இதையருந்துங்கள்
பாலற்றது
பசியாற்றாது
உலை கொதிக்காக் காலமொன்றின்
பசியிது தாகமுமிது.
பாலற்ற கடற்கரையில்
பசித்திருந்தாய் நாடே
இதையருந்து
பிணக்கடலே மலக்கடலே
புதை மேடே சிதை நெருப்பே
இதையருந்து
கடல் மணலைப் போல
சிதறடிக்கப்பட்ட தலைமுறையே
இதையருந்து
உப்பில்லையா
மகளே
உப்புனது தகப்பனின்
ரத்தத்திலிருக்கிறது
உப்பில்லையா
மகனே
உப்புனது தாயின்
கண்ணீரிலிருக்கிறது
உலகமே அவர்களைக் கைவிட்டது
உதவிக்கு யாரும் வாராத
ஒரு யுகமுடிவில்
பல தலைமுறைகளுக்காக
சிந்தப்பட்ட
கடைசித்துளி
ரத்தமிது
ஒரு புது யுகத்துக்காக
விதை நெல்லைப் போல
சேகரிக்கப்பட்ட
முதற் சொல்லுமிது.