தமிழ் வாக்களிப்புப் பாரம்பரியம்

ஈழப்போருக்கு முற்பட்ட காலத்தில் நடந்த ஒரு சம்பவம் இது. அது ஒரு தேர்தல் காலம். பீற்றர் கெனமன் வடமராட்சியில் ஒரு தேர்தல் பிரசார மேடையில் உரையாற்றினார். மைதானம் முழுவதும் சனங்கள் திரளாகக் கூடியிருந்தார்கள். விசிலடியும், கைதட்டும் பிரமாதமாக இருந்தது. கூட்டம் முடிந்ததும் கெனமன் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொன்னார் ‘‘இம்முறை எமக்கு வடமராட்சியில் ஒரு சீற்றாவது கிடைக்கும்” என்று. ஆனால், தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருந்தன. பீற்றர் கெனமனுடைய வேட்பாளர் தோல்வியடைந்துவிட்டார். இச்சம்பவத்தின் பின் கெனமன் பின்வரும் தொனிப்படக் கருத்துத் தெரிவித்திருந்தார்…. ‘‘தமிழர்கள் எம்மை நன்கு உபசரித்து விருந்தோம்புவர்கள். தேர்தல் கூட்டங்களில் பெருக்கெடுப்பில் கலந்து கொண்டு நாம் செல்வதை ஆர்வத்துடன் கேட்பார்கள். விசிலடித்து, கைதட்டி உற்சாகமூட்டுவார்கள். ஆனால், வாக்களிப்பு என்று வரும்போது பெடரல் பார்ட்டிக்குத்தான் வாக்குப்போடுவார்கள்” என்று.

கெனமன் காலத்திலிருந்து இன்று வரையிலும் தமிழ் வாக்களிப்புப் பாரம்பரியத்தின் பெரும்போக்கெனப்படுவது இதுதான். அதாவது தமிழர்கள் சாதி பார்ப்பார்கள். சமயம் பார்பார்கள். பிரதேச வாதமும் கதைப்பார்கள். ஆனால், வாக்களிக்க வேண்டிவரும்போது பெரும்பாலானவர்கள் எப்பொழுதும் ஒரு பொது நிலைப்பாட்டிகே வாக்களிக்கிறார்கள். இங்கு பெரும்போக்கு என்ற வார்த்தைக்கு அதிக அழுத்தம் உண்டு. ஏனெனில், அதல்லாத வேறு உபபோக்குகளும் உண்டு.

தவிர ஒரு பொது நிலைப்பாட்டிற்கு வாக்களிப்பது என்பது ஒரு பொதுவான பெரும்போக்கு என்பதற்காக தமிழ் வாக்காளர்கள் சாதி, சமயம், பிரதேசம், இனசனம் மற்றும் தனிப்ப்பட்ட பிரதியுபகாரம் போன்றவற்றை முற்றாகக் கவனத்திலெடுப்பதில்லை என்று பொருள் கொள்ளத் தேவையில்லை. சாதி, மதம், ஊர், இனசனம் போன்றவை இரண்டாம் பட்சத் தெரிவுகளாக அமைய முடியும் அல்லது தாம் தெரிந்தெடுக்கும் பொது நிலைப்பாடு அல்லது ஓர் இலட்சியம் அல்லது கோட்பாட்டின் பிரதிநிதியாக வரும் ‘‘தங்களுடைய ஆளை” அவர்கள் தெரிவு செய்வதுண்டு என்றும் இதற்கு விளக்கமளிக்கலாம்.

ஆயுதப் போராட்டத்துக்கு முன்னரும் இதுதான் நிலை. ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னரும் இதுதான் நிலைமை. இதில் காலத்துக்குக் காலம் பெரும்போக்கான வாக்களிப்பின் விகிதம் ஏறவோ, இறங்கவோ கூடும்.

ballot voting vote box politics choice electionதமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாகிய பின், சிவராம் வீரகேசரி வாரப் பத்திரிகையில் எழுதிய ஓர் கட்டுரையில், தமிழ் மக்கள் கட்சிகளுக்கும், ஆட்களுக்கும் வாக்களிப்பதற்குப் பதிலாக கொள்கைகளிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால், சிவராம் அப்படி ஒரு பகிரங்க வேண்டுகோளை விடுவதற்கு முன்னரே தமிழ் வாக்களிப்பு பாரம்பரியம் எனப்படுவது அப்படித்தானிருந்து வந்துள்ளது. கடந்த சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலான தமிழ் வாக்களிப்புப் பாரம்பரியத்தின் பெரும் போக்கெனப்படுவது அதுதான். அதாவது ஒரு பொது நிலைப்பாட்டிற்கு வாக்களிப்பது. இப்பொழுது நிலைப்பாடானது காலத்துக்குக் காலம் வௌ;வேறு வார்த்தைகளில் வௌ;வேறு சின்னங்களிற்கூடாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ‘‘தமிழரசு” என்றும், ‘‘வட்டுக்கோட்டைத் தீரமானம்” என்றும் ‘‘தமிழர் விடுதலை” என்றும், ‘‘தமிழ்த் தேசியம்” என்றும் அது வௌ;வேறு சொற் தொகுதிகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

வௌ;வேறு கால கட்டங்களில் வௌ;வேறு சின்னங்கள் மேற்படி பொது நிலைப்பாட்டின் குறியீடுகளாகக் காட்சியளித்திருக்கின்றன. உதயசூரியன், வெளிச்சவீடு, வீடு… போன்ற சின்னங்கள் யாவும் மேற்படி பொது நிலைப்பாட்டின் குறியீடுகள்தான் – அதிலும் குறிப்பாக, ஐ.பி.கே.எவ். காலத்தில் ஈரோஸ் இயக்கமானது வெளிச்சவீடு சின்னத்தின் கீழ் சுயோட்சையாகப் போட்டியிட்டு வென்றதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ் அரசியல் வரலாற்றில் ஒரு சுயேட்சைக் குழு அத்தகைய வெற்றியைப் பெற்றது என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

ஐ.பி.கே.எவ். காலத்துத் தமிழ் மனோ நிலையை அந்த வெற்றி பெருமளவுக்குப் பிரதிபலித்தது எனலாம். மேற்படி தமிழ் மனோநிலை எனப்படுவது அதற்கு முன்பிருந்து வந்ததும் அதற்குப் பின்னரும் தொடர்ந்து வருவதுமாகிய ஒரு பொதுத் தமிழ் நிலைப்பாட்டின் பாற்பட்டதுதான்.

சரி, அந்தப் பொதுத் தமிழ் நிலைப்பாடு எனப்படுவது எது? திட்டவட்டமாக அது ஒரு இன அடையாள அரசியல் தான். தமிழர்கள் இனம், மொழி என்பன தொடர்பில் தமது கூட்டு அடையாளங்களை உறுதி;;ப்படுத்தும் விதத்தில் அத்தகைய ஒரு பொது நிலைப்பாட்டை ஆதரித்து வந்துள்ளார்கள். இன வன்முறைகள் தொடர்பாக எழுதிய ஜி.எச். பார்மர,; தார்சி விற்றாச்சி போன்றோர் சுட்டிக்காட்டிய ஓர் உளவியல் யதார்த்தம் அது. ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரும் அது இருந்தது. ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் அது இருக்கிறது. அதாவது, பார்மர் கூறியது போல நாடு உளவியல் ரீதியாக ஏற்கனவே, பிரிந்துதான் காணப்படுகிறது.

இக்கூட்டுத் தமிழ் உளவியலுக்குத் தலைமை தாங்க முற்படும் கட்சிக்கே தமிழர்கள் பெரும்போக்காக வாக்களித்து வந்துள்ளார்கள். இக்கூட்டுத்தமிழ் உளவியலைக் குறிக்கும் ஆகப் பிந்திய சொற் பிரயோகமே தமிழ்த் தேசியம் என்பதாகும்.

தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக உள்ளடக்கப்போதாமை காரணமாக மேற்படி பொதுத் தமிழ் நிலைப்பாட்டிற்கு வெளியிலிருக்கக் கூடிய நுண் அடுக்களான சாதி, சமயம், பிரதேசம் பால் அசமத்துவம் போன்றவற்றை இக்கட்டுரை கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. மேலும் குறிப்பாக, தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக உள்ளடக்கப் போதாமைகளின் விளைவாகத் தோன்றியதே முஸ்லிம் உபதேசியம் என்பதையும் இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது.

எனினும், எல்லாவித விமர்சனங்களிற்கும் அப்பால், கூட்டுத் தமிழ் உளவியலின் பாற்பட்ட ஒரு வாக்களிப்பு பாரம்பரியம் எனப்படுவது ஒப்பீட்டளவில் பெரும்போக்காக நிலவி வருகிறது என்பதன் அடிப்படையில் அப்பெரும்போக்கின் மீதான கவனக்குவிப்பே இன்று இக்கட்டுரையாகும்.

இத்தகைய ஒரு பின்னணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகியதிலிருந்து அதற்குக் கிடைத்துவரும் தேர்தல் வெற்றிகள் யாவும் மேற்படி கூட்டுத் தமிழ் உளவியலின் பாற்பட்டவைதான். அதாவது இன அடையாள வாக்குகள் அல்லது அரசுக்கு எதிரான வாக்குகள்தான். இந்த அடிப்படையில் வரப்போகும் மாகாண சபைத் தேர்தலின்போதும் மேற்படி கூட்டுத் தமிழ் உளவியலே கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்புக்களிற்கு அடிப்படையாக அமையும்.

இக்கட்டுரையானது மாகாண சபையை ஒரு தீர்வற்ற தீர்வாகவே பார்க்கிறது. எனினும் மேற்படி கூட்டுத் தமிழ் உளவியலின் பிரதிபலிப்பே தமிழ்த் தேசியம் என்பதின் அடிப்படையில், வரப்போகும் தேர்தலில் இக்கூட்டுத் தமிழ் உளவியல் வெளிப்பாட்டுக்கான வாய்ப்புகளைக் குறித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

கூட்டமைப்பின் வாக்கு வங்கியை மூன்று மூலக் கூறுகள் தீர்மானிக்கின்றன. முதலாவது மேற் சொன்ன கூட்டுத் தமிழ் உளவியல். இரண்டாவது, தற்காப்பு உணர்வுமிக்க தமிழ் நடுத்தர வர்க்கத்தின் ஆதரவு அதாவது பங்களிக்கத் தயாரற்ற தமிழ்த் தேசிய வாதிகளின் ஆதரவு. மூன்றாவது, தனித்தனிக் கட்சிகள், நபர்களுக்குரிய வாக்குகள். இது ஒப்பீட்டளவில் குறைவு.

இம்மூன்று மூலக் கூறுகளிற்குள்ளும் பின் சொன்ன இரண்டு வகைகளைச் சேர்ந்தவர்கள் அநேகமாக எப்பொழுதும் வாக்களிப்பில் கலந்து கொள்வார்கள். ஆனால், முதலாவதும் பெரும்போக்காயிருப்பதுமாகிய இன அடிப்படையிலான இன அடையாள வாக்குள் அல்லது அரசுக்குஎதிரான வாக்குகள் எனப்படுபவை உரிய விதத்தில் தூண்டப்பட்டு திரட்டப்பட்டாதவிடத்து வாக்களிப்பு விகிதம் குறைவாகவே இருக்கும்.

அண்மைத் தேர்தல்களில் தமிழ் மக்கள் ஒப்பீட்டளவில் குறைந்தளவு ஆர்வத்தையே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். வாக்களிப்பு விகிதம் குறையக் குறைய கூட்டமைப்பு எதிர்பார்க்கும் மக்கள் ஆணையின் மகிமையும் குறையும். பொதுவாக ஆசிய, ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க ஜனநாயகங்களில் குறைந்த விகித வாக்களிப்பு எனப்படுவது ஆளும் தரப்புக்கே சாதகமானது. கடந்த சில தசாப்தங்களில் சில ஆசிய ஆபிரிக்க நாடுகளில் வன்முறையுடன் கூடிய வாக்களிப்பு விகிதம் குறைந்த தேர்தலை நடாத்துவது என்பது ஒரு உத்தியாகவே பார்க்கப்பட்டது. அதாவது, ஆளும் தரப்பே வன்முறைகளை உருவாக்கி அதன் விளைவாக வாக்களிப்பு விகிதத்தைக் குறைத்து அதன் மூலம் தேர்தல் முடிவுகளைத் தமக்குச் சாதகமாகத் திருப்ப முடியும் என்பது ஏற்கனவே, வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கடந்த நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் பங்களாதேஷில் நடந்த சில தேர்தல்கள் தொடர்பில் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்டு. மேலும் இலங்கைத்தீவில் பிரேமதாஸவின் காலத்தில் நிகழ்ந்த தேர்தல்கள் தொடர்பிலும் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்டு. இலங்கைத்தீவில் அத்தகைய தூண்டப்பட்ட வன்முறை கலந்த குறைந்த வாக்களிப்பு விகிதத்தைக்கொண்ட தேர்தல்களிற்கான வாய்ப்புக்கள் முன்னைய காலங்களோடு ஒப்பீடுகையில், இப்பொழுது குறைவு. எனினும் கடைசியாக நடந்த உள்ளுராட்சி சபைகளிற்கான தேர்தலின்போது நிகழ்ந்த சில வன்முறைகள் கூட்டமைப்புக்குச் சாதகமான ஓர் அரச எதிர்ப்பலையை உருவாக்கியதாக கருதும் விமர்சகர்களும் உண்டு.

இத்தகைய ஓர் பின்னணியில் வரப்போகும் மாகாண சபைத் தேர்தலில் ஓர் இன அலையானது இரண்டு விதமாகத் தோற்றுவிக்கப்படலாம். முதலாவது கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமும் அதன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் பரப்புரை உத்திகளும், இரண்டாவது கூட்டமைப்பிற்கு எதிராக ஆளும் தரப்பிடமிருந்து வரக்கூடிய நெருக்கடிகள். இத்தகைய நெருக்கடிகள் வாக்காளர் மத்தியில் ஒருவித திடீர் அரச எதிர்பலையை உருவாக்கக்கூடும்.

முதலாவதாக, கூட்டமைப்பின் பிரசார உத்திகள் மூலம் தோற்றுவிக்கப்படக்கூடிய ஓர் வாக்களிப்பு அலை பற்றியது. வன்தேசியத் தடத்திலிருந்து விலகி மென்தேசியத்திற்குத் தலைமை தாங்க முற்படும் கூட்டமைப்பானது எத்தகைய தெளிவாக இறுதி இலங்கை முன்வைக்கப்போகிறது என்பது முக்கியமானது. தலைமைத்துவம் தென்தேசியவாதிகளின் பிடியில் இருந்தாலும் ஏனைய வேட்பாளர்களைப் பொறுத்தவரை வன்தேசியத் தடத்துடன் தொடர்புடையவர்களும் உண்டு. இது ஒரு வாக்குவேட்டை உத்திதான். ஆனால், இந்த உத்தி மட்டும் ஓர் அலையைத் தோற்றுவிக்க உதவுமா?

பேரழிவுக்கும், பெரும் பின்னடைவுக்கும் பின்னரான ஒரு காலகட்டத்தில் கூட்டுக் காயங்களினாலும், கூட்டு மன வடுக்களினாலும் துன்புறும் ஒரு மக்கள் திரளிற்கு கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல ஓர் அரசியலை மென்தேசியவாதிகளால் முன்னெடுக்க முடியுமா? அதற்குத் தேவையான திடசித்தமும் தீர்க்கதரிசனமும் ஜனவசியமும் மிக்க தலைமைத்துவத்தை மென்தேசியவாதிகளால் வழங்க முடியுமா?

இவ்விதமாக கூட்டமைப்பானது இன அடையாள வாக்களிப்பு பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக ஓர் அலையைத்தோற்றுவிக்கத் தவறின் வாக்களிப் விகிதம் விமரிசையாக இருக்காது. அதேசமயம் ஆளும் தரப்பிடமிருந்து வரக்கூடிய நெருக்கடிகள் குறைவாக இருக்கமாயிருந்தால் அரசுக்கு எதிரான பெருமெடுப்பிலான ஒரு எதிர்ப்பு அலைக்குரிய வாய்ப்புக்களும் குறைவாகவே இருக்கும். எனவே, இப்போது கூட்டமைப்பின் முன்னுள்ள பிரச்சினையெல்லாம் வாக்களிப்பு விகிதத்தை அதாவது மக்களின் பங்களிப்பை அதிகரிப்பது எப்படி என்பதே.

அப்படி, மக்களின் பங்களிப்பு அதிகரிக்கும் போது தமிழ் ஜனநாயகச் சூழல் ஒப்பீட்டளவில் மேலும் பலமடையும். மென்தேசிய வாதிகளுக்கும் வெளியுலகிற்கு எடுத்துக்காட்டவல்ல ஒரு வலிமையான மக்கள் ஆணை கிடைக்கும். தமிழ் மக்கள் ஏற்கனவே, பல தடவைகள் மிதவாதிகளுக்கு அத்தகைய நிராகரிக்கப்படவியலாத மகத்தான மக்கள் ஆணையை வழங்கியிருக்கிறார்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலிருந்து இது தொடங்குகிறது. அதாவது மக்கள் எப்பொழுதும் தெளிவாகத்தான் சிந்திக்கிறார்கள். ஆனால், அரசியல்வாதிகள்?

02-08-2013

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *