அரசியலாகிய சுப்பிரமணியம் 

 

அண்மை மாதங்களாக சமூக ஊடக வலைத்தளச் சூழலில் அதிகம் வைரலாகிய விலங்குகள் நான்கு.முதலாவது ஓர் எருமை.பங்களாதேஷில் ஒரு பண்ணையில் பிறந்தது.மிக அரிதான வகை எருமைகளில் ஒன்று.அதனுடைய இளஞ் சிவப்பு நிறமும்,அதனுடைய கொம்புகளுக்கிடையிலான திரண்ட முடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை ஞாபகப்படுத்தின.அதனால் பண்ணை உரிமையாளரின் தம்பி அதற்கு டிரம்ப் என்று பெயரை வைத்தார்.அது வைரல் ஆகியது.அது மத நம்பிக்கையோடு பலியிடப்படுவதற்காக வளர்க்கப்பட்ட ஓர் எருமை.எனினும்,வைரல் ஆகியதால்,பலியிடப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்டது.பங்களாதேஷ் அரசாங்கம் அதனை பொறுப்பெடுத்தது. இப்பொழுது அங்குள்ள மிருகக்காட்சி சாலை ஒன்றில் அது அரச விருந்தினராகப் பராமரிக்கப்படுகிறது.எருமைக்கு வந்த வாழ்வு.

இரண்டாவது ஒரு நாய்.அது இந்தியாவில் பிறந்தது.தெருநாயாக இருந்த அதனை அங்கே சமாதானத்துக்கான பாதயாத்திரைக்கு வந்த அமெரிக்க பௌத்த மத குருக்கள் அரவணைத்தனர்.அது பின்னர் அவர்களுடைய சமாதானத்துக்கான பாத யாத்திரையின் செல்லப் பிராணியாக மாறியது. உலகம் பூராகவும் வைரல் ஆகியது.அண்மையில் அது இலங்கைக்கு வந்தது. மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையிலான அன்பின் குறியீடாக அது கருதப்படுகிறது.அதன் பெயர் லோகா.லோகா என்றால் ஒளி என்று பொருள். சமாதானத்துக்காக பாதயாத்திரை வரும் பௌத்த சன்னியாசிகளின் புகழை விடவும் லோகாவுக்கு புகழ் அதிகம்.

மூன்றாவது விலங்கு சுப்பிரமணியன்.அதுவும் ஒரு நாய்.கதிர்காமத்துக்கு நடந்து போன பாதயாத்திரிகர்களோடு அந்த நாய் முள்ளியவளையில் இணைந்து கொண்டது.ஈழத் தமிழர்கள் மத்தியில் இப்பொழுது அது வைரலாகி வருகிறது

நாலாவது ஜீவ ராசி ஒரு முள்ளம்பன்றி.ஒரு சிங்களச் சிறுமியின் செல்லப் பிராணி. சிறுமிக்கும் அந்த முள்ளம்பன்றிக்கும் இடையிலான சினேகிதம் சமூக ஊடக வலைத்தளச் சூழலில் அதிகம் வைரல் ஆகியது.

சமூக ஊடக வலைத்தளச் சூழலில் மனிதர்கள் மட்டுமல்ல மனிதர்களால் நேசிக்கப்படுகின்ற,மனிதர்களை நேசிக்கின்ற விலங்குகளும் வைரல் ஆக முடியும் என்பதற்கு இவை ஆகப்பிந்திய உதாரணங்கள்.இன்று இக்கட்டுரை மேற்சொன்ன இரண்டு நாய்களையும் பற்றியது.முதலாவது லோகா. இரண்டாவது சுப்பிரமணியம்.

லோகா இலங்கைக்கு வரும்பொழுது அரச விருந்தினராகத்தான் வந்தது. சமாதானத்தின் தூதுவராக அதற்கு ராஜா மரியாதையும் போஷிப்பும் கிடைத்தன.பிக்குகள் நடந்து சென்ற வழி நெடுக, லோகா விருப்பத்தோடு அரவணைக்கப்பட்டது.

அதனை ஏனைய தெரு நாய்களில் இருந்து பாதுகாக்கும் பொறுப்பை இலங்கைப் படையினர் ஏற்றுக்கொண்டார்கள்.அது ஒரு விமர்சனமாகவும் வெளிவந்தது. எந்தப் படையினர் யுத்த காலங்களில் தமிழ் முஸ்லிம் மக்களை நாயை விடக் கேவலமாக நடத்தினார்களோ,அதே படையைச் சேர்ந்தவர்கள் ஒரு நாய்க்கு அவ்வளவு பாதுகாப்பு கொடுப்பதில் ஓர் அக முரண் உண்டு.

ஆனால் நமது சுப்பிரமணியத்துக்கு அப்படியெல்லாம் ராஜபோகம் கிடைக்கவில்லை.ராஜமரியாதையும் இல்லை.அதனால்தான் கல்முனையில் அதை ஒருவர் உதைந்தார்.அந்த உதைதான் சுப்பிரமணியத்தை பேசுபொருள் ஆக்கியது.சுப்பிரமணியத்தை உதைத்தவர் ஒரு முஸ்லீம்.பின்னர் அதற்காக மன்னிப்புக் கேட்டார்.அவருக்கு எதிராக போலீசார் சட்ட நடவடிக்கையும் எடுத்தார்கள்.

சுப்பிரமணியத்தில் தொடங்கிய மோதல் அடுத்த கட்டமாக சிவலிங்கத்தை வந்தடைந்தது.சிவலிங்கத்தின் மீது வெறுப்பைக் கொட்டும் முஸ்லீம் ஒருவருடைய பதிவுக்கு எதிராக சவுதியில் வசிக்கும் தமிழ் இந்து ஒருவர் பதிவொன்றைப் போடடார்.இறை தூதர் முகமது நபிகளை அவமதிக்கும் அந்தப் பதிவுக்காக பின்னர் அவரும் மன்னிப்புக் கேட்டார்.இப்பொழுது அவர் சவுதியின் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டிருக்கிறார்.

அங்கிருந்து தொடங்கி சமூக வலைத்தள வெறுப்பர்கள் ஒருவர் மற்றவரின் மீது வெறுப்பைக் கக்கி கொண்டிருக்கிறார்கள்.முதல் தவறு யாருடையது என்பதல்ல இங்கு பிரச்சனை.அதை வைத்து தொடர்ந்து தவறுகளைச் செய்வது யார் என்பதுதான் இங்கு பிரச்சனை.இப்பொழுது சமூக ஊடக வலைத்தள வெறுப்பார்கள் விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு விட்டார்கள்.அவர்கள் சுப்பிரமணியத்தை தத்தெடுக்க முயற்சிக்கிறார்கள்.சுப்பிரமணியன் வெறுப்பர்களின் கருவியாக பயன்படுத்தப்படுவதற்கு பாதயாத்திரிகர்கள் இடம் கொடுக்கக்கூடாது.

பாதயாத்திரை எனப்படுவது பக்தர்களைப் பொறுத்தவரை மிகக்கடினமான விரதங்களில் ஒன்று.பாதயாத்திரையின் நோக்கமே தன்னை வருத்தி,மனதை ஒருநிலைப்படுத்தி, இறைவனை நெருங்குவது.அது அன்பின் பாதை.ஆன்மீக ஒடுக்கத்தின் பாதை. வெறுப்பின் பாதையல்ல.

சுப்பிரமணியம் இப்பொழுது ஒரு பாதயாத்ரிகன்.அது ஒரு வாயில்லாத ஜீவன். தன்னைச் சுற்றி நடக்கும் அரசியல் அதற்கு விளங்காது.ஆனால் சுப்பிரமணியத்தை கொண்டாடுபவர்களுக்கு அது விளங்கும். சுப்பிரமணியத்தை வைத்து மதங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை ஊக்குவிப்பது பாதயாத்திரியின் உன்னதமான நோக்கங்களுக்கு எதிரானது லோகா சமாதானத்துக்காக நடந்தது சுப்பிரமணியம் முரண்பாடுகளை பெருப்பிப்பதற்கு நடந்தது என்று விமர்சிக்கப்படும் ஒரு நிலையை பாத யாத்ரிகர்கள் அனுமதிக்கக்கூடாது.இந்துக்கள் அனுமதிக்கக்கூடாது.

கதிர்காமம் எனப்படுவது தமிழ் மக்களுடைய தாயகச் சூழலுக்கு வெளியே காணப்படுகின்ற அதனாலேயே அதிகம் சிங்கள பௌத்த மயப்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகின்ற ஒரு முருகன் ஆலயம் ஆகும்.அதேசமயம் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக வழிபடும் ஓர் ஆலயம் என்ற பெருமை அதற்கு உண்டு.அப்படிக் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய சில யாத்திரிகைத் தலங்கள்தான் இலங்கைத்தீவில் உண்டு. கதிர்காமம்,சிவனொளிபாத மலை,மடுமாதா தேவாலயம் போன்ற சில யாத்திரிகைத் தலங்கள்தான்.

கதிர்காமத்துக்கான பாதயாத்திரை நூறாண்டுகாலப் பாரம்பரியத்தைக் கொண்டது.மூன்று மாகாணங்களையும் ஏழு மாவட்டங்களையும் ஊடறுத்துச் செல்வது.இலங்கைத் தீவின் மிகநீண்ட பாத யாத்திரை அது.அதன் நூறாண்டுகால மகிமையை மத முரண்பாடுகள் கெடுக்க அனுமதிக்கக்கூடாது.

சுப்பிரமணியத்தை தத்தெடுக்க முற்படும் ஒவ்வொருவரிடமும் இக்கட்டுரை ஒரு கேள்வியை முன்வைக்கின்றது.சுப்பிரமணியத்தை நீங்கள் மெய்யாகவே விசுவாசமாக நேசிக்கிறீர்களா? அப்படியென்றால் வாருங்கள்,எமது தெருக்களில் எத்தனை சுப்பிரமணியன்கள் கட்டாக்காலிகளாக விடப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.என்னுடைய வீட்டுக்கு முன்னரும் இரண்டு சுப்பிரமணியங்கள் தினசரி வந்து கழித்து விட்டுப் போவார்கள்.என்னைப் போல பலர் திடீரென்று தெருக்களைக் குறுகுறுத்து ஓடும் சுப்பிரமணியங்களால் விபத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்; உயிரிழந்திருக்கிறார்கள்; படுகாயப்பட்டிருக்கிறார்கள்;சுப்பிரமணியங்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கட்டாக்காலிகளாக அலையும் சுப்பிரமணியன்களைக் காப்பாற்றுவதற்காக சிவ பூமி அறக்கட்டளையானது யாழ்.தென்மராட்சியில் ஓர் காப்பகத்தை உருவாக்கியது.ஆனால் அதற்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை.முகநூல் கட்டைப் பஞ்சாயத்துக்கள் அந்தக் காப்பகத்தை விமர்சித்தே மூட வைத்து விட்டார்கள். இப்பொழுது வடக்கில் சுப்பிரமணியங்களுக்கு காப்பகம் இல்லை. எல்லாச் சுப்பிரமணியன்களுக்கும் அதிர்காமத்துக்குப் போகும் பாக்கியமும் இல்லை.

கட்டாக்காலி நாய்களைக் கொல்லக்கூடாது என்று உத்தரவிட்டவர் மகிந்த ராஜபக்ச.ஆனால் இறுதிக் கட்டப் போரில் தமிழ் மக்கள் பூச்சி புழுக்களைப் போல கொல்லப்பட்டதற்கு அவர் இதுவரை பொறுப்புக் கூறவில்லை.

சுப்பிரமணியன்களைப் பாதுகாப்பதற்கு பொருத்தமான துறைசார் வளங்களோடு உருவாக்கப்பட்ட காப்பகம் எதுவும் தமிழ்ப் பகுதிகளில் இல்லை.கிழக்கில் எனது நண்பரின் மனைவி-அவர் ஒரு வெளிநாட்டவர்-தெருக்களில் நாய்க்குட்டிகளைக் கண்டால் தனது சைக்கிள் முன் பாஸ்கட்டில் போட்டு,வீட்டுக்குக் கொண்டுவந்து விடுவார்.அவருடைய வீட்டுக்கு நான் போகும்போது அந்தச் சூழல் முழுவதும் நாய்களின் வாடை வீசும்.அது துர்வாடையாகவும் இருக்கும்.நண்பர் அண்மையில் சொன்னார்,முன்னரைவிட இப்பொழுது நிலைமை பரவாயில்லை என்று.இப்பொழுது கட்டாக்காலிகளாக விடப்பட்ட சுப்பிரமணியங்களிடம் அன்பு காட்ட ஒரு மிருக வைத்தியர் கிடைத்திருக்கிறார் என்றும்,அவர் தெருக்களில் கண்டெடுக்கப்படுகின்ற குட்டைபிடித்த சுப்பிரமணியங்களுக்கு அன்போடு சிகிச்சை அளிக்கிறார் என்றும் சொன்னார்.

மனித குல வரலாற்றில் மனிதர்களுடைய முதலாவது வளர்ப்புப் பிராணி நாய்தான்.நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு 15,000-30,000 ஆண்டுகளுக்கு முந்தியது.மனிதர்கள் நதிக்கரைகளுக்கு வர முன்னரே,வேட்டைக்காரர்களாக  இருந்த காலத்திலேயே,சுப்பிரமணியன்கள் மனிதர்களுக்கு நெருக்கமாக இருந்துள்ளார்கள்.சுப்பிரமணியன்கள் நன்றியுள்ளவை;விசுவாசமானவை;காவல் காப்பவை;மனிதர்களைப் புரிந்து கொள்ளக் கூடியவை;மனிதர்களுடைய படுக்கை அறைவரை வருமளவுக்கு அன்பானவை;செல்லமானவை .

இந்துக்களின் மத நம்பிக்கைகளைப் பொருத்தவரை அது வைரவரின் வாகனம். தாம் வணங்கும் கடவுளின் வாகனமாக காணப்படும் ஒரு விலங்கை தெருக்களில் அனாதைகளாக கைவிடுகிறார்கள்.எனவே ஊரில் உள்ள எல்லாத் தெரு நாய்களிலும் சுப்பிரமணியன்களை காண்பதுதான் உண்மையான இந்து அறம்.சுப்பிரமணியன்களைப் போற்றுவது,கொண்டாடுவது என்பது முதலில்,வடக்குக் கிழக்கில் நாய்களைப் பராமரிப்பதற்கான ஒரு நிலையத்தை உருவாக்குவதுதான்.தமிழ்த் அரசியல் நோக்குநிலையில் அது தேசத்தைக் கட்டி எழுப்பத் தேவையான கட்டமைப்புகளில் ஒன்றுதான்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *