ஒரு சடங்காக மாறிய ஜெனிவா?

இம்மாதம் ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணம் ரெம்பிள் றோட்டில் அமைந்துள்ள சமகாலக் கலை, கட்டடக் கலை மற்றும் வடிவமைப்புக்கான இலங்கை ஆவணக் காப்பகத்தில் ஒரு தனிநபர் ஆற்றுகையும் அதன் பின் கலந்துரையாடலும் இடம்பெற்றன. ”உடலே மொழியாக’ (Body as language) என்ற தலைப்பில் இடம்பெற்ற அந்நிகழ்வில் பண்டு மன்னம்பெரியின் (Bandu Manamperi) ஆற்றுகை முதலில் நிகழ்ந்தது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான மேற்படி ஆற்றுகையை பண்டு மன்னம் பெரி ”அயர்ண் மான்’ (Iron man) என்று பெயரிட்டிருந்தார். அவ்வாற்றுகையை சிறிது விரிவாகப் பார்ப்பது இக்கட்டுரையின் பேசுபொருளை நன்கு விளங்கிக்கொள்ள உதவும்.

indexமுதலில் பண்டு ஒரு அயர்ணிங் மேசையை பார்வையாளர்கள் முன்னிலையில் கொண்டு வந்து வைத்தார். பின்னர் ஓர் அயர்ண் பொக்சைக் கொண்டு வந்து அதற்கு மின் இணைப்பை ஏற்படுத்தினார். அதன் பின் தான் அணிந்திருந்த சேர்ட்டை கழற்றி அதை அயர்ண் செய்தார். அதைத் தொடர்ந்து சேர்ட்டை ஒரு கொழுக்கியில் தொங்கவிட்டு அருகில் நின்ற ஒருவரிடம் கொடுத்தார். அதன் பின் அவர் தனது சப்பாத்துக்களையும், காலுறைகளையும் கழட்டினார். பின்னர் தான் அணிந்திருந்த லோங்ஸைக் கழட்டி அதை அயர்ண் செய்தார். பின்னர் அந்த லோங்ஸை அருகிலிருந்து சுவரில் தொங்கவிட்டார். அதன் பின் தான் ஏற்கனவே அயர்ண் செய்த சேர்ட்டை எடுத்து உடுத்திக் கொண்டார். அதன் பின் அவர் தனது கீழ் உள்ளாடையை அதாவது அண்டர்வெயரைக் கழட்டி அதையும் அயர்ண் செய்தார். பின்னர் காலுறைகளை அயர்ண் செய்தார். பின்னர் அயர்ண் செய்யப்பட்ட அண்டர் வெயரை அணிந்தார். கடைசியாக காலுறைகளை அணிந்து சப்பாத்துக்களையும் மாட்டிக் கொண்டார். பின்னர் அயர்ணிங் மேசையை மடித்து எடுத்து அயர்ண் பொக்ஸையையும் எடுத்துக் கொண்டு நடந்து போனார். இதுதான் ”அயர்ண் மான்’ என்ற ஆற்றுகை.

பல வெளிநாட்டுத் தலைநகரங்களிலும் குறிப்பாக, கொழும்பில் நாடாளுமன்றத்திற்கு முன்பாகவும் நிகழ்த்திக் காட்டப்பட்ட இவ்வாற்றுகை தொடர்பாகவும் பண்டுவின் ஏனைய படைப்புக்கள் தொடர்பாகவும் பின்னர் கலந்துரையாடப்ப்டது. இதன்போது பண்டு சொன்னார் ”போர் முடிவுக்கு வந்த பின் எல்லாவற்றையும் அயர்ண் செய்து மடிப்புக்களை நீவி எடுத்துவிட்டால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று கருதப்படுகின்றது. அதைத் தான் குறியீடாக உணர்த்த முற்பட்டேன்’ என்று.

உடுத்தியிருக்கும் ஆடையையே கழற்றி எடுத்து அயர்ண் செய்து மடிப்பு நீக்கிவிட்டு அதை மறுபடியும் உடுத்திக் கொள்வது என்பதும், அந்தச் செய்முறையின் ஒரு கட்டத்தில் ஏறக்குறைய அரை நிர்வாணமாக நிற்கவேண்டியிருந்தமை என்பதும் முழுக்க முழுக்க குறியீடாகக் காட்டப்பட்ட அரசியற் செய்திகள்தான். ஜெனிவாக் கூட்டத் தொடருக்குரிய ஒரு மாதத்தில் இவ்வாற்றுகையை யாழ்ப்பாணத்தில் பார்க்க நேர்ந்தமை அதற்குரிய முக்கியத்துவத்தை மேலும் கூட்டியிருந்தது.

ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த ஐந்தாண்டுகளில் காட்சி மயப்பட்டுத்தப்பட்ட அபிவிருத்திக்கூடாக நல்லிணக்கத்தைப் பெற முடியும் என்று நிரூபித்துக் காட்ட அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. அனைத்துலக சமூகம் இதை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்கிறது என்பதையே இம்முறை ஜெனிவாத் தீர்மானத்தின் சில பகுதிகளில் வாசிக்க முடிகிறது.

வடக்கு – கிழக்கை நோக்கி காப்பெற் சாலைகள் வந்துவிட்டன. தடையற்ற போக்குவரத்தும், தடையற்ற தொலைத்தொடர்பும், தடையற்ற இணையத் தொடர்பு வசதிகளும் வட-கிழக்கும் உள்ளிட்ட முழுத் தீவையும் ஏறக்குறைய ஓரலகாக்கி விட்டதுபோல ஒரு தோற்றம் உருவாகியுள்ளது. கார்கில்ஸ் சதுக்கத்தில் எமது இளைஞர்களும், யுவதிகளும் உணவருந்துவதும், அதைத் தமது கைபேசிகளில் படம்பிடிப்பதும், அந்தப் படங்களை முகநூலில் பகிர்ந்து கொள்வதும் ஒரு தலைமுறையின் விழுமியங்களில் ஏற்பட்டுவரும் மாற்றங்களைக் குறிப்பாலுணர்ந்துகின்றன.

ஆனால், யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கோழியிறைச்சிக் கடைகளிற் போய்க் கேட்டால் கூறுகிறார்கள், அங்கு விற்பனை குறைந்துவிட்டது என்று. முன்பு மாதம் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் வியாபாரம் நடந்த கடைகளில் இப்பொழுது 30.000 ரூபாய்க்குக் கிட்டவே வியாபாரம் நடக்கிறது என்கிறார்கள். பண்ணையில் அமைந்துள்ள ஆட்டிறைச்சிக் கடைகளிலும் வாங்குவோர் தொகை குறைந்துவிட்டதாம். ஆட்டிறைச்சியின் விலை கூடியது மட்டும் காரணம் அல்ல. நுகர்வு சக்தி குறைந்துவிட்டதும் ஒரு காரணம் தானாம். ஒரு டிப்பர் முதலாளி சொன்னார் தங்களுக்கு இப்பொழுது ஓட்டம் குறைவு என்று. வாகனத்துக்கு ஓயில் அடித்துவிட்டு வீட்டில் மூடி வைத்திருக்கின்றேன் என்றும் அவர் சொன்னார். ஒரு வழக்கறிஞர் சொன்னார் இப்பொழுது வழக்குகள் குறைவாகவே வருகின்றன என்று. ஒரு புத்தக் கடைக்கார் சொன்னார் இந்த ஆண்டு நம்பர் வண் கொப்பிகளை அதிகம் கொள்வனவு செய்து நட்டப்பட்டுவிட்டோம். நம்பர் ரூ கொப்பிகள் தான் அதிகம் விற்கப்படுகின்றன என்று… காணி புரோக்கர்கள் தமது தொழிலை மாற்றிக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். வீடு காணி விற்கப் பலர் உண்டு. ஆனால், வாங்கும் சக்தி மிகக் குறைந்த தொகையினரிடமே உண்டு. கிளிநொச்சியில் சப்பாத்து அணியாமல் பாடசாலைக்கு வந்த ஒரு மாணவர் ஆசிரியரிடம் சொன்னாராம், ”அப்பா ஆடு வளர்க்கிறார். ஆடு வளர்த்து அதை விற்றால்தான் சப்பாத்து வாங்கலாம் என்று அப்பா சொன்னவர்’ என்று.

அதாவது கடந்த ஐந்து ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வரும் காட்சி மயப்பட்டுத்தப்பட்ட அபிவிருத்திக்கூடாக காப்பாற் வீதி வந்திருக்கிறது. லீசிங் கொம்பனிகள் வந்திருக்கின்றன. மின்சாரம் வந்திருக்கிறது. இன்ரநெற் வந்திருக்கின்றது. ஆனால், காசுதான் கையில் போதியளவு இல்லை. இதை மக்டொனால்ட் மயமாக்கல் என்று பெரிய வார்த்தைகளால் சித்திரிக்க முடியாதுதான். ஆனால், உள்நாட்டுச் சந்தை நிலவரத்துக்கூடாக இதைச் சற்றுக் கவித்துவமாகக் கூறின் கார்கில்ஸ் மயமாக்கம் நிகழ்ந்த அளவிற்கு உற்பத்தி நிகழ்வில்லை எனலாமா?

பண்டு மன்னம் பெரி கூறும் அயர்ண் செய்யும் அரசியல் என்பது இதுதானா?

ஆனால், அரசாங்கம் உள்நாட்டு அளவில் செய்துவரும் இந்த அயர்ணிங் அரசியலைத் தான் அனைத்துலக சமூகமும் ஜெனிவாவில் செய்ய முற்படுகின்றதா? என்ற ஒரு கேள்வி இப்பொழுது தமிழர்கள் மத்தியில் வலிமையாகிக் கொண்டே வருகிறது.

கடந்த வியாழக்கிழமை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது தீர்மானம் தமிழர்களில் பெரும் பாலானவர்களால் அப்படித்தான் பார்க்கப்படுகின்றது. அதாவது அது ஒரு அனைத்துலக அயர்ணிங் அரசியல் என்று.

எனது கட்டுரைகள் எப்பொழுதும் ஜெனிவாவை நோக்கிச் செயலின்றிக் காத்திருப்பதற்கு எதிரானவை. இரண்டாவது ஜெனிவாவிலிருந்து இதை வற்புறுத்தி எழுதி வந்துள்ளேன். ஆனாலும், எதை எழுதினாலும் எழுதாவிட்டாலும் இம்முறை தமிழ் மக்கள் மத்தியில் ஜெனிவாவை நோக்கிய காத்திருப்பு வழமையை விட கூடுதலாகக் காணப்பட்டது என்பதே கொடுமையான உண்மையாகும். இதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் முதன்மையானது வடமாகாண சபையின் எழுச்சியாகும். இரண்டாவது ஊடகங்கள். மூன்றாவது தமிழ் நாட்டிலும் தமிழ் டயஸ்பொறாவிலும் ஏற்பட்ட எழுச்சிகள்.

இதில் முக்கியமானது வடமாகாண சபையின் எழுச்சிதான். வடமாகாண சபையின் உருவாக்கம் எனப்படுவது மூன்றாவது ஜெனிவாவை நோக்கி அரசாங்கம் செய்த முக்கியமான ஒரு வீட்டு வேலையாகும். ஆனால், மாகாண சபை உருவாக்கப்பட்ட பின் அதை ஒரு பிடியாகக் கையாண்டு இலங்கை அரசாங்கத்திற்கு சில செய்திகளை உணர்த்த மேற்கும், இந்தியாவும் முற்பட்டன. குறிப்பாக, கொமென் வெல்த் மாநாட்டையொட்டியும் அதன் பின் மூன்றாவது ஜெனிவாவை நோக்கியும் வடமாகாண சபையை ஒரு ராஜீய மையமாகக் உருவாக்குவது போன்றதொரு தோற்றத்தை சில சக்திமிக்க நாடுகள் கட்டியெழுப்பின.

வடமாகாண சபைத் தேர்தலோடு வடக்கில் படிப்படியாகவும், வேகமாகவும் விரிந்து வந்த சிவில் வெளி காரணமாக தமிழ் மக்களின் அரசியல் முன்னரைவிடக் கூடுதலான அளவிற்குத் துடிப்பானதாகவும் விறுவிறுப்பானதாகவும் மாறியது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின் தோன்றிய வெற்றிடமும் பயங்கலந்த தோல்வி மனப்பான்மையும் ஒரு வித அரசியல் உறை நிலையும் மெல்ல மெல்ல நீங்கத் தொடங்கின. குறிப்பாக, பிரிட்டிஷ் அரசாங்கமும் கனேடிய அரசாங்கமும், தமிழகமும், டயஸ்பொறாவும் இப்போக்கினை ஊக்குவிப்பனவாகக் காணப்பட்டன. இத்தகையதொரு பின்னணியில் முன்னைய இரண்டு ஜெனிவாக்களிலும் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் இம்முறை ஜெனிவாவில் தமிழ்த் தரப்பினரின் ஈடுபாடும், பங்களிப்பும் ஒப்பீட்டளவில் உயர்வாகக் காணப்பட்டன.

ஊடகங்கள் இவற்றைப் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சந்தைப்படுத்தின. ஆகமொத்தம் இவையெல்லாம் சேர்ந்து இம்முறை ஜெனிவாவை நோக்கி ஒப்பீட்டளவில் அதிகரித்த எதிர்பார்ப்புக்களைக் கட்டியெழுப்பிவிட்டன.

தீர்மானத்தின் முதல் வரைவு வந்தபோதும் அதன் சட்டநுணுக்கங்கள் தொடர்பாகத் தமிழ்ச் சட்டவாளார்கள் இரு நிலைப்பட்டு விவாதித்தார்கள். சாதாரண சனங்களால் விளங்கிக்கொள்ளக் கடினமான அனைத்துலக சட்ட நுணுக்கங்கள் பற்றியெல்லாம் வாதப் பிரதிவாதங்கள் நடந்தன. ஆனால், தீர்மானத்தின் இறுதி வரைபு வெளிவந்தபோது அது பண்டு மன்னம்பெரி கூறுவபோல் ஓர் அனைத்துலக அயர்ணிங் அரசியல்தான் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஒரு தப்பினால் வெற்றியாகக் கொண்டாடப்படுகிறது. வெற்றி பெற முடியாத தீர்மானங்களை உலகின் ஏகப்பெரு வல்லரசு கொண்டு வராது. எனவே, தீர்மானம் வெற்றிபெற்றது ஒரு வெற்றியல்ல. அது எத்தகைய தீர்மானம் என்பதில்தான் வெற்றியின் தன்மை தங்கியிருக்கின்றது. அத்தீர்மானம் முன்னைய தீர்மானங்களிலிருந்து எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது என்பதிலும் எல்லாவற்றையும் விட முக்கியமாக அது ஒரு செயலுக்குப் போகக் கூடிய தீர்மானமா? இல்லையா? என்பதிலும்தான் உண்மையான வெற்றி தங்கியிருக்கின்றது. மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் விடை தேடிப்போகும்போது குறிப்பாக, இந்தியா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதையும் கவனத்தில் எடுத்தும் கூட்டிக் கழித்து பார்க்கும்போதே தெரியவரும். அது ஒரு வெற்றிகரமான தீர்மானமா, இல்லையா? என்பது.

எனவே, கடந்த மூன்று ஜெனிவாத் தீர்மானங்களிலிருந்தும் கற்றிருக்கக்கூடிய பாடங்களின் அடிப்படையில் தமிழர்கள் பின்வரும் நிராகரிக்கப்படவியலாக் கேள்விகளுக்கு விடை கண்டு பிடிக்க வேண்டும்.

1) ஜெனிவாத் தீர்மானங்கள் ஏன் அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கி வருகின்றன?

2) உள்நாட்டுப் பொறிமுறைகளின் போதாமை பற்றி விமர்ச்சித்தபடியே அவை உள்நாட்டுப் பொறிமுறைகளையே ஏன் தொடர்ந்தும் ஆதரிக்கின்றன?

3) இனப்பிரச்சினையின் மூல காரணத்தை நோக்கிச் செல்லாமல் அக்காரணத்தின் விளைவைப் பற்றியும் விளைவின் விளைவைப் பற்றியும் மட்டுமே எல்லாத் தீ;ர்மானங்களும் பேசுவது ஏன்?

4) நவிப்பிள்ளை அம்மையாரின் பரிந்துரைகளுக்கும் தீர்மானத்தின் இறுதி வரைவிற்கும் இடையில் ஏன் இடைவெளி காணப்படுகிறது?

5) பிரிட்டிஷ் பிரதமரின் தீவிரம் கனேடிய அரசாங்கத்தின் தீவிரம் என்பவற்றிற்கும் தீர்மானத்தின் இறுதி வடிவத்திற்கும் இடையில் ஏன் இடைவெளி காணப்படுகின்றது?

6) இந்தியா பொதுத் தேர்தலை எதிர்நோக்கிச் செல்லும் இக்கால கட்டத்தில் கொங்ரஸ் அரசாங்கம் ஏன் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை?

7) ஐ. நா. மனித உரிமை ஆணையாளருக்கு விசாரணை அதிகாரங்களை வழங்கும் பந்தி தொடர்பில் இந்தியா ஏன் எதிர்த்து வாக்களித்தது?

8) ஈழத்தமிழர்கள் தொடர்பில் கொங்ரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளிற்கும் கொங்ரஸ் தலைமையிலான அரசாங்கம் ஜெனிவாவில் நடந்து கொண்ட விதத்திற்கும் இடையில் ஏன் இடைவெளி காணப்படுகிறது?

9) திர்மானத்தில் 13ஆவது திருத்தத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடம் எப்படிக் கிடைத்தது?

10) 2009இலிருந்து தமிழ் டயஸ்பொறாவானது தனது பல நாட் சம்பளத்தை துறந்து, ஜெனிவாவை நோக்கி அணிவகுத்து சென்று வருகிறது. ஆனால் கடந்த ஐந்தாண்டுகளாக புலம் பெயர்ந்த தமிழர்களின் சலியாத போராட்டங்கள் யாவும் ஏன் அவை எதிர்பார்த்த இலக்குகளை எட்ட முடியவில்லை?

11) தமிழகத்தில் இந்திய மத்திய அரசுக்கும் அமெரிக்காவுக்கும் எதிராக நிகழ்த்தப்பட்ட போராட்டங்கள் அவற்றின் இறுதி இலக்குகளை வெல்ல முடியாது போனது ஏன்? தமிழகத்தில் உள்ள தமிழ்த் தேசிய சக்திகளால் இந்திய மத்திய அரசை ஏன் அசைக்க முடியவில்லை?

12) தமிழ் டயஸ்பொறாவும் தமிழகமும் தமது போராட்ட உத்திகளைக் குறித்து புதிதாகவும் புதுமையாகவும் படைப்புத்திறனோடும் சிந்தித்து முடிவெடுப்பது எப்போது?

மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் தமிழர்கள் விடைகண்டு பிடிக்க வேண்டிய வேளை இதுதான். அடுத்த ஜெனிவா வரும்வரை சோர்ந்திருந்துவிட்டு பெப்ரவரி அல்லது மார்ச் மாதமளவில் திடுக்கிட்டு விழித்தெழுந்து ஜெனிவாவை எதிர்கொள்ள முடியாது. அடுத்த ஜெனிவாவை எதிர்கொள்வது என்பது இப்பொழுதிருந்தே தொடங்கப்பட வேண்டும். மேற்படி கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்பதிலிருந்தும் அதைத் தொடக்கலாம். இல்லையெனில் ஜெனிவாகக் கூட்டத் தொடர் ஓர் அனைத்துலகச் சடங்காக மாறிவருவது போல தமிழர்கள் ஜெனிவாவை எதிர்கொள்வதும் ஒரு சடங்காக மாறிவிடும். புலம்பெயர்ந்த தமிழர்களும், தமிழக மக்களும் கொடிகளையும், படங்களையும் தூக்கிக்கொண்டு அணிவகுத்துப்போவதும் ஒரு சடங்காக மாறிவிடும். ஜெனிவாவில் தமிழ் வழக்கறிஞர்கள் அனைத்துலகச் சட்ட நுணுக்கங்களைக் குறித்து வாதப் பிரதி வாதங்களைப் புரிவதும் ஒரு சடங்காக மாறிவிடும். ஏன். இப்படியே போனால் தமிழ் அரசியலே ஒரு சடங்காக மாறிவிடும்.

28-03-2014

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *