அழகான அந்தப் பனைமரம்

எனது நண்பர் ஒருவர் சொன்னார், தேனிசை செல்லப்பாவை ஓர் ஈழத் தமிழர் என்றுதான் தன்னுடைய தகப்பனார் நம்பினார் என்று.அந்தளவுக்கு செல்லப்பாவின் குரல் ஈழத் தமிழர்களுக்கு நெருக்கமானது.

பாக்கு நீரிணையால் பிரிக்கப்படும் இரண்டு தமிழ்ச் சமூகங்களுக்கும் இடையே கலைத்துறைப் பிணைப்பு என்று பார்த்தால்,சாஸ்த்திரிய சங்கீதமும் பெருமளவுக்குப் பொதுவானது.ஜனரஞ்சக இசையும் பெருமளவுக்குப் பொதுவானது. இதில் ஈழத் தமிழர்களின் ஜனரஞ்சக இசை தனக்கென்று ஒரு தனித்துவமான தடத்தை துலக்கமாக உருவாக்கத் தொடங்கியது,ஈழத்து மெல்லிசைப் பாடல்களில்தான் என்று மெல்லிசைப் பாடகரும் முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் சண்முகலிங்கனும்,சேர்.பொன்.இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் பீடாதிபதியான கலாநிதி ரொபேர்ட்டும் கூறுகிறார்கள்.”ஈழத்து மெல்லிசைப் பாரம்பரியம் ஓர் இயக்கமாக வளரவேண்டும் என்று நான் கனவு கண்டேன். ஆனால் பின்னாளில் இயக்க மெல்லிசைப் பாடல்களே கிடைத்தன..”என்று பேராசிரியர் சண்முகலிங்கன் கூறுகிறார்.

“இலங்கைக்கான இசை மரபினை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை பாடகரும் மருத்துவப் பேராசிரியருமான பரமேஸ்வரன் 1974இல் யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் முன் வைத்ததாக” சண்முகலிங்கன் கூறுகிறார்.“1970களில் ஈழத்துக்கான தனித்துவ ஆக்க இசையாக மெல்லிசையை உருவாக்கும் முயற்சியானது, ஆக்க இசைக் கலைஞரான எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்களின் நாட்டார் பாடல் நவீனப்படுத்துதலுடனேயே தொடங்குவது இங்கு கவனத்திற்குரியது. இந்த தேடலில் காவலூர் ராஜதுரை, எம்.கே.ரொக்சாமி போன்றோர் பராவுடன் இணைந்திருந்தனர்”என்று சண்முகலிங்கன் கூறுகிறார்.

மெல்லிசைப் பரப்பில் ஈழத் தமிழர்களுக்கு என்று தனித்துவமான ஒரு தடத்தைக் கட்டியெழுப்ப முற்பட்டவர்களில் கண்ணன் மாஸ்டர் முக்கியமானவர்.அதே கண்ணன் மாஸ்டர்தான் பின்னர் போர்க்காலப் பாடல்களில் ஈழத் தமிழர்களுக்கேயான ஒரு தனித்துவமான தடத்தைச் சிருஷ்டித்தவர்களில் முதன்மையானவர் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

ஆயுதப் போராட்டதுக்கு முந்திய மிதவாத அரசியலில்,இந்திய சினிமாப் பாடல்களே தேர்தல் மேடைகளில் அதிகம் ஒலித்தன.ஆனால் ஆயுதப் போராட்டம் தனக்கென்று ஒரு தனித்துவம்மிக்க இசைத் தடத்தை உருவாக்க விளைந்தது.அது தேச நிர்மாணத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தது.ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தமிழுக்கு புதிய போர்க்களச் சொற்களை-போர்த் தமிழை-அறிமுகப்படுத்தியது.நவீன தமிழில் கிடைத்த புதிய போர் அனுபவங்கள் இலக்கியமாகின;நாடகமாயின;ஓவியமாகின; இசைப் பாடல்களாயின. அவை மண் மணத்தோடு தனித்துவமான ஒரு புதிய கலை இலக்கியத் தடத்தை உருவாக்கின.

ஈழப் போரோடு எழுச்சிபெற்ற இசைப் பாரம்பரியத்தில் முதலில் கேட்ட குரல்களில் ஒன்று தேனிசை செல்லப்பாவுடையது.செல்லப்பாவின் பாடல்கள் ஒருபுறம் ஈழத் தமிழர்களுக்கேயான தனித்துவமான போர்ப் பாடல் என்ற வகைக்குள் அடங்கும். அதேசமயம் அதுவும் ஈழ-தமிழக இசைப் பிணைப்பின் ஒரு பகுதிதான்.இது செல்லப்பாவில் தொடங்கி தமிழகத்தின் வேறு சில பிரபலமான பாடகர்கள்,இசைக் கலைஞர்கள்,இசைத் தொழில் நுட்பவியலாளர்கள் போன்றோரின் பங்களிப்புவரை வருகிறது.

ஈழத் தமிழர்களின் போர்க் காலப் பாடல்கள் தமிழகத்தை எந்த அளவுக்கு சென்றடைந்தன? பரவலாகின? இந்தக் கேள்வி உண்டு.இப்பொழுது ஈழத் தமிழ் வீடுகளில் அதிகமாகப் பார்க்கப்படும் தொலைக்காட்சி தொடர் நிகழ்ச்சிகளில் ஒன்று “சரிகமப”.அது தமிழக சினிமாத் தொழில்துறையின் நீட்சி. அங்கே ஈழத் தமிழர்களின் கண்ணீரும் காயங்களும் சந்தைப்படுத்தப்படுகின்றன என்ற விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் அது ஈழத்தமிழ் இசை ஆளுமைகளை பெருந் தமிழ்ப் பரப்பை நோக்கி விரிக்கின்றது. அது மிகஅவசியம். பெருந்தமிழ்ப் பரப்பை நோக்கி ஈழத்தமிழ் கதைகளைக் கொண்டு போக வேண்டும் “டூரிஸ்ட் ஃபேமிலி”, “நீளிரா “ஆகிய படங்களைப்போல.

இவ்வாறு சரிகமப மேடையில் சில ஆண்டுகளுக்கு முன் ஈழத்து இசை யமைப்பாளர் கண்ணனின் பேத்தி பாடினார். அவர் மேலெழுந்த காலகட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவருடைய பெற்றோரை மேடைக்கு அழைத்தார்கள்.அங்கே கண்ணனின் மகள் சொன்னார், என்னுடைய அப்பா ஈழத்தில் ஒரு “லெஜண்ட்” என்று. உண்மை. ஈழப் போர்க் காலப் பாடல்களைப் பொறுத்தவரை கண்ணன் மாஸ்டர் ஒரு லெஜன்ட்தான். ஆனாலும் சரிகமப மேடையில் இருந்த நடுவர்களில் எத்தனை பேருக்கு அவரைத் தெரிந்திருந்தது ?

ஈழத் தமிழர்களின் போர்ப் பாடல்கள் எந்தளவுக்கு தமிழகத்தின் வெகு சனப் பரப்பைச் சென்றடைந்திருந்தன?தமிழகத்தின் சினிமா இசைப் பிரம்மாண்டத்தின் முன் ஈழத் தமிழர்களின் போர்ப் பாடல்கள் ஜனவசியம் குறைந்தவையா?

ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் அவை பரவலாகக் கொண்டாடப்பட்டன. தாயகத்தை விட்டுப்பிரிந்த ஏக்கத்தோடு தவித்த முதலாம் தலைமுறைப் புலம் பெயரிகளின் திரும்பக் கிடைக்காத இறந்த காலம் ஒன்றின் மங்காத நினைவுகளை போர்ப் பாடல்கள் இரைமீட்டன.இதனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் செல்லப்பாவைக் கொண்டாடினார்கள்; போஷித்தார்கள் .

தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகிய சுந்தரராமசாமி புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில்தான் ஈழத்துப் போர்க் காலப் பாடல்களைக் கேட்டிருக்கிறார்.அந்தப் பாடல்களை அவர் பாராட்டி எழுதியிருக்கிறார்.“காற்றில் கலந்த பேரோசை” என்ற அவருடைய கட்டுரைகளின் தொகுப்பில் இந்த விடயம் உண்டு.

இலங்கையில் ஈழத்துப் போர்க் காலப் பாடல்களில் பலவற்றுக்குச் சட்டரீதியான தடை உண்டு.ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் அந்தப் பாடல்கள் பரவலாகக் கேட்கப்படுகின்றன; இசைக்கப்படுகின்றன.தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளின் நீண்ட பெருஞ் சாலைகளில், நீண்ட தூரப் பயணங்களில் அந்தப் பாடல்கள் ஒலிப்பதுண்டு. 2009 க்குப்பின் சீமானின் “நாம் தமிழர் கட்சி”யும் தமிழகத்தில் அந்தப் பாடல்களைக் கொண்டு செல்கிறது. அண்மை ஆண்டுகளில் தாயகத்திலும் இசை மேடைகளில் சில பாடல்களைக் கேட்க முடிகிறது.

ஈழத்துப் போர்க் காலப் பாடல்களின் முன்னோடிகளில் ஒருவராக செல்லப்பா காணப்படுகிறார்.அவர் பெருமளவுக்கு மாற்று நீரோட்ட இசைப் பாரம்பரியத்துக்கு ஊடாக வந்தவர்.சி.பா.ஆதித்தனாருடன் இணைத்து தமிழின உரிமைப் பாடல்களைப் பாடியவர்.லாப நோக்கமுடைய வெகுசன சினிமா இசைப் பாரம்பரியத்திலிருந்து வந்தவரல்ல.அதனால்தான் அவர் ஈழப் போருக்கு நெருக்கமாக வந்தார். ஈழப் போராட்டம் பாடல்களைத் தயாரிக்கத் தொடங்கியபோது அதன் முதற் குரல்களில் ஒருவராக செல்லப்பாவும் இணைந்தார்.

ஈழத்துப் போர்க்கால பாடல்களில் காசி-செல்லப்பா இசைச் சோடி தனித்துவமானது;முக்கியமானது.காசியானந்தனின் பாடல் வரிகளை செல்லப்பாவின் இசையும் குரலும் சேர்ந்து தூக்கின. பின்னர் புதுவை-கண்ணன் என்று மற்றொரு இசைச் சோடி தோன்றியது. ஈழத்துப் போர்க் காலப் பாடல்கள் ஒரு கட்டத்தில் செல்லப்பாவைக் கடந்து புதிய இசையமைப்பாளர்களையும் புதிய பாடகர்களையும் உற்பத்தி செய்தன.ஆனால் நெருக்கடியான ஒரு தொடக்க காலகட்டத்தில் கேட்ட குரல் என்ற காரணத்தால் செல்லப்பாவின் குரல் ஈழத்தமிழர்களின் நினைவுகளுக்கு அன்னியோன்யமாகி விட்டது.

வணிக நோக்கிலான சோடினைகள் இல்லாத,கிராமத்து எளிமையும் அப்பாவித்தனமும் தொன்மையும் கலந்த அடர்த்தியான குரல்.சிக்கலான இசைக்கருவிகளை பயன்படுத்தாமல் மிகக் குறைந்த இசைக்கருவிகளோடு உருவாக்கப்பட்ட எளிமையான பாடல்கள் .இவைதான் செல்லப்பா.

செல்லப்பா நவீன காலத்தில் ஈழ-தமிழக பிணைப்பில் ஒரு தனி அத்தியாயம். போர்க்காலத்தின் நினைவுகளோடு பிரிக்கப்பட வியலாதபடி பிணைக்கப்பட்டிருக்கும் ஒரு தமிழகக் குரல் அது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *