பாட்டும் நானே; பாவமும் நானே ; பிடித்ததும் நானே ; பிணையில் விட்டதும் நானே

சங்கீத்சன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.அவர் விடுவிக்கப்பட்ட பின், நீதிமன்ற வளாகத்தில் இருந்து அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்  இளங்குமரன் அணியோடுதான் வெளியே வருகிறார்.அவர்களுடைய வாகனத்தில்தான் ஏறிச்செல்கிறார்.இளங்குமரன் நியமித்த சட்டத்தரணிகள்தான் அவரைப் பிணையிலும் எடுத்திருக்கிறார்கள்.

ஆனால் சுமந்திரன் அணி அதற்கு உரிமை கோருகிறது.சிறீதரன் அணியும் உரிமை கோருகிறது.ஜனாதிபதியோடு சிறீதரன் தொலைபேசியில் உரையாடி,”சட்டத்துக்குள் சிக்கி சின்னாபின்னப்படாமல் புத்திசாதுரியமான இணக்க முறைகள்” மூலம்  அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக அந்த அணி கூறுகிறது.

ராப் இசை என்பதே எதிர்ப்புத்தான்.ராப் மரபு என்பது மேற்கத்திய பண்பாட்டில் மரபுகளுக்கும் வளமைகளுக்கும் எதிராகவே மேற்கிளம்பியது. ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்ப்பாக,குரலற்றவர்களின் குரலாக,தடை செய்யப்பட்டவர்களின் கோபமாக..அது மேற்கிளம்பியது.சங்கீத்சனின் கலையிலும் அது இருந்தது.

அதனால்தான் அண்மையில்,வவுனியாவில் நடந்த வாகீசனின் இசை நிகழ்ச்சியில் சங்கீத்சன் பாடியபோது அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் அந்த பாடலின் அரசியலைக் கண்டு பயந்து அவர் பாடுவதை இடையில் நிறுத்தியதாகக் கூறுகிறார்கள்.அதனால்தான் அவரை பரந்தனில்  உள்ள அரச புலனாய்வுத் துறவினர் அவ்வாறான வரிகளை இசைக்க வேண்டாம் என்று ஏற்கனவே எச்சரித்திருக்கிறார்கள். அதுபோலவே உரும்பிராயில் ஒரு கோவில் திருவிழாவில் தாயகப் பாடல்களைப் பாடிய சாந்தனின் மகனையும் போலீசார் தடுத்தார்கள்.

அண்மைக் காலங்களாக தாயகப் பாடல்கள் என்று அழைக்கப்படுகின்ற போர்க்காலப் பாடல்களில் தெரிவு செய்யப்பட்ட பாடல்களை தாயகத்தில் ஆங்காங்கே கோவில் நிகழ்ச்சிகளிலும் இசை நிகழ்ச்சிகளிலும் உள்ளூர்ப்  பாடகர்கள் பாடி வருகிறார்கள்.

மாவீரர் நாட்களின்போதும் திலீபனின் நினைவு நாட்களின்போதும் அதுபோன்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நினைவு நாட்களின் போதும் போர்ப் பாடல்களில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பாடல்கள் இசைக்கப்படுவதுண்டு.தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பை நினைவுபடுத்தும் விடயங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று போலீசார் தடை விதிக்கும்போது சிலசமயம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தாயகப் பாடல்கள் அவ்வாறான நினைவு நாட்களில் இசைக்கப்படுவதுண்டு.

கோவில் விழாக்களிலும் இசை நிகழ்ச்சிகளிலும் அவ்வாறு பாடகர்கள் இயல்பாக அப்பாடல்களை பாடுவது வேறு. அதே பாடல்களை அல்லது அதைப்போன்ற பாடல்களை தேர்தல் தேவைகளுக்காகப் பாடுவது வேறு.கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள்-அவர்கள் இப்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள்-அப்படிப்பட்ட பாடல்களை உற்பத்திசெய்து தமது பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தினார்கள்.அதனை மனோகணேசன் அண்மையில் சமூக ஊடக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டியிருந்தார்.

தேசிய மக்கள் சக்தி மட்டுமல்ல,மைத்திரிபால சிறிசேனவின் வேட்பாளராக களம் இறங்கிய அங்கஜன் ராமநாதன்,கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முதல் நாடாளுமன்ற தேர்தலில் தாயகப் பாடல்களை தனது பிரச்சார உத்தியாகப் பயன்படுத்தினார் என்பது அவதானிக்கப்பட்டது.அந்தத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் அதிகளவு வாக்குகளையும் அவர் வென்றார்.

இவ்வாறு தென்னிலங்கை மையக் கட்சிகள் தமது தேர்தல் தேவைகளுக்காக, பிரச்சார உத்தியாக தாயகப் பாடல்களை அல்லது அதுபோன்ற பாடல்களைப் பாடும் ஓர் அரசியல் பின்னணியில்,கோவில் நிகழ்ச்சிகளிலும் இசை மேடைகளிலும் இளம் பாடகர்களும் அப்பாடல்களைத் துணிந்து பாடலா னார்கள்.குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தியாகிகளை நினைவு கூரும் நாட்களில் தெரிந்தெடுக்கப்பட்ட தாயகப் பாடல்கள் ஆங்காங்கே ஒலிக்க விடப்படுவதுண்டு.

கடந்த மகளிர் தினத்தின்போது,வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்விலும் மூத்த தாயகப் பாடகியான பார்வதி சிவபாதம் தான் முன்பு பாடிய தாயகப் பாடல்களில் சிலவற்றைப் பாடினார்.அதன்பின் யாழ்ப்பாணம்.டில்க்கோ ஹோட்டேலில் நடந்த போராளிகள் நலன்புரி அமைப்பின் நிகழ்விலும் அவர் பாடினார்.அவரைப் போன்று முன்பு தாயகப் பாடல்களைப் பாடிய வேறு சில பாடகர்களும் அந்த மேடையில் பாடினார்கள்.தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின் அவ்வாறு வெளிப்படையாகத் தாயகப் பாடல்கள் பாடப்படும் ஒரு நிலைமை அதிகரித்தது. குறிப்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் தமக்கு ஆபத்துக் குறைவு என்று ஒருதொகுதி பாடகர்கள் கருதியதால் இது நிகழ்ந்ததா? அல்லது கடந்த 17 ஆண்டுகளிலும் படிப்படியாக பயம் நீங்கியதன் விளைவாக ஏற்பட்டதா?

எதுவாயினும்,இவ்வாறு தாயகப் பாடல்கள் பகிரங்கமாகவும் அதிகரித்த அளவிலும் பாடப்படும் ஒரு வளர்ச்சியைக் கண்டு அரசு புலனாய்வுத்துறை உஷாரடைந்து இருக்கலாம். இந்தப் போக்கை இப்படியே விட்டால் ஒரு கட்டத்தில் தடை செய்யப்பட்ட எல்லாப் பாடல்களும் மேடைக்கு வந்துவிடும் என்று அரசாங்கம் உஷாரடைந்திருக்கலாம்.அதன் விளைவாகவே சங்கீத்சன் எச்சரிக்கப்பட்டிருக்கலாம்.அதன் விளைவாகவே உரும்பிராயில் சாந்தனின் மகன் பாடிய பாடல் தடுக்கப்பட்டிருக்கலாம்.அதன் விளைவாகவே சங்கீர்த்சன் கைது செய்யப்பட்டிருக்கலாம்.

மேலும்,தென்னிலங்கையில் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு,தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில்,அவரைச் சுற்றிக் கட்டியெழுப்பப்படும் இனவாத அனுதாப அலையைத் தணிப்பதற்கு அரசாங்கத்திற்கு சங்கீத்சன் போன்றவர்களைக் கைது செய்யவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கலாம்.

எதுவாயினும்,கலை நேரடியாக எதிர்ப்பின் வடிவமாக மேலெழுந்தால் அது நடக்கும்.அதைத் தடை செய்வார்கள்.பாடியவரைக் கைது செய்வார்கள்.உலகம் முழுவதும் இது நடந்திருக்கிறது.ஆனால் இப்பொழுது தமிழ்த் தேசியத் துயரம் என்னவென்றால், எதிர்ப்பின் வரிகளை இசைத்தவரை மன்னிக்குமாறு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கேட்கிறார்.அவரைக் கைது செய்தது அரசாங்கத்தின் போலீஸ்.அவரை விடுவித்தது அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்.போதாக்குறைக்கு சங்கீத்சனும் கூறுகிறார் “அனுரவுக்கு நன்றி” என்று.நாட்டில் என்ன நடக்கிறது ?

சங்கீத்சன் வெளியில் வரும்வரை ஒரு விடயத்தை எழுத வேண்டாம் என்று இருந்தேன். இனி எழுதலாம். முதலாவதாக ஓர் இசை வடிவமாக அவருடைய பாடல்கள் பெரிய அளவு வெற்றி பெறவில்லை.இரண்டாவதாக அவருடைய கவிதா மொழியும் கவர்ச்சியாக இல்லை. தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பை துணிந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ போற்றுகிறார் என்ற ஒரு கவர்ச்சிதான் அவருக்கு உண்டு.மற்றும்படி கலை என்று பார்த்தால்,இசைக்  காதால் கேட்டால்,பாடல் வரி என்று பார்த்தால்,சங்கீத்சன் தன்னை நிறையச்  செதுக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

அவர் மட்டுமல்ல.வாகீசனுந்தான்.வாகீசன் புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடெல்லாம் தனது அணியோடு சேர்ந்து கலக்குகிறார்.ஆனால் பழையதையே, ஏற்கனவே பிரபல்யம் அடைந்ததையே திரும்பத்திரும்பப் பாடுகிறார். பாடும்போது அவருடைய உடல் மொழியும் ரசிக்கத்தக்கதாக இல்லை.எதிர்ப்பு இசைக் கலைஞர் ஒருவரிடம் இருக்கவேண்டிய மிடுக்கும் ஓர்மமும் அவருடைய உடல் மொழியில் தெரியவில்லை.ஆடை அலங்காரத்திலும் தெரியவில்லை.அவர் வேடனைப் பார்த்துப் பழக வேண்டும்.

இந்த இடத்தில் தமிழ் மக்கள் ஒருவிடயத்தில் தெளிவாக இருக்கவேண்டும். தடை செய்யப்பட்ட ஒன்றைக் கலையாக்கும்போது முதலாவதாக,அது கலையாக இருக்கவேண்டும்.அது கலையாக வெற்றி பெற்றால்தான் அது துணிந்து சொல்லும் அரசியலும் பரவலாகச் செல்லும்.வரலாற்றில் நிலைத்து நிற்கும்.இல்லையென்றால் ஒரு கட்டத்தில் அது பிரச்சாரமாக சோர்ந்து விழுந்து விடும்.சங்கீத்சன்,வாகீசன் போன்ற இளம் பாடகர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களுடைய போராட்டம் பெருமைப்படத்தக்க கவிதைகளை படைத்திருக்கிறது.நவீன தமிழ்க் கவிதை என்று பார்த்தால் ஈழப் போர் தமிழுக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்திருக்கிறது.மிகச்செழிப்பான கவிதைகளை உற்பத்தி செய்த ஈழப்போரின் தொடர்ச்சியாக வந்த ராப் பாடகர்கள்,தமது முன்னோடிகளிடமிருந்து கவிதைகளை,பாடல்களை எடுக்கலாம்.ஏற்கனவே உள்ள நல்ல கவிதைகளுக்கு இசை சேர்க்கலாம். சங்கீத்சன்,வாகீசன் உட்பட எல்லா ராப் பாடகர்களும் ஈழப்போர் இலக்கியத்தின் அழகியல் வெற்றிகளின் தொடர்ச்சிகளாக மேலெழ வேண்டும்.

கைது செய்யப்படும் வரையிலும் சங்கீத்சன் அதிகம் வெளித் தெரிய வரவில்லை.குறிப்பிட்ட எல்லைக்குள்தான் பிரபல்யம் அடைந்திருந்தார்.ஆனால் கைது செய்யப்பட்டதால் அவர் பரவலாகப் பிரபல்யம் அடைந்துவிட்டார். அவரைக் கைது செய்ததன்மூலம் அரசாங்கம் அவரை முன்னரைவிட அதிகமாக பிரபல்யப்படுத்தி விட்டது.

எந்த அரசியலை அவர் மகிமைப்படுத்துவதாகக் கூறிக் கைது செய்யப்பட்டாரோ,அந்த அரசியலை அரசாங்கம் தன்னை அறியாமலேயே பிரபல்யப்படுத்தி,மகிமைப்படுத்தியிருக்கிறது.இது மறைந்த ஈழக்கவிஞர் மு. பொன்னம்பலம் தனது “முன்னிரவின்  மோகனம்” என்ற கவிதையில் கூறுவதுபோல “அடக்குமுறைதான் விடுதலையைப் பிரசவிக்கும் மருத்துவிச்சி”  அது “அதிகாரம் புரியாத சமன்பாடு” என்பதை நிரூபித்திருக்கிறதா ?

ஆனால் கிடைத்திருக்கும் பிரபல்யத்தை சங்கீத்சன் பாதுகாக்க வேண்டும். வளர்த்தெடுக்க வேண்டும்.ஏற்கனவே தமிழில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் கவிஞர்களை அணுகி நல்ல பாடல் வரிகளைப் பெறலாம்.எல்லாச் சொல்லிசைக் கலைஞர்களும் நல்ல கவிஞர்களாக இருக்கவேண்டும் என்றில்லை.ஒரு படைப்பு அதன் அரசியலால் பெறக்கூடிய முக்கியத்துவத்துக்கு வரையறை உண்டு.அது ஒரு கலைப் படைப்பாக பெறக்கூடிய முக்கியத்துவந்தான் சாஸ்வதமானது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *