தமிழ்ச் சிவில் சமூகம்

யாழ்ப்பாணத்தில் ஒரு சிவில் சமுகம் உண்டு. வன்னியில் உள்ள சில மாவட்டங்களிலும் பிரஜைகள் குழுக்கள் உண்டு. மேற்படி சிவில் அமைப்புகளின் பின்னணியில் சில கட்சிகளுக்கு நெருக்கமானவர்கள் இருப்பதாக பரவலாக ஒரு கருத்து உண்டு. கடந்த ஆண்டு மேல்மாகாண மக்கள் முன்னணித் தலைவர் திரு. மனோகணேசனோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டதுபோல மேல் மாகாணத்திலும் ஒரு சிவில் சமூகத்தை கட்டியெழுப்பப்போவதாகக் கூறினார். அதற்கு நான் சொன்னேன் யாழ்ப்பாணத்தில் இருப்பது அதன் மிகச் சரியான வார்த்தைகளிற் கூறின் ஒரு பிரமுகர் சமூகம் தான் என்று. அதில் சில சிவில் செயற்பாட்டாளர்கள் உண்டென்றபோதிலும் அது அதிகமதிகம் ஒரு பிரமுகர் சபைதான். அதாவது மேலிருந்து கீழ் நோக்கி உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு அது.

ஆனால், கீழிருந்து மேல் நோக்கி உருவாக்கப்படும் சிவில் அமைப்புகளே அவற்றின் பிரயோக நிலையில் தோல்விக்குப் பின்னரான கூட்டுக் காயங்களால் உத்தரிக்கும் ஒரு சமூகத்திற்கு கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல அரசியல், சமூக, கலை, பண்பாட்டு, ஆன்மிக நடவடிக்கைகளை முன்னெடுக்கவல்லவைகளாகக் காணப்படுகின்றன.

அதென்ன கீழிருந்து மேல்?

அதாவது, சமூகச் செயற்பாட்டுக் குழுக்களுக்கூடாக மேலெழும் ஆளுமைகளால் உருவாக்கப்படும் ஒரு சிவில் அமைப்பே அது. இதை இன்னும் துலக்கமாகக் கூறின், குறிப்பிட்ட சிவில் சமூகப் பிரதிநிதியானவர் ஒரு செயற்பாட்டு ஆளுமையாக இருக்கவேண்டும். அவர் தனது துறையில் ஒரு செயற்பாட்டாளுமையாகப் பிரகாசித்து அதன் மூலம் ஒரு சிவில் சமூகப் பிரதிநிதியாக உருவாகவேண்டும். உதாரணமாக ஒரு வழக்கறிஞர் தனது துறையில் இலவச சட்ட உதவி மையங்களை உருவாக்குவதன் மூலமோ அல்லது வேறு சட்ட ரீதியிலான சமூகச் செயற்பாட்டின் மூலமாகவோ தன்னை ஒரு செயற்பாட்டாளுமையாக ஸ்தாபிக்க வேண்டும். அதைப்போலவே ஒரு மருத்துவரும், இலவச மருத்துவ முகாம்களின் மூலம் சமுகத்தின் ஆகக்கீழ் மட்டத்திற்கு இறங்கிச் சென்று ஒரு மருத்துவச் செயற்பாட்டாளுமையாக உருவாக முடியும்.

ஒரு புலமையாளர், தன்னை புலமைச் செயற்பாட்டாளுமையாக உருவாக்க முடியும்.

இந்து சமயத்தில் ஒரு கருத்துருவம் உண்டு. சுதர்மம் என்று அதை அழைப்பார்கள். ஒருவர் தனது துறை சார்ந்து தனது சமூகத்திற்காற்றும் தொண்டு அல்லது கடமை என்று அதற்குப் பொருள். அதாவது அவரவர் அவரவருக்குரிய சமூகப் பொறுப்புக்களை நிறைவேற்றவேண்டும் என்று பொருள். எனவே, தமக்குரிய சுதர்மத்திற்கூடாக தம்மை செயற்பாட்டாளுமைகளாக ஸ்தாபித்திருக்கும் சமூகச் செயற்பாட்டாளர்களால் உருவாக்கப்படும்போதே ஒரு சிவில் சமூகம் தன்னிறைவானதாக உருவாகின்றது.

பதிலாக, மேலிருந்து கீழ்நோக்கி உருவாக்கப்படும்போது அதாவது, சமூகத்தில் தமக்கிருக்கக் கூடிய புகழ், அந்தஸ்த்து போன்றவைகள் காரணமாக கிடைக்கக்கூடிய பாதுகாப்பைக் கருதி உருவாக்கப்படும் சிவில் சமூகங்களிற்கு அவற்றுக்கே இயல்பான வரையறைகள் உண்டு.

civilsocietyiconஆனால், ஆயுத மோதல்கள் முடிவடைந்த பின்னரான ஒரு சமூகத்தில், குறிப்பாக, எந்தவொரு தரப்பைத் தோற்கடித்ததின் மூலம் ஆயுத மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டனவோ அந்தத் தரப்பின் மத்தியிலிருந்து தோன்றக்கூடிய சிவில் அமைப்புக்கள் இப்படித் தானிருக்க முடியும். ஏனெனில், வென்றவர்கள் மத்தியில் யுத்த வெற்றிவாதம் உச்சம் பெற்றிருக்கும் ஒரு நாட்டில் தோற்கடிக்கப்பட்ட தரப்பிலிருந்து தோன்றும் சிவில் அமைப்புகள் அவற்றுக்கேயான ‘‘லக்ஷ்மன் ரேகையைக்” கடந்து சென்று கருத்துக் கூறுவதோ, செயற்படுவதோ ஆபத்தானதாக அமையலாம். இதனால், சமூகத்தில் தமது பதவி நிலைகள் காரணமாகவோ அல்லது அந்தஸ்தின் காரணமாகவோ பிரபல்யமாகக் காணப்படும் ஆளுமைகள் கருத்துக்களைத் தெரிவிக்கும்போது அவர்களுடைய பிரபல்யம் அல்லது அந்தஸ்து அவர்களைப் பாதுகாக்கக்கூடும்.

இந்த விளக்கத்தின் அடிப்படையிலேயே தமிழ்ப் பகுதிகளில் தற்போதுள்ள சிவில் அமைப்புகளின் முக்கியத்துவத்தையும் இன்றியமையாத் தன்மையையும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

வடக்கு-கிழக்கில் மட்டுமல்ல, முழு இலங்கைத்தீவிலுமே சிவில் வெளி எனப்படுவது முழு நிறைவாகக் கட்டியெழுப்பப்பட வேண்டிய ஒன்றாகவே காணப்படுகின்றது. யுத்தம் இரண்டு சமூகங்களையும் இராணுவ மயப்படுத்தியுள்ளது. எவ்வளவுக்கெவ்வளவு ஒரு சமூகம் இராணுவ மயப்படுகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு சிவில் வெளி சுருங்கிக் கொண்டே போகும். தற்பொழுது இலங்கைத் தீவில் தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்களும் தமது சிவில் வெளியை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது. சில மாதங்களுக்கு முன்பு மூத்த மனித உரிமை செயற்பாட்டாளராகிய சுனிலா அபயசேகர ‘‘கிறவுண்ட் வியூஸ்” இணையத்தளத்திற்கு வழங்கிய பேட்டி ஒன்றில் இது பற்றிப் பிரஸ்தாபித்திருந்தார். கடந்த வாரம் எனது கட்டுரையில் கூறப்பட்டது போல நந்திக் கடற்கரையில் தோற்கடிக்கப்பட்டது ஆயுதம் ஏந்திய ஒரு இயக்கம் மட்டுமல்ல, அரசுக்கு எதிரான அனைத்து எதிர்ப்பு சக்திகளுமே தோற்கடிக்கப்பட்டுவிட்டன. அதாவது, தீவு முழுவதிலும் சிவில் வெளி எனப்படுவது முன்னெப்பொழுதையும் விட பாரதூரமான அளவிற்கு சிறுத்துப்போய்விட்டது.

இக்கட்டுரையானது முழு இலங்கைத் தீவிற்குமான சிவில் வெளி ஒன்றைப் பற்றிய உரையாடல் அல்ல. மாறாக, தமிழ்ச் சிவில் வெளி பற்றியதே இது. கடந்த இரு தசாப்த காலத்துள், பூளோக மயமாதலின் விளைவாக சிவில் அமைப்புகள் பெருகி வரும் ஒரு உலகச் சூழலில் இலங்கைத்தீவில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான ஒரு காலச் சூழலில் தமிழ்ச் சிவில் வெளியை எவ்விதம் பலப்படுத்தலாம் என்பதற்குரிய விவாதமொன்றிற்கான தொடக்கப் புள்ளிகளில் ஒன்றே இக்கட்டுரை. தமிழ்ச் சிவில் வெளி பற்றிய உரையாடல் எனப்படுவது ஒரு கட்டுரையோடு முடியக் கூடிய ஒரு விவகாரம் அல்ல. மாறாக, அதுவொரு தொடர் முன்னெடுப்பு.

சிவில் சமூகம் எனப்படுவது ஒரு மேற்கத்தேய கருத்துருவம் தான். சிவில் வெளிக்கும், ஜனநாயகத்துக்குமான ஆய்வுப் பரப்பில் தவிர்க்கப்படவியலாத ஆளுமைகளில் ஒருவராகக் காணப்படும் ஹப மாஸ் போன்றவர்களிடமும் அப்படியொரு மேற்கத்தேய மைய நோக்கு நிலைதான் பெரும்போக்காயுள்ளது. ஆனால், அதற்காக மேற்கத்தேய நோக்கு நிலையிலிருந்து ஆசிய, ஆபிரிக்க, லத்தின் அமெரிக்கச் சமூகங்களை விளங்கிக்கொள்வது முழுமையானதாக அமையாது. ஏனெனில், ஐரோப்பிய வரலாற்றனுபவமும், ஆசிய, ஆபிரிக்க லத்தின் அமெரிக்க வரலாற்றனுபவங்களும் சமாந்தரமானவை அல்ல. குறிப்பாக, பூகோள மயமாதலின் பின்னணியில் அதிலும் குறிப்பாக, கடந்த இரண்டு தசாப்த காலத்துள் சிவில் சமூகங்களைப் பற்றிய ஆராய்ச்சிப் பரப்பு அசாதாரணமாக விசாலித்து வருகின்றது.

இலங்கைத்தீவில் குறிப்பாக, ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரும் ஒரு தன்னியல்பான சிவில்வெளி இருந்ததுண்டு. ஆனால், அதை இக்கட்டுரையானது யுத்தத்திற்கு முந்திய ஒரு பொற்காலம் என்ற அர்த்தத்தில் பார்க்கவில்லை. சிவில் உரிமைகள் இருந்தனவோ இல்லையோ ஒரு சிவில் வெளி இருந்தது என்ற பொருள்படவே அது இங்கு எடுத்துக் கூறப்படுகின்றது.

யாரும் நடாமலேயே வளர்ந்த ஒரு காடு அது. யாரும் நீர் விடாமலேயே வளர்ந்த ஒரு புல்வெளி அது. தன்னியல்பாக அது ஈழத் தமிழர்களின் சமூக பொருளாதார கலாரசார மாற்றங்களுக்கு ஏற்ப வளர்ந்து உருவாகியது. ஊர்கள் தோறும் சனசமூக நிலையங்கள் இருந்தன. அநேகமாக எல்லாக் கடற்கரைகளிலும் மீனவ சங்கங்கள் இருந்தன. விவசாயிகள் மத்தியில் நீர் முகாமைத்துவ அமைப்புகள் இருந்தன. விளையாட்டுக் கழகங்கள், ஆலைய நிர்வாக சபைகள், நாடகக் குழுக்கள், அன்னதான சபைகள் போன்ற இன்னோரன்ன சமூக அமைப்புகள் இயங்கின. இவை யாவும் மேலிருந்து கீழ் நோக்கிய நிதியூட்டத்தோடு அல்லது அதிகாரத்தின் தேவைகளுக்கு அமைவாக உருவாக்கப்பட்டவை அல்ல. அந்த அந்த ஊர்களில் அந்த அந்த சமூகங்களின் மத்தியில் அல்லது சாதிகளின் மத்தியில் அல்லது மதப் பிரிவுகளின் மத்தியில் தன்னியல்பாக உருவாகின. எனவே, எந்த சமூக அடித்தளத்தில் இருந்து அவை பிறந்தனவோ அச்சமூகத்தின் பலங்களையும் பலவீனங்களையும் அவை பிரதிபலித்தன. அவற்றிற்குள்ளும் அவற்றிற்கிடையிலேயும் பால் அசமத்துவம் இருந்தது. சாதி அசமத்துவம் இருந்தது. ஊர் வாதம் இருந்தது. சிறு குறிச்சி வாதம் இருந்தது. மத வேறுபாடுகள் இருந்தன.

இவை தவிர மேலிருந்து கீழ் நோக்கி உருவாக்கப்பட்ட அல்லது மேலிருந்து கீழ் நோக்கி வழங்கப்பட்ட உதவிகளின் பின்னணியில் கீழிருந்து உருவாக்கப்பட்ட கமக்கார அமைப்புகள், திருச்சபை அமைப்புகள், கூட்டுறவுச் சங்கங்கள் போன்றன வெற்றிகரமாக செயற்பட்டன. அது ஐ.என்.ஜி.ஓ அரசியல் இல்லாத ஒரு காலம். அந்நாட்களில் சங்கக் கடைக்கு ஒரு முக்கியத்துவம் இருந்தது. இலங்கைத்தீவு முழுவதிலும் வெற்றிகரமாக கூட்டுறவுச் சங்கங்களை முன்னெடுத்த மாவட்டங்களில் யாழ்ப்பாணத்துக்கென்று ஒரு முதன்மை ஸ்தானம் உண்டு.

ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியோடு மேற்கண்ட சிவில் அமைப்புகள் குறிப்பாக, சனசமூக நிலையங்களில் கணிசமானவை ஆயுதமேந்திய இயக்கங்களின் கிராம மட்ட நடவடிக்கை களங்களாக மாறின. இதனால், ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்தபோது சனசமூக நிலையங்களும் தாக்குதலுக்கு இலக்காகின. அவற்றின் நிர்வாகிகள் தாக்கப்பட்டார்கள். அல்லது கைது செய்யப்பட்டார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமற்போனார்கள். அல்லது புலம்பெயர்ந்தார்கள்.

குறிப்பாக, விடுதலைப்புலிகளின் எழுச்சியோடு அவர்களுடைய அரசியல் பிரிவின் நிர்வாகக் கட்டமைப்பானது. ஒரு கட்டத்தில் தன்னியல்பாக தோன்றிய மேற்கண்ட சிவில் அமைப்புக்களை உள்ளீர்த்துக்கொண்டது. இதனால், மேலிருந்து கீழ் நோக்கி உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் பிரிவின் கிராமிய மட்ட அலகுகளாக அல்லது ஒன்றியங்களாக அல்லது சமாஜங்களாக இச்சிவில் குழுக்கள் மாற்றப்பட்டன. அதாவது தன்னியல்பாகத் தோன்றிய சிவில் குழுக்கள் ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியின் ஒரு விளைவாக அதன் அரசியல் பிரிவின் சிறிய மற்றும் பெரிய அலகுகளாக மாறின. ஆயுதப் போராட்டத்தின் வீழ்ச்சியோடு இச்சிவில் அமைப்புகள் ஒன்றில் செயலிழந்தன அல்லது முடங்கிப்போயின. அல்லது பிறிதொரு அதிகாரத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன.

இப்பொழுது ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கழிந்திருக்கும் ஒரு பின்னணியில் சிவில் குழுக்களை உருவாக்குவது பற்றியே அதிகம் சிந்திக்கப்படுகின்றது. அதாவது, மேலிருந்து கீழ் நோக்கி உருவாக்கப்படும் சிவில் குழுக்களைப் பற்றியே சிந்திக்கப்படுகிறது. இதை இன்னும் துலக்கமாகச் சொன்னால், ஏதோ ஒரு கட்சியின் அல்லது ஏதோவொரு ஐ.என்.ஜி.ஓ நிகழ்ச்சி நிரலுக்கு அமைய உருவாக்கப்படும் அமைப்புகளே இவை. மாறாக கீழிருந்து மேல் நோக்கி தமது நிலத்தில் தன்னியல்பாக முகிழும் அமைப்புகள் அல்ல. இவ்வாறு உருவாக்கப்படும். சிவில் அமைப்புகள் ஏதோவொரு நிகழ்ச்சி நிரலின் கருவிகளாகவோ அல்லது கட்சிகளின் முன்னணி அமைப்புகளாகவோ மாறக்கூடிய சாத்தியக்கூறுகளே அதிகம் உள்ளன.

மேலும் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான இப்போதுள்ள அரசியல் சூழலில் சிவில் குழுக்களைப் பற்றி உரையாடும் போது பின்வரும் புதிய வளர்ச்சிகளைக் கவனத்தில்கொள்ள வேண்டி இருக்கின்றது. முதலாவது -தோற்கடிக்கப்பட்ட தரப்பாகவிருப்பதிலுள்ள அச்சம். இரண்டாவது – இவ் அச்சத்தின் காரணமாக நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் மேலோங்கி வரும் தனிமனித வாதம். அதாவது, ஒரு குழுவாகச் செயற்படுவதில் உள்ள ஆபத்துக்கள் காரணமாக தன்னைத் தானே பாதுகாத்துக்nhகள்ள முற்படுகின்ற அல்லது தலையை ஓட்டுக்குள் உள்ளிழுத்துக்கொள்ளும் ஒருவித நத்தை மனோநிலை.

மூன்றாவது – தகவல் புரட்சியின் விளைவாக வீட்டுக்குள் இருந்தபடி இணையத்தை நுகர்வதும், கேபிள் தொலைக்காட்சிகளின் முன் மொய்த்துப்போய்க் கிடப்பதுமான ஒரு போக்கு. இதுவும் சமூக ஊடாட்டத்துக்குத் தடையானது. தனிதனித வாதத்தைப் பலப்படுத்துவது. அதேசமயம் இணையப் பரப்பை குறிப்பாக, சமூக வலைத்தளங்களை வெற்றிகரமாகக் கையாள்வதன் மூலம் சைபர் சிவில் சமூகங்களை உருவாக்க முடியும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.

நாலாவது – உலக மயமாதலின் விளைவுகளின் ஒன்றாகிய ஐ.என்.ஜி.ஓ அரசியல். இதுவும் சிவில் குழுக்களை மேலிருந்து கீழ் நோக்கி உருவாக்கும் ஒரு பொறிமுறையை ஊக்குவிக்கின்றது.

மேற்கண்ட புதிய வளர்ச்சிகள் மற்றும் போக்குகளின் பின்னணியில்தான் தமிழ்ச் சிவில் வெளியைப் பலப்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டியிருக்கின்றது. அதாவது, கீழிருந்து மேல் எழும் சிவில் அமைப்புகளைக் கட்டியெழுப்பக் கடினமான ஓர் அரசியல் சூழலில் தமிழ்ச் சிவில் வெளியைப் பலப்படுத்துவது என்பது பிரதானமாக இரண்டு தளங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும். இதை இன்னொரு விதமாகச் சொன்னால், வெளிவளமாகவும், உள்வளமாகவும் மேற்கொள்ளப்படவேண்டும் எனலாம்.

வெளிவளமாக என்று இங்கு கருதப்படுவது தமிழ்ச் சிவில் வாழ்வில் படைத்துறைப்பிரசன்னத்தை அகற்றுவது ப்ற்றியதாகும். உள்வளமாக என்று கருதப்படுவது, தமிழ் அரசியலின் அஜனநாயக வெளியைப் பலப்படுத்துவது என்றபொருளில் ஆகும்.

எவ்வளவுக்கெவ்வளவு இராணுவ மய நீக்கம் நிகழ்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு சிவில் மயமாக்கமும் நிகழும். சிவில் பரப்பும் வெளிக்கும், இனநல்லிணக்கத்துக்கான பிரதான முன் நிபந்தனையே இராணுவ மயநீக்கம்தான். இன நல்லிணக்கத்துக்கான பிரதான தொடக்கப்புள்ளிகளில் அதுவும் ஒன்று. இப்போதுள்ள நிலைமைகளின்படி, அது முழுக்க முழுக்கத் தமிழர்களின் கைகளில் இல்லை. அதிகபட்சம் அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களிற்தான் தங்கியிருக்கின்றது. அத்தகைய அழுத்தங்களைக் கொடுக்குமளவுக்கு அனைத்துலக சமூகத்தை தமிழர்கள் தம்மை நோக்கி வளைப்பதற்குரிய பிரதான முன் நிபந்தனைகளில் ஒன்று தமிழ் அரசியலின் அகஜனநாயக வெளியை ஆகக்கூடிய மட்டும் பலப்படுத்துவதுதான். இது முழுக்க முழுக்க தமிழர்களின் கைகளில்தான் உண்டு. அதாவது உள்வளமாகச்செய்யப்படவேண்டியது. இதை இன்னும் துலக்கமாகச் சொன்னால், தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக அடித்தளத்தைப் பலப்படுத்துவது எனலாம். இதை இப்படி எழுதும்போது சில விமர்சகர்கள் மோதலுக்கு வரக்கூடும். தோற்கடிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் அகஜனநாயகத்தைப் பற்றிச்சிந்திப்பது என்பது அதுவும் தென்னிலங்கையில் யுத்த வெற்றிவாதம் கோலோச்சும் ஓர் அரசியல்சூழலில் அதை வற்புறுத்துவது என்பது ஏறக்குறைய தமிழர்களை உளவியல் ரீதியாக நிராயுதபாணிகளாக்குவதற்குச் சமம் என்று அவர்கள் வாதிடக்கூடும்.

ஆனாலிது, தோல்வியை ‘‘மம்மியாக்கம்” செய்ய முற்படுவோரின் வாதம்தான். தோல்விக்கான பிரதான காரணங்களில் ஒன்றே தமிழ்த் தேசியத்தின் உள்ளடக்கப்போதாமைதான். ஒரு தேசிய இனத்தின் ஜனநாயக அடிப்படைகளைப் பலப்படுத்துவது என்பது எந்த வகையிலும் அத்தேசிய இனத்தை பலவீனப்படுத்தாது. மாறாக இப்போதுள்ள அனைத்துலக யதார்த்தத்தின்படி அது ஒரு அடிப்படைப் பலம்.

எனவே, தோல்விகளோடு வாழவிரும்பாத எல்லாத் தமிழர்களும் தமிழ் அரசியலின் அகஜனநாயக வெளியை பலப்படுத்துவது பற்றிச் சிந்திப்பதே ஒரே வழி. அதாவது தமிழர்கள் தங்களை முதலில் உள்நோக்கிப் பலப்படுத்தப்பட வேண்டும்.

01-05-2013

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *