
மல்லாவி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *