சிவ்சங்கர் மேனன் நாளை மறுநாள் வருகிறார். அவர் வருவது ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்கு என்றும், அப்படி வரும்போது அவர் அரசுப் பிரதிநிதிகளைச் சந்திப்பார் என்றும் ஒரு செய்தி உண்டு. ராஜிய நகர்வுகளில் இதுவும் ஒரு வகைதான். அதாவது வேறு எதற்கோ வருவதுபோல் வந்து விவகாரத்தைக் கையாண்டுவிட்டுப்போவது என்பது. ஆனால், எது விவகாரமோ அதைப் பிரதான நிகழ்ச்சி நிரலாக உத்தியோகபூர்வமாக இரு நாடுகளும் அறிவிக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டும். அப்படி உத்தியோக பூர்வமாக அறிவிக்குமளவிற்கு இவ்வருகை முக்கியத்துவமற்றது என்று கருதியிருக்கலாம் அல்லது அப்படி அறிவிப்பதால் ஏதாவது ஒரு தரப்புக்கு நேரிடக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்க முயற்சிக்கலாம்.
எதுவாயினும் இப்படி உத்தியோகபூர்வமாக அறிவிக்காமல் சந்திப்பது என்பது இந்தியாவை பொறுத்த வரை பலவீனம் தான். ஏனெனில், மேனன் வந்தாலென்னா யார் வந்தாலென்ன உரையாடப்போவது 13ஆவது திருத்தத்தைப் பற்றித்தான் இலங்கை அரசுத் தலைவரின் சகோதரர் புதுடில்லிக்குச் சென்றதும் அதற்குத் தான். 13ஆவது திருத்தத்தைப் பாதுகாக்க வேண்டிய தேவை இந்தியாவுக்குத்தான் உண்டு. ஏனெனில், அது இந்தியாவின் சொந்தக் குழந்தை. அதைக் குற்றுயிராக்குவது என்பது இச்சிறு தீவில் இந்தியாவின் பிடியை தளர்த்துவது என்றே அர்த்தப்படும்.
இந்நிலையில் இருப்பதைப் பாதுகாத்தாலே போதும் என்ற ஒரு நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுவிட்டது. இந்தியாவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அப்படி ஒரு நிலைக்குத் தள்ளியது சிறிலங்கா அரசாங்கத்திற்குக் கிடைத்த ஒரு வெற்றிதான். ஆனாலும் இதன் அர்த்தம் இந்தியாவின் தெரிவுகள் ஓரேயடியாகச் சுருங்கிக் காணப்படுகின்றன என்பதல்ல.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முனைப்புக் காட்டத் தொடங்கியதிலிருந்து இந்தியாவுடையதும், மேற்கு நாடுகளினுடையதும் தெரிவுகள் ஓப்பீட்டளவில் அதிகரித்து வருகின்றன என்பதே ஆகப்பிந்திய நிலவரமாகும்.
இந்த அரசாங்கம் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடாத்துவதற்கு முனைப்புக் காட்டுவது என்பது ஒரு வித அகமுரண்பாடாகத் தோன்றக்கூடும். ஏனெனில், மேற்கு நாடுகளுடன் குறிப்பிடத்தக்க அளவுக்கு முரண்டு பிடிக்கும் இவ்வரசாங்கமானது பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடாத்த வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டுவது ஒரு அகமுரண்பாடுதான். ஆனால், இதை ஒரு வகையில் சேதத்தைக் குறைக்;கும் அல்லது சேதத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு நகர்வாகவும் எடுத்துக்கொள்ள முடியும். அரசாங்கத்தைப் பொறுத்த வரை ஜெனிவாக் கூட்டத் தொடரில் அதற்குண்டான அனைத்துலக அபகீர்த்தியிலிருந்து மீள்வதற்கான ஓர் எத்தனமாக இதை எடுத்துக் கொள்ளலாம். அதோடு, புலம் பெயர்ந்த தமிழர்கள் எதிர்கொள்வதென்றால் சில பொதுநலவாய நாடுகளை அனுசரித்துப்போக வேண்டிய தேவை உண்டு. தவிர அரசுப் பிரதானிகள் தமது சொந்தப் பட்டினத்தி;ல் வெளிநாட்டுத் தலைவர்களை அழைத்து மாநாடு நடத்துவதன் மூலம் தமது தாய் பட்டினத்திற்கு ஓர் அனைத்துலக அந்தஸ்தைப் பெற்றுத் தரவும் விரும்பக்கூடும்.
எதுவானாலும், பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கைத்தீவில் நடத்துவதற்கு முனைப்புக் காட்டியதன் மூலம் இந்த அரசாங்கமானது இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளிற்கும் பிடி கொடுத்துவிட்டது என்பதே உண்மை. அரசாங்கத்தின் இந்த முனைப்பை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி அரசாங்கத்தை தமது வழிக்குக் கொண்டுவர முடியுமா என்று இந்தியாவும் மேற்கு நாடுகளும் எத்தனிக்கின்றன.
மரபு ரீதியான அரசுகளிற்கிடையிலான இராஜிய உறவுகளிற்கு அப்படியொரு தன்மை உண்டு. ஒரு மரபு ரீதியான அரசானது அனைத்துலகச் சமூகத்திலிருந்து ஒரு எல்லைக்கும் மேல் தனிமைப்பட்டுச் செல்ல முடியாது. தலிபான்களால் அப்படிச் செல்ல முடியும். அல்ஹைதாவால் அப்படிச் செய்ய முடியும். ஆனால், மரபு ரீதியான ஓர் அரசாங்கம் அப்படிச் செய்ய முடியாது. அனைத்துலக ராஜிய உறவுகளில் சக்திமிக்க நாடுகளுக்கு உள்ள ஒரு பிடி இது. அதேசமயம் ஒடுக்குமுறையில் ஈடுபடும் சிறிய அரசுகள், அந்த ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் அமைப்புகளை அனைத்துலக அரங்கில் தனிமைப்படுத்தி, பலவீனப்படுத்த உதவும் ஒரம்சமும் இதுதான். இலங்கை அரசாங்கமானது பொதுநலவாய மாநாட்டை அம்பாந்தோட்டையில் நடாத்துவதற்கு முனைப்புக் காட்டியதை ஒரு வாய்ப்பாகப் பற்றிப் பிடித்துக்கொண்ட இந்தியாவும், மேற்கு நாடுகளும் அதற்கு முன்நிபந்தனையாக வடமாகாண சபைத் தேர்தலை நடாத்துமாறு கேட்டிருந்ததாக ஒரு செய்தி உண்டு. இவ்வாறு வடமாகாண சபைத்தேர்தலானது பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்குரிய ஓர் உத்தியோகப் பற்றற்ற முன் நிபந்தையாக மாற்றப்பட்டதிலிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு சில விடயங்களில் பின் வாங்க வேண்டியதாயிற்று.
வடமாகாண சபைத்தேர்தலை நடாத்தினால் அதில் அநேகமாக கூட்டமைப்பு வெல்லக் கூடும் என்று ஒரு பொதுவான கணிப்புண்டு. அவ்விதம் கூட்டமைப்பு வெல்லுமாயிருந்தால் வடபகுதியானது இந்தியாவுக்கு விசுவாசமான ஒரு கட்சியிடம் சென்றுவிடும் என்று சிங்களக் கடும் போக்காளர்கள் அஞ்சுகிறார்கள். எனவே, வடமாகாண சபைத்தேர்தலிற்கு முன்பே இரண்டு முன்னெச்சரிக்கை மிக்க நகர்வுகளை அவர்கள் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.
ஒன்று, மாகாண சபைக் கட்டமைப்பை இயன்றளவுக்குப் பலவீனப்படுத்துவது. சிலவேளை, பொதுநலவாய மாநாடு முடிந்த பின்னராவது அதைச் செய்ய அவர்கள் முயற்சிக்கக் கூடும்.
இரண்டாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்பை இயன்றளவுக்குக் குறைப்பது அல்லது வெற்றியின் பருமனைக் குறைப்பது. அதற்கு யாரெல்லாம் முன்பு கீர்த்தியுடனிருந்தார்களோ அவர்களைக் களத்திலிறக்குவது. ஆனால், அரசாங்கம் எதைச் செய்தாலும் சில விடயங்களில் முற்றாகப் பின்வாங்க முடியாத ஒரு சூழலே பலமடைந்து வருகிறது. அதாவது பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடக்க வேண்டுமாயிருந்தால் வடமாகாண சபைத் தேர்தலை நடத்தியாகவேண்டும். இவை இரண்டுமே நாட்டின் அரசியல் சூழலை சற்றே வெளிக்கச் செய்யக் கூடியவை.
மாகாண சபைத் தேர்தல் நடந்தால் வடக்கில் இப்போதுள்ளதை விடவும் ஒப்பீட்டளவில் சிவில் பரப்பு அதிகரிக்கும். நிலைமைகள் இறுக்கம் குறைந்து நெகிழத் தொடங்கும். மாகாண சபைத் தேர்தலை நடாத்தினால் பொதுநலவாய நாடுகள் மாநாடு நடக்கும். அப்பொழுதும் நாட்டின் அரசியல் சூழலானது வெளிநாட்டுத் தலைவர்கள் வந்துபோவதால் சற்றே வெளிக்கும். அனைத்துலக ஊடகங்களின் குவி மையத்துக்குள் நாடு வந்துவிடும். அனைத்துலக மாநாடு ஒன்றை நடாத்;தும்போது அதன் தவிர்க்கப்படவியலாத ஒரு விளைவாக நாட்டின் ஜனநாயக வெளி ஒப்பீட்டளவில் அதிகரிக்கும்.
பொது நாலவாய மாநாட்டை நடாத்துவதன் மூலம் ஜெனிவாவில் தனக்கேற்பட்ட அபகீர்த்தியை ஓரளவுக்காயினும் அகற்றலாம் என்று அரசு சிந்திக்கக்கூடும். குறிப்பாக, வெளிநாட்டுத் தலைவர்களைத் தமது தாய்ப்பட்டினத்திற்கு விருந்தாளிகளாக அழைப்பதன் மூலம் தமது தாய்ப் பட்டினத்தின் கீர்த்தியை உயர்த்தலாம் என்றும் அரசாங்கம் கருதக்கூடும். ஆனால், சில சமயம் இந்த எதிர்பார்ப்பு பிசகவும்கூடும். சில வெளிநாட்டுத் தலைவர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு மனித உரிமைகள் தொடர்பில் வகுப்பெடுக்கும் ஒரு மேடையாக பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை மாற்றக்கூடிய ஏது நிலைகளும் தென்படுகின்றன.
எதுவாயினும், பொதுநலவாய மாநாடு எனப்படுவது ஒரு முன்னோக்கிய நகர்வுதான். இவ்வாறு முன்னோக்கி வைக்கப்பட்ட அடிகளை பின்நோக்கி இழுப்பதுபோல, மாநாட்டின் பின் 13ஆவது திருத்தத்தில் கைவைப்பது என்பது இப்பொழுதையும் விடக் கடினமானதாக அமையக்கூடும் என்று ஒரு எதிர்பார்ப்பும் உண்டு.
இப்படிப் பார்த்தால் இப்பொழுது நடந்து கொண்டிருப்பவை யாவும் ஜெனிவா கூட்டத் தொடரின் விளைவுகள்தான். இந்தியப் பேரரசின் நிழலில் சிறிய இலங்கைத்தீவானது தனக்கென்று சுயாதீனமான ஒரு வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருப்பதில் அதற்கிருக்கக்கூடிய வரையறைகள் உணர்ந்தும் விதத்திலமைந்த தொடர்ச்சியான அழுத்தங்களின் விளைவுதான்.
யுத்த வெற்றிகளுக்குத் தலைமை தாங்கும் ஓர் அரசாங்கம் உள்நாட்டில் உருவாக்கி வைத்திருக்கும் வீரப்படிமத்தை அதன் உள்நாட்டு எல்லைகளுக்கும் அப்பால் வெளியுறவுக் கொள்கையிலும் ஸ்தாபிக்க முடியாது என்பதை உணர்ந்துவதே மேற்கு நாடுகள் மற்றும், இந்தியாவினுடைய இறுதி இலக்காகும். ஆனால், இலங்கை அரசாங்கமானது அண்மையில் சீனாவுடன் ஒரு பாதுகாப்பு உடன்படிக்கையைச் செய்திருக்கிறது. அந்த உடன்படிக்கையின் உள்ளடக்கம் தொடர்பாக முழுமையான தகவல்கள் கிடைக்கும்போதே இலங்கை அரசாங்கம் இலங்கை-இந்திய உடன்படிக்கையை முழுமையாகக் கடந்து செல்கிறதா இல்லையா? என்பது தெரியவரும். இல-இந்திய உடன்படிக்கையின் இதயமான பகுதி எனத்தக்கது அதன் இணைப்பாகக் காணப்படும் கடிதங்கள்தான். நாட்டின் தலைவர்களுக்கிடையில் பரிமாறப்பட்ட இக்கடிதங்கள் இந்தியாவின் பாதுகாப்புத் தொடர்பிலான அக்கறைகளைப் பிரதிபலித்தன. இப்பொழுது சீனாவுடன் செய்துகொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு உடன்படிக்கையானது மேற்படி கடிதங்களைக் கடந்து செல்கிறதா இல்லையா என்று பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் இப்பிராந்தியத்தின் புவிசார் அரசியல் யதார்த்தத்தை மீறி இலங்கை அரசாங்கமானது ஒரு சுயதீனமான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்க முயல்கிறதா இல்லையா என்பது தெரிய வரும்.
யுத்தத்தில்பெற்ற வெற்றிகளின் விளைவாக கட்டியெழுப்பப்பட்ட வீரப்படிமமானது உள்நாட்டில் வாக்காளர்களைக் கவர உதவும். ஆனால், அந்த வீரப்படிமத்தின் தொடர்ச்சியாகவே வெளியுறவுக் கொள்கையையும் வகுக்க முற்பட்டால் அது பிராந்திய யதார்த்தத்துடன் மோதும்.
அப்படி இரு பிராந்திய பேரரசுகளிற்கிடையிலான ஒரு நுட்பமான மோதுகளம் அல்லது கயிறு இழுத்தற் களம் இச்சிறிய அழகிய தீவில் திறக்கப்பட்டுவிட்டது. அதன்விளைவே ஜெனிவாக் கூட்டத்தொடர்கள் ஆகும். ஜெனிவாக் கூட்டத் தொடர்களின் விளைவே இப்பொழுது நடந்துகொண்டிருப்பவையெல்லாம்.
இதில் தமிழர்களின் அரசியல் எனப்படுவது அரசாங்கத்தின் மீது செல்வாக்கைப் பிரயோகிக்க முற்படும் சக்திகளாற் கையாளப்படும் ஒரு கருவியாகவே காணப்படுகிறது. 1987இலும் இதுதான் நிலைமை. 2013இலும் இதுதான் நிலைமை. குறிப்பாக, புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காலம் எனப்படுவது அதிகபட்சம் வெளியாருக்காகக் காத்திருக்கும் ஒருகாலமாகவே மாறிவிட்டது. இந்தியா 13ஆவது திருத்தத்தில் கைவைக்கவிடாது என்று விசுவாசமாக நம்புவதோடு அந்த நம்பிக்கையை வாக்காளர்கள் மத்தியில் ஸ்தாபிக்கும் ஒரு கட்சியாகவே கூட்டமைப்புக் காணப்படுகின்றது.
வெளியாருக்காகக் காத்திருப்பது என்பது ஒருவித கையறு நிலைதான். தன் பலத்தில் நம்பிக்கையிழந்த ஓர் அரசியற் சூழலில் இது மேலெழுகிறது. அல்லது தன்பலம் எதுவென்பதைச் சரியாகக் கண்டுபிடிக்கத் தவறும் போதும் இது மேலெழுகிறது. பேரழிவுக்கும் பெரும் பின்னடைவுக்கும் பின்னரான ஒரு காலகட்டத்தில் ஒரு சமூகத்தின் கூட்டுக் காயங்களுக்குரிய கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல ஓர் அரசியலை முன்னெடுக்கத் தவறம் போதெல்லாம் இது மேலெழுகிறது. வெளியாருக்காகக் காத்திருப்பது என்பதற்கும், வெளியாரின் கருவியாக மாறுவது என்பதற்குமிடையில் மிக மென்மையான ஒரு பிரிகோடே உண்டு. இந்தப் பிரிகோட்டைக் கண்டுபிடிக்கும் சக்தியற்றிருந்தால் பட்டு வேட்டிக்காகப் போராடப் புறப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் ஒரு நாள் கோவணத்தையும் இழக்க வேண்டி வரலாம்.
05-07-2013