இவ்வுரையைக் கேட்ட அவதானி ஒருவர் அபிப்பிராயம் தெரிவித்தபோது…. மாகாண சபை அரசியலில் பொசிற்றிவ் அணுகுமுறை என்பது வேறொரு வடிவத்தில் இணக்க அரசியலா? என்று கேட்டார். உண்மையில் மென் தமிழ்த் தேசியத்தின் ஓர் அந்தத்தில் அதுதான் காணப்படுகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு எதிர்ப்பு அரசியலின் கூர் குறைகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது இணக்க அரசியலுக்குக் கிட்ட வருகிறது. இப்பொதுள்ள பிரச்சினையெல்லாம் அரை எதிர்ப்பு அரசியலுக்கும், அரை இணக்க அரசியலுக்கும் இடையில் எங்கே ஒரு சமநிலையைக் கண்டுபிடிப்பது என்பதுதான். ஆனால், அது மிகக் கஷ்டம். ஏனெனில், இலங்கைத் தீவின் இப்பொழுதுள்ள அரசியற் சூழலைப் பொறுத்த வரை எதிர்ப்பு அரசியலும் இணக்க அரசியலும் ஒரே இடத்தில் இருக்க முடியாது என்பதுதான். இதைச் சிறிது விரிவாகப் பார்க்கலாம்.
இப்பொழுது அரசாளும் வம்சமானது இதற்கு முன்பிருந்த ஆளும் வம்சங்கள் எங்கிருந்து வந்தனவோ அங்கிருந்து வரவில்லை. வழமையான செல்வாக்குமிக்க சிங்கள உயர் குழாத்தின் விருப்பங்களை அதிகம் பிரதிபலிக்கின்ற அல்லது பொருட்படுத்துகின்ற ஒரு அரசாங்கம் அல்ல இது.வழமையான சிங்கள ஆளும் வம்சங்களை விடவும் தானே மேலானது என்று நிரூபிக்க வேண்டிய தேவை இந்த வம்சத்திற்கு இருந்தது என்று ஏற்கனவே ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இந்நிலையில், விடுதலைப்புலிகளைத் தோற்கடித்ததின் மூலம் இப்பொழுது ஆட்சியில் உள்ள வம்சமானது இதற்கு முன்பிருந்த எல்லா வம்சங்களை விடவும் தான் மேலானது என்பதை நிரூபித்திருக்கிறது. சாதாரண சிங்கள மக்களைப் பொறுத்த வரை இது கற்பனை செய்ய முடியாத தாங்க முடியாத ஒரு வெற்றி. எனவே, யுத்த வெற்றிதான் இந்த அரசாங்கத்தின் அடிப்படைப் பலம். இந்தப் பலம் உள்ள வரை உள்நாட்டில் வேறு எந்தத் தரப்பாலும் அதை இலகுவில் அசைத்துவிட முடியாது. இதனால், எது இந்த அரசாங்கத்தின் மெய்யான பலமோ அதன் கைதியாக இந்த அரசாங்கம் மாறிவிட்டது. யுத்த வெற்றிகளுக்காகவும் வெற்றிகளின் பின்பும் எத்தகைய தீவிரமான சக்திகளுகு;கு இந்த அரசாங்கத் தலைமை தாங்குகிறதோ அந்த சக்திகளை விடத் தீவிரமான முடிவுகளை எடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்திலிருக்கிறது.
எனவே, யுத்த வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கும் ஒரு அரசாங்கத்திடமிருந்து தமிழர்கள் மிகக் குறைந்தளவு தீர்வையே எதிர்பார்க்க முடியும். இது சிங்கள அரசியல் யதார்த்தம்.
மற்றது தமிழ் யதார்த்தம் – பெருந்தோல்விக்கும், பேரழிவுக்கும் பின்னரான ஒரு கால கட்டத்தில் முன்னைய கால கட்டத்தின் நிழலாகச் செயற்பட்ட ஒரு கட்சியானது கடந்த நான்காண்டுகளாக ஒரு மையமாகத் தொழிற்பட வேண்டிய நிலை. மக்கள் வழங்கிய ஆணையும் அதன் பேரால் கிடைக்கும் அனைத்துலக அங்கீகாரத்தையும் தவிர வேறெந்த பலமும் இல்லை. இறந்த காலத்தின் தொடர்ச்சியாகக் காணப்படும் எதுவும் சந்தேகிக்கப்படுகின்ற அல்லது ஆபத்துக்குள்ளாகக்கூடிய ஓர் அரசியற்சூழலில், இறந்த காலத்தின் மிச்ச சொச்சங்களாகக் காணப்படும் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக கழற்றி வரும் கூட்டமைப்பானது வன்தேசியத் தடத்திலிருந்து தொடர்ச்சியாக விலகி வருகிறது. இறந்த காலத்தின் தொடர்ச்சிகளிலிருந்து தன்னைத் துண்டித்து வரும் ஒரு கட்சியானது அதே உடனடி இறந்த காலத்தின் தொடர்ச்சியாக ஒரு தீர்வைக் கேட்குமா? அதுவும் யுத்த வெற்றி வாதத்திற்குத் தலைமை தாங்கும் ஓர் அரசாங்கத்திடமிருந்து அதை எதிர்பார்க்க முடியுமா? எனவே, யுத்த வெற்றிகளிற்குத் தலைமை தாங்கும் ஒரு அரசாங்கமானது தோற்கடிக்கப்பட்ட தரப்பின் சரணாகதி அரசியலைத் தான் இணக்க அரசியலாக ஏற்றுக்கொள்ளும். மாறாக, எதிர்ப்பு அரசியலை அது இயன்றளவுக்கு தோற்கடிக்கவே முயற்சிக்கும்.
இத்தகைய ஒரு பகைப்புலத்தில் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு வெளியில் எதையும் தமிழர்கள் எதிர்பார்க்க முடியாது. அதிலும் மாகாண சபையின் உள்ளுடனைக் கோதி எடுத்து அதை இயன்றளவுக்குக் கோறையாக்கும் முயற்சிகளையே இந்த அரசாங்கம் ஆதரிக்கும். இத்தகைய ஒரு பின்னணியில் நாடாளுமன்றத்துக்கு வெளியிலான அரசியல் நடவடிக்கைகளில் இறங்கக் கூட்டமைப்பு தயாராக இல்லை. அதற்குத் தேவையான திராணியும், அரசியல் ஒழுக்கமும், உள்ளடக்கமும், பாரம்பரியமும் அவர்களிடமில்லை. உயர் தோற்றப் பொலிவுடைய தலைவர்களை முன்னிறுத்தி வாக்குக் கேட்கும் அரசியலே அவர்களுடையது. அதாவது தலைமை மைய அரசியல். நிச்சயமாக வெகுசன மைய அரசியல் அல்ல.
ஒரு இறுதித் தீர்வைக் குறித்த திட்டவட்டமான வரைவுகள் எதுவும் இன்று வரையிலும் கூட்டமைப்பிடம் இல்லை. அப்படியொரு இறுதித் தீர்வைக் குறித்து உரையாடுவதற்கான பொறிமுறையும் அவர்களிடம் இல்லை. இறுதித் தீர்வு எது என்பதில் தெளிவிருந்தாற்தான் அதை அடைவதற்கான வழிவகைகள் பற்றியும் சிந்திக்கலாம். நாடாளுமன்றத்துக்கு வெளியே அத்தகைய வழிவகைகளைக் கண்டு பிடிக்க கூட்டமைப்பால் முடியாது. அதன் அரசியல் ஒழுக்கமும், உள்ளடக்கமும், பாரம்பரியமும் அதற்கு இடம்கொடுக்காது என்பதால்தான் செய்ய முடியாத ஒரு அரசியலுக்குரிய இறுதித் தீர்வைக் குறித்து உரையாடுவதை கூட்டமைப்புத் தவிர்த்து வருகிறதா?
ஆயின், நாடாளுமன்றத்துக்கு வெளியே சிந்திக்கத் திராணியில்லையென்றால், நாடாளுமன்றத்துக்குட்பட்டு இப்போது நடைமுறையில் இருக்கின்ற ஒரு தீர்வுக்குள் தன்னைப் பொருத்திக் கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு தெரிவு இல்லை. அதைத்தான் கூட்டமைப்புச் செய்து வருகிறது. கூட்டமைப்பு மட்டுமல்ல, கூட்டமைப்பைப் போலன்றி மிகத் தெளிவான இறுதி இலக்கை முன்வைக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடமும் தனது இலக்குகளை அடைவதற்குரிய மூலோபாயம் பற்றிய தெளிவு இல்லை. இடைக்கிடை சிறிய அளவிலான குறியீட்டு வகைப்பட்ட எதிர்ப்புப் போராட்டங்களிற்குமப்பால், அவர்களிடம் நடைமுறைச் சாத்தியமான செயற்றிட்டம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு நாடு இரு தேசம் என்ற அவர்களுடைய இறுதி இலக்கானது ஒரு கவர்ச்சியான கோஷமாகச் சுருங்கிப் போய்விட்டது. மேலும் அவர்களுடைய குறியீட்டு வகைப்பட்ட எதிர்ப்புப் போராட்டங்களின்போது கூட்டமைப்பு உறுப்பினர் சிலர் கலந்துகொள்வதன் மூலம் போராட்டத்தின் கனிகளை அவர்களே இறுதியில் தட்டிப் பறித்துச் சென்று விடுகின்றார்கள். ஏனெனில், கூட்டமைப்பிடம்தான் ஒப்பீட்டளவில் பெரிய மக்;கள் தளம் உண்டு. அந்த மக்கள் தளத்தைப் பெயர்த்து எடுப்பதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் ஆகக்குறைந்த பட்ச முதன்மை வேலைத் திட்டமாக இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு கூட்டமைப்பின் மக்கள் தளத்தைத் தம்வசம் பெயர்த்தெடுக்கவல்ல செய்முறை ஒழுக்கம் எதுவும் அந்தக் கட்சியிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
எனவே, புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரான இலங்கைத் தீவின் தமிழ்த் தேசிய அரங்கெனப்படுவது செயலுக்குப்போகத் திராணியற்ற அல்லது செயலுக்குப் போகும் வழிதெரியாத ஆளுமைகளை அதிகமுடைய ஓர் அரங்காகவே காணப்படுகின்றது.
இத்தகைய ஒரு பின்னணியில், வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கும் ஓர் அரசாங்கத்திற்கும் செயலுக்குப் போகத் திராணியற்ற தமிழ்த் தேசியவாத்திற்கும் இடையிலான ஒரு மோது களத்தில் கடந்த நான்காண்டுகளாக அரச தரப்பே அதிகம் வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. தனது நிகழ்ச்சி நிரலில் அதிக மாற்றங்களின்றி, சிலசமயம் அனைத்துலக மற்றும் பிராந்திய சக்திகளின் அழுத்தங்களிற்கேற்ப சில சுழிவுகளை அல்லது சுதாகரிப்புக்களைச் செய்தபடி அரச தரப்பே முன்னேறியிருக்கின்றது.கடந்த நான்காண்டு காலமாக தமிழ் மிதவாதிகளின் எதிர்ப்பு அரசியல் எனப்படுவது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்தத் தவறிவிட்டது மட்டுமல்ல, அனைத்துலக அரங்கிலும் தமிழர்களிற்கு சாதகமாக ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றங்கள்கூட, தமிழ் மிதவாதிகளின் சாதனைகள்தான் என்று முழுமையாக உரிமை கோர முடியாது. சீன விரிவாக்கத்தின் ஈர்ப்பு வளையத்துக்குள் காணப்படும் இலங்கை அரசாங்கத்தை தமது வழிக்குக் கொண்டுவரும் நோக்கத்தோடு மேற்கு நாடுகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் யாவும் அவற்றின் சொந்த நிகழ்ச்சி நிரலின் பாற்பட்டவைதான். இதில் தமிழ் மிதவாதிகள் செல்வாக்குச் செலுத்தினாலும், செலுத்தாவிட்டாலும் மேற்குநாடுகள் மேற்படி நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கவே செய்யும். இதில் தமிழர்கள், வெறும் கருவிகள் அல்லது நிலைமைகளை மேற்கிற்குச் சாதகமாகக் கனியவைக்கும் நொதியங்கள் அவ்வளவு தான்.
எனவே, அனைத்துலக அரங்கில் தமிழர்களுக்கு ஆதரவாக ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றங்கள் எனப்படுபவை இலங்கை அரசாங்கத்தின் யதார்த்தமற்ற வெளியுறவுக் கொள்கையின் விளைவுகள்தான். அதாவது இலங்கை அரசாங்கத்தின் விவேகமற்ற முடிவுகளால் ஏற்பட்ட மாற்றங்களே தவிர தமிழ் மிதவாதிகளின் விவேகமான துணிச்சலான செயற்பாடுகளால் ஏற்பட்டவை அல்ல.
எனவே, கடந்த நான்காண்டுகால எதிர்ப்பு அரசியல் மற்றும் அந்த எதிர்ப்பு அரசியலின் நீட்சியும் அகட்சியுமாகக் காணப்படும் ராஜதந்திர நகர்வுகள் அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் தமிழ் மிதவாதத்தின் கையாலாகாத்தனம் பட்டவர்த்தனமாகத்தெரியும். இதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் விளைவாகத்தான் சம்பந்தர் மென்தேசிய தடத்தைத் தெரிவு செய்தாரா? என்று ஒரு கேள்வி எழும். இக்கேள்வியை மேலும் வளர்த்துச் சென்றால் மென்தேசிய அரசியல் எனப்படுவது காலப் பொருத்தம் கருதி மேற்கொள்ளப்பட்ட யதார்த்தமான, தீர்க்கதரிசனம் மிக்கதொரு சமயோசித முடிவு என்று சம்பந்தருக்கு நெருக்கமானவர்கள் வாதிடக்கூடும்.
ஆனால், கூட்டமைப்பின் கடந்த நாலாண்டு கால நடவடிக்கைகள், அதன் அரசியல் ஒழுக்கம், என்பவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அப்படியொரு முடிவுக்கு வர முடியாதிருக்கும். அதாவது மென்தேசிய அரசியல் எனப்படுவது ஒரு தீர்க்க தரிசனம் மிக்க உத்தியன்று. அது பலத்தின் பாற்பட்ட முடிவு அல்ல. பலவீனத்தின் பாற்பட்ட ஒரு முடிவுதான். எதிர்ப்பு அரசியலின் கையாலாகாத்தனங்களின் விளைவு அது. எனவே, அது அதன் இயல்பான தர்க்கபூர்வ வளர்ச்சிகளின் விளைவாக அரை இணக்க அரசியலாகவோ அல்லது அதைவிடக் குறைவான இணக்க அரசியலாகவோ மாறக்கூடிய நிலைமைகளே அதிகம் தெரிகின்றன. மாகாண அரசியலில் நடைமுறைச் சாத்தியமான இணக்க அரசியலையும் மத்தியில் நடைமுறைச் சாத்தியமான எதிர்ப்பு அரசியலையும் முன்னெடுத்துச் செல்லப் போவதாக ஒரு தோற்றம் உருவாக்கப்படலாம். ஆனால், வெற்றி வாதத்திற்கு தலைமை தாங்கும் ஒரு அரசாங்கத்தைப்பொறுத்தவரை இணக்க அரசியல் எனப்படுவது சரணாகதி அரசியல் தான்.இந்நிலையில் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை எடுக்கும் எந்த ஒரு கட்சியும் திட்டவட்டமான எதிர்ப்பு அரசியலைத்தான் முன்னெடுக்கலாம். அதை அரை எதிர்ப்பு அல்லது அரைத்தேசியம் என்றெல்லாம் பண்பு மாற்றம் செய்வது என்பது அதன் இறுதியிலும் இறுதியான தர்க்க பூர்வ விளைவாக ஏதோ ஒருவித இணக்க அரசியலில் தான் கொண்டுபோய் விடும். அதாவது தேசிய நீக்கம் செய்யப்பட்ட இணக்க அரசியல், அதைத்தான் ஈ.பி.டி.பி. செய்து வருகிறது. அதையே வேறொரு வடிவத்தில் மென்தேசியவாதிகளும் செய்ய விளையுமிடத்து அரசாங்கமானது விவேகமான முடிவுகளை எடுக்குமாயிருந்தால் தமிழ் அரசியலை அப்படியே மாகாண சபைகளுக்குள் பெட்டி கட்டி விடலாம். முழு இணக்கத்திற்கு வரும் தமிழ்த் தேசிய அரசியல் செய்யாத நேசக்கட்சி ஒன்றை விடவும், அரை இணக்கத்திற்கு வரும் அரைத் தேசியக் கட்சியைப் பலப்படுத்தினால் எதிர்காலத்தில் தமிழ் எதிர்ப்பரசியலை ஆகக் கூடிய பட்சம் வீரியமிழக்கச் செய்துவிடலாம். அப்படியொரு நிலைமை உருவாகுமிடத்து அதில் முதல் பலியாகப்போவது ஈ.பி.டி.பியாகத்தானிருக்கும். ஏனெனில், நேச சக்தியாகிய ஈ.பி.டி.பியின் இணக்க அரசியலை விடவும் அரைத் தேசியக் கட்சியின் அரை நல்லிணக்க அரசியலைப் பற்றிப் பிடித்துப் பலப்படுத்துவதன் மூலம் நீண்ட எதிர்காலத்தில் தமிழ் எதிர்ப்பரசியலை முற்றிலுமாகக் காயடித்துவிடலாம் என்று அரசாங்கம் நம்புவதற்கு இடமுண்டு.
தமிழ் மென்தேசிய அரசியலை, அரை நல்லிணக்க அரசியலாக அல்லது இயன்றயளவுக்கு நல்லிணக்க அரசியலாக மாற்றக் கிடைக்கக் கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்துவதா இல்லையா என்பது அரசாங்கத்தின் முடிவுகளிற்தான் தங்கியிருக்கின்றது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை இலங்கைத் தீவில் தமிழ் எதிர்ப்பரசியலை ஆகக்கூடிய பட்சம் கையாளப்படத்தக்க ஒரு எல்லைக்குள்ளேயே வைத்திருக்கக் கிடைத்த ஒரு சந்தர்ப்பம் இது. தமிழ் மென்தேசியவாதிகளின் இந்த அழைப்பை அரசாங்கம் புறக்கணிக்குமாயிருந்தால் அதாவது சிங்கள கடுந்தேசியவாதிகளைத் திருப்திப்படுத்துவது என்று அரசாங்கம் முடிவெடுக்குமாயிருந்தால் தமிழ் மென்தேசியவாதிகளைத் தோற்கடிப்பது ஒரு பெரிய காரியம் அல்ல.ஆனால் அது தமிழ் எதிர்ப்பரசியலின் நியாயங்களை முன்னெப்பொழுதையும் விட பலப்படுத்தும் ஒரு முடிவாக அமையும்.
நந்திக் கடலில் புலிகள் இயக்கத்தைத் தோற்கடித்த ஒரு அரசாங்கம் மென்தேசியவாதிகளைச் சுலபமாகத் தோற்கடித்துவிடும். ஆனால், அந்த வெற்றி ஒரு நிரந்தரமான வெற்றியாக அமையாது. அது சிலசமயம் வெற்றி போலத்தோன்றும் ஒரு தோல்வியின் தொடக்கமாகக் காலப்போக்கில் மாறக்கூடும். அதாவது தமிழ் எதிர்ப்பரசியலின் எதிர்காலம் எனப்படுவது அரசாங்கத்தின் விவேகமற்ற முடிவுகளின் மீதே முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
26-07-2013