வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள்

அனர்த்த காலங்கள் அவற்றுக்கேயான புதிய பேச்சாளர்களை வெளிக் கொண்டு வரும். இறுதிக்கட்டப் போரின்போது வன்னி கிழக்கில் வாழ்ந்த மக்களின் சார்பாக குரல்தரவல்ல அதிகாரியாக மருத்துவர் சத்தியமூர்த்தி காணப்பட்டார்.அப்படித்தான் அண்மை ஆண்டுகளில் இயற்கை அனர்த்தங்களின்போது மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கைகளை விடுக்கும் ஒரு “பப்ளிக் இன்ரலெக்சுவலாக” பேராசிரியர் பிரதீபராஜா மேலெழுந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 03.09.2025 புதன்கிழமை அவர் முகநூலில் எதிர்வரும் மாதங்களுக்கான வானிலை மாற்றங்கள் குறித்து நீண்ட முன்னறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.அதில் நொவம்பர் மாத நடுப்பகுதியிலும் இறுதிப்பகுதியிலும்  ஏற்படக்கூடிய தாழமுக்கங்கள் தீவிர தாழமுக்கங்கள் ஆகவோ அல்லது புயல்களாகவோ மாறலாம்  என்பதை கிட்டத்தட்ட  மூன்று மாதங்களுக்கு முன்னரே முன்னறிவித்திருந்தார்.

அரச வளிமண்டலவியல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக வானிலை மாற்றங்களை அறிவிக்கும்.வரக்கூடிய ஆபத்துக்களையும் முன்கூட்டியே அறிவித்து எச்சரிக்கும்.ஊடகங்கள் அவற்றை உடனுக்குடன் அறிவித்து மக்களை எச்சரிக்கை செய்யும்.இம்முறை டித்வா புயல் தாக்கப்போவது குறித்து அரச வளிமண்டலவியல் திணைக்களம் பொருத்தமான எச்சரிக்கைகளை முன்னறிவிக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.புயல் அனுராதபுரத்தை அடையும் வரையிலும் அதுதொடர்பான எச்சரிக்கைகள் விடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

ஆனால் தமிழ்ப் பகுதிகளைப் பொறுத்தவரை குறிப்பாக யாழ்ப்பாணத்தில், பிரதீபராஜா இதுபோன்ற இயற்கை அனர்த்தங்களைக் குறித்து ஏற்கனவே சில நாட்களுக்கு அல்லது பல நாட்களுக்கு முன் எச்சரிப்பதுண்டு.அவருடைய எச்சரிக்கைகள் சில சமயங்களில் பிழைக்கலாம்.மிகைப்படுத்தலாகவும் இருக்கலாம்.அதனால் சில சமயங்களில் மீனவர்களுக்கோ விவசாயிகளுக்கோ அல்லது ஏனைய  துறையினருக்கோ நட்டங்கள் ஏற்படலாம். ஆனால் அவர் எதிர்வு கூறியதுபோல இயற்கை அனர்த்தங்கள் நிகழ்ந்து அதனால் ஏற்படக்கூடிய உயிர்ச் சேதங்களோடு ஒப்பிடுகையில்,வருமுன் காக்கும் நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய பொருட்சேதம் பொருட்படுத்தத்தக்கது அல்ல.

மழைக்காலங்களில் மலைகளில் மண் சரிவு ஏற்படுவது வழமை.ஒவ்வொரு பருவ மழைக்கும் மலையக மக்கள் மண் சரிவுகளில் சிக்கி உயிரிழந்து வருகிறார்கள்.மழை வீழ்ச்சி அதிகரிக்கும்போது,மண் சரிவு ஏற்படக்கூடிய பிரதேசங்களில் வாழும் மக்களை எச்சரிக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு உண்டு.அந்த மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.இக்கட்டுரையில் முன் கூறியதுபோல வருமுன் காக்கும் நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய சிரமங்கள், நட்டங்களை விடவும் அந்த முன்னெச்சரிக்கையின்படி நிகழும் அனர்த்தத்தால் இழக்கும் உயிர்களின் நட்டம் பெரிது.நாடு இப்பொழுது அவ்வாறான உயிர்ச் சேதத்தைத்தான் எதிர்கொண்டிருக்கிறதா?.

ஒரு புயல் தாக்கப் போகிறது என்பதனை பிரதீபராஜா ஏற்கனவே தெளிவாகக் கூறியிருந்தார்.அதை அவர் வழமைபோல தனது முகநூல் பக்கத்தில் மட்டும் பகிரவில்லை.இந்தமுறை வடமாகாண ஆளுநர் அவரை தன்னுடைய அலுவலகத்துக்கு உத்தியோகபூர்வமாக அழைத்து உரையாடியுள்ளார். அந்தச் சந்திப்பில் சம்பந்தப்பட்ட துறைசார் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.அப்பொழுது பிரதீபராஜா தெரிவித்த தகவல்கள் பின்னர் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளிவந்தன.அதன்படி 130 ஆண்டுகளுக்குப் பின் ஒரு பேரிடர் நாட்டை நெருங்கி வருவதனை அவர் முன்கூட்டியே எச்சரித்திருந்தார்.

இந்த விடயத்தில் இப்போதுள்ள வடமாகாண ஆளுநர் வேதநாயகன் பாராட்டப்பட வேண்டியவர். ஏனென்றால் அவருக்கு முன் இருந்த ஒரு பெண் ஆளுநர் பிரதீபராஜாவை பொருட்படுத்தவில்லை.அந்தப் பெண் ஆளுநரின் காலத்தில் நடந்த ஒரு மெய்நிகர் சந்திப்பில் பிரதீபராஜா தனது கருத்தைக் கூற முற்பட்டபோது ஆளுநர் அவரைப் பொருட்படுத்தவில்லை. இதுதொடர்பாக அரச வளிமண்டலவியல் திணைக்களங்கள் தரும் தகவல்களைத்தான் நாங்கள் உத்தியோகபூர்வமாக எடுத்துக்கொள்ள முடியும்.உங்களுடைய தகவல்கள் எங்களுக்குத் தேவையில்லை என்ற பொருள்பட அவர் பிரதிபராஜாவை அவமதித்திருக்கிறார்.

ஆனால் இம்முறை டித்வா புயலுக்கு முன்னரே வடமாகாண ஆளுநர் பிரதீபராஜாவுக்கு உரிய கௌரவத்தை கொடுத்து அவரை அழைத்துப் பேசியிருக்கிறார்.பிரதீபராஜா எச்சரித்ததை போலவே புயல் பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இதில் பிரதீபராஜாவைப் போலவே சென்னையை மையமாகக் கொண்ட செல்வக்குமார் என்ற வானிலை முன்னறிவிப்பாளரும் இலங்கையை நோக்கி முன்னெச்சரிக்கைகளை விடுத்திருக்கிறார்.

“வானிலை அறிவியல்” என்ற யூடியூப் தளத்தில்,செல்வகுமார் இலங்கைக்கான வானிலை அறிக்கை என்ற தலைப்பில் ஒரு காணொளியை 24ஆம் திகதி வெளியிட்டார்.நவம்பர் 26 தொடக்கம் 28 வரையிலுமான மூன்று நாட்களில் முன்னப்பொழுதும் காணாத பெருமழை பெய்யும் என்றும் நிலச்சரிவு ஏற்படும் என்றும் எச்சரித்திருந்தார். ( https://youtu.be/p-ayF49Ov7Q?si=lf20WuDgEkL-hr0R ) இந்த இயற்கை அனர்த்தத்தில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கு மக்கள் கால்நடைகளையும் முக்கிய ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார்.இந்த இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் அவசர கால நிலையை பிரகடனம் செய்ய வேண்டிவரும் என்பதையும் செல்வகுமார் முன்கூட்டியே மிகச்சரியாக ஊகித்திருந்தார்.தன்னுடைய எச்சரிக்கையை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் அந்த காணொளியில் அவர் கேட்டிருந்தார்.அவர் பயன்படுத்திய வார்த்தைகளில்  மிகைப்படுத்தல்கள் இருந்திருக்கலாம்.ஆனால் இழக்க கொடுத்தவர்களின் நோக்குநிலையில் இருந்துபார்த்தால் அவை மிகைப்படுத்தலாகத் தெரியாது.

அதாவது நாட்டுக்குள் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு புவியியல் துறை பேராசிரியரும் நாட்டுக்கு வெளியே அயலில் தமிழகத்திலிருந்து ஒரு துறைசார் வல்லுநரும் எச்சரித்த போதும்கூட அந்த எச்சரிக்கைகள் சம்பந்தப்பட்டவர்களின் காதில் விழவில்லை.அதற்குக் காரணம் என்ன?

பொதுவாக சமூக வலைத்தளங்களில் யூடியூப்களில் வரும் செய்திகள், தகவல்கள்,எச்சரிக்கைகள் தொடர்பாக பொருட்படுத்தாத ஒரு பொதுப் புத்தி வளர்ந்து வருகிறது.யூடியூப் தலைப்புக்கள் அல்லது எச்சரிக்கைகள் மிகைப் படுத்தப்பட்டவை என்ற அபிப்பிராயம் பரவலாக உண்டு.வியூவர்ஸை கவர்ந்திழுப்பதற்காக கவர்ச்சியான தலைப்புகளைப் போடும் யூடியூப் பாரம்பரியமானது பாரதூரமான விடையங்களின் மீதான சீரியஸான கவனிப்பைக் குறைத்து விடுகிறது.பல யூடியூப்களில் தலைப்புக்கும் உள்ளடக்கத்துக்கும் தொடர்பு இருப்பதில்லை.இதனால் தலைப்பைக் கண்டு உள்நுழைந்து ஏமாற்றமடைந்த வியூவர்ஸ் குறிப்பாக அறிவுதெளிந்த, புத்திசாலித்தனமான வியூவர்ஸ் மீண்டும் ஒரு தடவை யூடியூப்களின் கவர்ச்சியான தலைப்புகளை,எச்சரிக்கைகளைக் கண்டு ஏமாற விரும்புவதில்லை. இந்த யூடியூப் பண்பாடு,வானிலை முன்னெச்சரிக்கை போன்ற விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

யூடியூப் பார்வையாளர்கள் மட்டுமல்ல ஏனைய சமூக வலைத்தள நுகர்வோரும் அவ்வாறுதான்.எல்லாவற்றையும் ஸ்குரோல் பண்ணிக் கடக்கும் ஒரு சமூக வலைத்தளச் சூழல் வளர்ந்து விட்டது.உண்மையான எச்சரிக்கை எது உண்மையான ஆபத்து எது என்பதனை பகுத்தறிய முடியாத அளவுக்கு சமூக வலைத்தளச் சூழல் மேலோட்டமானதாக,அதிகம் ஜனரஞ்சகமானதாகக் காணப்படுகிறது.

பிரதீபராஜாவையும் செல்வகுமாரையும் தொடர்ந்து அவதானித்துவரும் சீரியசான சமூக வலைத்தளப் பாவனையாளர்கள் அவர்களுடைய எச்சரிக்கைகள் முன்னுணர்த்தும் ஆபத்துக்களை விளங்கிக் கொள்வார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரட்ன கூறுவதுபோல,இலங்கை அரசாங்கம் அல்லது சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் வருமுன் காக்கும் நடவடிக்கைகளை எடுத்திருந்தால்,அழிவை ஒப்பீட்டளவில் குறைத்திருக்கலாமா ?

நாடாளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரட்ன,நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது,கம்பளை பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவுக்கும்,  உயிரிழப்புகளுக்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம் சாட்டினார்.அது இயற்கை அனர்த்தம் என்ற போதிலும் உயிரிழப்புகள் இந்தளவுக்கு அதிகரிக்கக் காரணம்,உரியநேரத்தில் முன்னெச்சரிக்கை விடுக்கப்படாமையே  என்றும் கூறினார். வழக்கமாக 160 மில்லிமீற்றர் மழை பெய்தாலே மகாவலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உண்டு.ஆனால், இம்முறை 400 மில்லிமீற்றர் மழை பெய்யும் என முன்கூட்டியே தெரிந்திருந்தும், மக்களுக்கு அதுகுறித்து எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை  என்றும், குறிப்பாக, நவம்பர் 27ஆம்திகதி ஏற்படவுள்ள ஆபத்தை உணர்ந்து,26ஆம் திகதி நடைபெறவிருந்த உத்தியோகபூர்வ கூட்டங்கள் ரத்து செய்யப்பட்ட போதிலும், சாதாரண மக்களுக்கு அந்த ஆபத்துக் குறித்து  அறிவிக்கப்படாததற்கு, சம்பந்தப்பட்ட திணைக்களங்களே பொறுப்பு என்று அவர் குற்றம் சாட்டினார்.நாவலப்பிட்டி நீர்ப்பாசனத் திணைக்கள உபஅலுவலகம் நீர்மட்டத்தை அளவிட்டிருந்தும்,அந்தத் தகவலை கம்பளை மக்களுக்குப் பரிமாறத் தவறியதே பல உயிர்கள் பறிபோகக் காரணமாக அமைந்தது என்றும்  அவர் கூறினார்.மேலும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கொத்மலை அணை திறக்கப்பட்டமை நிலைமையை மேலும் மோசமாக்கியது என்றும் அவர் குற்றம் சாட்டினார்

புயலுக்கு பின்னரான உரையாடல்கள் அவ்வாறு அரசு திணைக்களங்களின் மீதான விமர்சனங்களாகவே காணப்படுகின்றன.தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பகுதியினர் அரசு திணைக்களங்களில் பிழை பிடிக்கிறார்கள் என்று அரசாங்கத்துக்கு ஆதரவானவர்கள் கூறுகிறார்கள். எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் இயற்கை அனர்த்தங்களை துல்லியமாக எதிர்வுகூற முடியாது என்று அரசாங்கத்துக்கு ஆதரவான தமிழ் விரிவுரையாளர்கள் நியாயம் கூறுகிறார்கள்.

உண்மை. பேரியற்கையோடு ஒப்பிடுகையில் மனிதர்கள் அற்பமானவர்கள். சீனர்களுடைய பாரம்பரிய ஓவியங்களில் வரும் நிலக்காட்சிகளை இங்கு சுட்டிக்காட்டலாம்.அந்த நிலக் காட்சிகளில் இயற்கை மிகப் பிரமாண்டமாக வரையப்படும்.மனிதர்களோ மிகச் சிறிய,அற்ப புள்ளிகளாக காட்டப்படுவார்கள்.

எனவே பேரியற்கையின் போக்கை துல்லியமாக எதிர்வுகூறுவது கடினம்தான். ஆனால் அவ்வாறு சில துறைசார் நிபுணர்கள் எதிர்வுகூறிய போதிலும் அதை சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்கள்  கவனத்தில் எடுத்திருந்தால் இந்த அளவுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்குமா? முன்னெச்சரிக்கை மிக்க வருமுன் காக்கும் நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய நட்டத்தை விடவும் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் இடர் பெரியது.இழப்பு பெரியது.துயரம் பெரியது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *