தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்…

தமிழர்கள் ஜெனிவாவில் ஒரு தரப்பாக இல்லைத்தான். ஆனால், தமிழர்களின் அரசியலை முன்னிறுத்தியே அந்த அரங்கு திறக்கப்பட்டுள்ளது. எனவே, தாம் ஒரு தரப்பாக இல்லாத ஓர் அரங்கில் தமது பேரம் பேசும் சக்தியைத் தமிழர்கள் உயர்த்திக்கொள்வது எப்படி? அல்லது தாம் ஒரு தரப்பாக இல்லாத ஒரு அரங்கில் ஏனைய சக்தி மிக்க தரப்புக்கள் தன்னை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தாத படிக்கு அரசியலை செய்வது எப்படி? அல்லது சக்திமிக்க நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் தமது சொந்த நிகழ்;ச்சி நிரலைக் கொண்டு போய் பொருத்துவது எப்படி?

உண்மையில் இக்கேள்விகள் தமிழ் டயஸ்பொறாவை நோக்கியே கேட்கப்படவேண்டும். ஏனெனில், ஜெனிவா அங்குதானிருக்கிறது. தவிர தற்பொழுது அதாவது மே 19இற்குப் பின்னர் தமிழ் இனமான அரசியலின் கூர்முனை போல தமிழ் டயஸ்பொறாவும் தமிழகமும் தான் காணப்படுகின்றன. தாய் தளத்தில் வாழும் தமிழர்கள் இங்கு நிலவும் அரசியல் சூழல் காரணமாக தமது மெய் விருப்பங்களை முழுமையாக வெளிப்படுத்தவியலாத ஒரு நிலையில் அஞ்சலோட்டக் கோலானது இப்பொழுது தமிழ் டயஸ்பொறா மற்றும் தமிழகத்தின் கைகளில் தான் இருப்பது போல ஒரு தோற்றம் உண்டாகியிருக்கிறது.

எனவே, ஜெனிவாவைக் கையாள்வது என்பது அதன் முதன் நிலை அர்த்தத்தில் டயஸ்பொறாவுக்குரிய ஒரு வேலைத்திட்டமாகவே தோன்றுகிறது.

ஆனால், இக்கட்டுரையானது தாய்தளத்திருந்தே எழுதப்படுகின்றது. எனவே, இங்கிருந்து கொண்டு டயஸ்பொறாவுக்கு புத்திமதி சொல்வதோ அல்லது கட்டளைகள் இடுவதோ அல்லது வகுப்பெடுப்பதோ பொருத்தமாயிருக்காது. அங்குள்ள கள யதார்த்தத்திற்கேற்ப அங்குள்ள தரப்புக்களே முடிவுகளை எடுக்க வேண்டும்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்கு முன்பு, தாய் தளத்திலிருந்தே கட்டளைகள் வழங்கப்பட்டன. மையம் இங்குதானிருந்தது. ஆனால் இப்பொழுது மையம் கரைந்துவிட்டது. அல்லது இடம்மாறிவிட்டதுபோல ஒரு தோற்றம் உருவாகியிருக்கி;றது. தாயகத்தில் மக்கள் ஆணையைப் பெற்றிருக்கும் கூட்டமைப்பானது தன்னை ஒரு மையமாகக் கட்டியெழுப்பத் தவறியதன் விளைவே இதுவெனலாம். தமிழகம், டயஸ்பொறா, தாய்த் தளம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய ஒரு உலகளாவிய ராஜிய வியூகம் வகுக்கப்படும்போதே தாய்த்தளம் அதன் இயல்பானது வளர்ச்சிப் போக்கில் ஒரு மையமாகக் கட்டியெழுப்பப்படும். இப்படிப் பார்த்தால் முடிவெடுக்க வேண்டியது தாய்த் தளத்தில் செயற்படும் எல்லாக் கட்சிகளும் தான்.

அதாவது, தாய்த்தளத்தை அதன் மெய்யான பொருளில் ஒரு மையமாகக் கட்டியெழுப்பவது எப்படி என்பதே இப்பொழுது தமிழர்கள் முன்னுலுள்ள மிகப் பெரிய கேள்வியாகும். அப்படித் தாய் தளத்தை ஒரு மையமாகக் கட்டியெழுப்புவதற்கு தமிழ் மக்கள் செய்ய வேண்டியவை எவையெவை?

இக்கேள்வியை மேலும் விரிவாக்கிக் கேட்கின், தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒவ்வொரு தரப்பும் செய்ய வேண்டியவை எவையெவை? என்று கேட்கலாம்.

எனவே, முதலில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள தரப்புக்கள் எவையெவை என்று ஓரளவுக்கு பொதுமைப்படுத்தி அடையாளம் காண முயற்சிக்கலாம். அவை வருமாறு:

முதலாவது: அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும்.

இரண்டாவது: சிவில் சமூகங்களும், செயற்பாட்டியக்கங்களும், மத நிறுவனங்களும்.

மூன்றாவது: அபிப்பிராயத்தை உருவாக்கவல்ல படிப்பாளிகளும், புத்திஜீவிகளும், ஆய்வாளர்களும், ஊடகங்களும், படைப்பாளிகளும்.

நாலாவது: உருவாக்கப்பட்ட அபிப்பிராயங்களின் பின் செல்லும் சாதாரண பொதுசனங்கள்

ஐந்தாவது: எந்த ஒரு அபிப்பிராயத்தின் பின்னும் செல்ல விரும்பாத அல்லது அரசியல் ஈடுபாடற்ற பொதுசனங்கள் இதில் முதலாவதாக -அரசியல்வாதிகள் என்ன செய்யவேண்டும்? ஒரே வரியில் சொன்னால் தமது வாக்காளர்களை அரசியல் மயப்படுத்த வேண்டும் எனலாம். கடந்த சுமார் ஆறு தசாப்த காலத்துக்கும் மேலாக இப்பிராந்தியத்தில் வேறெந்த மக்கள் கூட்டத்தோடும் ஒப்பிட முடியாத அளவுக்கு மிகக் கொழுத்த அரசியல் அனுபவத்தைப் பெற்ற மக்கள் ஈழத் தமிழர்கள்தான். ஆனால், இதில் உள்ள கொடுமையான முரண் எதுவெனில், எந்தளவுக்குகு; கொழுத்த அரசியல் அனுபவத்தைப் பெற்ற மக்களாகத் தமிழர்கள் காணப்படுகின்றார்களோ அதேயளவுக்கு மிகக் குறைவாக அரசியல் மயப்படுத்தப்பட்ட மக்கள் கூட்டமாகவும் காணப்படுகின்றார்கள் என்பதே. அதாவது, மிகக் கொழுத்த அரசியல் அனுபவத்தைப் பெற்ற, ஆனால் மிகக் குறைந்தளவு அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் என்று பொருள்.

இதற்குத் தமிழ் மக்கள் மத்தியில் வேலை செய்த, செய்கின்ற எல்லாக் கட்சிகளும், இயக்கங்களும் பொறுப்பேற்க வேண்டும். அவை மட்டுமல்ல, தமிழ் மக்கள் மத்தியில் செயற்பட்ட செயற்படுகின்ற எல்லாச் செயற்பாட்டாளர்களும், படிப்பாளிகளும், ஆய்வாளர்களும், படைப்பாளிகளும், ஊடகவியலாளர்களும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

போதியளவு அரசியல் மயப்படுத்தப்படாத மக்கள் எப்பொழுதும் உணர்ச்சிப் பெருக்கான கோஷங்கள் வாக்குறுதிகளின் பின் இழுபடுகிறார்கள். வாக்கு வேட்டை அரசியல்வாதிகள் மக்களுடைய மறதியின் மீது தமது கட்சிகளைக் கட்டியெழுப்புகின்றார்கள். அந்த மக்களிடம் பெற்ற ஆணையை அந்த மக்களுக்கே பாதகமான விதத்தில் திரித்து வியாக்கியானம் செய்கின்றார்கள். வாக்கு வேட்டை அரசியல் வாதிகளிடம் மக்கள் மைய அரசியல் இருப்பதில்லை. தனது மக்களை ஒரு சக்தியாகக் கருதாத ஒரு கட்சி வெளியாருக்காகக் காத்திருப்பதோடு தனது மக்களையும் அவ்விதம் அதிசயங்கள் அற்புதங்களுக்காகக் காத்திருக்கப் பழக்கிவிடுகிறது.

வெளியாருக்காகக் காத்திருப்பது வேறு, வெளியாரைக் கையாள்வது வேறு. வெளியாரைக் கையாள்வதென்றால் அது தன்; மையத்திலிருந்து அதாவது தனது மக்களின் மையத்திலிருந்து சிந்திக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கவேண்டும். அதற்கு மக்களை ஒரு சக்தியாக அல்லது மையமாகக் கருத வேண்டும். அப்படிக் கருதினாற்றான் வெளிநோக்கிக் காத்திருப்பதை விடவும் கூடுதலான அளவில் உள்முகமாகத் திரும்பி தமது மக்களை ஒரு சக்தியாகத் திரட்டியெடுக்க முடியும்.

எனவே, ஜெனிவாவை நோக்கிச் செல்லுமிந்நாட்களில் தமிழ்க் கட்சிகள் யாவும் தமிழ்மக்களை அரசியல் மயப்படுத்துவதிலிருந்து மக்கள் மைய அரசியலைத் தொடங்க வேண்டும். அதைச் செய்வதென்றால், முதலில் கட்சிகள் தமது உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களை அரசியல் மயப்படுத்தவேண்டியிருக்கும் என்பதே மிகக் கசப்பான உண்மையாகும். தமிழ்க் கட்சிகள் இதைச் செய்யத் தயாரா? இது முதலாவது.

civilsocietyiconஇரண்டாவது, சிவில் இயக்கங்களும், செயற்பாட்டு இயக்கங்களும் என்ன செய்ய வேண்டும் என்பது. இப்போது நிலவும் ஒரு துருவ உலக ஒழுங்கின் கீழ் சிவில் அமைப்புக்களும் செயற்பாட்டியக்கங்களும்தான் உள்ளுர் மட்டத்தில் ஏதோ ஒரு அரசியல் சமநிலையை உருவாக்குகின்றன. அதிகாரத்தையும் அதிகாரப்பசி மிக்க அரசியல்வாதிகளையும் அவை தரைக்குக் கொண்டு வருகின்றன. பெருங்கட்சிகள் எப்பொழுதும் ஏற்கனவே, நிலவும் பெரும்போக்குகளைப் பிரதிபலிக்கின்றன. அவற்றால் ஒரு புதுப்போக்கை உருவாக்க முடியாது. ஆனால் செயற்பாட்டியக்கங்கள் இருக்கின்ற பெரும்போக்கின் பின்னோடுபவை அல்ல. மாறாக, அவை புதுப் போக்குகளை உருவாக்குபவை. எனவே, அவை அநேகமாக வாக்கு வேட்டை அரசியலுக்கு எதிர்த் திசையில் செல்பவை. இதனால், அவை எப்பொழுதும் பெரும் கட்சிகளுக்கு எதிரான அழுத்தக் குழுக்களாகக் காணப்படுகின்றன. இப்படிப் பார்த்தால், ஜெனிவாவை நோக்கிச் செல்லுமின் நாட்களில் தமிழ் மக்களின் மத்தியில் நிலவும் மாயைகளைக் களைவதற்குச் சிவில் இயக்கங்களாலும் செயற்பாட்டு இயக்கங்களாலும்தான் முடியும். ஆனால், ஈழத் தமிழர்கள் மத்தியில் அத்தகைய செயற்பாட்டியக்கங்களை மிகக் குறைந்தளவே காண முடிகிறது.

சமூகத்தில் துருத்திக் கொண்டு மேலெழும் பெரும்பாலானவர்கள் அரசியலுக்குள் நுழையவே ஆசைப்படுகிறார்கள். அதோடு கீழிருந்து மேல் நோக்கி உருவாகவேண்டிய சிவில் அமைப்புக்களிற்குப் பதிலாக மேலிருந்து கீழ் நோக்கி உருவாக்கப்படும் பிரமுகர் சபைகளே பெருமளவிற் காணப்படுகின்றன. அதாவது, தமிழ்ச் செயற்பாட்டு வெளியெனப்படுவது மிகவும் மெலிந்து காணப்படுகிறது.

இம்மாதம் 15ஆம் திகதியன்று யாழ்ப்பாணம் முனியப்பர் கோயிலுக்கு முன்பு ஒரு சிவில் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட அந்த ஆர்ப்பாட்டத்தில் 40 இற்கும் குறைவானவர்களே கலந்துகொண்டார்கள். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் ஒரு வடமாகாண சபை அமைச்சரும், சில வடமாகாண சபை உறுப்பினர்களும் அதில் அடங்குவர். ஆனால், அந்த எதிர்ப்பு நடவடிக்கையின்போது அதைப் பதிவு செய்ய வந்த ஊடகவியலாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் தொகை நாற்பதை விட அதிகம் என்பதை இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக மன்னாலிருந்து வந்தவர்கள் இடை வழியில் படையிரால் திரும்பி அனுப்பப்பட்டதாக ஒரு காரணம் கூறப்பட்டது. எனினும், இது போன்ற சிவில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒப்பீட்டளவிற் குறைந்தளவு எண்ணிக்கையினரே பங்குபற்றி வருகிறார்கள் என்பதும் திருப்பத் திரும்ப குறிப்பிட்ட சில பிரமுகர்களின் முகங்களையே அவற்றில் காண முடிகிறது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அதாவது, ஈழத் தமிழ் செயற்பாட்டு வெளியெனப்படுவது பெருங்கட்சிகளுக்குசு; சவாலாக எழுமொரு வளர்ச்சியை இன்னமும் பெறவில்லை என்று பொருள். இது இரண்டாவது.

மூன்றாவது அபிப்பிராயத்தை உருவாக்கவல்ல தரப்பினர் என்ன செய்ய வேண்டும் என்பது. முதலில் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். இத்தரப்பு முழுக்க முழுக்கச் சுயாதீனமான ஒரு தரப்பு அல்ல. இங்கேயும் கட்சிச் சாய்வும், இயக்கச் சாய்வும் கோட்பாட்டுச் சாய்வுகளும் உண்டு. எனவே, ஒவ்வொருவருக்கும் இழக்கப்பட முடியாத நிலையானநலன்கள் உண்டு. இந்நிலையான நலன்களை முன்னிறுத்தியே அவர்களுடைய அரசியலும் அபிப்பிராயமும் அமையும். தத்தமது நிலையான நலன்களைப் பலியிட்டு அரசியல் செய்ய அவர்களில் எத்தனை பேர் தயார்?

ஈழத்தமிர்கள் மத்தியில் காணப்படும் படிப்பாளிகள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள் மத்தியில் ஜெனிவா மாயை அநேகமாக இல்லை அல்லது ஜெனிவாவை ”விடியுமாமளவு விளக்கனைய மாயை’ என்ற அடிப்படையில் விளங்கி வைத்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். ஆனால், என்னதான் விளக்கமிருந்தாலும் தத்தமது நிலையான நலன்கள் என்று வரும்போது அவர்களே ஜெனிவாவை ஒரு மாயையாகக் கட்டியெழுப்புகிறார்கள் அல்லது அந்த மாயையின் பின் இழுபடுகிறார்கள் ஈ.வெ.ரா பெரியார் கூறியதுபோல, அறிவும் சுயநலமும் முரண்படும் போது அறிவு தோற்று விடுகிறுது.

கணிசமான தமிழ் ஊடகங்களின் நிலையும் இத்தகையதே. ஊடகங்கள் அவற்றுக்குள்ள நிலையான நலன்களிற்கூடாகவே ஜெனிவாவைச் சித்தரித்து வருகின்றன.

எனவே, அபிப்பிராயத்தை உருவாக்கவல்ல தரப்புகள் தமது நிலையான நலன்களைக் கடந்துவந்து சிந்திக்கவேண்டும். அதற்கு வேண்டிய உரையாடற் பரப்புக்களைத் திறக்க வேண்டும். சிந்தனைக் குழாங்களையும் நிறுவ வேண்டும்.

இது கோப்பரேட் உலகம். இதில் எதுவும் கோப்பரேட் சாயலுடன் தான் இருக்கும். பெரிய பெரிய நாடுகளின் சிந்தனைக்குழாம்களே அவற்றிற்கு நிதி அனுசரணை செய்யும் எஜமானர்களுக்குச் சேவகஞ் செய்பவைகளாகக் காணப்படுகின்றன. கெடுபிடிப் போரின் முடிவையடுத்து சிந்தனைக் குழாம்களையும் சிவில் அமைப்புக்களையும் சக்திமிக்க நாடுகளின் முகவர் நிறுவனங்கள் தத்தெடுத்து வருகின்றன. இந்நிலையில் சுயாதீனமானச் சிந்திக்கும் புத்திஜிவிகளைக் காண்பது அரிது. சிறிய மற்றும் வறிய நாடுகளின் புத்திஜிவிகள் நிதி அனுசணையாளரின் புரொஜெக்ட் பட்ஜெற்றுக்குள் அடங்கிச் சிந்திக்கப் பழகி வருகின்றார்கள்.

அபிப்பிராயத்தை உருவாக்குவது அல்லது கருத்துவாக்கம் செய்வது என்பதெல்லாம் நிதி வழங்குநர்களின் புரொஜெக்ட் ஆகிவருகிறது. இத்தகையதொரு உலகச் சூழலில் சிறிய ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ள படிப்பாளிகளும், ஊடகவியலாளர்களும், மதகுருக்களும் தத்தமது நிலையான நலன்களைத் தியாகம் செய்து சிந்தித்தால் மட்டும்தான் தமிழ் அரசியலை மாயைகளிலிருந்து விடுவிக்கலாம். வெளியாருக்காகக் காத்திருக்கும் ஒரு அரசியலை வெளியாரைக்கையாளும் ஓர் அரசியலாக பண்பு மாற்றம் செய்யலாம். இது விசயத்தில் டயஸ்பொறாவிடமிருந்து நிதி உதவிகளைப் பெறுவதன் மூலம் வெளித்தரப்புக்களில் தங்கியிருப்பதை இயன்றளவுக்குத் தவிர்க்கலாம். இது மூன்றாவது.

நாலாவதும், ஐந்தாவதும் சாதாரண ஜனங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது. முதலில் ஒன்றைக் கூறவேண்டும். அவர்களை சாதாரண ஜனங்கள் என்று அழைப்பதே தவறு. ஏனெனில், இப்பிராந்தியத்திலேயே மிகக் கொழுத்த பட்டறிவைப் பெற்ற மக்கள் அவர்கள். யார் யாருடையதோ நிலையான நலன்களுக்காகவும், யார் யாருடையதோ தவறுகளுக்காகவும் பலியிடப்பட்ட மக்கள் அவர்கள். தேர்தல் காலங்களில் இனமான அலையை எழுப்பி அவர்களுடைய பட்டறிவின் கூர் முனையை மழுங்கச் செய்யும் அரசியல்வாதிகள் தமக்கு வேண்டிய மக்கள் ஆணையை மிகச் சுலபமாகப் பெற்றுவிடுகிறார்கள். ஆனால், தேர்தல் முடிந்த கையோடேயே ”சீ…இவங்கள் திருந்தவே மாட்டாங்கள்’ என்று சலிப்பதும் இதே சனங்கள் தான். ஆனால் அதுகூட ஒரு பட்டறிவுதான். சுமார் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக சில தலைமுறைகளிற்கூடாகச் சேகரிக்கப்பட்ட பட்டறிவு அது.

தமது பட்டறிவின் அடிப்படையில் இவர்கள் முடிவெடுத்தாலே போதும் அரசியல்வாதிகளும், செயற்பாட்டியக்கங்களும் சிவில் அமைப்புகளும், ஊடகங்களும், ஆய்வாளர்கள், படைப்பாளிகளும், அதற்கு உதவி செய்தாலே போதும் அல்லது குறைந்த பட்சம் அதற்கு தடையாக நிற்காமல் விட்டாலே போதும். தமிழ் மக்களை அவர்களுடைய பட்டறிவின் படி முடிவெடுக்கத் தூண்டினாலேபோதும். அதுவே அவர்களை அரசியல் மயப்படுத்துவதற்கான முதலாவது அடிவைப்பாக இருக்கும்.

அப்படியவர்கள் தமது சொந்த பட்டறிவின் பாற்பட்டு முடிவுகளை எடுப்பார்களாயிருந்தால் அது நிச்சயமாக தமிழ் அப்புக்காத்துமார்களை விடவும், சிங்கள் அப்புக்காத்துமார்களை விடவும் தீர்க்கதரிசனம் மிக்க ஒரு முடிவாகவே இருக்கும்.

21-02-2014

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *