அமைதி நகரின் மனம்பேரிகள்

அழகிய மனம்பேரி
அவள் ஒரு போராளி
அவளை அவர்கள் பிடித்தனர்
ஒரு அழகி என்பதால்
அவளிடம் ரகசியங்கள்
இருந்ததால்
அவளை அவர்கள் சிதைத்தனர்
நிர்வாணமாகக் குறையுயிராக
தெருவிலே விட்டுச் சென்றனர்.

அழகிய மனம்பேரி
ஆனால் அவளைப் போல
அவளது மரணம்
அழகானதேயல்ல

அழகிய கிரிஷாந்தி
இவள் ஒரு போராளியல்ல
ஆனாலும் அவளையவர்கள் பிடித்தனர்
கைதடி வெளியெலாம்
அவள் கதறிய குரல் அலைய
அவளை அவர்கள்
பல்முறை சிதைத்தனர்
பிறகு
கழுத்தை நெரித்து
செம்மணியில் புதைத்தனர்

அவளைத் தேடிச் சென்ற
தாயை தம்பியை அயலவரை
எல்லாரையுமே
கழுத்தை நெரித்து
செம்மணியில் புதைத்தனர்

அழகிய ரஜனி
இவளும் ஒரு போராளியல்ல
ஆனாலும் அவளையவர்கள் பிடித்தனர்
யாருமில்லாத வீடொன்றின்
சுவர்களில்
அவள் அழுத குரல்
மோதி அழிய
அவளை அவர்கள் சிதைத்தனர்
பிறகு
கழுத்தை நெரித்து ஒரு
மலக்கிடங்கில் புதைத்தனர்.

ரஜனி கிரிஷாந்தி
இருவரும்
அமைதி நகரின் மனம் பேரிகள்
விதவை அரசி சொன்ன
பொய்களின் பின்
சென்றார்கள்
தனியே சென்றார்கள்
வெண்தாமரைப் பொறிகளில்
சிக்கினார்கள்

அமைதி நகரம்
அவர்களின்
அழகை இளமையைக் கேட்டது.
அதன் சாப இருளில்
பேய்கள்
பலம் மிகப் பெற்றெழுந்து
மனம்பேரிகளைத்
தூக்கிச் செல்கின்றன

மனம்பேரிகளுக்கு ஆபத்து
தனியாகப் போகும்
எல்லா அழகிய பெண்களுக்கும்
ஆபத்து

மனம் பேரிகளின் கதறல்
அமைதி நகரெலாம் நிறைகிறதே…

கைதடி வெளியே
செம்மணி வெளியே ஐயோ

அமைதி நகரமே
அமைதி நகரமே
அருவருப்பான ஒரு பொய்யே
உனக்கும் ஐயோ…

இதோ
சமாதானம்
அதன் மரண நெடியுடன்
ஒரு மாய வலையென
எமது நகரங்களின் மீது
விழுகிறது.

வருகிறார்
விதவை அரசி
வெற்றிக் கொடி
வெண் தாமரை
இரண்டிலும் குருதி வடிய

அதே வசியச் சிரிப்பு
அதே வெறித்த விழிகள்
அதே முறிந்த
வாக்குறிதிகள்

வருகிறார் விதவை அரசி

கவனம்
அமைதி நகரின் மக்களே
கவனம்
அழகிய எல்லாச் சிறு பெண்களும்
கவனம்
யாழ்ப்பாணம் அழைக்கிறது
கவனம்

மனம்பேரிகளின் ஆவி
ஒரு நாள்
விதவை அரசிகளைத் துரத்தும்
முன்பொரு
விதவையின் வெற்றிக்கொடி
அறுந்து
புழுதியில் வீழ்ந்தது போலே
மனம்பேரிகளின் ஆவி
எழும்
அதுவரை
அமைதி நகரின் மக்களே
கவனம்
அழகிய எல்லாப் பெண்களும்
கவனம்
அமைதி நகரம் அழைக்கிறது.

கைதடியில் கதிர்காமத்தில்
புல் மூடிய
புதைகுழி நீத்து
எல்லா மனம்பேரிகளும் எழுக

அமைதி நகரம் அழைக்கிறது
அமைதி நகரம் அழைக்கிறது
அதன் வாசலில்
கிரிஷாந்தி
அமைதியுறா மனத்தினளாய்
விழிகளில் வன்மத்தோடு
வாசலிலே கிரிஷாந்தி…
கைதடி வெளியெலாமாகி…
செம்மணி வெளியெலாமாகி…

31. 10. 1996

மனம்பேரி –


ஒரு அழகுராணி. ஜே.வி.பி. போராளி. 1971 கிளர்ச்சியின் போது பிடிக்கப்பட்டு கடுமையாகச் சிதைக்கப்பட்டு பின் கொல்லப்பட்டார். அவர் சிதைத்துக் கொல்லப்பட்ட விதம் பின்னாளில் சிறிமாவோ ஆட்சிக்கு எதிரான மேடைகளில் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. கதிர்காமத்து அழகி மனம்பேரியின் ஆவி அவர் தோற்கும் வரை துரத்திச் சென்றது.

விதவை அரசிகள் –
சிறிமாவும் அவரது மகள் சந்திரிகாவும் விதவைகளாயிருந்தபடியால்தான் ஆட்சிக்கு வர முடிந்தது. இருவரும் அநுதாப வோட்டுக்களால் பதவிக்கு வந்தவர்கள்தான். கொல்லப்பட்ட அரசியல் தலைவர்களின் மனைவிகளாயிருந்த படியால் அத்தலைவர்களின் வாரிசுகளாக இவர்கள் முடிசூட முடிந்தது. குறிப்பாக சந்திரிகா தானொரு விதவை என்றும் விதவைகளின் துயரம் தனிப்பட்ட முறையில் தனக்குத் தெரியும் என்றும் தன்னை விதவைகளின் அரசியாகவும் காணாமல் போனவர்களின் தாயாகவும் வேஷங் காட்டித்தான் பதவிக்கு வந்தார். இது காரணமாகவே இங்கு தாயும் மகளும் விதவை அரசிகள் என்று அழைக்கப் படுகிறார்கள்.

31. 10. 1996
(சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிரிஷாந்தி கைதடியில் வைத்து பிடிக்கப்பட்டு சுமார் 11 படையாட்களால் சிதைக்கப்பட்டார். பிறகு செம்மணியில் புதைக்கப்பட்டார். இது தொடர்பாக எழுதப்பட்ட இக்கவிதை யாழ்ப்பாணத்தில்,யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் துண்டுப்பிரசுர வடிவில் விநியோகிக்கப்பட்டது)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *