வல்வெட்டித் துறை பட்டத் திருவிழா ஒரு பருவ காலப் பொழுதுபோக்குப் போட்டி மட்டுமல்ல.அது ஒரு பண்பாட்டுப் பெருவிழா. தமிழ் மக்களின் தேசிய ஆன்மாவை பிரதிபலிக்கும் ஒரு பெரு விழா.
பட்டத் திருவிழாக்களின் தொடக்கம் பண்டைய சீனாவாகும். அங்கே பட்டங்கள் விவசாயச் சடங்குகளோடும் யுத்தத் தேவைகளோடும் இணைக்கப்பட்டிருந்தன. சீனாவில் இருந்து ஆசியாவுக்குப் பட்டங்கள் பரவின.யப்பானிலும் கொரியாவிலும் அவை திருவிழாக்கள்,பொழுதுபோக்குக் கொண்டாட்டங்கள் என்ற வளர்ச்சியைப் பெற்றன. இந்தியாவில் “மகர் சங்கராந்தி” என்ற இந்துப் பெருவிழாவோடு பட்டத் திருவிழாவும் இணைத்துக் கொண்டாடப்படுகின்றது.
ஒரு மக்கள் கூட்டத்தை தேசமாக வனையும் அம்சங்களில் ஒன்று பொதுப் பண்பாடு ஆகும்.ஒரு மக்கள் கூட்டத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடைத் திருவிழாக்கள்,உணவுத் திருவிழாக்கள்,பட்டத் திருவிழாக்கள்… போன்றன அம்மக்கள் கூட்டத்தை ஒரு தேசமாக,உணர்வுபூர்வமாகப் பிணைக்கின்றன.
வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவானது, தமிழ் மக்களின் மகிழ்ந்திருக்கும் இயல்பை,கொண்டாட்ட உணர்வை, அழகுணர்ச்சியை, கலையுணர்வை,பட்டம் கட்டும் தொழில்நுட்பத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை. அதைவிட ஆழமான பொருளில் தமிழ் மக்களின் வீரத்தை,அரசியல் உட்கிடக்கைகளை வெளிப்படுத்துகின்றது.அந்தப் பட்டங்களில் சமூக விமர்சனம் உண்டு, போர் உண்டு,போர்க்கால நினைவுகள் உண்டு.பொழுதுபோக்கு உண்டு.சிங்கக் கொடியும் உண்டு.தமிழ்ப் போர்க் கப்பலும் சில ஆண்டுகளுக்கு முன்பு பறக்க விடப்பட்டது.ஈழத் தமிழ்ப் பட்டத் திருவிழாக்களில்,பருவக்காற்றில் பறக்க விடப்படுவது,தனிய பொழுதுபோக்குப் பட்டங்கள் மட்டுமல்ல.ஈழத் தமிழர்களின் கூட்டு உளவியலுக்குள் பதுங்கியிருக்கும் அரசியல் உணர்வுகளை வெளிப்படுத்தும் பட்டங்களும் உண்டு.
அந்த அரசியல் விருப்பங்களை கலையாக,விளையாட்டாக,போட்டியாக தமிழ் மக்கள் வெளிப்படுத்துகிறார்கள்.பாடசாலைப் பிள்ளைகள் தங்களுடைய வினோத உடைப் போட்டிகளின் போதும் அல்லது விளையாட்டுப் போட்டிகளில் இல்லங்களைச் சோடிக்கும்போதும் அங்கேயும் சிலசமயம் அரசியல் வாடை வீசும்.அதன் பின் அங்கே புலனாய்வுத்துறை வந்து நிற்கும்.கடைசியாக நடந்த சூரன் போரிலும் அந்த அரசியல் இருந்தது.
கடைசியாக நடந்த பட்டத் திருவிழாவுக்கு சில நாட்களுக்கு முன்பே ஒரு புலிமுகப் பட்டம் சமூகவலைத் தளங்களில் வலம் வந்தது.ஆனாலது வல்வெட்டித்துறையில் பறக்க விடப்படவில்லை.பதிலாக மண்டான் வெளியில் அன்று பகல் பறக்க விடப்பட்டது என்றும் பின்னர் அதைப் படைத்தரப்பு தடுத்து கீழிறக்கி வடடதாகவும் தகவல் உண்டு.பறக்க முடியாத பட்டங்களும் உண்டு?
தமிழ் மக்கள் இவ்வாறு விளையாட்டுக்களிலும்,விழாக்களிலும்,போட்டிகளிலும், கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தங்களுடைய அரசியல் பெரு விருப்பத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ஒருபுறம் ஜனாதிபதி தமிழ்ப் பகுதிகளுக்கு வருகை தரும் போது அவரோடு செல்பி எடுக்க அவரைப் பார்க்க, கைகுலுக்க ஒரு தொகுதி தமிழர்கள் வருகிறார்கள்.அல்லது அழைத்து வரப்படுகிறார்கள். அவர்கள் ஜனாதிபதியை நெருங்க முண்டியடிக்கும் காட்சிகளை அரசாங்கத்தின் டிஜிட்டல் புரோமோஷன் அணியும் சில யுடியூப்பர்களும் “வைரல்” ஆக்குகிறார்கள்.இதே மக்கள் மத்தியில் இருந்துதான் பட்டத் திருவிழாக்கள்,விளையாட்டுப் போட்டிகள்,சூரன் போர் போன்ற விழாக்களில் அரசியல் விருப்பம் வெளிப்படக் காண்கிறோம்.
சிறுவயதில் பழைய பாடத்திட்டங்களில் படித்த ஒரு பாடல்.பண்டிதர் சச்சிதானந்தம் எழுதியது. 50 வயது கடந்த அநேகருக்கு ஞாபகத்தில் இருக்கும். “சிங்கத்தின் தோட்டத்தில் சிக்கிவிட்டது எங்கள் பட்டம்.தொங்கும் அதை எடுத்து வர தூரப்போகும் புறாவாரே…” என்ற தொடரும் ஒரு பாடல் அது.
சின்னப் பிள்ளைகள் பட்டம் ஏற்றி விளையாடும்போது காற்றில் அசைந்த பட்டம் தவறுதலாக சிங்கம் படுத்திருந்த தோட்டத்தின் மரக்கிளையில் சிக்கிவிடும். அதை எடுப்பதற்கு சின்னப் பிள்ளைகள் ஒவ்வொரு மிருகத்திடமும் உதவி கேட்பார்கள்.முடிவில் ஒட்டகச்சிவிங்கி மட்டும் உதவிக்கு வரும். அதன் நீண்ட கழுத்தில் ஏறி பட்டத்தை மீட்பார்கள்.
அது குழந்தைப் பிள்ளைகள் வானில் ஏற்றிய பட்டம்.ஆனால் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக தமிழ் மக்கள் அரசியல் வானில் ஏற்றிய பட்டங்கள் யாவும் வாள் ஏந்திய சிங்கத்தின் தோட்டத்தில்தான் வீழ்ந்து விட்டன. அகிம்சைப் போராட்டத்திலும் ஆயுதப் போராட்டத்திலும் ஏற்றிய எல்லாப் பட்டங்களும் அப்படித்தான்.வாள் ஏந்திய சிங்கத்தின் தோட்டத்தில் வீழ்ந்துவிட்டன.
2009க்குப் பின்னரான கடந்த 16 ஆண்டுகளாக சிங்கத்தின் தோட்டத்தில் சிக்கிய தமது பட்டத்தை மீட்க தமிழ் மக்களால் முடியவில்லை.ஒருபுறம் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.இன்னொருபுறம், தமிழ்க் கட்சிகள் வாலறுந்த பட்டங்களை ஏற்றிக் கொண்டிருக்கின்றன. தமிழ்மக்கள் அரசியல் நீக்கம் செய்யப்படுகிறார்கள். ஒரு பகுதி தமிழர்கள் அரசியலில் சலிப்பும் வெறுப்புமடைந்து வருகிறார்கள்.புதிய ஆண்டின் தொடக்கமே ஆபாச அரசியல் காணொளியாக இருந்தது.
உள்ளதில் பெரிய தமிழ்க் கடைசிக்குள் காணப்படும் இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்கள்,ஒருவர் மற்றவரை வில்லனாக்குகிறார்கள்.பொங்கல் விழாவில், ஜனாதிபதியோடு கைகுலுக்க,செல்ஃபி எடுக்க ஒரு பகுதி தமிழர்கள் முண்டியடிக்கிறார்கள்.செல்ஃபி யுகத்தில், சிங்கத்தின் தோட்டத்தில் சிக்கிய பட்டத்தைக் கிழியாமல் எடுக்க இப்படிப்பட்ட கட்சிகளால் முடியுமா? ஒட்டகச் சிவிங்கி எங்கிருந்து வரும்?அல்லது ஒட்டகச்சிவிங்கியாய் உயரப்போவது யார்?







