கல்முனை ஆஸ்பத்திரி விவகாரம் : குணமாக்கப்படாத காயங்கள்?

கல்முனை மருத்துவமனையில் புதிதாக நியமனம் பெற்ற பெண் சுகாதாரத் துறை உதவியாளர்கள் ஹிஜாப் அணிந்து வந்தமை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் எடுத்த நடவடிக்கையும் விளைவுகளும்  இரண்டு சமூகங்களுக்கும் இடையிலான முரண்பாட்டைப் புதுப்பித்திருக்கிறதா?

அவர்கள் தாதியர்கள் அல்ல.சுகாதாரத் துறை உதவியாளர்கள்.தாதியர்களுக்கு என்று உலகளாவிய சீருடை உண்டு.இலங்கையில் உள்ள எல்லாத் தாதியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் சீருடை கண்டிப்பானது.ஆனால் கல்முனையில் பிரச்சினைப்பட்டது தாதியர்கள் அல்ல.அவர்கள் சுகாதாரத் துறை உதவியாளர்கள். புதிதாக நியமனம் பெற்றவர்கள். அவர்கள் முதல் நாள் மருத்துவமனைக்கு வந்த பொழுது அவர்களில் ஐந்து பேர் ஹிஜாப் அணிந்திருந்தார்கள்.நிர்வாகம் அதனைச் சுட்டிக்காட்டிருந்த பின்னணியில்,அடுத்த நாள் வரும்பொழுது அவர்கள் 9 பேரும் ஹிஜாப் அணிந்து வந்திருக்கிறார்கள்.நிர்வாகம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இது இரண்டு சமூகங்களுக்கும் இடையிலான முரண்பாடாக வியாக்கியானம் செய்யப்பட்டிருக்கிறது.விளைவாக இரண்டு சமூகங்களுக்கும் இடையிலான ஏற்கனவே ஆழமாகப் புரையோடிப் போயிருந்த முரண்பாடுகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன.அரசாங்கம் அந்த ஒன்பது ஊழியர்களையும் அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனைக்கு மாற்றியிருக்கிறது.அங்கே அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு உபசாரம் நடந்திருக்கிறது. அதுவும் இரண்டு சமூகங்களுக்கும் இடையிலான முரண்பாட்டைப் பிரதிபலிக்கும் ஒரு விடயந்தான்.

இந்த விவகாரம் பின்வரும் நான்கு விடயங்களை வெளியே கொண்டு வந்திருக்கிறது.முதலாவது விடயம்,தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான சந்தேகங்களும் பயங்களும் கசப்பும் வெறுப்பும் ஆறாத காயங்களும் எந்தளவுக்கு நீறு பூத்துகிடக்கின்றன என்பது.இரண்டாவது விடயம்,இலங்கைத் தீவின் சுகாதாரத் துறை சுற்று நிருபங்களில்  திருத்தங்கள் வேண்டியிருப்பது.மூன்றாவது விடயம்,அரசாங்கம் இந்த விவகாரத்தைத் தீர்க்க விரும்பவில்லை,அல்லது அரசாங்கத்துக்குத் தீர்க்கத் தெரியவில்லை.நான்காவது விடயம்,ஆறு கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய கூட்டு எங்கே போனது? என்ற கேள்வி.

மேற்சொன்ன விடயங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.முதலாவது, தமிழ் முஸ்லிம் உறவுகள் எந்த அளவுக்குப் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பது.இது ஏற்கனவே கதிர்காமம் பாத யாத்திரைக்குப் போன சுப்பிரமணியன் எனப்படும் நாயின் விவகாரத்திலும் வெளிப்பட்டது.இப்பொழுதும் கல்முனை மருத்துவமனை விவகாரத்திலும் வெளிப்படுகிறது.இல்லாத ஒன்று திடீரென்று கிளம்பவில்லை.ஏற்கனவே இருப்பதுதான்,நீறுபூத்துக் கிடப்பதுதான் காற்று வீசும்போது பற்றி எரிகிறது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகளின் பின்னரும் இரண்டு சமூகங்களுக்கும் இடையில் மனம் திறந்த உரையாடல் எதுவும் நடக்கவில்லை.

இரண்டாவது விடயம்,சுகாதாரத்துறை சார்ந்த ஆடை விதிமுறைகள் பற்றியது. இதுதொடர்பாக ஒரு மருத்துவ நிர்வாகி கூறினார்,இந்த விடயத்தில் சீருடையா?அல்லது டிரஸ் கோட்டா-ஆடை ஒழுக்க விதியா? என்பதனை தீர்மானித்தால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று.சீருடை என்பது இறுக்கமானது. டிரஸ் கோட் என்றால் அவரவர் தன்னுடைய பண்பாட்டு அடையாளங்களைப் பேணும் அதேசமயம் பொதுவான துறைசார் ஆடைகளுக்குரிய விதிகளையும் பேணலாம்.அதாவது டிரஸ் கோட்டில் நெகிழ்ச்சி இருக்கும்.யூனிஃபோர்ம் என்றால் அங்கே நெகிழ்ச்சி இருக்காது.பிரித்தானியா போன்ற நாடுகளில் டிரஸ் கோட்தான் நடைமுறையில் உள்ளது என்பதனை அந்த மருத்துவ நிர்வாகி சுட்டிக்காட்டினார்.இதை அரசாங்கம்தான் முடிவு செய்ய வேண்டும்.

மூன்றாவது விடயம், அரசாங்கம் இந்த விவகாரத்தை எப்படிக் கையாண்டது என்பது.அரசாங்கம் ஏற்கனவே வழங்கப்பட்ட சுற்று நிருபத்தின் அடிப்படையில் நிர்வாகத்துக்குச் சாதகமாக முடிவெடுப்பதா?அல்லது சுற்று நிருபத்தை இறுக்கமாகப் பேணுவதன்மூலம் சமூகப் பிரிவுகளுக்கு இடையிலான நல்லிணக்கம்  சிதைய அனுமதிப்பதா? என்ற விடயத்தில் அவசரமான உடனடியான முடிவை எடுக்கத் துணியவில்லை.அதுமட்டுமல்ல,காலம் தாழ்த்தி எடுக்கப்பட்ட அமைச்சுமட்ட முடிவும்கூட பிரச்சினையை ஒத்திவைப்பதுதான்.

அந்தப் பகுதியில் ஏற்கனவே “தமிழ் ஆஸ்பத்திரி”, “முஸ்லிம் ஆஸ்பத்திரி” என்ற பிரிவு ஆழமாக உண்டு.பிரச்சினைக்குள்ளான சுகாதாரத்துறை உதவியாளர்கள் இப்பொழுது முஸ்லிம் ஆஸ்பத்திரிக்கு அதாவது அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்.அதாவது தமிழ் ஆஸ்பத்திரியில் பிரச்சனை வந்த பொழுது அவர்கள் முஸ்லிம் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

நான்காவது,ஆறு கட்சிகளின் மேடை.தமிழ் பேசும் சமூகங்களுக்குஇடையிலான பொதுவான பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதற்கான ஒரு மேடையாக அதைப் பயன்படுத்தப் போவதாக கட்சித் தலைவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்கள்.ஆனால் கதிர்காமத்துக்குப் போன சுப்பிரமணியன் விவகாரத்தின் விளைவுகளைக் குறித்து 6 கட்சித் தலைவர்களில் அநேகர் வாயைத் திறக்கவில்லை.அப்படித்தான் இப்பொழுது கல்முனை ஆஸ்பத்திரி விடயத்தில் ஆறுகட்சி மேடை பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.ஆறு கட்சி மேடைக்குள்ள  நடைமுறைச் சாத்தியமான முக்கியத்துவங்களில் ஒன்று,தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான வெளிப்படைத் தன்மைமிக்க மனந்திறந்த உரையாடலைத் தொடங்குவதற்கான ஒரு மேடையாக அதைப் பயன்படுத்தலாம் என்பது.ஆனால் இரண்டு சமூகங்களுக்கும் இடையில் ஆழமான வெறுப்பைப் பிரதிபலிக்கும் ஒரு விடயத்தில் மௌனம் காத்ததன்மூலம் அந்த மேடை அதற்கு பொருத்தமானதா என்ற கேள்வி இப்பொழுது எழுகிறது.தமிழ்-முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் அதுதொடர்பான கருத்துக்களைத் தெரிவிப்பதன்மூலம் தமது சமூகம் சார்ந்த வாக்கு வங்கியைச் சோதனைக்குள்ளாக்க விரும்பவில்லையா? பொருத்தமான,துணிச்சலான முடிவுகளை எடுத்து தமது சமூகங்களை வழிநடத்த முடியாத தலைவர்களா? இரண்டு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் சமூக ஊடக வலைத்தளங்களில் பாரதூரமான விதங்களில் மோதிக் கொண்டிருந்த போது ஆறு கட்சிகளின் மேடை அதை ஒரு சாட்சிபோல பார்த்துக் கொண்டிருந்தது. தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரான மனோ கணேசன் முகநூலில் இனநல்லிணக்க நோக்கு நிலையிலிருந்து கருத்துத் தெரிவித்துள்ளார்.அது ஆறு கட்சிக் கூட்டின் உத்தியோகபூர்வ நிலைப்பாடா?

இது எதனைக் காட்டுகிறது என்றால்,அந்தக் கூட்டின் இயலாமையை மட்டுமல்ல,இறந்த காலத்தின் கசப்பான வெறுப்பு மிகுந்த காயங்களில் இருந்தும்,பழிவாங்கும் உணர்ச்சியில் இருந்தும் இரண்டு சமூகங்களையும் மீட்டெடுக்கும் வல்லமை படைத்த, அதாவது பண்புரு மாற்றத்துக்குத் தலைமை தாங்கவல்ல தலைவர்கள் இரண்டு சமூகங்கள் மத்தியிலும் இல்லை என்பதைத்தான்.மாற்றத்தை வாக்களித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தியும் அப்படிப்பட்ட பண்புரு மாற்றத்திற்குத் தலைமை தாங்கும் கொள்ளளவோடு இல்லை என்பதைத்தான்.

எனவே மேற்சொன்னவைகளைத் தொகுத்துப் பார்த்தால் தெளிவாகத் தெரிவது என்னவென்றால்,17 ஆண்டுகள் ஆன பின்னரும் இரண்டு சமூகங்களுக்கும் இடையிலான கூட்டுக் காயங்கள் குணமாக்கப்படவில்லை என்பதைத்தான்.நீதிக்காகப் போராடும் தமிழ்மக்கள் இந்த விடயத்தில் இரண்டு சமூகங்களுக்கும் இடையிலான உறவைக் கவனத்தில் எடுத்துத்தான் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும். ஒரு பண்பாட்டு ஆடை விவகாரத்தை முன்வைத்து பழைய காயங்களைப் புதுப்பிக்கக் கூடாது. தமிழ்மக்கள் கேட்டுப் போராடும் நீதி,தமிழ் மக்களுக்கு மட்டுமான நீதியல்ல.அது தேசிய இன விடுதலைக்கான நீதி. எனவே அங்கே தமிழ்ப் பகுதிகளில் வசிக்கும் ஏனைய மக்கள் கூட்டங்களும் தங்களுக்கும் நீதி கிடைக்கும் என்று நம்ப வேண்டும். சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பு தங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்று கேட்கும் தமிழ்மக்கள் தங்களுக்குள் வாழும் சிறிய தேசிய இனங்களுக்குத் தாங்களும் பொறுப்புக்கூற வேண்டும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *