இலங்கை-இந்திய உடன்படிக்கை எனப்படுவது ஒரு கெடுபிடிப் போரின் குழந்தை. கெடுபிடிப்போரின் நிலைமைகளுக்கேற்ப அது உருவாக்கப்பட்டது. எனது முன்னைய கட்டுரையில் கூறப்பட்டது போல அது வன்புணர்வின் மூலம் பிறந்த ஒரு குழந்தைதான். இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் வெங்கடேஸ்வரன் அதை ”செத்துப் பிறந்த குழந்தை’ என்று ஒரு முறை வர்ணித்திருந்தார்.
ஜெயவர்த்தன அரசாங்கம், விடுதலைப்புலிகள் இயக்கம், பிரேமதாஸ அரசாங்கம் மற்றும் ஜே.வி.பி. ஆகிய நான்கு தரப்பும் சேர்ந்து அதைச் செயலிழக்கச் செய்தன. எப்பொழுது விடுதலைப்புலிகள் இயக்கமும், பிரேமதாஸ அரசாங்கமும் கூட்டுச் சேர்ந்து ஐ.பி.கே.எவ்.ஐ வெளியேறுமாறு கேட்டனவோ அப்பொழுதே இந்திய – இலங்கை உடன்படிக்கைக்கான ஆணை (mandate) காலாவதியாகிவிட்டது. அதற்குரிய தார்மீக அடித்தளம் தகர்ந்துபோய்விட்டது. இருதுருவ உலக ஒழுங்கின் கீழ் உருவாக்கப்பட்ட அவ்வுடன்படிக்கையானது அனைத்துலக சூழல் மாறியபோது அதன் இயல்பான போக்கில் ஏறக்குறைய காலாவதியாகிவிட்டது. அது இரண்டு அரசுத்தலைவர்களிற்கிடையிலான ஓர் உடன்படிக்கை என்று பார்த்தால் அதற்கொரு அனைத்துலக பெறுமானம் உண்டுதான். ஆனால், நடைமுறை அர்த்தத்தில் அது ஏறக்குறைய செயலிழந்துவிட்டது.
எப்படியெனில், இரு துருவ உலக ஒழுங்கின் கீழ் அவ்வுலக ஒழுங்கின் பாற்பட்ட நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டே அந்த உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. அந்த உடன்படிக்கையின் பின் இணைப்பாகக் காணப்படும் இரு அரசுத் தலைவர்களிற்கிடையில் பரிமாறப்பட்ட கடிதங்களில் அதைக் காண முடியும். ஆனால், அது உருவாகி இப்பொழுது 26 ஆண்டுகளாகிவிட்டன. இக்காலப் பகுதிக்குள் அனைத்துலக அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இருதுருவ உலக ஒழுங்கின் வீழ்ச்சியையடுத்து ஒரு துருவ உலக ஒழுங்கு எழுச்சி பெற்றது. தகவல் புரட்சியானது உலகை தொழில் நுட்பத்தளத்தில் ஓரலகாக்கியது. நிதி முலதனத்தின் விரிவாக்கமானது உலகை, பொருளாதார அர்த்தத்தில் ஓரலகாக்கிவிட்டது. தகவல் புரட்சியும், நிதி முலதனமும் நாடுகளையும் கண்டங்களையும் திறந்துவரும் ஒரு காலகட்டம் இது. இப்புதிய வளர்ச்சிகளுக்கூடாக எழுச்சி பெற்றுவரும் புதிய துருவ இழுவிசைகள் ஒரு துருவ உலக ஒழுங்கிற்குச் சவால்களாக உருவாகி வருகின்றன.
இத்தகையதோர் அனைத்துலகப் பின்னணியில் இந்திய – இலங்கை உடன்படிக்கை உருவாகிய காலத்தில் இருந்த பல அம்சங்கள் இப்பொழுது இல்லை. அதேசமயம் அப்போது இருந்திராத பல புதிய வளர்ச்சிகள் இப்பொழுது உண்டு. இந்திய – இலங்கை உடன்படிக்கை எனப்படுவது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆயுதப் போராட்டத்தை ஒரு கருவியாகக் கையாண்டு உருவாக்கப்பட்டது. இருதுருவ உலக ஒழுங்கின் கீழ் அமெரிக்காவுக்குச் சார்பாக காணப்பட்ட ஜெயவர்த்தன அரசாங்கத்தை வழிக்குக் கொண்டுவர தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. அப்போது சீன வரிவாக்கம் எனப்படுவது அதன் பிராந்திய எல்லைகளுக்கும் அப்பால்; பெருவளர்ச்சி பெற்றிருக்கவில்லை.
ஆனால், கடந்த 26 ஆண்டு காலப் பகுதிக்குள் நிலைமைகள் வேறு விதமாக வளர்ச்சி பெற்றுவிட்டன. விடுதலைப்புலிகள் அரங்கிலிருந்து அகற்றப்பட்டிருக்கும் ஓர் அரசியற் சூழலில் சீனா எனப்படும் ஒரு புதிய துருவ இழுவிசையின் செல்வாக்கு மண்டலத்துள் காணப்படும் இலங்கை அரசாங்கத்தை கையாள வேண்டிய தேவை இந்திய அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. எந்த அமெரிக்காவிற்கு எதிராக இந்திய அரசாங்கம் அந்த உடன்படிக்கையை உருவாக்கியதோ அதே அமெரிக்காவுடன் அது இப்பொழுது பூகோளப் பங்களாகியாகிவிட்டது. இப்பூகோளப் பங்காளிகள் சீன விரிவாக்கத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்துக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டம் இது. இத்தகைய பொருள்படக் கூறின் இதுவும் ஓரளவிற்கு ஒரு வகைப் பனிப்போர் அரங்குதான். ஆனால், நாடுகளிற்குரிய பாத்திரங்கள் மாறியிருக்கின்றன. புவிசார் அரசியல் நலன்களைப்; பொறுத்த வரை சக்திமிக்க நாடுகள் மறைமுகமாக மோதும் ஒரு குத்துச் சண்டைக் களம் இவ் அழகிய குட்டித்தீவில் திறக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்திய – இலங்கை உடன்படிக்கை உருவாகிய போதிருந்த உலகச் சூழல் மாறிவிட்டது என்ற அடிப்படையிற் பார்த்தால் இந்திய – இலங்கை உடன்படிக்கையானது ஏறக்குறைய காலாவதியாகிவிட்டது. அதன் பின்னிணைப்பாகச் காணப்படும் கடிதங்கள் சீன விரிவாக்கத்தின் பின்னணியில் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப்படும் நிலைமைகள் உருவாகி வருகின்றன. அந்த உடன்படிக்கையை உருவாக்குவதற்கு ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்ட இயக்கமும் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான துருவ இழுவிசைகளின் காரணமாக வளர்க்கப்பட்ட ஓர் இயக்கமானது சீன – அமெரிக்க – இந்திய இழுவிசைகளுக்கிடையில் சிக்கித் தோற்கடிக்கப்பட்டுவிட்டது.
இத்தகையதொரு அனைத்துலக மற்றும் உள்நாட்டுப் பின்னணியில் ஏறக்குறைய காலாவதியாகிய ஓர் உடன்படிக்கையின் பதாங்க உறுப்பாகக் காணப்படுவதே 13ஆவது திருத்தச் சட்டமும் மாகாண சபைகளும் ஆகும். அதாவது இந்திய – இலங்கை உடன்படிக்கையானது அதன் நடைமுறை அர்த்தத்தில் காலாவதியாகிவிட்டது. ஆனாலது இரண்டு நாடுகளின் தலைவர்களிற்கிடையிலானது என்ற சர்வதேச நடைமுறையில் மட்டும் தொங்கிக் கொண்டிருக்கின்றது. அதேசமயம் காலாவதியான அந்த உடன்படிக்கையின் பதாங்க உறுப்பாகிய 13ஆவது திருத்தச் சட்டம் இப்பொழுதும் ஒரு பயில்முறையாகக் காணப்படுகிறது.
சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்களைப் பொறுத்தவரை இந்திய – இலங்கை உடன்படிக்கை எனப்படுவது இலங்கைத்தீவின் மீதான இந்தியாவின் மேலாண்மையைப் பிரதிபலிக்கும் ஒரு சட்ட ஆவணமாகும். அது ஏறக்குறைய காலாவதியாகிவிட்டது என்று வைத்துக்கொண்டாலும்அதன் பதாங்க உறுப்பாகிய 13ஆவது திருத்தச் சட்டம் இப்பொழுதும் அரசியலமைப்பில் ஒட்டிக்கொண்டிருக்கின்றது. அதாவது, இலங்கைத்தீவின் மீதான இந்தியாவின் மேலாண்மையைப் பிரதிபலிக்கின்றதும், ஆனால், ஓரளவுக்குக் காலாவதியானதுமாகிய ஓர் உடன்படிக்கையின் பதாங்க உறுப்பே 13ஆவது திருத்தச் சட்டம். எனவே, இச்சிறுதீவின் மீதான இந்தியாவின் மேலாண்மையை நினைவூட்டிய படியிருக்கும் ஓர் சட்ட ஏற்பாடு அது. அதை ஆகக் கூடிய பட்சம் செயலற்றதாக்குவதன் மூலம் இச்சிறு தீவின் மீதான இந்தியாவின் மேலாண்மையை நினைவூட்டியபடி மிஞ்சியிருக்கும் ஓரே சட்டச் சான்றையும் நலிவடையச் செய்யலாம் என்று சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்கள் சிந்திக்கின்றார்கள்.
மேற்கண்ட விளக்கத்தின் அடிப்படையிற் பார்த்தால் மாகாண சபைகளின் உயிர் நிலை அதிலும் குறிப்பாக, தமிழ் மாகாண சபைகளின் உயிர் நிலை எனப்படுவது புதுடில்லியில்தான் இருக்கிறது. மேற்படி மாகாண சபைகளை ஆளும் அல்லது ஆளப்போகும் கட்சிகளுக்கு வழங்கப்படும். மக்கள் ஆணையின் பலத்தில் அது தங்கியிருக்கவில்லை.
எனவே, தமிழ் மாகாண சபைகளிற்குரிய ரிமோற்ட் கொண்ரோல் விசை புதுடில்லியிற்தான் இருக்க முடியும். 13ஆவது திருத்தச் சட்டத்தில் கைவைக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டதும் கூட்டமைப்பு புதுடில்லியிடம் தான் முறையிட்டது. இதுவும் சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்களை அச்சமடையவும் கோபமடையவும் செய்திருக்கிறது. எவ்வளவுக்கெவ்வளவு கூட்டமைப்பானது டில்லியை நோக்கிச் சாய்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்களும் 13ஆவது திருத்தச் சட்டத்தைக் குற்றுயிராக்க முயற்சிப்பார்கள்.
ஏற்கனவே, கிழக்கு மாகாண சபையை புதுடில்லியின் தூர இயக்கக் கட்டுப்பாட்டு வலையத்துக்கு வெளியே கொண்டுவருவதில் அவர்கள் கணிசமான அளவு வெற்றிபெற்றுவிட்டார்கள். இந்நிலையில், வடக்கில் தேர்தல் நிகழுமாயிருந்தால் பெரும்பாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வெற்றிபெறும் வாய்ப்புக்கள் பிரகாசமாகத் தெரிவதாக அவர்கள் நம்புகிறார்கள். எனவே, இந்தியாவின் செல்வாக்கு வலையத்துள் காணப்படும் ஒரு கட்சியானது இந்திய மேலாதிக்கத்தின் சட்டபூர்வமான சான்று ஒன்றின் பதாங்க உறுப்பாகக் காணப்படும் சர்ச்சைக்குரிய ஒரு மாகாண சபையைக் கைப்பற்ற முன்பு அந்த மாகாணக் கட்டமைப்பை இயன்றளவுக்குக் குற்றுயிராக்கிவிட அவர்கள் முயற்சிக்கின்றார்கள்.
ஆனால், இதில் ஒரு வரலாற்றுக் குருட்டுத்தனமும் அகமுரண்பாடும் உண்டு. ஏறக்குறைய 26 ஆண்டுகளிற்கு முன்பு தம்மீது திணிக்கப்பட்ட ஒரு உடன்படிக்கை மீது அதே மாறாத அச்சத்துடன் காணப்படும் இவர்கள் சுமார் நான்கு ஆண்டுகளிற்கு முன் இந்தியா அவர்களிற்குச் செய்த ஒரு பேருதவியை மிக வசதியாக மறந்துபோய்விட்டார்கள்.
நாலாம் கட்ட ஈழப்போரில் அரசாங்கம் பெற்ற வெற்றி எனப்படுவது ஒரு தனித்துப் பெற்ற வெற்றி அல்ல. அது ஒரு கூட்டு வெற்றி. அனைத்துலகச் சமுகத்தின் கணிசமான பகுதி அதில் பங்காளியாகக் காணப்பட்டது, சிலநாடுகள் நேரடியாக உதவின. சில நாடுகள் மறைமுகமாக உதவின. சில நாடுகள் பொறுத்த நேரத்தில் தலையிடாமல் விட்டதன் மூலம் உதவின. இதில் இந்தியாவானது யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் தமிழ்த் தரப்புக்கு ஆதரவாகத் தலையிடாதிருந்தமை என்பது இறுதி வெற்றிக்கான வழிகளை இலகுவாக்கிக்கொடுத்தது. இந்தியா தலையிடாதிருந்தமை என்பது ஓர் அரசியற் தீர்மானம்தான். 1987இற்கு முன்பு தமிழ் இயக்கங்களிற்குத் தமிழ்நாட்டை ஒரு பின்தளமாகத் திறந்துவிட்டதைப்போல 1987இல் விமானத்தில் வந்து உணவுப்பொதிகளைப் போட்டதுபோல இதுவும் ஓர் அரசியற் தீர்மானம்தான். இதில் இந்தியா வேறுவிதமாக முடிவெடுத்திருந்தால் ஈழப்போரின் முடிவே வேறுவிதமாக அமைந்திருந்;திருக்கும். அரசியல் வரலாற்றில் கை கிடையாது என்று கூறப்படுவதுண்டு. ஆனால், சிங்களக் கடுந்தேசியவாதிகள் மிக வசதியாக மறந்துவிடும் ஒரு கை இது. இந்தியா அவர்களுக்குச் செய்த மிகப் பெரிய உதவியும் அது. இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் இந்தியாவானது இலங்கை அரசாங்கத்திற்கு செய்த மிகப் பெரிய உதவி அது. ஆனால், அண்மையில் பெற்ற உதவியை விடவும் கால் நூற்றாண்டுக்கு முன்பு பிரயோகிகப்பட்ட ஒரு நிர்ப்பந்தத்தைக் குறித்தே அவர்கள் எப்பொழுதும் பிரஸ்தாபிக்கின்றார்கள். ஜெயவர்த்தன கூறுவார் ”நான் ஒரு யானையைப்போல ஞாபகசக்தி மிக்கவன்’என்று. அதாவது, தனக்குத் தீங்கிழைத்தவர்களை இறக்கும் வரை மறந்துவிடாதிருக்கும் யானையின் இயல்பைக் கருதியே அவர் அவ்வாறு கூறினார். ஏறக்குறைய சிங்களக் கடுந்தேசியவாதிகளும் அவ்வாறுதான்.
இத்தனைக்கும் அந்த உடன்படிக்கையை தமிழர்கள் மத்தியிலுள்ள அநேகமாக எல்லாத் தரப்புக்களும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதை முதலில் ஏற்றுக்கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எவ். முடிவில் ஈழப்பிரகடனம் செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறியது. அதை ஏற்றுக்கொள்ளும் ஏனைய கட்சிகளும்கூட 13 சக வையே கேட்கின்றன. அவைகூட அதை இறுதித் தீர்வுக்கான ஓர் அடிப்படையாகத்தான் கருதுகின்றன. முற்று முழுதான ஓர் இறுதித்தீர்வாக அல்ல. ஏன் அதிகம்போவான்? அரசாங்கம் கூட 13 சக என்று ஏன் முன்பு கூறவேண்டி வந்தது. அதில் போதாமைகள் உண்டு என்று கருதியதால் தானே? எனவே, 13ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு பூரணமான தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது முதலாவது.
இரண்டாவது – அந்த பூரணமற்ற தீர்வின் தொடர் விளைவுகள் தமிழர்களுக்கே அதிக பட்சம் தீங்காக முடிந்தன என்பது. தன்னை நோக்கி வந்த ஒரு தீமையை ஜெயவர்த்தன தந்திரமாகத் தமிழர்கள் மீது உருட்டிவிட்டார். அதாவது, நடுவரை மோதலில் ஈடுபடும் ஒரு தரப்பாக்கினார். முடிவில் தமிழர்களிற்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளே சேதமடைந்தன. எனவே, 13ஆவது திருத்தச் சட்டமானது தமிழர்களுக்குச் சாதகமானது என்பதற்காக எதிர்க்கப்படுகிறது என்பது பகுதி உண்மையே. அது இந்திய மேலாதிக்கத்திற்கான சட்டபூர்வ ஆவணம் ஒன்றின் எச்சம் என்பதற்காக எதிர்க்கப்படுகிறது என்பதே முழு உண்மையாகும்.
அதாவது, சிங்களக் கடுந்தேசியவாதமானது 1987 யூலையில் எப்படிச் சிந்தித்ததோ அப்படித்தான் இப்பொழுதும் ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலத்துக்குப் பின்னரும் சிந்திக்கின்றது. நந்திக் கடலில் பெற்ற வெற்றிகளிற்கு பின்னரும் அது அப்படித்தான் சிந்திக்கின்றது. அதுவும் அந்த வெற்றிக்குப் பக்கபலமாக இருந்த ஒரு தரப்பை குறித்தே அது அப்படிச் சிந்திக்கிறது. இந்நிலையில், 13ஆவது திருத்தம் எனப்படுவது இலங்கை – இந்திய உறவுகளைப்பொறுத்து ஓர் அளவு மானியாக அல்லது குறிகாட்டியாக மாறிவருகிறது. அதாவது, இச்சிறு தீவில் இந்தியாவின் பிடி இறுகும்போது 13ஆவது திருத்தமும் பலமடையும். இந்தியாவின் பிடி தளரும்போது 13ஆவது திருத்தமும் சோதனைக்குள்ளாகும்.