தையிட்டி; கிவுல் ஓயா; கரிநாள்

கடந்த வாரம் மூன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. முதலாவது ஆர்ப்பாட்டம் தையிட்டியில்.அது வழமையாக நடப்பது. இரண்டாவது ஆர்ப்பாட்டம், கிவுல் ஓயா அபிவிருத்தி திட்டத்திற்கு எதிரான நெடுங்கேணிப் போராட்டம். மூன்றாவது ஆர்ப்பாட்டம், 78ஆவது சுதந்திர தினம் என்று கூறப்படுவதை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த பேரணி.

மிகக்குறுகிய கால இடைவெளிக்குள் நடந்த இந்த மூன்று ஆர்ப்பாட்டங்களையும் தொகுத்துப் பார்ப்போம்.தையிட்டியில் கடந்த பௌர்ணமி நாளன்று மிகக்குறைந்த எண்ணிக்கையானவர்களே காணப்பட்டார்கள்.அதிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்களே அதிகம். ஆனால் கடந்த ஆண்டின் இறுதியில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் அதிகளவு எண்ணிக்கையானவர்கள் அங்கே வந்திருந்தார்கள்.அந்த ஆர்ப்பாட்டங்களை தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேச சபை முன் நின்று ஒழுங்கமைத்தது.அது ஒப்பீட்டளவில் அனைத்துக் கட்சி பரிமாணத்தைக் கொண்ட ஒரு போராட்டம். அரசியல்வாதிகளும் செயல்பாட்டாளர்களும் அங்கே காணப்பட்டார்கள்.

அடுத்த போராட்டம், கிவுல் ஓயா அபிவிருத்தி திட்டத்திற்கு எதிரானது. இந்த போராட்டத்தை பெருளவுக்கு ஒருங்கிணைத்தது தமிழரசு கட்சிக்குள் காணப்படும் சுமந்திரன் அணியைச் சேர்ந்தவர்கள். சுமந்திரன் அதனை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தன் கட்சிக்காரர்களும் உட்பட பெருமளவிலான ஆட்களை அங்கே கொண்டு வருவதற்காக உழைத்தார். ஆயிரத்தை தாண்டாத ஜனத்தொகை அங்கே வந்திருந்தது. தமிழரசுக் கட்சியோடு இப்பொழுது உறவாடி வரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் அங்கு காணப்பட்டார்கள்.

ஆனால் தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணியை மையமாகக் கொண்ட தமிழ்த் தேசியப் பேரவையைச் சேர்ந்தவர்களை அங்கே காண முடியவில்லை.நெடுங்கேணிப் போராட்டம் நடந்து கொண்டிருந்த அதே காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ரில்கோ விருந்தினர் விடுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் கடல் தொழிலாளர் சங்கங்களுக்கும் இடையே ஒரு சந்திப்பு இடம்பெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள் அந்தச் சந்திப்பில் காணப்பட்டார்கள்.

நீரைக் கொடுத்து நிலத்தைப் பறிக்கும் நீர் முகாமைத்துவத் திட்டமாகிய கிவுல் ஓயாத் திட்டதுக்கு எதிராகத் தமிழ் மக்கள் போராட வேண்டும். எனவே அந்தப் போராட்டத்திற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.அதேசமயம் அதற்குள் உட்க்கட்சிப் போட்டிகள் சார்ந்த உள்நோக்கங்களும் உண்டு.

சுமந்திரனைப் பொறுத்தவரை இதுபோன்ற போராட்டங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவருடைய எதிரணி அவரை தமிழ்த் தேசிய நீக்கம் செய்பவர் என்று குற்றம்சாட்சி வருகிறது. எனவே தான் நிலப் பறிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிரான மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பார் என்பதனை அவர் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. மேலும்,கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் கட்சிக்குள் தன்னுடைய தவிர்க்க முடியாமையை நிரூபிப்பதற்காக எல்லாவிதமான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறார். அந்த அடிப்படையில் ஒரு பதில் செயலாளராக கட்சியின் கீழ்மட்டக் கட்டமைப்பை அவர் பெருமளவுக்கு தன்னால் கையாளப்படத் தக்கதாக வடிவமைத்தும் வருகிறார்.அதன் விளைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அவர் முன்னைய தேர்தலை விட அதிக முன்னேற்றங்களைக் காட்ட முடிந்தது.

ஆனால் தமிழரசுக் கட்சியின் வாக்குத்தளம் எனப்படுவது தனிய அதன் கீழ்மட்ட கட்டமைப்புப் பலம் மட்டுமல்ல. அதைவிட ஆழமான பொருளில் அது தமிழ் இன உணர்வுகளின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு வாக்குத் தளம்.அந்த வாக்குத்தளத்தைக் கைப்பற்றுவது என்று சொன்னால் தன்னை புத்திசாலியான ஒரு தலைவராகக் காட்டிக் கொண்டால் மட்டும் போதாது. அதைவிட முக்கியமாக தமிழ் இன உணர்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  ஒரு தலைவர் என்றும் நிரூபிக்க வேண்டும். எனவே இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உண்டு.

அடுத்த உள்நோக்கம்,தமிழ்த் தேசியப் பேரவையைத் தனிமைப்படுத்துவது. அண்மை மாதங்களாக “எக்கிய ராஜ்ய” என்ற தீர்வு முன் வரைபை முன்வைத்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அவர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறது. இதனால் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான உறவுகள் முன்னரை விட அதிகம் பகை நிலைக்குச் சென்று விட்டன. அதோடு,சிறீதரனை முன்னணி நெருங்கி வருவதும் சுமந்திரனை ஆத்திரப்படுத்துகிறது.கட்சிக்குள் காணப்படும் உள் முரண்பாடுகளை முன்னணி கையாள முயற்சிக்கிறது என்று அவர் நம்புகிறார். இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள்தான், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஏதோ ஓர் இணக்கத்துக்கு வர அவர் முயற்சிக்கிறார். அதன் மூலம் பேரவையைத் தனிமைப்படுத்தலாம் என்றும் சிந்திக்கிறார். அதற்கு இது போன்ற போராட்டங்கள் தேவை.

அடுத்த உள்நோக்கம்,மாகாண சபைத் தேர்தல் என்று ஒன்று நடந்தால், அதில் தமிழ் மக்களின் பாரம்பரிய வாக்களிப்புக் கோலத்தின் அடிப்படையில் சிந்தித்தால், தமிழரசுக் கட்சிக்குத்தான் வெற்றி வாய்ப்புகள் அதிகம். அந்த வாய்ப்புகளை மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு உறவை வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதே சமயம் அந்த உறவு தேர்தலில் தமிழ்த் தேசியப் பேரவையை தனிமைப்படுத்த உதவும்.

மேற்சொன்ன உள்நோக்கங்களும் கிவுல் ஓயா போராட்டத்தில் பின்னணியில் இருந்தன. என்றாலும் நிலப் பறிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிராக தமிழ்த் தேசிய உணர்வுகளை கொதி நிலையில் வைத்திருப்பது என்று பார்த்தால் அந்தப் போராட்டத்திற்கு காலகட்ட முக்கியத்துவம் உண்டு. மேலும் அந்தப் போராட்டத்தை ஒழுங்கமைத்தது சுமந்திரன் அணி என்ற போதிலும் அதில் சிறீதரன் அணியும் கலந்து கொண்டது. ஒரு பொது விடயத்தில் உட்கட்சி முரண்பாடுகளை ஒதுக்கிவிட்டு சிறீதரன் அவ்வாறு கலந்து கொண்டமை வரவேற்கத்தக்கது.

ஆனால் அந்தப் போராட்டத்தின் பின்னணியில், அடுத்தடுத்த நாள், சிறீதரனுக்கு எதிரான மற்றொரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.அவருடைய நாடாளுமன்றக் குழுத் தலைமைப் பதவி பறிக்கப்பட்டு விட்டது.

கிவுல் ஓயா போராட்டத்திற்கு அடுத்தடுத்த நாள்,அதாவது 04ம் திகதி பல்கலைக்கழக மாணவர்கள் கரிநாள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்கள்.அதுதொடர்பாக அவர்கள் கட்சி முக்கியஸ்தர்களை சந்தித்தும் வந்தார்கள். ஆனால் இந்தச் சந்திப்புகளில் சுமந்திரன்,சிவஞானம் போன்றவர்கள் உள்ளடக்கப்படவில்லை என்று தெரிகிறது.அதனால் கிளிநொச்சி ஆர்ப்பாட்டத்தில் சுமந்திரன்,சிவஞானம் போன்றவர்களைக் காண முடியவில்லை. எனினும் ஏனைய தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் பலர் அங்கே காணப்பட்டார்கள்.கிளிநொச்சியில் உள்ள சுமந்திரன் அணியைச் சேர்ந்தவர்களும் காணப்பட்டார்கள்.ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலரும் காணப்பட்டார்கள்.

மட்டக்களப்பில் கரி நாள்

 

அவர்களைவிட காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும்  சங்கங்களைச் சேர்ந்தவர்களும், ஏற்கனவே இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களும் அங்கு அதிகமாகக் காணப்பட்டார்கள்.கிழக்கிலும் அதுபோன்ற ஓர் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதாவது கரிநாள் போராட்டம் ஒப்பீட்டளவில் தாயகம் தழுவியதாகக் காணப்பட்டது.

இப்படிப் பார்த்தால் கடந்த கிழமை மிகக்குறுகிய நாள் இடைவெளிக்குள் நடந்த மூன்று ஆர்ப்பாட்டங்களிலும் பெரியது கிளிநொச்சி ஆர்ப்பாட்டந்தான். அது ஒப்பீட்டளவில் பெரியது,எழுச்சிகரமானது;வடக்கு கிழக்காக தாயகம் கழுவியதாக காணப்பட்டது.அனைத்துக் கட்சி பரிமாணத்தை அதிகமாகக் கொண்டது. யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர் தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.அவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவருக்காகப் போராடும் அமைப்புக்களும் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தார்கள்.

மாணவர்கள் முன்னணிக்கு வரும்பொழுது கட்சி பேதங்களைக் கடந்து பெருந் திரளைக் கொண்டுவர முடியும் என்பதற்கு அது ஆகப்பிந்திய ஓர் உதாரணம் ஆகும்.கட்சிகளால் பிரிக்கப்பட்டிருக்கும் மக்களும் தொண்டர்களும் கட்சி கடந்து ஒருங்கிணைக்கப்படும்போது இனமாகத் திரள்வார்கள் என்ற நம்பிக்கையைப் பலப்படுத்திய ஆர்ப்பாட்டம் அது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *