தமிழர் தாயகப் பகுதிகளில் அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறைகள் இன்னும் இரண்டு மூன்று மாதங்களிற்குள் முடிவுக்குக் கொண்டுவரப்படாவிட்டால் தமிழ் மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவிலான அறவழிப் போராட்டத்தை கூட்டமைப்பு முன்னெடுக்கும் என்று எச்சரித்துள்ளார் சம்பந்தர்.
ஜப்பானின் சிறப்புத்தூதுவர் யசுசி அகாசி அண்மையில் 23ஆவது தடவையாக இலங்கைக்கு வந்தபோது அவரைச் சந்தித்த சம்பந்தர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்.
இவ் அறவழிப்போராட்டத்தை வேறு எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் அகாசியிடம் கூறியிருக்கிறார்.
சம்பந்தரோ அல்லது கூட்டமைப்பின் ஏனைய முக்கியஸ்தர்களோ இப்படிக் கூறுவது இது தான் முதற் தடவையல்ல. கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக அவர்கள் இப்படிப் பல தடவை கூறி வந்திருக்கிறார்கள். செயலுக்குப் போகாத அந்த வீரப்பிரகடனங்கள் யாவும் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டுவிட்டன. இம்முறையும் அதுதான் நடக்கும். இனிமேலும் அது தான் நடக்கும். பூமியிலே சூரியனுக்குக் கீழே நூதனமானது எதுவுமே இல்லை.இதை இப்படி எழுதுவதற்கு மூன்று பிரதான காரணங்கள் உண்டு. அவையவான,
01. ஈழத்தமிழர்களின் சத்தியாக்கிரகப் போராட்டப் பாரம்பரியம் எனப்படுவது ஒப்பீட்டளவில் பலவீனமானது என்பது.
02. கூட்டமைப்பின் செயற்பாட்டு ஒழுக்கம் அதுவல்ல என்பது.
03. உலகம் பூராகவும், வன்முறையற்ற வெகுசனப் போராட்டங்கள் தொடர்பில் உலகளாவிய ஒரு புதிய கோட்பாட்டு அடித்தளம் இன்னமும் உருவாக்கப்படவில்லை என்பது.
இவை மூன்றையும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
முதலாவது, ஈழத்தமிழர்களின் சத்தியாக்கிரப் பாரம்பரியம் பற்றியது.
பொதுவாக ஒரு நம்பிக்கை உண்டு. ஈழத்தமிழர்கள் அஹிம்சை வழிகளில் போராடித் தோற்றததால் தான் ஆயுத வழிகளில் இறங்கினார்கள் என்று.
ஆனாலிது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகும். தமிழரசுக் கட்சியின் சத்தியாக்கிரகப் போராட்டம் பற்றி அதன் கொள்ளவுக்கு மீறிய ஒரு முக்கியத்துவம் தரப்படுகின்றது என்பதை அப்போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் பின்னாளில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களிற்கு முன்பு இக்கட்டுரையாசிரியருடன் உரையாடிய மூத்த சத்தியாக்கிரகி ஒருவர் பின்வருமாறு கூறினார். ‘‘இன்று இந்த ஆயுதப் போராட்டத்தில் தமது உயிர்களை இழக்கத் தயாராக வந்திருக்கும் இளைஞர்களைப்போல குறைந்தது ஐநூறு பேர்களாவது அப்பொழுது எங்களுடனிலிருந்திருந்தால் சத்தியாக்கிரகம் வென்றிருக்கும்;” என்று. சத்தியாக்கிரகிகள் உயிர்த்தியாகத்திற்கு முழு அளவிற் தயாராக இருக்கவில்லை என்ற பொருள்படவே அவர் அவ்வாறு கூறினார்.
அதுதான் உண்மை. ஈழத்தமிழ் அரசியல் அரங்கில் அஹிம்சைப் போராட்டம் எனப்படுவது ஒரு போராட்ட உத்தியாகத் தான் பின்பற்றப்பட்டது. ஆனால், அது ஒரு போராட்ட உத்தி அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. என்றபடியால்தான் காந்தியால் ‘‘அஹிம்சை என்பது சாகப்பயந்தவரின் ஆயுதம் அல்ல அது சாகத்துணிந்தவரின் ஆயுதம்” என்று சொல்ல முடிந்தது. ஈழத் தமிழ் மிதவாதிகளில் எத்தனை பேரால் அப்படிச் சொல்ல முடியும்?
அஹிம்சையை, காந்தியை, சத்தியாக்கிரகத்தை அவற்றுக்கேயான ஆழத்துடன் விளங்கிவைத்திருந்த தமிழ் மிதவாதிகளை அரிதாகவே காணமுடியும். தேசியத்தைப் போலவே சத்தியாக்கிரகமும் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களால் உரிய பொருளில் விளங்கிக் கொள்ளப்படவேயில்லை. காந்தியைச் சரியாக விளங்கிக்கொள்ளாத ஒரு மிதவாதப் பாரம்பரியத்தில்தான் செல்வநாயகம் ஈழத்துக்காந்தி என்று அழைக்கப்பட்டார்.
ஈழத்துச் சிந்தனைப் பரப்பில் காந்தியை அவருடைய ஆன்மீக உள்ளடக்கத்திற்கூடாக புரிந்துகொண்டவர்கள் ஆன்மீகவாதியும், சிந்தனையாளருமாகிய மு. தளயசிங்கம் போன்ற மிகச் சிறிய தொகையினரே.
எனவே, மிகப் பலவீனமான ஒரு சத்தியாகக்கிரகப் பாரம்பரியமே ஈழத்தமிர்களிடம் உண்டு. அது சத்தியாகிரகத்தை ஒரு போராட்ட உத்தியாக பயன்படுத்திய ஒரு பாரம்பரியம்தான். அங்கே சத்தியாக்கிரகம் எனப்படுவது. சாகத்துணிந்தவரின் ஆயுதமாக அல்ல. சாகப் பயந்தவர்கள் போய்ப் பதுங்கும் ஒரு போராட்ட உத்தியாகவே அதிகபட்சம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது.
இது காரணமாகவே சத்தியாக்கிரகப் போராட்டத்தின் ஒரு கட்டத்தில் அதைத் தொடர முடியாது என்ற ஒரு நிலை தோன்றியபோது அதை அரசாங்கம் தலையிட்டுக் குளப்பும் விதத்தில் அரசாங்கத்தைத் தூண்டி ஆத்திரமூட்டும் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சில விமர்சனங்கள் எழுந்தன.
இப்பிடிப் பார்த்தால், இலங்கைத் தீவில் அஹிம்சா மூர்த்தியான புத்தரின் போதனைகளை சிங்களத் தலைவர்கள் விளங்கிக்கொள்ளவே இல்லை. அதேசமயம், தமிழ் மிதவாதிகள் அஹிம்சையிலிருந்து கிளைத்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை சரியாக விளங்கிக்கொள்ளவில்லை. ஆக மொத்தம் இலங்கைத்தீவில் ஒடுக்கும் இனம், ஒடுக்கப்படும் இனம் இரண்டுமே புத்தரின் போதனைகளை, வாழ்க்கை முறையை ஏதோ ஒருவிதத்தில் பிழையாக விளங்கிக்கொண்டவைதான்.
எனவே, ஈழத்தமிர்களின் அஹிம்சைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதாற்தான் ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற்றது என்ற வரலாற்றுப் பதிவு பெருமளவிற்கு மிகைப்படுத்தப்பட்ட ஒன்றுதான். இத்தகைய விமர்சனத்திற்குரிய ஒரு பாரம்பரியத்தின் பின்னணியில் வைத்தே சம்பந்தரின் கூற்றை விளங்கிக்கொள்ள வேண்டும். இது முதலாவது.
இரண்டாவது கூட்டமைப்பின் செயற்பொறிமுறை எதுவென்பது. அதாவது ஒரு வெகுசன எழுச்சிக்குத் தலைமை தாங்க கூட்டமைப்பால் இதுவரையிலும் முடியவில்லை. அதற்குரிய செயற்பாட்டு ஒழுக்கம் எதுவும் அவர்களிடமிருப்பதாகத் தெரியவில்லை. அது ஒரு தேர்தல் அரசியலை முன்னெடுக்கும் கட்சிதான். அவர்களுடையது இலட்சியவாத அரசியல் அல்ல.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின் தமிழ் அரசியலின் மையமாக மாறியதிலிருந்து அவர்களுடைய செயற்பாடுகளை உற்றுக்கவனித்து வரும் எவரும் அத்தகைய ஒரு முடிவுக்கே வருவர். கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக தமிழ் அரசியல் பரப்பில் தொடர்ச்சியான அறவழிப் போராட்டங்கள் எதுவும் நடந்திருக்கவில்லை. இதுவரை நடந்தவையனைத்தும் கவன ஈர்ப்புப் போராட்டங்களும் அடையாள எதிர்ப்புப் போராட்டங்களும் தான். இத்தகைய போராட்டங்களிலும்கூட கூட்டமைப்பின் உயர்மட்டம் மிக அரிதாகவே கலந்துகொண்டது. பெரும்பாலும் இரண்டாம் மூன்றாம் நிலைப் பிரதானிகளே கலந்துகொண்டார்கள். குறிப்பாக, இத்தகைய போராட்டங்களிற் பெரும்பாலானவை ஒன்றில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்டவை அல்லது அந்தக் கட்சியின் அனுசரணையுடன் நடந்தவைதான்.
எனவே, கூட்டமைப்பின் பாரம்பரியம் மற்றும் செயற்பாட்டு ஓழுக்கம் என்பவற்றைக் கருதிக் கூறின் அவர்களால் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு அரசியலை முன்னெடுக்க முடியாது. இதுவரையிலும் அப்படிச் செய்யப்போவதாக படங்காட்டப்பட்டுள்ளதே தவிர வேறொன்றுமில்லை. இது இரண்டாவது.
மூன்றாவது அனைத்துலகப் போக்கு பற்றியது. கொம்பியூனிசத்தை அமுல்படுத்துவதில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பின் உலகம் முழுவதிலும் வெகுசனப் போராட்டங்களுக்குரிய சித்தாந்த அடித்தளத்தை புதுப்பிக்க வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டுள்ளது. வெகுசன கிளர்ச்சிகளைப் பொறுத்த வரை கொம்யூனிசம்தான் ஒரு உலகளாவிய விளக்கத்தைக் கொடுத்தது. அங்கேதான் ஒரு உலகளாவிய தரிசனமும் இருந்தது. ஆனால், கெடுபிடிப் போரின் வீழ்ச்சிக்குப் பின் அந்த சித்தாந்த அடித்தளம் அநேகமாக ஆட்டங்கண்டுவிட்டது. செயற்பாட்டியக்கங்களும், சிவில் இயக்கங்களும் தத்தமது உள்ளுர் யதார்த்தங்களுக்கேற்ப நிலைமைகளைக் கையாளும் ஒரு போக்கு பரவலாகி வருகிறது. இது தொடர்பில் அனைத்துலக அளவிலான சந்திப்புகளும், கலந்துரையாடல்களும், தகவல் மற்றும் அனுபவப் பகிர்வுகளும் பரவலாகவும் ஆழமாகவும் இடம்பெறாத ஒரு வெற்றிடத்தில் சக்தி மிக்க நாடுகள் அல்லது சக்தி மிக்க நாடுகளின் முகவர் நிறுவனங்கள் சிலசமயங்களில் சிவில் இயக்கங்களையும், செயற்பாட்டியக்கங்களையும் தத்தெடுக்கும் ஆபத்துக் காணப்படுகின்றது.
இத்தகைய ஒரு சித்தாந்த வெற்றிடத்தின் பின்னணியில், நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியிலான போராட்டங்களும் அல்லது வன்முறை சாரா போராட்டங்களும் அவ்விதம் சக்திமிக்க நாடுகளால் தத்தெடுக்கப்படுகின்றன அல்லது வெளியிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
திபெத்தியர்களின் தீக்குளிப்புப் போராட்டம் உலகத்தின் மனசாட்சியை உலுப்பவில்லை. மனிதக் குண்டுத் தாக்குதலுடன் ஒப்பிடும்போது தீக்குளிப்புப் போராட்டம் பக்கச்சேதம் இல்லாதது. மார்ச் 2011இலிருந்து இதுவரையிலும் 120இற்கும் குறையாத திபெத்தியர்கள் தொடர்ச்சியாகத் தீக்குளித்து விட்டார்கள். இதில் 80இற்ம் குறையாத தொகையினர் உயிரிழந்திருக்கிறார்கள். சாராசரியாக மாதத்திற்கு மூன்று பேர்களாவது தீக்குளித்து வருகிறார்கள். கடைசியாக இம்மாதம் 3ஆம் திகதி ஒருவர் தீக்குளித்து இறந்திருக்கிறார்.
தீக்குளிப்பைவிட உயர்வான ஒரு தியாகம் இல்லை. ஆனால், 120 இற்கு மேற்பட்ட திபெத்தியர்கள் தீக்குளித்து வராத மாற்றத்தை டுணிசியாவில் ஓரே ஒருவர் தீக்குளித்து ஏற்படுத்தினார். ஏனெனில், அது அந்தப் பிராந்தியத்தின் புவிசார் அரசியல் நலன்களைப் பொறுத்தவரை சக்திமிக்க நாடுகளால் கையாளப்பட வேண்டிய ஒரு நாடாயிருந்தது என்பதே முக்கிய காரணம்.
எனவே, ஒரு துருவ உலக ஒழுங்கின் கீழ் சிவில் மற்றும் செயற்பாட்டியங்களின் போராட்டங்கள் பின்வரும் உள்ளடக்க மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது. முதலாவதாகஇ சிவில் மற்றும் செயற்பாட்டியங்களின் நடவடிக்கைகளில் புதுமையும், படைப்புத் திறனும் இருக்கவேண்டும். அவை வழமையான, பாரம்பரியமான தடங்களிலிருந்து விலகி வரவேண்டிய தேவை முன்னெப்பொழுதையும்விட அதிகரித்து வருகிறது. ஒரு துருவ உலக ஒழுங்கின் கீழ் கணனித்துறையில் மட்டுமல்ல, சிவில் மற்றும் செயற்பாட்டியக்கங்களின் போராட்ட முறைகளிலும் படைப்புத்திறன் அவசியமாயுள்ளது. எல்லாவற்றையுமே முற்றிலும் புதிதாக, புதுமையாகச் சிந்திக்கவேண்டியுள்ளது. அப்படிச் சிந்திக்கப்படாவிட்டால் அடையாள எதிர்ப்புக்கும் கவன ஈர்ப்புக்கும் அப்பால் போராட்டங்கள் வளர்வது கடினமாயிருக்கும். அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதப் போராட்டம் அதன் அருமையை, நூதனத்தை அநேகமாக இழந்துவிடும் ஆபத்திருப்பதை இங்கே சுட்டிக்காட்டலாம்.
இரண்டாவதாக புவிசார் அரசியல் நலன்களைச் சரியாகக் கணக்கிட்டு முன்னெடுக்கப்படவேண்டும். மூன்றாவதாக அவை தெட்டம் தெட்டமான அடையாள மற்றும் கவன ஈர்ப்புப் போராட்டங்களாக இராமல் தொடர் முன்னெடுப்புக்களாக இருக்க வேண்டும். இதற்கும் படைப்புத்திறன் வேண்டும்.
ஒரு துறையில் படைப்புத்திறன் எனப்படுவது அதில் ஆழமாகவும் விசுவாசமாகவும் ஈடுபடும்போதே ஏற்படுகிறது. அதாவது, அதுவே ஒரு வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும். அது ரத்தத்தில் ஊறிய ஒன்றாயிருக்கவேண்டும். எனது வாழ்க்கையே எனது செய்தி என்று காந்தி கூறியது போல கூறக்கத்தக்க விதத்தில் அதுவே வாழ்க்கை ஒழுக்கமாகவும் இருக்கவேண்டும். கூட்டமைப்பிடம் அது இருக்கிறதா? சொல்லுங்கள் சம்பந்தர் அவர்களே?
12-12-2013