செம்மணி மனிதப் புதைகுழியானது தென்னாசியாவின் முதலாவது பெரிய மனிதப் புதை குழியா? ஆசியாவின் இரண்டாவது பெரிய மனிதப் புதை குழியா?ஆசியாவில் அதிக தொகை மனிதப் புதை குழிகளைக் கொண்ட இடம் கம்பூச்சியா.அங்கே கிட்டத்தட்ட இருபதாயிரம் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.அவை ஒரே இனத்துக்குள் நடந்த கொலைகள்தான். கமரூச் இயக்கத்தின் தலைவராகிய போல்பொட் தன்னுடைய சொந்த மக்களையே லட்சக்கணத்தில் கொன்று குவித்தார்.
கம்பூச்சிய மனிதப் புதை குழிகள்தான் ஆசியாவின் மிகப்பெரிய மனிதப் புதைக்குழிகளாகக் கணிக்கப்படுகின்றன.இந்த ஆண்டு,இந்த மாதத்தோடு செம்மணி மனிதப் புதைகுழி ஆசியாவின் இரண்டாவது பெரிய மனிதப் புதை குழியாகக் கணிக்கப்படுமா? இதில் துயரமான ஒற்றுமை என்னவென்றால் இரண்டுமே பௌத்தம் பயிலப்படும் நாடுகள்.
கடந்த வாரம் நீதி அமைச்சர் செம்மணிக்கு வருகை தந்திருந்தார்.அதன் பின் அவர் பாதிக்கப்பட்ட மக்களை அதாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் அமைப்புகளை சேர்ந்தவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதை நோக்கமாகக் கொண்டு பின்வரும் விடயங்களைக் கதைத்தார்.
முதலாவதாக,அவர்களுக்கு உரிய உதவிகள் கிடைக்கும் என்று கூறினார். உதவி கேட்டவர்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் சொன்னார். இரண்டாவதாக செம்மணிப் புதைகுழி தொடர்பில் படைத்தரப்பின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர்களை அரசாங்கம் நீதியின் முன் நிறுத்தும் என்றும் உறுதியளித்தார்.மூன்றாவதாக இதற்கு முன்னிருந்த அரசாங்கங்களை போலன்றி இந்த அரசாங்கம் செம்மணிப் புதை குழியை அகழ்வதற்கு வேண்டிய எல்லாச் சட்ட ஏற்பாடுகளையும் நிதி ஏற்பாடுகளையும் செய்து வருகிறது என்றும் தெரிவித்தார்.நாலாவதாக,மரபணுப் பரிசோதனை எனப்படுவது மனிதப் புதை குழிக்கான நீதி விசாரணைப் பொறிமுறையில் இறுதிக்கட்டத்தில் செய்யப்படுவது என்றும் தெரிவித்தார்.
அரசாங்கம் செம்மணி விவகாரத்தைத் தனக்குச் சாதகமாக கட்டமைக்கும் விதத்தில் கையாண்டு வருகிறது என்பதை அது காட்டுகிறது.உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை தொடர்பான நம்பிக்கையை உலக அளவில் பலப்படுத்துவதற்கு இந்த விடயத்தை அரசாங்கம் கையாண்டு வருகிறது என்பது தெரிகிறது.தமிழ் மக்கள் அனைத்துலகைப் பொறிமுறை ஒன்றைக் கேட்கின்றார்கள்.நீதி அமைச்சர் செம்மணிக்கு வந்தபோது அங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட,பாதிக்கப்பட்ட மக்களும் அதைத்தான் கேட்டார்கள். பல மாதங்களுக்கு முன்பு ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அங்கு வந்த போதும் அதைத்தான் கேட்டார்கள்.ஆனால் அரசாங்கம் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையின் நம்பகத்தன்மையை பலப்படுத்தும் விதத்தில் விடயங்களைக் கையாண்டு வருகிறது என்பது தெரிகிறது.ஐநாவும் “தேசியத் தன்மை” மிக்க உள்நாட்டுப் பொறிமுறையை அனைத்துலக உதவிகளின் மூலம் பலப்படுத்துவது என்றுதான் சிந்திப்பதாகத் தெரிகிறது.
இப்படிப்பட்டதோர் உள்நாட்டு மற்றும் அனைத்துலகச் சூழலில், அரசாங்கத்தை நம்பாதபடியால் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையையும் ஏற்றுக்கொள்ளாத தமிழ்மக்கள் அரசாங்கமே தானாக முன்வந்து செம்மணிக்கு நீதியைப் பெற்றுத் தரும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்? அரசாங்கம் தானாக முன்வந்து சம்பந்தப்பட்ட உறவினர்களைத் தேடித்திரட்டி அவர்களுடைய மரபணு மாதிரிகளை சேகரிக்கும் என்றும்,அந்த மரபணு மாதிரிகளை எலும்புக்கூடுகளின் மரபணு மாதிரிகளோடு ஒப்புநோக்கும் என்றும் எப்படி எதிர்பார்க்கலாம்? இந்தவிடயத்தில் தமிழ்க் கட்சிகளும் சிவில் சமூகங்களும் இணைந்து தாங்களாகச் செய்யவேண்டிய பணிகள் எவையெவை?
செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படும் எலும்புக்கூடுகளை ஊடகவியலாளர்கள் ஒவ்வொரு நாளும் வெளி உலகத்துக்கு காட்டி கொண்டிருக்கிறார்கள்.அது ஓர் உணர்ச்சிகரமான அரசியல் விவகாரமாக தமிழ் பரப்புக்குள் நொதித்துக் கொண்டிருக்கிறது.ஆனால் அந்த எலும்புக் கூடுகளில் தங்களுடைய உறவினர்கள் இருக்கலாம் என்று அதை அடையாளம் காண்பதற்கு பொதுமக்கள் ஏன் அதிக தொகையில் போகவில்லை?அல்லது அவ்வாறு போக வேண்டியவர்களை ஒருங்கிணைப்பது யார்?
செம்மணியில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.கொத்து கொத்தாக புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கத்தக்க விதத்தில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. தாயும் பிள்ளையும் என்று சந்தேகிக்கப்படத்தக்க விதத்தில் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.அப்படியென்றால் அங்கே தங்களுடைய உறவினர்கள் புதைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்று சந்தேகப்படும் தமிழ் மக்களை ஒருநாள் அங்கு வருமாறு அழைத்தபோது,ஏன் தமிழ் மக்கள் அதிக தொகையில் வரவில்லை? கொக்குத்தொடுவாய்ப் புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை அடையாளம் காண வருமாறு அழைத்த போதும் தமிழ் மக்கள் அங்கே போகவில்லை என்று கூறப்படுகிறது.
யாருக்கெல்லாம் கொல்லப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உடல்கள் கிடைக்கவில்லையோ,யாருடைய உறவினர்கள் குழந்தைகளோடு காணாமல் ஆக்கப்பட்டார்களோ,அல்லது யாருடைய உறவினர்கள் குடும்பமாக காணாமல் ஆக்கப்பட்டார்களோ, அல்லது யாருடைய உறவினர்களின் உடல்கள் கிடைக்கவில்லையோ,அவர்கள் அனைவரும் அங்கே வந்திருக்க வேண்டும்? அவர்களை அழைத்துக் கொண்டு வர வேண்டியது யார்? எந்த அரசாங்கத்தின் உள்நாடு விசாரணைப் பொறிமுறை வேண்டாம் என்று தமிழ் மக்கள் நிராகரிக்கிறார்களோ அதே அரசாங்கம் அதைச் செய்ய வேண்டும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்களா?
எலும்புக்கூடுகள் பேசாது.அவற்றின் மரபணுக்கள்தான் பேசும். எலும்புக்கூடுகளை அடையாளம் காணமுடியாது.ஆனால் மரபணுக்களை ஒப்பு நோக்கலாம்.எலும்புக்கூடுகளோடு கிடைக்கும் இதுவரை உக்காத பொருட்களை வைத்தும் ஓரளவுக்கு அங்கு புதைக்கப்பட்டவர்களை அடையாளம் காண முயற்சிக்கலாம்.எனவே இந்த விடயத்தில் உலகளாவிய அனுபவங்களை கற்றுக்கொண்டு அதற்கு வேண்டிய விஞ்ஞான பூர்வமான அணுகுமுறைகளை தமிழ்த் தரப்பு முன்னெடுக்க வேண்டும். யார் அதைச் செய்வது?
செம்மணியில் புதை குழிகள் முதலில் திறக்கப்பட்டதற்கு காரணம்,சோமவன்ச ராஜபக்ஷ என்ற ஒரு படை ஆள்தான்.இரண்டாவது தடவை அது திறக்கப்பட காரணம் இயற்கையானது.சித்துப்பாத்தி மயானத்தில் மின்தகன மேடை அமைப்பதற்காக அத்திவாரம் கட்டுவதற்கு நிலத்தை அகழ்ந்தபோது எலும்புக்கூடுகள் மேலெழுந்தன.அதாவது இயற்கை தமிழ் மக்களுக்கு ஒரு வாய்ப்பைத் திறந்து விட்டிருக்கிறது.ஆனால் அதைத் தமிழ் மக்கள் பயன்படுத்துகிறார்களா?
சோமவன்ச ராஜபக்ச ஒரு முக்கிய துருப்புச் சீட்டு.படைத்தரப்பிலிருந்து ஒருவர் அவ்வாறு சாட்சியம் கூறுகிறார்.பல ஆண்டுகளாக அவர் சிறையில் இருக்கிறார்.அவருடைய மனைவி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு கடிதங்கள் எழுதியிருக்கிறார்.38 ஆண்டுகால போரில் படைத் தரப்பைச் சேர்ந்த ஒருவர் அவ்வாறு தமிழ் மக்களுக்குச் சாதகமாகச் சாட்சி கூறுவது மிக அரிதான ஒரு புறநடை.ஆனால் தமிழ் மக்கள் எந்த அளவுக்கு அதனைச் சட்டரீதியாகக் கையாண்டிருக்கிறார்கள்?
எனவே,செம்மணிப் புதைக்குழி தமிழ் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மட்டுமல்ல,தமிழ் சட்டத்தரணிகளுக்கும் சட்டச் செயற்பாட்டாளர்களுக்கும் புதிய வாய்ப்புகளை திறந்து வைத்திருக்கிறது.நினைவு கூர்தல்போல புதைகுழிகளும் உணர்ச்சிகரமான விடையப் பரப்புகள்தான். ஆனால் அந்த உணர்ச்சிகரமான உளவியல் சூழலை நீதிக்கான போராட்டத்தின் உந்துவிசையாக யார் மாற்றுவது?
சிங்கள மனித உரிமைச் செயற்பாட்டாளரான,மறைந்த,சுனிலா அபயசேகர பல ஆண்டுகளுக்கு முன் “சண்டே டைம்ஸ்” பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலை இங்கே நினைவூட்ட வேண்டும்.அது மாத்தளை வைத்தியசாலைக்கு அருகே மனிதப் புதை குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்த காலம்.சுனிலா தனது நேர்காணலில் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார். “மாத்தளைப் புதைகுழி கிண்டப்படுகையில்,அதை நோக்கிச் சிங்கள மக்கள் திரண்டு வரவில்லை.இதுவே லத்தீன் அமெரிக்காவாக இருந்திருந்தால்,மனிதப் புதைக்குழி கிண்டப்படுகையில் பொதுமக்கள் குறிப்பாக,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அந்த இடத்தைச் சூழ்ந்து காணப்படுவார்கள்.அந்த இடத்தை நோக்கித் திரண்டு வருவார்கள்…”என்ற பொருள்பட சுனிலா கருத்துத் தெரிவித்திருந்தார்.
அதைத்தான் வேறு வார்த்தைகளில் வவுனியாவில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இருந்தவரும்,மனித உரிமைச் செயற்பாட்டாளருமான கலாநிதி விஜயதிலக கூறினார். “தென்னிலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதை மறக்கப்பட்ட ஒரு கதை” என்று அவர் கூறினார்.
மாத்தளைப் புதைகுழியை நோக்கிச் சிங்கள மக்கள் வரவில்லை. செம்மணியில் எலும்புக் கூடுகளை அடையாளம் காண்பதற்கு பொதுமக்கள் அழைக்கப்பட்டபோது மிகச்சிறிய எண்ணிக்கையானவர்களே அங்கே வந்திருந்தார்கள்.கொக்குத் தொடுவாய்க்கும் மக்கள் போகவில்லை என்று கூறப்படுகிறது.நீதி அமைச்சர் கூறுகிறார்,மரபணுப் பரிசோதனைக்குத் தேவையான வளங்கள் இலங்கையிடம் போதிய அளவு இல்லை என்று. செம்மணி ஆசியாவின் இரண்டாவது பெரிய புதைக் குழியா என்ற கேள்வி வலிமையாக மேலேழும் ஒரு காலகட்டத்தில்,நீதிக்காகப் போராடும் தமிழ்மக்கள் தாங்களாகச் செய்யவேண்டியது என்ன?






