தனித்து விடப்படும் முதியவர்கள்

புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் அண்மையில் ஊருக்கு வந்திருந்தார். அவருடைய ஊரில் அவருக்குத் தூரத்து உறவான ஒரு முதிய பெண் தனித்து வசிக்கிறார்.பெரிய வீடு;வசதியான குடும்பம்;ஆனால் பிள்ளைகள் இல்லை. காசு உண்டு. ஆனால் பராமரிக்க ஆளில்லை. அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு படை முகாமில் இருப்பவர்கள் அவருக்குச் சாப்பாடு கொடுக்கிறார்கள். ஆனால் அவர் பல நாட்கள் குளித்திருக்கவில்லை என்றும் அவருடைய சுத்தம் சுகாதாரத்தைத் தொடர்ச்சியாகக் கவனிப்பதற்கு அங்கே ஆட்கள் இல்லையென்றும் நண்பர் சொன்னார். அப்படியென்றால் அவரை அழைத்துக் கொண்டு வந்து ஒன்றில் அரச முதியோர் இல்லத்தில் சேர்க்கலாம் அல்லது கட்டணத்தோடு முதியோரைப் பராமரிக்கும் இல்லங்களில் இணைக்கலாம்.போதியளவு பணம் இருந்தாலும் பராமரிக்க ஆளில்லாமல் தவிக்கும் முதியோரை கட்டணம் பெற்றுக்கொண்டு பராமரிக்கும் இல்லங்களில் சேர்க்கலாம்.எனவே அந்த முதிய பெண்ணை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் இணைத்தால் என்ன என்று நண்பரிடம் கேட்டேன்.

அதற்கு நண்பர் சொன்னார்,”குறிப்பிட்ட மூதாட்டிக்கு 80 வயதுக்கு மேலாகிறது. இனி அவர் தனது வீட்டிலிருந்து வேரைப் பிடுங்கிக்கொண்டு வேறொரு இடத்துக்கு வரத் தயாராக இல்லை.எல்லாவிதமான அசௌகரியங்கள், பற்றாக்குறைகளோடும் தான் பிறந்து,வளர்ந்து,திருமணம்செய்து சந்தோஷமாக வாழ்ந்த அந்த வீட்டிலேயே இருந்து இறந்து போகத்தான் விரும்புவார் என்று தோன்றுகிறது. அவரை இந்த வயதில் வேரை அறுத்துக் வெளியே எடுப்பது சாத்தியமா?” என்று.

அது சாத்தியமா இல்லையா என்பதல்ல பிரச்சினை. அவருடைய “குவாலிட்டி ஒஃப் லைஃப் “- வாழ்க்கைத் தரம் உயர்வானதா? என்பதுதான் இங்கு பிரச்சனை. அவரைப் போன்ற பல முதியவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த ஊரை விட்டு வெளியே வரத் தயாராக இல்லை. தாங்கள் பிறந்து வளர்ந்த அந்த வீட்டுக்குள் எல்லா விதமான பற்றாக்குறைகளோடும் ஆபத்துக்குகளோடும் சீவிப்பதில் அவர்கள் மன நிறைவடைகிறார்கள்.இங்கே அடிப்படைக் கேள்வி ஒன்று எழுதுகிறது.”குவாலிட்டி ஒஃப் லைஃப் ” என்பது மனதால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதா?அல்லது உடலால் நவீன மருத்துவத் தராதரங்களுக்கு ஏற்ப பராமரிக்கப்படுகிறவர்களாக இருப்பதா? எனக்குத் தெரிந்த பல முதியவர்கள் குறிப்பாக 80 வயதுக்கு மேலானவர்கள் தாம் பிறந்து வளர்ந்த வீட்டிலேயே இருந்து சாவதைத்தான் தமது வாழ்க்கை தரத்தில் உயர்ந்த நிலை என்று கருதுவதாகத் தெரிகிறது.

ஆனால் பராமரிப்பின்றி தனிமையில் உழல்வதை விடவும் முதியோர் இல்லங்களில் சக வயதினரோடு இருப்பது சந்தோஷமானது என்று கருதும் முதியோரும் உண்டு.ஓர் ஆசிரியை வெளிநாட்டுக்குப் போகும்போது தன் தகப்பனை அரசு முதியோர் இல்லத்தில் இணைத்துவிட்டுச் சென்றார்.நாடு திரும்பியதும் தகப்பனை வீட்டுக்கு அழைத்து வரச் சென்ற போது தகப்பன் மறுத்துவிட்டார்.இங்கே எனது வயதொத்தவர்களோடு சந்தோஷமாக இருக்கிறேன். இது எனக்கு விருப்பமாக இருக்கிறது. என்று கூறி அந்த முதியவர் அங்கேயே தங்கி விட்டார். ஆனால் இது மிகச் சிறிய தொகை.

பைபிளில் கூறப்படுவது போல “பிள்ளைகள் இருக்கவும் மலடுகளாய்போன பெற்றோரின்” தொகை அதிகமுடைய ஒரு சமூகம் இது.போர் பிள்ளைகளைத் தின்றுவிட்டது.புலப்பெயர்ச்சி பிள்ளைகளைப் பெற்றோரிடம் இருந்து பிரித்துவிட்டது.பெற்றோர் பிள்ளைகளுக்கு இறுதிக் கிரியைகளைச் செய்யும் ஒருகாலம் வந்தபோது பிள்ளைகள் தூர தேசத்திலாவது உயிர்  பிழைத்திருக்கட்டும் என்று பெற்றோரே அனுப்பி வைத்தார்கள்.எனவே முதியோர் தனித்துவிடப்படுதல் என்பது போரின் நேரடி விளைவுதான்.தவிர குடும்பங்களில் விழுமியங்கள் சீரழிந்ததன் விளைவுந்தான்.

இங்கு மூன்று உதாரணங்களைக் கூறலாம். முதலாவது உதாரணம், வன்னியில் நடந்தது.அங்குள்ள முன்னணிப் பாடசாலை ஒன்றுக்கு பழைய மாணவர்கள் சிலர் இணைந்து ஒரு சிற்றுண்டிச் சாலையைக் கட்டிக்  கொடுத்தார்கள். அந்த சிற்றுண்டிச் சாலையை தமது பள்ளிக் காலத்தில் தமது வகுப்பு தோழர்களாக இருந்து பின்னர் போரில் நாட்டுக்காக தங்கள் உயிரைக் கொடுத்த தியாகிகளுக்கு அர்ப்பணித்திருந்தார்கள்.அப்பழைய மாணவர்களில் ஒருவர் என்னைச் சந்தித்தார். அவரிடம் நான் கேட்டேன்“அந்த சிற்றுண்டிச் சாலையைத் திறக்கும் வைபவத்திற்கு குறிப்பிட்ட தியாகிகளின் பெற்றோரை அழைத்தீர்களா?” என்று. அப்பொழுதுதான் ஒரு விடயம் தெரியவந்தது. அந்தத் தியாகிகளில் ஒருவருடைய பெற்றோர் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது.

அந்தத் தியாகி ஒரு சிறந்த உதைப்பந்தாட்ட வீரர்.அவரைத் தவிர ஏனைய சகோதரர்கள் ஏற்கனவே புலம்பெயர்ந்து விட்டார்கள். அவர்தான் பெற்றோருக்கு உதவியாக இருந்தார். கடைசிக் கட்டப் போரில் கட்டாய ஆட் சேர்ப்பின்போது அவர் போருக்குள் இணைக்கப்பட்டார்.போர்க்களத்தில் உயர்நீத்தார்.தாயும் போரில் கொல்லப்பட்டு விட்டார்.தனித்து விடப்பட்ட தந்தையை  புலம்பெயர்ந்து வாழும் ஒரு பிள்ளை உறவினர் ஒருவருக்கூடாக முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார்.மேற்படி தகவல்களைச் சேகரித்த பழைய மாணவர்கள் அந்த முதியோர் இல்லத்துக்கு வந்துவிட்டார்கள்.ஆனால் அவர் விடுமுறையில் சென்று விட்டதாக முதியோர் இல்லத்தில் கூறப்பட்டது. விசாரித்தபோது தெரிந்தது, வெளிநாட்டில் வாழும் ஒரு பிள்ளை தாயகத்துக்கு வந்திருந்தபடியால் தகப்பனைப் பார்ப்பதற்காக முதியோர் இல்லத்தில் இருந்து அவரை தான் இருக்கும் இடத்துக்கு எடுத்திருக்கிறார். பழைய மாணவர்களில் ஒருவர் அந்தப் பிள்ளையின் கைபேசி இலக்கத்தை எடுத்து அவரோடு கதைத்திருக்கிறார்.அவரையும் முதியவரையும் சந்திப்பதற்காக வரப்போவதாகவும் கூறியிருக்கிறார்.ஆனால் அதன்பின் அந்தப் பிள்ளை தொடர்பு எடுக்கவில்லை மட்டுமல்ல, தகப்பனைக் கொண்டுவந்து இல்லத்தில் சேர்த்துவிட்டு வெளிநாட்டுக்குப் போய் விட்டார்.

இரண்டாவது உதாரணம், ஒரு பேராசிரியர்.பல மாதங்களுக்கு முன்பு அவர் இறந்தபொழுது அவருடைய உடலை யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு கொடுக்குமாறு கேட்டிருந்தார்.அவரும் அவருடைய மனைவியும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில்தான் வசித்து வந்தார்கள். யாழ்ப்பாணத்தின் உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் பீடாதிபதியாக இருந்தவர் அவர்.

மூன்றாவது உதாரணம்,ஓர் அரசியல் செயற்பாட்டாளர்.ஈழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய மொழிபெயர்ப்பாளர்.நோர்வியின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளின்போது பெரும்பாலான எல்லாப் பேச்சுவார்த்தைகளிலும் அவருடைய முகம் உண்டு. அவருக்கு ஒரே பிள்ளை. அவரும் புலம்பெயர்ந்து விட்டார்.2009க்கு பின் அவரை தன்னுடன் வந்து இருக்குமாறு பிள்ளை அழைத்திருக்கிறார். ஆனால் இந்த முதியவர் தாயகத்தை விட்டு வெளியேபோக விரும்பவில்லை.எனவே அவருடைய பிள்ளை அவரை மாதாந்தம் பெருந்தொகை பணத்தை அறவிடும் தனியார் முதியோர் இல்லம் ஒன்றில் சேர்த்து விட்டார்.அந்த மொழிபெயர்ப்பாளர் அந்த முதியோர் இல்லத்தில்தான் உயர்நீத்தார்.

நான்காவது உதாரணம்,சில மாதங்களுக்கு முன் நடந்தது.புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வசிக்கும் எனது நண்பர்,ஒர் அரசியற் செயற்பாட்டாளர், அண்மையில் தனது தகப்பனாரைப் பராமரிப்பதற்கு யாரையாவது ஒழுங்கு செய்ய முடியுமா என்று கேட்டார். இந்த விடயத்தில் முதியோர் இல்லத்துக்குப் போக விரும்பாத முதியவர்களைப் பராமரிப்பதற்கு ஊரில் யாராவது உதவியாளரைக் கண்டுபிடித்தால் அது நல்லது.

இரண்டாவது தெரிவு,மானிப்பாயில் உள்ள  மருத்துவர் கிரீன் ஞாபகார்த்த மருத்துவமனையில் முதியோரைப் பராமரிப்பதற்கான ஒரு கட்டமைப்பு உண்டு. அங்கு பயிற்றப்பட்ட தாதியர்கள் உண்டு.அவர்களைச் சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்தலாம்.

மூன்றாவது தெரிவு,செக்யூரிட்டி நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டு வீட்டுக்கு ஒரு செக்யூரிட்டியை வேலைக்கு அமர்த்தலாம்.இந்த ஏற்பாடு எல்லா முதியவர்களுக்கும் பொருந்தாது.தன்னுடைய அலுவல்களைத் தானே கவனிக்கக்கூடிய அளவுக்குத் தெம்பாக உள்ள முதியவர்களுக்குத்தான் பொருந்தும்.

நான்காவது ஏற்பாடு,வீட்டில் கண்காணிப்புக் கமராவைப் பொருத்துவது. இதுவும் தானாக இயங்கும் முதியவர்களுக்குத்தான் பொருந்தும்.ஆனால் கமரா சரிவர இயங்கவில்லை என்றாலோ அல்லது கமராவின் கண்காணிப்பு வீச்சுக்கு வெளியே முதியவர் போய்விட்டாலோ அதன் பின் அவருடைய நடமாட்டங்களைக் கவனிக்க முடியாது.இதில் கமராவைத் தொடர்ச்சியாக அடிக்கடி பார்க்க வேண்டியிருக்கும். யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டில் அவ்வாறு கமரா பொருத்தப்பட்டிருந்தது.பிள்ளைகள் முதியோரின் நடமாட்டத்தைக் கமரா மூலம் கண்காணிக்க முடிந்தது.ஆனால் ஒருநாள் முதியவரைக் காணவில்லை.இரண்டாம் நாளும் காணவில்லை.பிள்ளைகள் அயலவர்களோடு தொடர்புகொண்ட பொழுது ஆயலவர்கள் வீட்டு வளவில் கமராவின் கண்காணிப்பு வீச்சுக்கு வெளியே முதியவர் விழுந்து கிடக்கக் கண்டுபிடித்தார்கள்.ஆனால் கண்டுபிடித்தபொழுது முதியவருக்கு உயிர் இருக்கவில்லை. அவர் இறந்து இரண்டு நாட்களாகி விட்டது.

இந்த ஏற்பாடுகளில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்யும்படி எனது நண்பரிடம் சொன்னேன்.தனித்து விடப்பட்ட முதியவர்களுக்காகக் காசு செலவழிக்கத் தயாராக இருப்பவர்களுக்குத்தான் இந்தத் தெரிவுகள்.இல்லையென்றால் ஏதாவது முதியோர் இல்லத்துக்குத்தான் போக வேண்டும்.

Geriatrician என்று அழைக்கப்படுகின்ற முதியோர் துறைசார் மருத்துவர்கள் தமிழில் மிகக்குறைவு.அதுமட்டுமல்ல முதியோரைப் பராமரிப்பதற்கான பயிற்றப்பட்ட தாதியர்களும் தமிழ்பகுதிகளில் குறைவு.இக்கட்டுரையில் முன்பு குறிப்பிடப்பட்ட மானிப்பாய் கிரீன் ஞாபகார்த்த மருத்துவமனையில் முதியோர் பராமரிப்புக்கென்று பயிற்சிகளை வழங்கும்(Institute of Medical Sciences) “மருத்துவ விஞ்ஞான நிறுவனம்” என்ற நிறுவனம் உண்டு.2013இலிருந்து முதியோரைப் பராமரிப்பதற்குரிய தொழில்சார் பயிற்சிகளை வழங்கிவருகிறது.இங்கு வழங்கப்படும் தொழில்சார் பயிற்சியானது இலங்கைத் தீவின் தேசிய தொழில்சார் தகமை மட்டத்தில் நான்காவது மட்டத்துக்குரியது. ஐந்தாவது தொழிற்சார் தகமை மட்டும்தான் டிப்ளமோ. அப்படிப் பார்த்தால் தமிழ்ப்பகுதிகளில் இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கும் முதியோரைப் பராமரிக்கும் தாதியர்கள் அனைவருமே குறைந்தபட்சம் டிப்ளோமா தரத்துக்குரிய தொழில் தகமையைக்கூட கொண்டிருக்கவில்லை.ஆனால் மேற்கத்திய நாடுகளில் அது நான்கு ஆண்டுகாலப் பட்டப்படிப்பாகவும் காணப்படுகிறது.

வடக்கில் மானிப்பாய் கிரீன் ஞாபகார்த்த மருத்துவமனையில் மட்டும்தான் அவ்வாறான கற்கை நெறி உண்டு.அதேசமயம் முதியோரியல் துறைக்குரிய மருத்துவ நிபுணர்களின் தொகையும் குறைவு.

ஆனால் தமிழர் தாயகத்தில் வடக்கில்  மட்டும் 60வயது கடந்த முதியோர் மொத்தம் இரண்டு இலட்சத்து 29ஆயிரத்து867பேருக்கு மேல் உண்டு.இதில் யாழ்ப்பாணத்தில் மட்டும் ஒரு லட்சத்து 54ஆயிரத்து 626 முதியோர் உண்டு. வடக்கில் மட்டும் மொத்தம் 28 முதியோர் இல்லங்கள் உண்டு.இவற்றுள் ஆகப் பெரியது கைதடியில் உள்ள அரச முதியோர் இல்லந்தான்.அங்கே 200க்கும் குறையாத முதியோர் உண்டு.அதாவது வடக்கில் மட்டும் மொத்த ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 20 விகிதம் முதியவர்கள்.

எனக்குத் தெரிந்து புலம் பெயர்ந்துபோன பிள்ளைகளில் ஒரு பகுதியினர் தமது முதிய பெற்றோரைப் பராமரிப்பதற்காக ஊரில் குறிப்பிட்ட காலத்துக்கு வந்து தங்கி நிற்கிறார்கள்.அதிகம் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோருக்கு தொடர்ச்சியாக யாராவது ஒரு பிள்ளை வீட்டில் நிற்கின்றது.அது ஒரு கொடுப்பினை.ஆனால் எல்லாருக்கும் இல்லை.

எனவே தமிழ் மக்கள் இதுதொடர்பில் வேகமாக முடிவெடுக்க வேண்டும்.தாயகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் புலம் பெயர்ந்த தமிழர்களும் சேர்ந்து இதுதொடர்பாக பொருத்தமான முடிவுகளை  எடுக்கலாம்.இதுவிடயத்தில் பின்வரும் விடயப்பரப்புகளின் மீது கவனத்தைக் குவிக்கவேண்டும்.முதலாவதாக எத்தனை முதியவர்கள் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள் என்பது தொடர்பாக சரியான புள்ளி விபரங்களைச் சேகரிப்பது. இரண்டாவது,முதியோரை பராமரிப்பதற்கான நிறுவனங்களைக் கட்டியெழுப்புவது.மூன்றாவது,பராமரிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் கற்கை நெறிகளை குறைந்தபட்சம் தனியார் கல்விக் கட்டமைப்புகளுக்கு ஊடாகத் தொடங்குவது.இது ஒரு தேசியக் கடமை.

முதியோர் இல்லங்களைக் கட்டியெழுப்புவது என்பது தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் தேச நிர்மாணத்தின் ஒரு பகுதிதான். முதியோரைப் பராமரிப்பதற்கு மட்டுமல்ல கைவிடப்பட்ட முன்னாள் இயக்கத்தவர்கள்,விதவைகள்,மாற்றுத் திறனாளிகள்,மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்,போதைப்பொருள் பாவனையாளர்கள் போன்ற எல்லாத் தரப்பினரையும் பராமரிப்பதற்கான  கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.இவையாவும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான கட்டமைப்புகள்தான்.

இனப்பிரச்சனைக்குத் தீர்வு வரும்வரையிலும் இந்தக் கட்டமைப்புகளை ஒத்தி வைக்க முடியாது. பராமரிக்கப்பட வேண்டிய பிரிவினர் பராமரிக்கப்படாமல் அனாதைகளாக விடப்படுவது என்பது ஒரு தேசிய அவமானம்.எனவே தேசத்தைக் கட்டியெழுப்புவதன் ஒரு பகுதியாக மேற்கண்ட நிறுவனங்களைக் கட்டியெழுப்ப வேண்டும்.நான் இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கும்போது எங்கேயோ ஒரு தொலை கிராமத்தில் யாரோ ஒரு முதியவர் உதவிக்கு ஆளில்லாமல் இறந்து போயிருக்கலாம்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *