மென் தமிழ்த் தேசியவாதம்

வடமாகாண சபைக்குரிய கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுவிட்டார். இத்தெரிவின் மூலம் கூட்டமைப்பின் தலைமையானது தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும், பிராந்திய மற்றும் அனைத்துலக சமுகங்களுக்கும் வெளிப்படுத்தியிருக்கும் சமிக்ஞைகள் எவையெவை?

முதலில், தமிழ் மக்களுக்கு அதாவது, தனது வாக்காளர்களிற்கு கூட்டமைப்பு வெளிக்காட்டியிருக்கும் சமிக்ஞைகள் எவையென்று பார்க்கலாம்.

ஒரு முதன்மை வேட்பாளரை கட்சிக்கு உள்ளேயிருந்து தெரிவு செய்யாமல் கட்சிக்கு வெளியிலிருந்து தெரிவு செய்தது ஏன்? இதை இரண்டு விதமாக விளங்கிக்கொள்ளலாம். முதலாவது, கட்சிக்குள் குறிப்பிட்ட பொறுப்புக்குத் தோதான ஆட்கள் இல்லை என்று விளங்கிக்கொள்ளலாம். இரண்டாவது கட்சித் தலைமையானது கட்சியைத் தான் திட்டமிட்டிருக்கும் விதத்தில் வடிவமைப்பதற்கும், கட்சியின் மீதான தனது பிடியை மேலும் இறுக்குவதற்கும் தனக்குத் தோதான ஆட்களைக் கட்சிக்கு வெளியிலிருந்து உள்ளீர்த்திருந்திருக்கிறது என்றும் விளங்கிக் கொள்ளலாம்.

கூட்டமைப்பின் கடந்த சுமார் நான்காண்டு காலச் செயற்பாடுகளைத் தொகுத்துப் பார்த்தால் இரண்டாவது விளக்கமே அதிகம் பொருத்தமானது என்று தோன்றுகிறது. அதாவது, கூட்டமைப்பின் தலைமையானது கட்சியை ஒரு புதிய தடத்தில் ஏற்றத் தீர்மானித்துவிட்டது. சுமந்திரனை நியமித்தபோது இது தொடங்கியது. இப்பொழுது அவரைப் பலப்படுத்த மற்றுமொருவர் வந்துவிட்டார். இதன் மூலம் கட்சித் தலைமையானது கூட்டமைப்பு ஒரு புலிகளுடைய பதிலி என்றவாறாக நன்கு ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் ஒரு படிமத்தை அகற்ற விளைகிறது.

அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், தான் புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்ததாகக் கூறியிருக்கிறார். ஆனால், அதற்குப் பின்னர் தான் கிளிநொச்சியில் புலிகளோடு அவர் விருந்துண்டிருக்கிறார் என்பது வாசிப்பவர்களின் மறதி சம்பந்தப்பட்ட ஒரு விடயம். என்றாலும் அந்தப் பேட்டியை வாசிக்கும் ஒரு சராசரி சிங்கள வாசகரின் மனதில் புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்த ஒருவர் எப்படி புலிகளின் பதிலியாக இருக்க முடியும் என்று அப்பாவித்தனமாக ஒரு கேள்வி எழுந்திருக்கவும் கூடும். அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் இல்லை. நிரந்தரமான எதிரிகளும் இல்லை. ஒரு காலம் சம்பந்தர் மட்டுமல்ல கூட்டமைப்பில் இப்பொழுது உள்ள அநேகமான தலைவர்கள் புலிகளின் கொலைப்பட்டியலில் இருந்தவர்கள்தான். பின்னாளில் அவர்களிற் பலர் கிளிநொச்சியில் புலிகளோடு விருந்துண்டவர்களும் தான். ஒரு காலம் புலிகள் இயக்கத்தின் பதிலாகச் செயற்பட வேண்டியிருந்தது. இப்பொழுது கட்சியைப் புலி நீக்கம் செய்ய வேண்டியிருக்கிறது. அதாவது, 2009 மே மாதத்திற்கு முன்பிருந்த கூட்டமைப்பு அநேகமாகக் காலாவதியாகிறது.

கடந்த வாரம் முதன்மை வேட்பாளருக்கான இழுபறிகளின்போது கூட்டமைப்பில் உள்ள ஒரு சிறிய கட்சியின் தலைவர் கூட்டமைப்பின் தலைவரிடம் கேட்டாராம், ‘எதற்காக ஓய்வுபெற்ற நீதியரசரைப் பிடிவாதமாக முன்மொழிகின்றீர்கள்?” என்ற தொனிப்பட. அதற்கு அவர் சொன்னாராம் ‘‘விக்னேஸ்வரனிற்கு புலிச்சாயம் இல்லை” என்று.

இது தான் சாராம்சம். கூட்டமைப்பின் தலைமைப்பீடமானது ஒரு மென் தேசிய வாதத்திற்குத் தலைமை தாங்குவது என்று தீர்மானித்துவிட்டது. வெற்றி பெற்ற தரப்பானது வெற்றி வாதத்திற்குத் தலைமை தாங்கும் ஒரு நாட்டில், தோற்கடிக்கப்பட்ட தரப்பானது மென் தேசியத்துக்குத் தலைமை தாங்க விளைவது என்பது சரணாகதி அரசியலா? அல்லது தீர்க்கதரிசனத்துடன் கூடிய ஓர் அரசியல் சாணக்கியமா? அல்லது சில தரப்புக்கள் குற்றஞ்சாட்டுவதுபோல் வெளியாருடைய நிகழ்ச்சி நிரலின் பாற்பட்டதா? எது சரி?

ஆனால், இங்கேயும் ஒரு தெளிவின்மை உண்டு. வரப்போகும் தேர்தலில் பங்குபற்றவிருக்கும் எல்லா வேட்பாளர்களுமே மென்தேசிய வாதிகளா? என்பதே அது. ஆனால், கட்சித் தலைவர், கட்சியை அப்படிச் செங்குத்தாகத் திருப்ப விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. குறைந்த பட்சம் வாக்குவேட்டை அரசியலுக்காவது வன்தேசியவாதத்தின் ஆதரவாளர்களை பயன்படுத்தும் ஏதுநிலைகளே அதிகம் தென்படுகின்றன. தேர்தல் பிரசாரத்தின்போது சுமந்திரன் கதைக்கக் கூடிய தீவிர எல்லைகளுக்கும் அப்பால் யாரும் தீவிர தேசியம் கதைக்கக் கூடாது என்று ஒரு கட்டளை பிறப்பிக்கப்படுமாயிருந்தால் சம்பந்தர் கட்சியை செங்குத்தாகத் திரும்புகின்றார் என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், அதற்கான வாய்ப்புகள் அரிதாகவே தெரிகின்றன. ஏனெனில், வேட்பாளர் தெரிவைப் பொறுத்தவரை வேட்பாளரின் பூர்வீகம் எதுவென்பது கண்டிப்பாகப் பார்க்கப்படுவதாகத் தெரியவில்லை. அதாவது, குறைந்த பட்சம் வாக்கு வேட்டை உத்தியாகவாவது வன்தேசியக் கோஷங்கள் அல்லது வன்தேசியச் சாயலுடையவர்கள் அல்லது வன்தேசியப் பூர்வீகமுடையவர்கள் பயன்படுத்தப்பட்டலாம் என்றே தோன்றுகிறது.

இது ஓர் அகமுரண்தான். அதாவது முடிவுகளை எடுக்கும் பொறுப்பிலிருப்பவர்கள் மென்தேசியவாதிகளாயிருக்க வேண்டும். ஆனால், அடுத்தடுத்த நிலையிலிருப்பவர்கள் எத்தகைய சாயல்களோடும் இருக்கலாம். எதுவோ, புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரான தமிழ் அரசியலை அதிகபட்சம் மென்தேசியவாதிகளின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்று கூட்டமைப்பின் தலைமை முடிவெடுத்துவிட்டது.

கட்சித் தலைமையானது அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஒரு வடமாகாண சபையை உருவாக்க முயற்சிக்கிறதா? என்று கட்சிக்குள் இருக்கும் சில அதிருப்தியாளர்கள் கேட்கிறார்கள். ஆனால், அரசியல் நீக்கம் எனப்படுவதே ஓர் அரசியல்தான். எனவே, அரசியல் நீக்கம் செய்யப்பட்டதுபோல தோன்றுவதெல்லாம் மென்தேசியம்தான். சுமந்திரனை நியமித்தபோது இதற்கான துலக்கமான முதலடி எடுத்துவைக்கப்பட்டது. இப்பொழுது விக்னேஸ்வரனைத் தெரிந்தெடுத்தத்தின் மூலம் கூட்டமைப்பானது அதன் பழைய தடத்திலிருந்து மிகத்தெளிவாக விலகிவந்து விட்டது. சுமந்திரன் கட்சித் தலைமையால் நியமிக்கப்பட்டவர். ஆனால், விக்னேஸ்வரன் தேர்தலில் இறக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சம்பந்தர் தான் தலைமை தாங்க முற்படும் மென்தேசியவாதத்திற்கான மக்கள் ஆணையொன்றைப் பெற விளைகிறார். விக்னேஸ்வரனைத் தெரிந்தெடுத்தத்தின் மூலம் கூட்டமைப்பானது தமிழ் வாக்களார்களுக்கு வெளிக்காட்டியிருக்கும் சமிக்ஞைகள் இவை.

அடுத்ததாக, சிங்கள மக்களுக்கு அல்லது அரசாங்கத்திற்கு தரப்பட்டிருக்கும் சமிக்ஞைகள் எவையெவையென்று பார்க்கலாம். கடந்த சுமார் மூன்று தசாப்த காலத் தமிழ் அரசியலில் சிங்கள மக்களுக்குக் காட்டப்பட்ட ஒப்பீட்டளவில் அதிகம் நெகிழ்ச்சி மிக்க சமிக்ஞைகள் இவை எனலாம். இன்னொரு விதமாகச் சொன்னால் தோற்கடிக்கப்பட்ட ஒரு தரப்பிடமிருந்து வெற்றிபெற்ற ஒரு தரப்புக்குக் காட்டப்படும் ஒப்பீட்டளவில் தேசியத் தன்மை குறைந்த சமிக்ஞைகள் இவை எனலாம். என்பதாற்றான் தயான் ஜெயதிலக விக்னேஸ்வரனை தமிழ் அரசியலின் மென்சக்தி (ளுழகவ Pழறநச) என்று வர்ணித்துள்ளார். மேலும் ஒரு படி மேலெ சென்று விக்னேஸ்வரனை கூட்டமைப்பின் கதிர்காமர் என்றும் அழைத்துள்ளார்.

அரசாங்கம் இந்த சமிக்ஞைகளை எப்படி உள்வாங்கப்போகிறது என்பதில்தான் இந்த மென்தேசிய அரசியலின் எதிர்காலம் தங்கியிருக்கிறது. ஏனெனில், இதற்கு முன்பு சுமாராக மூன்று தசாப்தங்களிற்கும் மேலாக இருந்து வந்த எதிர்ப்பு அரசியல் பாரம்பரியத்திலிருந்து கூட்டமைப்பானது துலக்கமான ஒரு விலகலைக் காட்டியிருக்கிறது. இதுவரையிலுமான வன்தேசிய அரசியல் அல்லது எதிர்ப்பு அரசியலைப் பொறுத்த வரை ஏற்கனவே, சில விமர்சகர்கள் சுட்டிக்காட்டியிருப்பதுபோல எதிர்த்தரப்புத்தான் தமிழர்களின் பலமாக இருந்து வந்தது. அதாவது, விட்டுக்கொடுப்பற்ற எதிரியே பலம். எவ்வளவுக்கெவ்வளவு எதிர்த்தரப்பு விட்டுக் கொடுக்க மறுக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு தமிழர்களின் கோரிக்கைகளுக்கான நியாயமும் பலமடையும்.

ஆனால், மென்தேசிய அரசியலுக்கு இது பொருந்தாது. மென்தேசிய அரசியலைப் பொறுத்த வரை எதிர்தரப்பின் நெகிழ்ச்சியே பலம். எதிர்த்தரப்பு எவ்வளவுக்கெவ்வளவு வளைந்து கொடுக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நல்லிணக்கம் சாத்தியம். மாறாக, எதிர்த்தரப்பு நெகிழ மறுக்குமாயிருந்தால் மென்தேசியவாதிகளுக்கு மாற்றுவழியிருக்காது. மறுபடியும் வன்தேசியத்திற்கு திரும்பப்போகப் போவதாக வீரம் காட்டவும் முடியாது. வன்தேசிய அரசியலில் படைப் பலமிருந்தது. கட்டுப்பாட்டுப் பிரதேசம் இருந்தது. ஆனால், மென்தேசிய அரசியலில் இவை எவையுமில்லை. மக்கள் வழங்கிய ஆணையும், பிராந்திய மற்றும் அனைத்துலக மட்டத்தில் அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப்படக்கூடிய அழுத்தங்களும்தான் அதன் பிரதான பலங்கள்.

TNA_in_Delhiவன்தேசிய அரசியலின் தோல்வியின் பின்னணியில் கூட்டமைப்பானது மென்தேசிய அரசியலுக்குத் தலைமை தாங்குவது என்று முடிவெடுத்திருக்கிறது. இதைவிட வேறு வழி கிடையாது என்று ஒரு விளக்கம் அவர்களிடமிருக்கக்கூடும். வன்தேசிய எதிர்ப்பு அரசியலின் பேரம்பேசும் சக்தியானது அதிக பட்சம் அதன் படைத்துறை வல்லமையிலேயே தங்கியிருந்தது. ஆனால், மென்தேசிய அரசியலின் பேரம்பேசும் சக்தியானது அதற்கு கிடைத்த மக்கள் ஆணையிலும், அந்த மக்கள் ஆணையால் கிடைக்கும் அனைத்துலக அங்கீகாரத்திலுமே அதிகபட்சம் தங்கியிருக்கிறது. இந்நிலையில், இலங்கை அரசாங்கமானது பிராந்திய மற்றும் அனைத்துலகத் தரப்பை சூழ்ச்சிகரமாகக் கையாளுமிடத்து அதாவது, சீனாவுக்காகத் திறக்கப்பட்டிருக்கும் கதவுகளை முடுமிடத்து மென்தேசிய அரசியலின் பிரதான பலங்களில் ஒன்று இல்லாமற்போய்விடும். அதன் பின் அரசாங்கம் மென்தேசியவாதத்தை இலகுவாகத் தோற்கடித்துவிடும். இலங்கை அரசாங்கம் சீனாவைக் கைவிடுவது என்று முடிவெடுத்தால் இந்தியாவும், மேற்கு நாடுகளும் தமிழர்களை நடுவழியில் கைகழுவி விட்டுவிடும். ஏறக்குறைய நந்திக் கடற்கரையில் கைவிட்டதுபோல. அதன் பின் அவர்கள் பதின் மூன்று மைனஸ் அல்ல. மாநகர சபையாவது தருவார்களா என்பது சந்தேகமே. எனவே, மென்தேசியவாத அரசியல் ஒரு தற்கொலை முயற்சியா? இலலையா? என்பது அரசாங்கத்தின் யதார்த்தபூர்வமான வெளியுறவுக் கொள்கை முடிவுகளிற்தான் கூடுதலான பட்சம் தங்கியிருக்கிறது.

இலங்கைத்தீவின் இன யதார்த்தத்தின் படி மென்தேசிய வாதியோ அல்லது வன்தேசியவாதியோ யாராயிருந்தாலும் தமிழ் மக்களின் கூட்டு உரிமைகள் தொடர்பில் அவர் விட்டுக்கொடுப்பின்றிக் காணப்படுவராயிருந்தால் அவருக்குப் புலி முத்திரைதான் குத்தப்படும். அவருடைய பூர்வீகம் எது வென்பதும் அவருடைய பாரம்பரியம் எதுவென்பதும் அப்பொழுது ஒரு பிரச்சினையாகவிருக்காது குமார் பொன்னம்பலத்திற்கு என்ன நடந்தது? இப்பொழுது விக்னேஸ்வரனை கூட்டமைப்பின் கதிர்காமர் என்று அழைக்கப்பவர்களே எதிர்காலத்தில் அவருடைய நடவடிக்கைகளைப் பொறுத்து அவரைத் தாடிவைத்த பிரபாகரன் என்று அழைக்கவும்கூடும். ஏற்கனவே, அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவரை அன்ரன் பாலசிங்கத்தின் அவதாரம் என்று அழைக்கத் தொடங்கிவிட்டார்.

எனவே, அண்மைத் தசாப்தங்களில் தமிழர் தரப்பிலிருந்து காட்டப்பட்ட ஓப்பீட்டளவில் குணாம்ச வேறுபாடு உடைய மிக நெகிழ்ச்சியான இச்சமிக்ஞைகள் சிங்கள மக்களையும் இலங்கை அரசாங்கத்தையும் நோக்கி மட்டும் காட்டப்படவில்லை. அவை பிராந்திய மற்றும் அனைத்துலகத் தரப்பையும் நோக்கிக் காட்டப்படுகின்றன.

அரசாங்கம் இம்மென்தேசிய சமிக்ஞைகளைப் பொருட்படுத்தத் தவறுமிடத்து அதன் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு பிராந்திய மற்றும் அனைத்துலக சக்திகளைத் தூண்டத் தேவையான முன்னொப்பொழுதையும் விடப் பலமான ஒரு தார்மீக அடித்தளம் தனக்குக் கிடைத்துவிடும் என்று கூட்டமைப்பின் உயர்பீடம் நம்புகிறதா?

அல்லது சட்ட நுணுக்கங்களைத் தெரிந்தவர்களை, முடிவுகளை எடுக்கும் பொறுப்புக்களில் அமர்த்த முயல்வதன் மூலம் இனப்பிரச்சினையை ஒரு சட்டப் பிரச்சினையாக விளங்கி வைத்திருக்கிறார்களா?

தேசிய இனப்பிரச்சினை எனப்படுவது ஒரு சட்டப்பிரச்சினையே அல்ல. அதை ஒரு சட்டப் பிரச்சினையாக விளங்கி வைத்திருப்பது அரசாங்கதிற்கே இறுதி வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துவிடும்.

ஏற்கனவே, வடமாகாண சபைத் தேர்தலை நடாத்தத் தீர்மானித்ததின் மூலம் அரசாங்கம் துலக்கமான சில வெற்றிகளைப் பெற்றுவிட்டது. 13 பிளஸ் கேட்ட மிதவாதிகளை 13 மைனஸ் தான் கிடைக்கும் என்று மிரட்டியதன் மூலம் 13 கிடைத்தாலே போதும் எனுமொரு நிலைக்குக் கீழிறங்க வைத்தது மற்றொரு வெற்றி. குறிப்பாக, இந்தியாவையும் அந்த நிலைக்குக் கொண்டு வந்தது. ஒரு போனஸ் வெற்றி. முதன்மை வேட்பாளர் தெரிவில் கூட்டமைப்புக்குள் நிகழ்ந்த இழுபறிகளும் களத்துக்கு வெளியே தலைமை தெரிந்தெடுக்கப்பட்டதும் இன்னுமொரு வெற்றி. இப்பொழுது தீர்வேயல்லாத ஒரு தீர்வில் கிடைக்கக் கூடிய அமைச்சர் பதவிகள் உறுப்பினர் பதவிகளுக்காக ஆளையாள் அங்கலாய்க்கவும், பிடுங்குப்படவும் விட்டது மேலுமொரு வெற்றி. அதாவது, தமிழ் அரசியலை இலட்சியவாதத்திலிருந்து வாக்கு வேட்டை அரசியலாகவோ அல்லது பதவி வேட்கை அரசியலாகவோ தரமிறக்கிறது மற்றுமொரு வெற்றி. இந்நிலையில் தேசிய இனப்பிரச்சினையானது தமிழ்த் தரப்பால் ஒரு அதிகாரப் பகிர்வு விவகாரமாகவோ அல்லது சட்டப் பிரச்சினையாகவோ பார்க்கப்படுமாயிருந்தால் அதுவும் அரசாங்கத்திற்கு கிடைக்குமொரு வெற்றியாக அமையக்கூடும்.

இப்படியாக நந்திக் கடலில் அரசாங்கம் பெற்ற படைத்துறை வெற்றிகளுக்கு மேலதிகமாக அண்மைக்காலங்களில் அது தொடர்ச்சியாகப் பெற்றவரும் அரசியல் வெற்றிகளின் பின்னணியில் ஓய்வுபெற்ற நீதியரசருக்கு முன் இரண்டே இரண்டு தெரிவுகள்தான் துலக்கமாகத் தெரிகின்றன. ஒன்று கூட்டமைப்பின் கதிர்காமராக இருப்பது மற்றது தாடிவளர்த்த பிரபாகரனாக மாறுவது. இதில் எதை அவர் தெரிந்தெடுப்பார்? அல்லது இவையிரண்டுக்குமிடையில் மற்றொரு புதிய தெரிவிற்குப் போவாரா?

19-07-2013

Related Articles

1 Comment

Avarage Rating:
  • 0 / 10
  • Ummu Hana , 22/07/2013 @ 6:41 PM

    இனத்துவ பாணியிலான அரசியல் போராட்டம் பேரனிவாத அரசியல் கட்டமைப்பின் மற்றொரு பிரதிபலிப்பாகும். அது மென்போக்காக இருப்பினும் கடும்போக்காக இருப்பினும் பேரின அரசியலின் முன்னால் தாக்குபிடிக்காது.

    இன்னொரு விதத்தில் இதனைக் குறிப்பிடுவதாயின் பேரினவாத தேசிய அரசியலுக்கு மாற்றீடாக பன்மைத்தவ பன்மைத்துவ அரசியல் மாதிரியை மாற்றீடாக்குவதே எமக்கு முன்னால் இருக்கின்ற ஒரே வழி.

    இதனை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்த நீண்ட கதையாடல் காலத்தின் மிக இன்றியமையாத தேவையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *