செம்மணி இடைக்கால அறிக்கை: தமிழ்மக்களிடம் உள்ள சில கேள்விகள்

செம்மணி இடைக்கால சுருக்க அறிக்கை தொடர்பாக பேராசிரியர் ராஜ்.சோமதேவ மீது தமிழ்த் தரப்பு குற்றச்சாட்டுகளை வைக்கிறது.அவரை இனவாதி என்று திட்டும் பதிவுகளை சமூக ஊடக வலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது.சோமதேவ  யார் என்பது தமிழ்த் தொல்லியலாளர்கள் மத்தியில் ஏற்கனவே தெரிந்த ஒரு விடயம்.

ராஜ் சோமதேவ மாத்தளைப் புதைகுழி தொடர்பாக அமெரிக்காவுக்கு அனுப்பிய எலும்பு மாதிரிகளில் விலங்குகளின் எலும்புகள் இருந்ததாகக் கூறி அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள ஆய்வுக்கூடம் அவரைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்திருப்பதாகவும் ஒரு செய்தி உண்டு.

அதுபோலவே மன்னார் சதோச வளாகத்தில் காணப்பட்ட புதைகுழி தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களும் சர்ச்சைகளுக்கு உள்ளாகின. மேலும்,கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் நியமிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய செயலணி ஒன்றில் சோமதேவ உறுப்பினராக இருந்திருக்கிறார்.அந்தச் செயலணியானது கிழக்கில் பௌத்த மரபுரிமைச் சின்னங்களைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டது.

மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு கேள்வியைத் தொகுத்துக் கேட்கலாம்.பேராசிரியர் தொடர்பான மேற்கண்டவாறான சந்தேகங்கள், தரவுகள் என்பவற்றின் அடிப்படையில் தமிழ்த்  தரப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள்,புத்திஜீவிகள்,சிவில் சமூகங்கள் அவர் செம்மணிக்குள் இறக்கப்பட்டபோது ஏன் கேள்வி எழுப்பியிருக்கவில்லை?

ஒரு பகுதி ஆங்காங்கே முகநூலில் எழுதியது.ஆனால் அவரைப் போன்ற ஒருவர் இந்த அகழ்வுப்பணிகளில் ஈடுபடக்கூடாது என்று தமிழ்த் தரப்பு தனது ஆட்சேபனையை உரிய தரப்புகளுக்கு, உரிய விதத்தில் தெரிவித்திருந்ததா? அவ்வாறு தெரிவித்திருக்காத ஒரு பின்னணியில் இப்பொழுது அவருடைய இடைக்கால அறிக்கை மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றனவா ?

அதிலும் குறிப்பாக,கடந்த ஓகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் மையத்தில், தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடர்பாக பொதுமக்களுக்கான விழிப்புணர்வுக் காட்சிப்படுத்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத் துறையுடன் இணைந்து மேற்படி நிகழ்வை ஒருங்கிணைத்த இணைத் தலைவர்களில் பேராசிரியர் சோமதேவவும் ஒருவர்.செம்மணியில் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்த அதே காலப்பகுதியில்,யாழ்ப்பாணத்தில் பேராசிரியர் கலந்து கொண்ட மற்றொரு நிகழ்வு அது.அப்பொழுது பேராசிரியர் தொடர்பான சர்ச்சைகளை ஏன் யாரும் முன் வைக்கவில்லை?

கஜேந்திரக்குமார் நாடாளுமன்றத்தில் பேராசிரியரை குற்றம் சாட்டியுள்ளார்.தமிழரசுக் கட்சியும் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளும் அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தியுள்ளன.இந்த விவகாரம் இப்படித்தான் முடியும் என்பதை ஏற்கனவே உகிக்கக்கூடியதாக இருந்த போதிலும் ஏன் தமிழ்க் கட்சிகள் இணைந்து இந்த விடயத்தில் முன்கூட்டியே தமது ஆட்சேபனையைத் தெரிவித்திருக்கவில்லை?

இப்பொழுது மூன்றாவது இடைக்கால அறிக்கை வந்தபின் அதை ஆட்சேபிக்கும்போது தமிழ் மக்கள், தாங்கள் எதிர்பார்த்தது அந்த அறிக்கையில் இல்லை என்பதற்காக அதனை அரசியல் ரீதியாக விமர்சிக்கின்றார்கள் என்று ஒரு கருத்து ஏற்கனவே கட்டமைக்கப்பட்டு விட்டது. தமிழர்களில் ஒரு பகுதியினரும் அதை செய்கிறார்கள்.கொழும்புமைய ஆங்கில ஊடகங்களும் அதைச் செய்கின்றன.பேராசிரியரின் அறிக்கையை தமிழர்களில் ஒரு பகுதியினர் விஞ்ஞானபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் அணுகுவதற்கு பதிலாக அரசியல் ரீதியாக அணுகுகிறார்கள் என்று தமிழ்த் தரப்பில் உள்ள சிலரே குற்றஞ்சாட்டக் காண்கிறோம்.

இந்த விடயத்தில் தமிழ்த் தரப்பு முன்கூட்டியே ஆட்சேபித்திருந்திருக்க வேண்டும் என்பதுதான் உண்மை.அதேசமயம் இப்பொழுது சமர்ப்பிக்கப்பட்டிருப்பது ஓர் இடைக்கால அறிக்கை.இறுதி அறிக்கை அல்ல. ஆனாலும் இனி வரக்கூடிய அறிக்கைகளிலும் முடிவுகளிலும் அது தாக்கத்தைச் செலுத்தும்.அந்த அடிப்படையில் அந்த அறிக்கை தொடர்பாக தமிழ்த் தரப்பு புத்திபூர்வமான,விஞ்ஞானபூர்வமான கேள்விகளை எழுப்ப வேண்டிய பொறுப்பு உண்டு.

எடுத்த எடுப்பிலேயே பேராசிரியரை இனவாதி என்று கூறிப் பெட்டி கட்டுவதை விடவும்,தமிழ்மக்கள் மத்தியில் உள்ள துறைசார் நிபுணர்கள்,அக்கறை கொண்ட சக்திகள்,அரசியல்வாதிகள்,சிவில் சமூகங்கள்,பாதிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள் போன்றவை இணைந்து பேராசிரியரோடு உரையாடினால் என்ன?

அவர் ஒரு பேராசிரியர். யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து,பெருந்தொகை அரசுப் பணத்தைச் செலவழித்து 110 நாட்கள் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டவர்.அந்த அகழ்வுப் பணி தொடர்பான காணொளிகளையும் செய்திகளையும் ஒளிப்படங்களையும்,ஏன் சில சமயங்களில் செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரிக்கப்பட்ட ஒளிப்படங்களையும் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் சமூக ஊடக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்கள்.அப்பொழுதுகூட அவர் தொடர்பான ஐயங்களையும் சந்தேகங்களையும் அரசியல் அடர்த்தியோடு,உத்தியோகபூர்வமாக யாரும் முன் வைத்திருக்கவில்லை.

பல மாதங்கள் அவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து வேலை செய்திருக்கிறார். அவரோடு தமிழ்ச் சட்டத்தரணிகள்,ஊடகவியலாளர்கள்,அரசியல்வாதிகள் போன்றவர்கள் இடையூடாடி இருக்கிறார்கள்.முக்கியமாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளர்,வெளிநாட்டுத் தூதுவர்கள்,ராஜதந்திரிகள்,வெளி நாட்டு ஊடகவியலாளர்கள் போன்றோர் அவரோடு உரையாடியிருக்கிறார்கள். எனவே இந்த விடயத்தில் அறிவுபூர்வமான,விஞ்ஞானபூர்வமான உரையாடல் பரப்பு ஒன்றைத் திறக்க வேண்டும்.அதனைத் தமிழ்த் தரப்பில் யாராவது ஒழுங்கு செய்ய வேண்டும்.

பேராசிரியரிடம் கேட்பதற்கு தமிழ் மக்களிடம் பல கேள்விகள் உண்டு. உதாரணமாக,

முதலாவது  கேள்வி,அவருடைய முன்னைய இரண்டு அறிக்கைகளில் இருந்தும் மூன்றாவதாக வந்த இடைக்கால அறிக்கையின் தொனி ஏன் வேறுபடுகிறது ?

இரண்டாவது கேள்வி,கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைக்கும் இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கைக்கும் உள்ள முரண்பாட்டை எப்படி விளங்கிக் கொள்வது ?

மூன்றாவது கேள்வி,சித்துப்பாத்தி ஒரு சுடலை. அங்கே இவ்வளவு தொகையாக உடல்கள் புதைக்கப்படுவது என்பது ஒரு அசாதாரண நிலைமை. அந்த அசாதாரண நிலைமைக்கு அவர் தனது அறிக்கையில் கூறுவதுபோல இயற்கை அனர்த்தமும் பெருந்தொற்று நோயும் மட்டும்தான் காரணமா? யுத்தம் காரணம் இல்லையா ?

நாலாவது கேள்வி,அப்படியென்றால் அந்தச் சுடலையின் வயதை அதாவது அந்த சுடலை மக்களால் பாவிக்கப்பட்டு வரும் காலகட்டத்தை வைத்துக் கணிக்கும் பொழுது, யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட எந்த இயற்கை அனர்த்தத்தின் போது அல்லது பெரும் தொற்று நோயின்போது உடல்கள் அங்கே புதைக்கப்பட்டன?

இந்தக் கேள்வியைக் கேட்கும்போது அந்தச் சுடலையின் வயதை உரிய ஆதாரங்களோடு காட்ட வேண்டும்.அந்த சுடலை 1972 ஆம் ஆண்டு அரசாங்கப் பதிவுகளில் சித்துப் பாத்தி மயானம் என்று காணப்படுகிறது. அதற்கு முன் 1956 ஆம் ஆண்டளவில் அதற்கு அயலில் காணப்பட்ட ஒரு காணியில் பக்கத்தில் ஒரு சுடலை உண்டு என்ற குறிப்பு உண்டு. அதற்கும் முன்னர் சென்றால் 1930 களில் பிரிட்டிஷ் ஆட்சியாளரிடமிருந்து அந்த நிலம் பொதுப் பயன்பாட்டுக்கு பெறப்பட்டதாக ஒரு தகவல் உண்டு.இதை உறுதிப்படுத்த வேண்டும். அது சித்துப் பாத்தி சுடலையாக அறியப்படுவதற்கு முன்பு திடல் என்று அழைக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.மேற்கண்ட தரவுகளில் அடிப்படையில் தொகுத்துக் கணித்தால் சித்து பாத்தியின் வயது கிட்டத்தட்ட 90 ஆண்டுகள்தான். இந்த 90 ஆண்டுகாலப் பரப்புக்குள் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட எந்த இயற்கைப் பேரிடர் அல்லது பெருந்தொற்று நோயின் போது அங்கே உடல்கள் புதைக்கப்பட்டன?

ஐந்தாவது கேள்வி,குற்றச் செயல்களோடு சம்பந்தப்பட்ட உடல்களை நீதிமன்றம் ஏரிப்பதற்கு அனுமதிப்பதில்லை.அந்த அடிப்படையில் புதைக்கப்படும் உடல்கள் சித்துப் பாத்திக்கு கொண்டு வரப்பட்டனவா?ஆனால் அரச மருத்துவமனைகளில் இருந்து அவ்வாறு கொண்டு வரப்படும் உடல்களைப் புதைப்பதற்கு குருநகரில் ஓரிடம் இருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இப்பொழுது கோம்பையன் மணல் சுடலை அதற்கு பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகின்றது.சித்துப் பாத்தி மயானம் அவ்வாறு பயன்படுத்தப்பட்டதற்கான அரச பதிவுகள் உண்டா ?

ஆறாவது கேள்வி,யாழ்ப்பாணத்தில் 500க்கும் குறையாதவர்கள் உயிரிழந்த தொற்று நோய்க் காலம் அல்லது இயற்கை அனர்த்த காலம் எது? அக்காலகட்டங்களில் இறந்தவர்களின் உடல்கள் சித்துப் பாத்திக்கு எடுத்துக் கொண்டுவரப்பட்டனவா ?

குறிப்பாக சித்துப் பாத்தியின் வயதுக்குள் வைத்துப் பார்த்தால் 1934, 35 களில் நாட்டை தாக்கிய மலேரியா.அதன் பின் 2004 இல் நாட்டைத் தாக்கிய சுனாமி. அதன்பின் 2020இல் நாட்டை தாக்கிய கோவிட்19 ஆகிய மூன்று அனர்த்தங்களின் போதும் உடல்கள் அங்கே கொண்டுவரப்பட்டனவா? 1934,35 களில் மலேரியா தாக்கம் ஈர வலலையப் பகுதிகளில்தான் அதிகமாக இருந்தது என்றும்,யாழ்ப்பாணத்தில் உயிர் சேதம் இல்லை என்றும் ஒரு குறிப்பு உண்டு. அதை உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும்,சுனாமி உடல்கள் கடற்கரையிலேயே அகற்றப்பட்டன. அந்த உடல்கள் சித்துப் பாத்திக்கு கொண்டுவரப்படவில்லை.அடுத்ததாக கோவிட்-19 கால கட்டத்தில் உடல்கள் அநேகமாக எரிக்கப்பட்டன.புதைக்கப்படவில்லை.

மேற்கண்ட ஆறு கேள்விகளும் பொதுவானவை.இதைத்தவிர துறைசார் நிபுணர்களால் அந்த விடயத்தில் மேலும் கேள்விகளை எழுப்பமுடியும்.எனவே இந்த விடயத்தில் துறைசார் நிபுணர்கள்,புத்திஜீவிகள்,சிவில் சமூகங்கள், அரசியல் சமூகம் போன்ற எல்லாத் தரப்புகளும் இணைந்து கேள்விகளை முன்வைக்க வேண்டும்.பேராசிரியரோடு பகிரங்க உரையாடல் ஒன்றைச் செய்ய வேண்டும்.இதில் ஒளிவு மறைவுக்கு இடமில்லை.இப்பொழுது தேவையாக இருப்பது உணர்ச்சிவசப்பட்ட குற்றச்சாட்டுகளோ அல்லது முற்கற்பிதங்களை நிறுவுவதற்கான வலிந்த தர்க்கங்களோ அல்ல.

பேராசிரியரை ஏற்கனவே யாழ்.பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை ஆனைகோட்டை தொல்லியல்  மையத்துக்கு அழைத்திருக்கிறது.அங்கே கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் காட்சிக்கு வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வில் அவர் இணைத் தலைவராகப் பங்காற்றியிருக்கிறார்.எனவே யாழ். பல்கலைக்கழகமே இந்த விடயத்தில் அறிவுபூர்வமான திறந்த உரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யலாம். தமிழ் அறிவோர் சமூகம் அதைச் செய்யலாம். சிவில் சமூகங்கள் செய்யலாம்.எதையும் அறிவுபூர்வமாக,கணிதமாக, விஞ்ஞானபூர்வமாக அணுக வேண்டும்

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *