தமிழ் ரப் பாடகர் வாகீசனைத் தூக்கியது அவருடைய முருகன் பாடல். அப்பாடலில் முருகன் ஒரு கடவுளாக மட்டும் சித்தரிக்கப்படவில்லை. அவர் தமிழ் மக்களைக் காக்கும் ஒரு தலைவராகவும் வர்ணிக்கப்படுகிறார். அதாவது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரை மறைமுகமாக அது சுட்டுகிறது என்று பொதுவான விளங்கிக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு,தனது முருகன் பாடலுக்குள் உட்பொதிந்துள்ள அரசியலுக்கு ஊடாகவும் கொண்டாடப்படுகின்ற ஒரு ரப் பாடகரைக் கொண்ட அதே சமூகத்தில்தான்,அண்மையில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட உறுப்பினர் ஒருவர் அனுரவை முருகனோடு ஒப்பிட்டு முகநூலில் எழுதியிருந்தார்.
அனுரவை தோழராக,சகோதரராக,ஏழைகளுக்கு இனியவராக,செல்ஃபி நாயகனாக…இன்னபிறவாக சித்திரித்த அரசியல் விசுவாசம்,அதன் அடுத்த கட்டமாக அவரை கடவுளுக்கு நிகராகச் சித்தரிக்கும் ஒரு வளர்ச்சிக்கு வந்திருக்கிறது.தேசிய மக்கள் சக்தியின் தமிழ் உறுப்பினர்களில் ஒருவர் அவ்வாறு வர்ணித்துள்ளார்.ஒரு சிங்களத் தலைவரை அவருடைய தமிழ் அடியார் ஒருவர் இவ்வாறு தெய்வ நிலைக்கு உயர்த்துவது என்பது இதற்கு முன் காணப்பட்டிராத ஒன்று.
சிங்களத் தலைவர்களைப் போற்றும் தமிழ்த் தொண்டர்கள் இதற்கு முன்னரும் இருந்திருக்கிறார்கள்.ஆனால் அப்பொழுது டிஜிட்டல் புரோமோஷன் என்பது இருக்கவில்லை.தவிர யுத்த காலங்களில் இனமுரண்பாடு கூர்மையாக இருந்தபோது சிங்களத் தலைவர்களைப் பகிரங்கமாகப் போற்ற தமிழர்கள் துணியவில்லை.இப்பொழுது ஆயுத மோதல்கள் இல்லாத ஓர் அரசியல் சூழலில்,அனுர அரைக்காற் சட்டையோடு நடக்கிறார். பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி வந்து செல்பி எடுக்கிறார்.தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் கைகளை நீட்டி அவரை அழைக்கிறார்கள்.மூதாட்டிகளும் சிறுவர்களும் நெருங்கிச் சென்று அணைக்கிறார்கள்.இந்தக் காட்சிகளை அரசாங்கத்தின் டிஜிட்டல் புரோமோஷன் அணி கவர்ச்சியான காணொளிகளாக சந்தையில் விற்கிறது.
அனுர எங்கே நாயகனாகிறார்? அல்லது நாயகன் ஆக்கப்படுகிறார்?
அவருடைய எளிமை,உடல் மொழி போன்றன அவரை விளம்பரப்படுத்த வசதியாக உள்ளன.இதற்கு முன்னிருந்த சிங்களத் தலைவர்கள் பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி வர முடியாதவர்கள்.தமிழ் மக்கள் அவர்களை நெருங்கி அணைக்க முயற்சிக்கவில்லை மட்டுமல்ல, அவ்வாறு அணைக்கவரும் தமிழர் ஒரு மனிதக் குண்டாக இருக்கலாம் என்று அச்சப்படும் அரசியல் சூழல் இரு தசாப்தங்களாக இருந்தது.
அனுர அந்தப் பயமின்றி தமிழ் மக்களை நெருங்கக்கூடிய அரசியல் சூழல் இப்பொழுது உண்டு. தவிர அவருடைய கட்சிக்காரர்கள் தமிழ் மக்களை அவரை நோக்கிக் கொண்டுசெல்கிறார்கள்.அரசாங்கத்தின் டிஜிட்டல் புரோமோஷன் அணி அதைக் காணொளிகள் ஆக்கி, வைரல் ஆக்குகிறது. இது ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய தெளிவான ஒரு பிரச்சார நிகழ்ச்சி நிரல்.பலாலியில் அவர் அரைக்காற் சட்டையோடு நடந்தபோதும்,வடமராட்சியில் ஒரு வயோதிபப் பெண் அவரை அணைத்தபோதும்,பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை அவரிடம் கொடுத்து செல்ஃபி எடுக்கும்போதும், அரசாங்கத்தின் டிஜிட்டல் புரமோஷன் அணி அதைக் கவர்ச்சியான பிரச்சாரப் பண்டமாக மாற்றுகிறது.இது திட்டமிட்டுச் செய்யப்படுகிறது.அதாவது தமிழ் மக்கள் மத்தியில் அனுரவை ஒரு நாயகனாகக் கட்டியெழுப்புவது என்பது திட்டமிட்டுச் செய்யப்படுகின்ற ஒரு பிரச்சார உத்தி.அதுதான் உண்மை.ஆனால் அவ்வாறு அனுரவை ஒரு நாயகனாகக் கட்டியெழுப்பும் அளவுக்கு தமிழ்த்தேசியப் பரப்பில் ஒரு வெற்றிடம் நிலவுகிறது என்பதும் அதே அளவு உண்மை.
அனுரவைப் போல தமிழ்ப் படப் பாடல்களின் பின்னணியில் நாயக நடை போட தமிழ் மக்கள் மத்தியில் தலைவர்கள் அல்லது செயல்பாட்டாளர்கள் இல்லையா? அல்லது இருப்பவர்களைக் கொண்டாட இந்தச் சமூகம் தயாரில்லையா? இப்பொழுது அரங்கில் காணப்படும் தமிழ் ஆளுமைகளில் யாரையுமே அவ்வாறு கொண்டாட முடியாத ஒரு நிலைமை ஏன் தோன்றியது?
தமிழ்த்தேசிய அரசியலானது ஒருவர் மற்றவரை வில்லன் ஆக்கிக் கொண்டிருக்க,துரோகி ஆக்கிக்கொண்டிருக்க,யாருமே கதாநாயகராக கதாநாயகியாக மினுங்க முடியவில்லை.
ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொள்ளாத, சந்தேகிக்கின்ற, குற்றச்சாட்டுகின்ற,ஓர் அரசியல் சூழலில்,யாரும் யாரையும் அங்கீகரிக்கத் தயாரில்லை.அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி, சமூகத் தலைவர்களாக இருந்தாலும் சரி, சமயத் தலைவர்களாக இருந்தாலும் சரி,யாரும் புகழோடு இருக்க முடியாது. சமூகத்தில் யாரெல்லாம் துருத்திக்கொண்டு,மினுங்கிக்கொண்டு மேலெழுகிறார்களோ, அவர்கள் எல்லோரின் மீதும் விமர்சனங்கள்;அவதூறுகள்.
கடந்த 16 ஆண்டுகளில் தமிழ் மக்கள் மத்தியில் எந்த ஓர் உள்ளூர் தலைவரும் சரி,மாவட்ட மட்டத் தலைவரும் சரி,தேசியமட்டத் தலைவரும் சரி தொடர்ச்சியாக ஜனவசியத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போனது ஏன்?
தமிழ்மக்கள் யார் சொன்னால் கேட்பார்கள்?யாரை வாழும் முன்னுதாரணமாகப் பார்க்கிறார்கள்? யாருமே வாழும் முன்னுதாரணமாக இல்லாத ஒரு சமூகமா இது? தியாகிகளைப் போற்றும் ஒரு சமூகத்தில் உயிருள்ள வாழும் முன்மாதிரிகள் ஒருவரும் இல்லையா?
ஒருவர் மற்றவரை சந்தேகிக்கின்ற,அல்லது அங்கீகரிக்காத ஒரு நிலைமை என்பது ஒரு சமூகத்தின் கூட்டுணர்வை,கூட்டுச் செயற்பாட்டைப் பாதிக்கும். இது கட்சிகளில் தொடங்கி,சமூக நிறுவனங்கள்,ஆலய அறக் கட்டளைகள்,திருச்சபைகள்,பழையமாணவ சங்கங்கள்..என்றிவ்வாறாக முழுச்சமூகத்துக்குமான ஒரு பொது வியாதியாக மாறிவருகிறது.
சமூக வலைத்தளங்களுக்கு முற்பட்ட காலத்தில் மொட்டைக் கடிதம் இருந்தது. மல முட்டி இருந்தது.இப்பொழுது இரண்டும் இணைந்து பேக் ஐடிகளாக, முகம் காட்டா முகநூல் கணக்குகளாக மாறிவிட்டன.மல முட்டி என்பது, தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் இரு துருவங்களாக இருந்த காலகட்டத்தில் இருந்த ஒரு தோற்றப்பாடு.தமது கட்சி எதிரியைத் தாக்குவதற்கு, அசிங்கப்படுத்துவதற்கு மண்பானையில் மலத்தைச் சேகரித்துக் கொண்டுவந்து அரசியல் எதிரியின் வீட்டின் முற்றத்தில் அல்லது வாசலில் பானையை உடைத்து விடுவார்கள்.
ஆயுதப் போராட்டத்திற்கு முன்னர் காணப்பட்ட இந்த மல முட்டி அரசியல் மொட்டைக் கடிதத்தோடு இணைந்து முழுச்சமூகமும் நாறும் ஒரு நிலைமை வளர்ந்து வருகிறது.ஒரே கட்சிக்குள்ளேயே இரண்டு அணிகள் ஒன்று மற்றதன் மீது மலத்தை வாரி வீசும்போது இரண்டுமே நாறுகின்றன.அண்மையில் மட்டக்களப்பில் சுமந்திரன் அவ்வாறான முகங்காட்டா முகநூல் பக்கங்களைக் குறித்துப் பேசியிருக்கிறார்.
முகங்காட்டா முகநூல் பக்கங்கள்,தொண்டர்களை ஏவி வழக்குத் தொடுக்கும் தலைவர்கள்,தனது கட்சிக்காரனை அல்லது தன்னை விமர்சிப்பவரை மடக்குவதற்கு வழக்குப் போடுவேன் என்று மிரட்டும் அரசியல்வாதிகள்,தன் கட்சிக்காரனுக்கு எதிராக தென்னிலங்கை மையக் கட்சி ஒன்றின் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரை நாடாளுமன்றத்தில் பேச வைக்கும் தமிழ் அரசியல் வாதிகள்,சமூகத்தில் யாராவது மினுங்கிக் கொண்டு மேலெழுந்தால் அவர்களைக் காலால் மிதித்துச் சப்பையாக்கிவிடக் காத்திருக்கும் சமூக வலைத்தள நீதிபதிகள்…என்றிவ்வாறாக தமிழ்ச்சமூகம் அதன் மாண்பை இழந்து கொண்டு போகிறது.
ஒருகாலம் திட்டமிட்டு வெறுப்பர்களை உற்பத்தி செய்த,வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்ட,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நடவடிக்கைகளில் இப்பொழுது மாற்றம் தெரிகிறது.ஆனால் உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சியோ நாறிக் கொண்டிருக்கிறது.
சிங்கள நாடாளுமன்ற உறுப்பினராகிய தயாசிறீயை, சிறீதரனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசவைத்தது யார் என்பது எல்லாருக்கும் தெரியும். தனது உட்கட்சி முரண்பாட்டைக் கையாள்வதற்கு இவ்வாறு தென்னிலங்கை மையக் கட்சி ஒன்றின் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரைக் கருவியாகக் கையாள்வது என்பது தமிழ்த்தேசிய அரசியல் எங்கே வந்துநிற்கிறது என்பதைக் காட்டுகிறது. அதேசமயம் சிறீதரன் அரசியலமைப்பு பேரவையில் படைப் பிரதானிகளுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார் என்ற விடயம் அவரைப் பொது வெளியில் அம்பலப்படுத்த,அவமானப்படுத்தத் தேவையான வாய்ப்புகளை வழங்குகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழரசுக் கட்சிக்குள் தீர்க்கப்படாத உட்கட்சி முரண்பாடு இடக்கிடை நாடாளுமன்றத்திலும் அடிக்கடி ஊடக ஒலிவாங்கிகளுக்கு முன்னரும் அசிங்கமான விதங்களில் வெளிப்படுகிறது. கட்சியின் கூட்டுணர்வை,சகோதரத்துவத்தைக் கவனத்தில் எடுத்து உட்கட்சிப் பிரச்சனையை உட்க்கட்சிக்குள்ளேயே தீர்க்க முடியாத அளவுக்கு கட்சி பலவீனமாக உள்ளது.தமிழரசுக் கட்சிக்குள் இப்பொழுது பலமான தலைவர்கள் இல்லை என்பதுதான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலான யதார்த்தம். சுமந்திரனாலும் கட்சியைத் தனது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.சிறீதரனாலும் முடியவில்லை.
யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் தனக்கென்று நிலையான வாக்கு வங்கியைக் கொண்டிருப்பவர் சிறீதரன்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்குடா நாட்டுக்குள் தமிழரசுக் கட்சிக்கு ஆசனம் கிடைக்கவில்லை. தேர்தல் தொகுதி என்ற அடிப்படையில் கிளிநொச்சியில் சிறீதரன் பெற்ற வெற்றியும் இல்லையென்றால் தமிழரசுக் கட்சிக்கு யாழ்ப்பாணத்தில் ஆசனமே இல்லை.
எல்லாவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் அப்பால்,கிளிநொச்சியில் இப்பொழுதும் சிறீதரனுக்கு நிலையான வாக்கு வங்கி உண்டு.யாழ்குடா நாட்டில் மட்டுமல்ல,தமிழரசு கட்சிக்குள் நிலையான வாக்கு வங்கியைக் கொண்ட ஒருவர் அவர்.தமிழரசுக் கட்சிக்குள் அவரைத் தோற்கடித்தாலும், கிளிநொச்சியில் அவரைத் தோற்கடிக்கலாமா என்பதனை இனிமேல்தான் பரிசோதிக்க வேண்டும்.
ஆனால் சிறீதரனை அவமானப்படுத்தி அவருடைய மாவட்டத்துக்குள்ளேயே முடக்க இன்றுவரை சுமந்திரனால் முடியவில்லை.கடந்த இரண்டு ஆண்டுகளிலும் கட்சிக்குள் சுமந்திரன் தன்னுடைய நிலையை ஒப்பீட்டளவில் பலப்படுத்தி வந்தாலும் வாக்காளர்கள் மத்தியில் அவர் பலமாக உள்ளாரா என்பதை இனிமேல்தான் பரிசோதிக்க வேண்டும்.
இந்த முரண்பாடுகளின் மத்தியிலும் தமிழரசுக் கட்சி பலமாக உள்ளது என்ற ஒரு தோற்றம் வெளியே தெரிகிறது.ஏன் தெரியுமா? அது வெல்லக்கூடிய கட்சி என்று அந்தக் கட்சி உறுப்பினர்கள் நம்பி அந்தக் கட்சிக்குள் ஒட்டிக் கொண்டிருப்பதுதான். நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட,வடக்குக் கிழக்காக கீழ்மட்ட வலையமைப்பை கொண்ட ஒரு கட்சி அது.வெல்லக்கூடிய குதிரை என்பதால் அநேகர் கட்சிக்குள் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 75 ஆண்டுகளிலும் அந்தக் கட்சியில் வாக்காளர்களைப் பிரதிபலிக்கும் தலைவர்களும் கொழும்பை அனுசரித்துப் போகும் தலைவர்களும் இருந்ததுண்டு.இந்த இரண்டு பண்புகளினதும் கலப்புத்தான் தமிழரசுக் கட்சி. இந்த இரண்டு போக்குகளும் ஒன்று மற்றதை அனுசரித்துப் போனமைதான் கட்சியின் பலம். ஆனால் இப்பொழுது இந்த இரண்டு போக்குகளும் முரண்படும் ஒரு நிலை தோன்றியிருக்கிறது. இது கட்சியை எங்கே கொண்டு போய்விடும்?
தமிழரசுக் கட்சி சிதையுமாக இருந்தால் அந்த வெற்றிடத்தை நிரப்ப தமிழ்த் தேசியப் பேரவையால் முடியுமா?அது இப்பொழுதுவரை ஒரு பிரதான நீரோட்டக் கட்சிக்குரிய பண்புகளோடு காணப்படவில்லை.மாறாக மாற்று நீரோட்டக் கட்சியாகத்தான் காணப்படுகிறது.
இவ்வாறு தமிழ் தேசிய பரப்பில் கட்சிகளுக்குள்ளும் கட்சிகளுக்கு இடையிலும் ஒருவர் மற்றவரை வில்லன் ஆக்கும் மோதல்களால்,தமிழ்த் தேசியப் பரப்பில் யாருமே கதாநாயகராக எழ முடியவில்லை.அந்த வெற்றிடத்தில் அரச பலத்தோடு,அரச வளங்களைப் பிரயோகித்து அனுர நாயகனாக இறக்கப்படுகிறார்.கடந்த வாரம் முருகனாகப் பதவி உயர்த்தப்பட்டிருக்கிறார். அதாவது தமிழர்கள் ஒருவர் மற்றவரை சூரன்கள் ஆக்கிக் கொண்டிருக்க முருகன்கள் வெளியில் இருந்து குதிக்கிறார்களா?விக்னேஸ்வரனுக்கும் வாகீசனுக்கும் கையில் வேலைக் கொடுத்த ஒரு சமூகம்,விரைவில் அனுரவிக்கும் ஒரு வேலைக் கொடுத்து விடுமோ ?






