செம்மணி அறிக்கையும் தமிழ்ச் சமூகமும்

எனது நண்பர் ஒருவர் சொன்னார்,பேராசிரியர் ராஜ்.சோமதேவவின் தொல்லியல் ஆய்வுகள் தொடர்பான காணொளிகளை தான் பார்த்திருப்பதாக. குறிப்பாக,விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் அவர் தமிழர்களின் பூர்வீகம் தொன்மம் தொடர்பாக அவ்வப்போது அறிக்கைகள் விடுவார்.அந்த அறிக்கைகளில் சிலவற்றிக்கு பேராசிரியர் பதிலளித்திருப்பதாக நண்பர் சொன்னார்.ஆனால் அந்தப் பதில்கள் இனச் சாய்வுடையவைகளாகவே தனக்குத் தோன்றின என்றும் அவர் சொன்னார்.

பேராசிரியர் சோமதேவ தொடரில் தமிழ்மக்கள் மத்தியில் அவ்வாறான கருத்துக்கள் சந்தேகங்கள் முற்கற்பிதங்கள் உண்டு.அவ்வாறு ஏற்கனவே சர்ச்சைக்குரியவராக உள்ள ஒருவர் செம்மணி அகழ்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட போது அதுதொடர்பாக ஆங்காங்கே முகநூல் சுவரில் சிலர் எழுதினார்கள்.ஆனால் அந்தக் கருத்துக்கள் முகநூல் சுவரில் எழுதப்பட்டதற்குமப்பால் ஓர் அரசியல் முடிவாக,ஓர் அரசியல் கருத்துருவாக்கமாகத் திரட்சியுறவில்லை.அதனால் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள அரசியல்வாதிகளோ செயல்பாட்டாளர்களோ அல்லது குடிமக்கள் சமூகங்களைச் சேர்ந்தவர்களோ அல்லது துறைசார் கல்விமான்களோ சோமதேவவின் நியமனத்தை அப்பொழுது கேள்விக்கு உள்ளாக்கயிருந்தார்களா?

ஏன் அதிகம் போவான்? கடந்த ஓகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் மையத்தில் சிறப்புத் தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் காட்சிப்படுத்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.இந்த நிகழ்வுகளை பல்கலைக்கழக வரலாற்றுத் துறையுடன் இணைந்து ஒருங்கிணைத்த இணைத் தலைவர்களில் ஒருவர் பேராசிரியர் ராஜ் சோமதேவ.அப்படியென்றால் சோமதேவ தொடர்பாக யாழ்.பல்கலைக்கழகத்தின் நிலைப்பாடு என்ன?

ஆனால் இப்பொழுது அவருடைய மூன்றாவது இடைக்கால அறிக்கை வெளிவந்த பின்,அதுதொடர்பாக விமர்சனங்கள் அலையாக மேல் எழுந்துள்ளன.நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் சோமதேவுக்கு எதிராகப் பேசியிருக்கிறார்.தமிழரசுக் கட்சி பன்னாட்டு விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தியுள்ளது.

இப்பொழுது சோமதேவ மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் தமிழ்த் தரப்பானது,110 நாட்களாக அவர் யாழ்ப்பாணத்தில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டபோது,அதுவும் மூன்று கட்டங்களாக ஈடுபட்டபோது,ஆனைக்கோட்டை தொல்லியல் மையத்தில் நடந்த காட்சிப்படுத்தலில் இணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தபோது, அதுதொடர்பாக ஏன் உரிய தரப்புகளிடம் தமது ஆட்சேபனையைத் தெரிவித்திருக்கவில்லை ?

குறிப்பாக,ராஜதந்திரிகள்,ஐநா மனித உரிமைகள் ஆணையாளர், தூதரகங்களைச் சேர்ந்தவர்கள்,பிற நாட்டு ஊடகவியலாளர்கள் போன்றோர் அந்த அகழ்வுப் பிரதேசத்துக்கு வந்து போயிருக்கிறார்கள்.அப்பொழுதுகூட பேராசிரியர் மீதான விமர்சனங்கள் அரசியல் அடர்த்தியோடு முன்வைக்கப்பட்டனவா?இல்லை.அப்படிப்பட்ட செய்திகள் எவையும் அப்பொழுது கிடைக்கவில்லை.

அவருடைய முதல் இரண்டு அறிக்கைகள் வெளிவந்த போதும் அவ்வாறான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டனவா? இல்லை.இப்பொழுதுதான் மூன்றாவது இடைக்கால அறிக்கைக்குதான் ஆட்சேபனைகள் கிளம்பியுள்ளன.

அப்படியென்றால் தமிழ்த் தரப்பு அவர் அகழ்வாராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்த 110 நாட்களிலும்,அவர் முதல் இரண்டு இடைக்கால அறிக்கைகளை வெளியிட்ட போதும்,ஆனைக்கோட்டை தொல்லியல் மையத்தில் நடந்த காட்சிப்படுத்தலில் இணைத் தலைவராகச் செயற்பட்டபோதும், தெரிவிக்காத ஆட்சேபனையை, எதிர்ப்பை இப்பொழுது தெரிவிப்பதை எப்படி விளங்கிக் கொள்வது ?

முதல் இரண்டு இடைக்கால அறிக்கைகளிலும் தமிழ்மக்களின் நீதிக்கான போராட்டத்திற்குப் பாதகமான அம்சங்கள் இருக்கவில்லை.கடைசியாக வந்திருக்கும் இடைக்கால அறிக்கை பாதகமான அம்சங்களை கொண்டிருக்கிறது.அதன்பொருள் கடைசியாக வந்த அறிக்கையில்தான் பேராசிரியர் தன் நிலைப்பாட்டை மாற்றினார் என்பதா? கடைசியாக வந்த அறிக்கையோடுதான் அவர் யார் என்பது தெரியவந்ததா? இதற்கு முன்னுக்குத் தெரியாதா? இந்தவிடயத்தில் அதாவது,செம்மணி அகழ்வுப் பணிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாகச் சம்பந்தப்பட்ட சட்டச் செயற்பாட்டு அமைப்புமுட்பட,தமிழ் அரசியல்வாதிகள்,செயற்பாட்டாளர்கள்,சிவில் சமூகங்கள் போன்றன ஏன் முன்கூட்டியே உஷாராக இருக்கவில்லை?

ஏனென்றால்,தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட விடயங்களில் தொடர்ச்சியும் இல்லை;ஒருங்கிணைப்பும் இல்லை.அவ்வப்போது எதிர்த்தரப்பின் அல்லது வெளித் தரப்புகளின் நடவடிக்கைகளுக்கு பதில்வினையாற்றும் “ரியாக்ட்டிவ்” அரசியல்தான் தமிழ் மக்கள் மத்தியில் இப்பொழுது உண்டு. “ப்ரோ ஆக்டிவாக” தனது செயல்களின் மூலம் ஏனைய தரப்புகளை தன்னை நோக்கி வரவழைக்கும் அரசியல் செய்முறை தமிழ் மக்கள் மத்தியில் இல்லை.

அவ்வாறு “ப்ரோ ஆக்டிவாக” சிந்தித்து இருந்திருந்தால்,அகழ்வுப் பணிகள் தொடர்பான தொல்லியல் மற்றும் மருத்துவத் துறைசார் தமிழ்ப் புலமையாளர்களை அழைத்து அதுதொடர்பாக ஏற்கனவே விவாதங்களை நடத்தியிருந்திருந்தால்,பேராசிரியர் சோமதேவ தொடர்பாக முன்கூட்டியே ஆட்சேபனையைத் தெரிவித்திருந்திருக்கலாம்.ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.ஏன் நடக்கவில்லை என்றால்,அவ்வாறு “ப்ரோ ஆக்டிவாகச்” செயற்பட அல்லது அதனை அரசியல் வார்த்தைகளில் சொன்னால்,ஒரு தேசமாகச் சிந்தித்துச் செயற்பட அல்லது அதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால்,ஓர் அரசைப்போல சிந்தித்துச் செயற்பட யாரும் இல்லை.

ஆனால் அரசு அதன் உபகரணங்களின் ஊடாக விடையங்களை முன்னெடுக்கின்றது.செம்மணி அகழ்வுப் பணிகளும் அப்படித்தான்.அரசு அதன் அரச கட்டமைப்புகளுக்கு ஊடாக அந்த அகழ்வுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.அந்த அகழ்வுப் பணிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக “மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான மையம்”(CHRD ) என்ற சட்டச் செயற்பாட்டு அமைப்பின் பிரசன்னம் உண்டு.ஆனால் தமிழ்த் தரப்பு அது தொடர்பாக ஆழமாக,தொடர்ச்சியாக அவதானிக்கத்தக்க,தொகுக்கப்பட்ட முடிவுகளை எடுக்கத் தேவையான மையக் கட்டமைப்புகளைக் கொண்டிருக்கிறதா?இதை மேலும் ஆழமாக,கூர்மையாகக் கேட்டால் தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு?

ஒருவரும் பொறுப்பில்லை.யாராலும் பொறுப்பேற்கப்படாத ஒரு மக்கள் கூட்டமாக தமிழ்மக்கள் காணப்படுகிறார்கள்.உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி தானே தீர்மானிக்கும் கட்சி என்று கூறுகிறது.புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்புகள் சில தாயகத்தின் நிலைமைகளை தொலைவில் இருந்து இயக்கி அதன்மூலம் தாமே தீர்மானிக்கும் சக்திகளாக வரலாம் என்று நம்புகின்றன.ஆனால் கடந்த 17 ஆண்டுகளாக அவர்களால் அவ்வாறு வர முடியவில்லை.இதனால் தமிழ்மக்கள் யாராலும் பொறுப்பேற்கப்படாத மக்களாகக் காணப்படுகிறார்கள்.தமிழ்த் தேசிய அரசியலில் ஏற்படும் சறுக்கல்களுக்கும் தோல்விகளுக்கும் யாரும் பொறுப்புக் கூறுவதில்லை.

அதன் விளைவாகத்தான் தமிழ்த் தேசியப் பரப்புப்பில் ஆங்காங்கே நடந்து வரும் போராட்டங்கள் ஒரு மையத்திலிருந்து இணைக்கப்படாதவைகளாகக் காணப்படுகின்றன.மயிலத்தமடு,மாதவனை மேச்சல் தரைக்கான போராட்டத்தில் கட்சிகளும் சிவில் சமூகங்களும் ஒப்பீட்டளவில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

தையிட்டிப் போராட்டத்தை தமிழ்த்தேசியப் பேரவைதான் பெருமளவுக்கு முன்னெடுக்கின்றது.எல்லாக் கட்சிகளும் இணையும் போது அந்தப் போராட்டம் பெருக்கின்றது.

நாட்டில் இப்பொழுது மூன்று சட்ட முன்மொழிவுகள் மேசையில் உண்டு. முதலாவது,புதுப்பிக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டமூலம்.இரண்டாவது, ஒருங்கிணைந்த குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான சட்டமூலம்.மூன்றாவது, அரச சார்பற்ற நிறுவனங்களைப் பதிவதற்கான சட்டமூலம்.இம்மூன்று சட்டமூலங்கள் தொடர்பாகவும் தமிழ்த் தரப்பு ஒரே குரலில் தன் எதிர்ப்பை முன்வைக்க வேண்டிய தேவை உள்ளது.

இப்படியாக தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு தேசமாக தமிழ் மக்களைப் பாதிக்கக்கூடிய,அல்லது இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், ஒரு தேசமாக தமிழ் மக்கள் இருப்பதை அழிக்கும் உள்நோக்கத்தை கொண்ட எல்லா அரசு நடவடிக்கைகளையும் தமிழ் மக்கள் எதிர்க்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.அதை ஒரு தேசமாக ஒன்றிணைந்து செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால் இதில் உள்ள துயரம் என்னவென்றால்,தமிழ் மக்களை ஒரு தேசமாக இருக்க விடக்கூடாது என்று திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் சிங்களபௌத்த அரசு என்ற கட்டமைப்புக்கூடடாக முன்னெடுக்கப்படுகின்றன. அதேசமயம் தமிழ் மக்களோ தம்மை ஒரு தேசமாகத் தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை கட்டமைப்பு ரீதியாக முன்னெடுக்க முடியாதவர்களாகக் காணப்படுகிறார்கள் என்பதுதான்.

தமிழ் மக்களிடம் கட்டமைப்பு சார்ந்த சிந்தனை இல்லை.மு.திருநாவுக்கரசு கூறுவதுபோல இன அழிப்பு என்பது ஒரு கட்டமைப்பு சார்ந்த நடவடிக்கைதான்.அவர் அண்மையில் வெளியிட்டிருக்கும் நூலில் இனஅழிப்பு எனப்படுவது கட்டமைப்புக்களுக்கூடாக முன்னெடுக்கப்படுவதுதான் என்பது நிறுவப்படுகிறது.அந்நூலை கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.பல்கலைக் கழகத்தில் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.எனினும்,பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கமைய அந்நிகழ்வு நிறுத்தப்பட்டிருக்கிறது.இலங்கைத்தீவில் இனஅழிப்பானது ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கூடாகவே முன்னெடுக்கப்படுகிறது என்று அந்நூல் நிறுவுகிறது.

இன அழிப்பு நடவடிக்கைகளை அரசுகள் மட்டும் முன்னெடுப்பதில்லை.அரசல்லாத,அதேசமயம் நிறுவனமாக,கட்டமைப்புக்களோடு காணப்படுகின்ற போராட்ட அமைப்புக்களும் முன்னெடுத்ததுண்டு.

ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கூடாக முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் எல்லாமே கட்டமைப்புச் சார்ந்தவைதான்.ஓர் அரசு அதன் உபகரணங்களான நாடாளுமன்றம், படைக் கட்டமைப்பு,திணைக் களங்கள்,அதிகார சபைகள் போன்ற பல்வேறு பெரிய மற்றும் சிறிய கட்டமைப்புகளுக்கூடாக தமிழ்மக்கள் ஒரு தேசிய இனமாக இருப்பதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் அல்லது அந்தத் தேசிய இருப்பைச் சிதைக்கும் நடவடிக்கைகளில் பல தசாப்த காலமாக ஈடுபட்டு வருகிறது.

ஆனால் அதை எதிர்கொள்வதற்கான தமிழ் மக்களின் நடவடிக்கைகள் கடந்த 17 ஆண்டுகளாக எவ்வாறு உள்ளன?

ஒடுக்குமுறைகள் கட்டமைப்பு சார்ந்து இடம்பெறும்போது,அதை எதிர்கொள்வதற்கான ஒடுக்கப்படும் தரப்பின் நடவடிக்கைகளும் கட்டமைப்பு சார்ந்தவைகளாக இருக்கவேண்டும். தங்களை ஒரு தேசம் என்று அழைத்துக் கொள்ளும் தமிழ் மக்கள் அதற்குரிய கட்டமைப்புகளை உருவாக்கி,இன அழிப்பை ஒரு தேசமாக எதிர்கொள்ள வேண்டும்.ஆனால் அப்படிப்பட்ட கட்டமைப்புகள் தமிழ் மக்களிடம் உண்டா?

கட்சிகள் உண்டு;குடிமக்கள் சமூகங்கள் உண்டு.ஆனால் நீதிக்கான போராட்டத்திற்குத் தேவையான ஏனைய கட்டமைப்புகள் தமிழ் மக்களிடம் உண்டா?குறிப்பாக ஒரு மையத்தில் இருந்து ஒருங்கிணைக்கப்படும் கட்டமைப்புகள் உண்டா?ஒரு மையத்திலிருந்து திட்டமிடப்படாத,தேவையான கட்டமைப்புகள் உருவாக்கப்படாத,ஓர் அரசியற் சூழல்தான் இப்பொழுதும் உண்டு.அப்படிப்பட்ட கட்டமைப்புகள் இல்லாத வெற்றிடத்தில்தான் தமிழ்த் தேசிய அரசியலானது தொடர்ச்சி இல்லாததாகவும்,நிறுவன மயப்படாததாகவும் காணப்படுகிறது.பேராசிரியர் சோமதேவவை எதிர்கொண்ட விதத்திலும் அது தெளிவாகத் தெரிகிறது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *