மிதவாதிகளும், தமிழ் வாக்காளர்களும்

கடந்த வாரம் நானெழுதிய கட்டுரை தொடர்பில் சில நண்பர்கள் பின்வரும் கேள்விகளைக் கேட்டிருந்தார்கள். முதலாவது- கடந்த அறுபதாண்டு காலமாகத் தமிழ் வாக்காளர்கள் தெளிவாகச் சிந்தித்து முடிவெடுத்துள்ளார்கள் என்பது சரியா? அல்லது அவர்கள் கற்றிந்த பாடங்களின் அடிப்படையில் தெளிவாகச் சிந்திப்பதற்கு அரசியல்வாதிகளும், இயக்கத் தலைவர்களும் அபிப்பிராயத்தை உருவாக்கவல்ல படித்த நடுத்தர வர்க்கமும், குறிப்பாக, ஊடகங்களும், ஆய்வாளர்களும் போதியளவு உதவவில்லையா?

இரண்டாவது, கடந்த அறுபதாண்டு காலத் தமிழ்த் தேசிய அரசியலாற்பெற்ற வெற்றிகள் எவையெவை? இன்றுள்ள தேக்க நிலைக்குப் பொறுப்பேற்று இறந்த காலத்தைப் பிரேத பரிசோதனை செய்யத் தமிழ்த் தலைவர்களும், ஊடகங்களும், படித்த நடுத்தர வர்க்கமும் தயாரா?

மூன்றாவது, இவ்விதம் பிரேத பரிசோதனை மூலம் பெற்றுக்கொண்ட படிப்பினைகளின் அடிப்படையில் புதிதாகச் சிந்திக்க வேண்டிய பொறுப்புத் தமிழ்த் தலைவர்களுக்கு இல்லையா?
நாலாவது, கடந்த நான்காண்டுகளாகக் கூட்டமைப்பில் ஏற்பட்டுவரும் பண்பு மாற்றங்கள் அப்படியொரு புதிய சிந்தனையின் விளைவா?

இக்கேள்விகளுக்குரிய விடைகளைக் கண்டுபிடிக்கத் தேவையான ஒரு தொடர் விவாத வெளியைத் திறப்பதே இன்று இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முதலில் தமிழ் வாக்காளிப்புப் பாரம்பரியத்தைத் தீர்மானிக்கும் கூட்டு உளவியலின் வரலாற்றுத் தொடர்ச்சியைப் பார்க்கலாம்.

இன முரண்பாடுகள் கூர்மையுற முன்பு தமிழ் அரசியலில் இடதுசாரிகளிற்கு ஒரு பலமான தளம் இருந்தது. தென்னிலங்கையில் உள்ள இரு பிரதான கட்சிகளிற்கும் இங்கு ஓரளவுக்கு வாக்கு வங்கிகள் இருந்தன. ஆனால், இன வன்முறைகளிற்குப் பின்னரான காலங்களில் தமிழ் வாக்காளரின் உளவியலை கூட்டுக் காயங்களும், கூட்டு மனவடுக்களுமே பெரிதும் வடிவமைத்தன. கடந்த சுமார் அறுபதாண்டு காலத் தமிழ் உளவியலைப் பொறுத்த வரை பின் வந்த துன்பம் முன் நிகழ்ந்த துன்பத்தை விடவும் அளவிற் பெரியதாகவும், ஆறாக் காயமாகவும் அதனாலேயே மனவடுவாகவும் மாறியது.

ஆரம்பத்தில் தென்னிலங்கையில் ஏற்பட்ட தமிழர்களிற்கு எதிரான வன்முறைகளே பெரிய காயங்களாகத் தோன்றின. ஆனால், யாழ். நூலக எரிப்பு அதைவிடப் பெரிய காயமாகவும், ஆறாத வடுவாகவும் உருவாக்கியது. 83 இன வன்முறையானது நூலக எரிப்பை விடவும் பெரிய துன்பமாகக் காணப்பட்டது. அதன் தொடர் விளைவாக யுத்தம் தீவிரமடைந்தது. யுத்தம் இனக் கலவரங்களை விடவும் பயங்கரமானதாகக் காணப்பட்டது. ஒவ்வொரு கட்ட ஈழப் போரின்போதும் முந்திய கட்டத்தை விடவும் அடுத்த கட்டம் பயங்கரமானதாகவும், அழிவுகரமானதாகவுமிருந்தது. முதலாம் கட்ட ஈழப் போரில் பேரிடப்பெயர்வுகள் இருக்கவில்லை. ஆனால், மூன்றாம் கட்டப் ஈழப்போரானது பேரிடப்பெயர்வுகளைச் கொண்டு வந்தது. பேரிடப்பெயர்வுகள் அவற்றின் தீவிர நிலைகளிற் தொடர் பேரிடப்பெயர்வுகளாக மாறின. (Multiple Displacements) தொடர் பேரிடப்பெயர்வுகள் மனிதர்களை வேரற்றவர்களாக்குகின்றன. அவர்களுடைய சேமிப்பெலாம் கரைந்து நிவாரணத்தில் தங்கியிருக்கும் ஒரு நிலை தோன்றுகிறது. அதாவது, தொடர் பேரிடப்பெயர்வெனப்படுவது மனித நாகரிகத்தைப் பொறுத்த வரை ஒரு பின்னோக்கிய சறுக்கல்தான். கூர்ப்பிலிருந்து பின்வாங்குதல்தான். பௌதீக அர்த்தத்தில் ஏறக்குறைய ஒரு காட்டுமிரண்டியாகும் ஒரு நிலைதான். உளவியல் அர்த்தத்தில் நவீன கல்வியும், நவீன மனப்பாங்குமுடைய ஒருவர் வாழ்தலின் அர்த்தத்தில் காட்டுமிரண்டியாகக் காணப்படும் ஒரு நிலை இது. இத்தகைய பேரிடப்பெயர்வுகளோடு ஒப்பிடுகையில் இனக் கலவரங்களோ, நூலக எரிப்போ, பெரியவை அல்ல. குறிப்பாக, இரண்டு பேரிடப்பெயர்வுகள் துருத்திக் கொண்டு தெரிபவை. முதலாவது 1990இல் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வலிந்து இடம்பெயர்;க்கப்பட்டமை. இரண்டாவது 1995இல் நிகழ்ந்த யாழ்ப்பாணப் பேரிடப்பெயர்வு. இவையிரண்டும் ஐந்தாண்டுகால
இடைவெளியில் ஏறக்குறைய ஓரே காலப்பகுதியில்-ஒக்ரோபர்30இல்-நிகழ்ந்தவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

அதன் பின் நாலாம் கட்ட ஈழப் போரின் தொடர் இடப்பெயர்வுகள் வந்தன. கிழக்கில் மூதூர் சம்பூரிலிருந்து இது தொடங்குகிறது. வடக்கில் மன்னார் மாவட்டம் முள்ளிக்குளத்திலிருந்து பெருமெடுப்பில் தொடங்குகிறது. தொடர் பேரிடப்பெயர்வுகளில் அளவாற் பெரியவையும் சாவுக்கேதானவையும் இக்கால கட்டத்திற்குரியவைதான். வாகரையிலிருந்து ஜனங்கள் பிதுக்கி எடுக்கப்பட்டதைப் போலவே முள்ளிவாய்க்காலில் இருந்தும் பிதுக்கி எடுக்கப்பட்டார்கள். வாகரையோடு ஒப்பிடுகையில் முள்ளிவாய்க்கால் அளவாற் பெரியதும், பயங்கரமானதும் ஆகும். இவ்விதம் சனங்கள் பிதுக்கி எடுக்கப்பட்டபோது ஏற்பட்ட கூட்டுக் காயங்களும், கூட்டு மனவடுக்களும் முன்னெப்பொழுதும் ஏற்பட்டிராத அளவிற்குப் பெரியவையாகவும், சராசரி மனித மனதின் தாங்கு திறணிற்கு அப்பாற்பட்டவையாகவுமிருந்தன. இனி அப்படியொரு அனுபவம் வராது எனுமளவுக்குச் சனங்கள் சாவினால் சப்பித் துப்பப்பட்டார்கள். அதாவது, கடைசித் துன்பம் முன்னைய எல்லாத் துன்பங்களை விடவும் கொடியதாயிருந்தது. இதைவிடப் பெரிய ஒரு துன்பம் இனித் தமிழர்களிற்கு வருவதற்கில்லை எனுமளவிற்கு அது ஒரு கூட்டு மனவடுவாக மாறியிருக்கிறது.

இத்தகையதொரு துன்பியல் வரலாற்றினால் வடிவமைக்கப்பட்டதே தமிழ் மக்களின் கூட்டு உளவியல் ஆகும். பெரும்பாலான தமிழ் வாக்காளர்கள் இக்கூட்டு உளவியலைத்தான் பிரதிபலிக்கின்றார்கள்.

ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த சுமார் நான்கு ஆண்டு காலப் பகுதியிலும் தமிழர்களின் கூட்டு உளவியலை ஆற்றுப்படுத்தக் கிடைத்த சந்தர்ப்பத்தை அரசாங்கம் அநேகமாகத் தவறவிட்டுவிட்டது.

ஆயுத மோதல்களிற்குப் பின்னரான நல்லிணக்க முயற்சிகள் பொதுவாக இரு பிரதான தளங்களில் முன்னெடுக்கப்படுவதுண்டு. முதலாவது அபிவிருத்தியூடாக நல்லிணக்கம். இரண்டாவது, நீதியின் மீது கட்டியெழுப்பப்படும் நல்லிணக்கம். அதாவது உண்மையை வெளிக்கொண்டு வருவதன் மூலம் நிலைநாட்டப்படும் நீதியின் மீது கட்டியெழுப்பப்படும் நல்லிணக்கம்.

thinkஇலங்கை அரசாங்கம் இதில் முதலாவதைத்தான் முன்னெடுத்து வருகிறது. வீதிகளை வேகமாகத் திருத்துவது, உட்கட்டுமான அபிவிருத்தி, தொலைத்தொடர்பை வேகமாக விஸ்தரிப்பது, முதலீட்டை ஊக்குவிப்பது போன்றவற்றின் மூலம் வடகிழக்கை நாட்டின் பிற பாகங்களிலிருந்து பிரிக்கப்படவியலாத ஓரலகாக மாற்றுவதே இதன் இறுதி இலக்காகும். ஆனால், கடந்த அறுபதாண்டு கால கூட்டுத் தமிழ் உளவியலைப் பொறுத்த வரை நீதியின் மீது கட்டியெழுப்பப்படும் நல்லிணக்க முயற்சிகளே தமிழ் உளவியலில் திருப்பகரமான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும். இனமுரண்பாட்டுக் களங்களில் முன்னெடுக்கப்படும் எல்லா நல்லிணக்க முயற்சிகளிற்கும் இது பொருந்தும்.

ஆனால், வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கும் ஒரு அரசாங்கத்தால் இதை முன்னெடுப்பது கஷ்டம். இது காரணமாகவே மே 19இற்குப் பின்னரான கூட்டுத் தமிழ் உளவியலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கத்தால் முடியாதிருக்கிறது.

எனவே, கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ் வாக்காளர்களிற் பெரும்பகுதியினரின் கூட்டு உளவியலைத் தீர்மானித்தது தொடர்ச்சியாகப் பதவிக்கு வந்த அரசாங்கங்களே. அதாவது, நெகிழ்ச்சியற்ற ஓர் எதிர்த்தரப்புக்கு எதிராக நன்கு ஸ்தாபிக்கப்பட்டுவிட்ட ஓர் இன அடையாள அரசியல் அது. தமிழ்த் தலைமைகள் இக்கூட்டு உளவியலைக் கையாண்டே பதவிக்கு வந்தன அல்லது அதிகாரத்தைப் பெற்றன. அதாவது தமிழ்த் தலைமைகள் இக்கூட்டு உளவியலைப் பிரதிபலித்தன. அதற்குத் தலைமை தாங்கின எனலாம்.

வழமையான பாரம்பரிய மிதவாதக் கட்சிகள் எப்பொழுதும் சமுகத்தை அதன் நன்மை தீமைகளோடு பிரதிபலிப்பவைதான். ஆனால், உன்னதமான முன்னுதாரணம் மிக்க தலைவர்களும், கட்சிகளும், இயக்கங்களும் குறிப்பிட்ட சமுகத்தைப் பிரதிபலிப்பதற்குமப்பால் அதை ஓர் உன்னதமான இறுதி இலக்கை நோக்கி வழி நடாத்திச் செல்கின்றன.
இந்த விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் கடந்த அறுபதாண்டு காலத் தமிழ் மிதவாதப் பாரம்பரியமானது தமிழ் வாக்காளர் பாரம்பரியத்தை பிரதிபலித்திருக்கிறதா? அல்லது அதை ஒரு மகத்தான இறுதி இலக்கை நோக்கி வெற்றிகரமாகச் செலுத்தி வந்திருக்கிறதா?
தமிழ் மிதவாதம் அஷிம்சைப் போராட்டத்தில் தோல்வியுற்றதன் விவைவே ஆயுதப்போராட்டம் என்ற கருத்து ஏற்புடையதல்ல. தமிழ் மிதவாதிகள் அஷிம்சையை ஒரு போராட்ட உத்தியாகவே பாவித்தார்கள். ஆனால், அது ஒரு போராட்ட உத்தி அல்ல. மாறாக, அது ஒரு வாழ்க்கை முறை. மேலும் அது சாகப்பயந்தவரின் போராட்ட உத்தியுமல்ல. மாறாக அது சாகத் துணிந்தவரின் வாழ்க்கை முறையாகும். எனவே, தமிழ் மிதவாதத்தின் அஷிம்சைப் போராட்டமே ஒரு முதற் கோணல்தான்.

வட்டுக்கோட்டைத் தீர்மானமானது அது வெளிவந்த காலகட்டத்தை வைத்துப் பார்க்கும்போது ஒப்பீட்டளவில் முற்போக்கானது. தமிழ்த் தேசியம் என்ற கருத்துருவாக்கம் துலக்கமாக வளர்ச்சியுற்றிராத ஒரு காலகட்டம் அது. எனினும், அதன் உள்ளடக்கத்தைப் பொறுத்துக் கூறின் அது தேசியத் தன்மை மிக்கதொரு ஆவணம்தான். பால் அசமத்துவம் போன்ற இன்னோரன்ன விவகாரங்களில் அதில் அழுத்தங்கள் இருக்கவில்லை என்ற்போதிலும்கூட அது ஒரு தொடக்கக் காலம் என்று பார்க்கும் போதும் அதற்குரிய முக்கியத்துவம் தெரியவரும்.
ஆனால், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்வைத்து மக்கள் ஆணையைப் பெற்ற மிதவாதிகள் அந்த மக்கள் ஆணையை அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்லத் திராணியற்றவர்களாகக் காணப்பட்டார்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலிருந்து தொடக்கியவர்கள் மாவட்ட அபிவிருத்தி சபைக்கு கிழிறங்கியபோது மக்கள் ஆணை திட்டவட்டமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டது.

தமிழ் மிதவாதத்தின் கையாலாகாத்தனம் அல்லது கோழைத்தனம் அல்லது சந்தர்ப்பவாதம் என்பவற்றின் விளைவாக தமிழ் இளைஞர்கள் மிதவாதிகளைத் தாண்டிச் செல்லத் தொடங்கினார்கள். தமிழ் மிதவாதத்தின் ஒரு கிளையாகத் தோன்றிய ஆயுதப் போராட்டம் ஒரு கட்டத்தில் மிதவாதிகளை ஓரங்கட்டி அரங்கின் பின்னணிககுத் தள்ளியது. அதன் பின் ஆயுதப்போராட்டத்தின் விளைவாக இலங்கை – இந்திய உடன்படிக்கை உருவாகியது. மாகாண சபை எனப்படுவது ஆயுதப்போராட்டத்தின் ஒரு நேரடி விளைவே என்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதில் தமிழ் மிதவாதிகளை விடவும் இயக்கங்களிற்கே உரிமை அதிகம் உண்டு என்றுமவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இலங்கை – இந்திய உடன்படிக்கையின் விளைவாக மிதவாதப் பாரம்பரியத்தில் ஒரு புதிய கிளை தோன்றியது. இயக்கங்களிலிருந்து மிதவாதிகளாக மாறியவர்களின் கிளை ஓட்டம் அது. இக்கிளை ஓட்டமும்;, பாரம்பரிய மிதவாதிகளும் இணைந்து ஒரு கட்டத்தில் ஆயுதப் போராட்டத்தின் மேலாண்மையை ஏற்றுக்கொள்வது என்று முடிவெடுத்தபோது தோன்றியதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி வடிவம் எனலாம்.எந்த மிதவாதத்தின் கிளை ஓட்டமாக தமிழ் இயக்கங்கள் உருவாகினவோ அந்த மிதவாதத்தை அவை ஒரு கட்டத்தில் நிராகரித்தன. அல்லது பின் தள்ளின. அல்லது சுட்டுத் தள்ளின. ஆனால், கூட்டமைப்பின் உருவாக்கத்தோடு பாரம்பரிய மிதவாதிகளும் புதிய தலைமுறை மிதவாதிகளும் ஆயுதப் போராட்டமும் ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படும் ஒரு நிலை தோன்றியது. இப்படிப் பார்த்தால் கடந்த சுமார் அறுபதாண்டு காலத் தமிழ் அரசியலில் உருவாகிய ஒப்பீட்டளவில் சாம்பல் பண்பு அதிகமுடைய ஓர் ஐக்கிய அமைப்பாக கூட்டமைப்பைக் கூறலாம். இதற்கு முன்பு 1980களில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஈ.என்.எல்.எவ். என்ற அமைப்பையும் இங்கு குறிப்பிடலாம். ஆனாலது முழுக்க முழுக்க இயக்கங்களின் கூட்டு ஆகும். அதில் மிதவாதிகளிற்கு இடமிருக்கவில்லை.

கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின் அதற்கு முதன் முதலாக மக்கள் வழங்கிய ஆணையானது ஏறக்குறைய வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வழங்கப்பட்ட ஆணையின் பிந்திய வடிவம்தான். ஆனால், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்போது முஸ்லிம் உபதேசியம் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை.

இப்பொழுது மறுபடியும் கூட்டமைப்பு மக்களிடம் அணை கேட்டு வருகிறது. ஆனால், இம்முறை வருவது மே 18 இற்கு முன்பிருந்த கூட்டமைப்பு அல்ல. அதில் நிகழ்ந்திருக்கக் கூடிய பண்பு மாற்றத்தைக் கருதிக் கூறின் இது மே 18 இற்குப் பிந்திய ஒரு கூட்டமைப்பு எனலாம். அது எத்தகைய ஒரு நிகழ்ச்சி நிரலை முன்வைத்து மக்கள் ஆணையைக் கேட்கப்போகிறது என்பதை அதனுடைய தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவந்த பின்னரே கூறமுடியும்.
கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ் மக்கள் கண்டிருக்கக்கூடிய எத்தனையோ தேர்தல் விஞ்ஞாபனங்கள் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டுவிட்டன. அவை அவ்வாறு வீசப்படக் காரணம் தமிழ் மிதவாதத்தின் கையாலாகாத்தனமே. செயலுருப்பெறாத எல்லாத் தேர்தல் விஞ்ஞாபனங்களும் வரலாற்றின் குப்பைத்தொட்டிக்கே போய் சேர்க்கின்றன. ஆனால், தமிழ் மிதவாதப் பாரம்பரியத்தில் தேர்தல் விஞ்ஞாபனங்கள் தான் குப்பைத் தொட்டிக்குள் வீசப்படுகின்றன. மிதவாதிகள் அல்ல. இது தமிழ் வாக்காளர்களின் மன்னிக்கும் இயல்பு காரணமாகவோ அல்லது அவர்களுடைய மறதி நோய் காரணமாகவோ அல்ல. அதைவிட பலமான ஒரு காரணம் உண்டு. அதுதான் இன அடையாள அரசியல். அல்லது இன அடையாள அரசியலின் பாற்பட்ட அரசிற்கு எதிரான அரசியல். இந்த எதிர்ப்பு அரசியல் பாரம்பரியத்தில் தமிழ்மிதவாதிகளின் கையாலாகாத்தனம் துருத்திக்கொண்டு தெரிவதில்லை.
கடந்த சுமார் அறுபதாண்டு கால அரசியலில் சனங்களை வாக்கு வங்கிகளாகப் பார்த்த மிதவாதிகளும் சரி, யுத்த எந்திரத்திற்கு ஆட்சேர்க்கும் தளமாகப் பார்த்த இயக்கங்களும் சரி எல்லாருடைய தவறுகளுக்குமாக வதைபட்ட இந்தச் சனங்களை எந்தளவு தூரத்திற்கு அரசியல் மயப்படுத்தியுள்ளார்கள்?

வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வாக்களித்த பலர் இப்பொழுது உயிருடன் இல்லை. அல்லது முதுமையடைந்துவிட்டார்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்குப் பின்னர் பிறந்த பிள்ளைகளும், யூலை 83 இற்குப் பின்னர் பிறந்த பிள்ளைகளும்கூட போருக்குச்சென்று இறந்துவிட்டார்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வாக்குக் கேட்டு வந்தவர்களே மாவட்ட அபிவிருத்தி சபைக்காகவும் வாக்குக் கேட்டு வந்ததை நினைவு கூரத்தக்க பலரும் இப்பொழுது இறந்துபோய்விட்டார்கள். அல்லது முதுமையடைந்துவிட்டார்கள். ஐ.பி.கே.எவ். காலத்தில் வெளிச்ச வீட்டுக்கு வாக்களித்த பலரும் பின்னாளில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டவுடன் நிகழ்ந்த தேர்தலில் அதே மாறாத உற்சாகத்தோடு சென்று வாக்களித்தார்கள்.
வட்டுக்கோட்டைத் தீர்மானித்திற்கு வாக்களித்த மக்கள் வெளிச்ச வீட்டுக்கு வாக்களித்தபோது அதிலோர் அர்த்தமிருந்தது. தொடர்ச்சியுமிருந்தது. அதன்பின் ரணில் – பிரபா உடன்படிக்கைக் காலத்தில் திரண்டு சென்று வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்தபோதும் அதற்கோர் அர்;த்தமிருந்தது. தொடர்ச்சியிருந்தது.

ஆனால், இப்பொழுது பிரிக்கப்பட்ட ஒரு மாகாணத்திற்காக, தீர்வற்ற ஒரு தீர்விற்காக, வழுவழுத்த ஓர் எதிர்ப்பு அரசியலிற்காக வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறது. யார் யாரோ விட்ட தவறுகளுக்காக வதைபட்ட மக்கள், தலைப்பிள்ளைகளைக் கொடுத்த மக்கள், இம்முறை என்ன முடிவெடுப்பார்கள்?

பழகிய சின்னம், பழகிய முகங்கள், பழகிய அதே வீரவசனங்கள் என்பவற்றின் பின்னே சென்று ஒரு பழக்க தோஷம் போல வாக்களிப்பார்களா? அல்லது கடைசியாக நடந்த தேர்தலின்போது பெரியளவு ஆர்வமின்றி குறைந்தளவு விகிதம் வாக்களித்ததுபோல சலிப்புடன் விலகி நிற்பார்களா?

09-08-2013

Related Articles

1 Comment

Avarage Rating:
  • 0 / 10
  • இளங்கதிர் , 14/08/2013 @ 5:39 AM

    வரவேற்கத்தக்க ஒரு அலசல் ஆகும். தமிழ் மிதவாதிகளின் மிதவாத தனத்திற்கு மக்கள் சவுக்கடி கொடுக்கவேண்டும் என்ற கருத்தை வெளிப்படையாக சொல்லாமல் சொன்னதுபோல் உள்ளது. நன்றி.

    உங்கள் மூன்று கேள்விகளில் முதலாவது கேள்வியை மட்டும் அலசிவிட்டு மற்ற இரு கேள்விகளையும் விட்டுவிட்டது ஒரு முழுமையான அலசலை எதிர்பார்த்து வரும் என்போன்ற வாசகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும் என நினைக்கிறேன்.

    அல்லது உங்களையும் சிலர் களுவேற்றி விடுவார்கள் என்ற அச்ச உணர்வில் விட்டுவிட்டீர்களோ தெரியாது… எதற்கும் நன்றி… வணக்கம்….த.தே.கூ திரை மூடிதிறக்குமா?????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *