கொழும்பிலிருந்து ஜெனிவாவிற்கு உணர்த்தப்படும் செய்திகள்?

அண்மை வாரங்களில் வடக்கில் நடப்பவற்றைத் தொகுத்துப் பார்த்தால் ஜெனிவாவை நோக்கித் தெளிவாகச் சில சமிக்ஞைகள் அனுப்பப்படுவதாகத் தெரிகின்றது. முதலாவது சமிக்ஞை – அரசாங்கத்தைத் தண்டிக்க முற்படும் தரப்புக்கள் அல்லது அத்தகைய தரப்புகளிற்கு உதவ முற்படும் தரப்புகள் எதிர்கொள்ளக் கூடிய ஆபத்துக்கள் பற்றியது.

இரண்டாவது சமிக்ஞை, அரசாங்கத்தைத் தண்டிக்கும் விதத்திலான ஜெனிவாத் தீர்மானங்கள் ஆயுதமேந்திய தமிழ் அரசியலை ஊக்குவிக்கக் கூடும் என்பது. அதாவது, எந்தவொரு ஆயுதப்போராட்டத்தைத் தோற்கடித்ததிற்காக சில ஆண்டுகளிற்கு முன்பு ஜெனிவாவில் மேற்கு நாடுகள் அரசாங்கத்திற்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கினவோ அப்படியொரு ஆயுதப் போராட்டத்தை ஊக்குவிக்கும் விதத்தில் ஜெனிவாத் தீர்மானம் அமையக் கூடாது என்பதே அது.

ஆனால், ஜெனிவாவை நோக்கி அரசாங்கம் அனுப்ப நினைக்கும் மேற்படி சமிக்ஞைகளுக்கான விலையைக் கொடுப்பது தமிழ் மக்கள் தான் என்பதே இங்கு மிகக்கொடுமையான யதார்த்தமாகும்.

ஏந்தத் தமிழ் மக்களுடைய அரசியலைக் கருவியாhக் கையாண்டு ஜெனிவாவில் அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றனவோ அதே தமிழ் மக்களை ஜெனிவாத் தீர்மானங்கள் பாதுகாக்க முடியவில்லை என்பதையே அண்மை வாரங்களில் தமிழ்ப் பகுதிகளில், குறிப்பாக, வடக்கில் நடப்பவை நிரூபித்திருக்கின்றன.

ஜெனிவாவை எதிர்கொள்வதில் தமிழ்த் தரப்பிடம் பொருத்தமான, தீர்க்கதரிசனம் மிக்க, ஒருங்கிணைந்த ஒரு வேலைத்திட்டம் இல்லை என்ற விமர்சனங்களின் மத்தியில் மறுபக்கத்தில்; அரசாங்கத்தைப் பொறுத்தவரை அது தொடக்கத்திலிருந்தே இரண்டு தளங்களில் ஜெனிவாவை எதிர்கொண்டு வருகிறது. ஒரு தளம் அனைத்துலக அரங்கம் மற்றது உள்நாட்டு அரங்கம்.

ஆனைத்துலக அரங்கில் கடந்த இரண்டு முறைகளின் போதும் எப்படியான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டனவோ பெருமளவிற்கு அதையேதான் அரசாங்கம் இம்முறையும் செய்து வருகிறது. ஒரு புறம் மேற்கையும் மேற்கின் எதிரிகளையும் கையாள்வது. இன்னொருபுறம் இந்தியாவைக் கையாள்வது. இது தவிர ஏற்கனவே, ஜெனிவாவில் பல தீர்மானங்களை எதிர்கொண்ட அனுபவம் மிக்க நாடுகளான கியூபா, இஸ்ரேல் போன்றவற்றுடன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது.

இப்படியாக நாட்டுக்கு வெளியே ஜெனிவாவை எதிர்கொள்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து வரும் அரசாங்கம் உள்நாட்டில் மூன்று முனைகளில் அதைச் செய்ய முற்படுவதாகத் தெரிகிறது.

முதலாவது, ஜெனிவாவை நோக்கிச் செய்யப்படும் வீட்டு வேலைகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக குறிப்பாக, கடந்த ஆண்டிலிருந்து அதிகரித்த அளவில் அரசாங்கம் இதைச் செய்து வருகிறது. அதன் பலன் மூன்றாவது ஜெனிவாவில் அதாவது இந்தத்தடவை தீர்மான வரைபில் ஓரளவுக்குத் தெரிகிறது. இது முதலாவது முனை.

SRI_LANKA_-_Rajapaksa_(437_x_291)இரண்டாவது முனை, ஒரு தேர்தல் முனை. ஜெனிவாக் கூட்டத் தொடர் நிகழும் அதே காலகட்டத்தில் மேல் மாகாண மற்றும் தென்மாகாண சபைகளுக்கான தேர்தலும் நடக்கிறது. மேல் மாகாணம் என்பது இலங்கைத்தீவின் தலைநகரைத் தன்னுள் கொண்டிருக்கும் ஒரு மாகாணம். தென்மாகாணம் இப்பொழுது ஆட்சியில் இருக்கும் தலைவர்களின் தாய் மாகாணம். இத் தேர்தல்களில் கிடைக்கக் கூடிய வெற்றியானது ஜெனிவாவுக்கு எதிரான கூரான ஒரு செய்தியாக அமையும் என்று அரசாங்கம் நம்புகின்றது. இதன் மூலம் ஜெனிவாவில் தான் எதிர்கொள்ளும் பலப் பரீட்சையின் நிழல் களம் ஒன்றை அது உள்நாட்டில் திறந்துள்ளது. வெற்றி வாதத்திற்குத் தலைமை தாங்கும் ஒரு அரசாங்கத்தை தென்னிலங்கையில் வெற்றிகொள்ள முடியாதிருக்கும் எதிர்க்கட்சிகளுடனான பலப்பரீட்சை எனப்படுவது ஒரு நிஜப் பரீட்சையே அல்ல. அதிலும் குறிப்பாக, ஜெனிவாப் பீதி தென்னிலங்கையைக் கவ்விப் பிடித்திருக்கும் ஒரு காலச் சூழலில் அரசாங்கத்தைத் தண்டிக்க முற்படும் வெளித் தரப்புகளிற்கு எதிராக சாதாரண சிங்கள் மக்கள் அரசாங்கத்தை நோக்கியே செல்வர். தனக்குக் கிடைக்கக் கூடிய தேர்தல் வெற்றியை அதன் ஆகக்கூடிய உச்சம் வரை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் ஜெனிவாக் காலத்தில் தேர்தலுக்குத் திகதி குறிக்கப்பட்டது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

எனவே, வெல்லக் கடினமான ஒரு யுத்தத்தை வெற்றிகொண்ட அரசாங்கத்தை வெளியாரிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு சாதாரண சிங்கள் மக்கள் வழங்கக்கூடிய ஆணையானது ஜெனிவாத் தீர்மானத்துக்கு எதிரானதுதான். அது கொழும்பிலிருந்து ஜெனிவாவுக்கு அனுப்பப்படும் ஒரு சமிக்ஞையாக இருக்கும். மிகவும் நெருக்கடியான ஒரு கால கட்டத்தில் மக்கள் தன் பக்கமே நிற்கிறார்கள் என்பதை உலக சமூகத்திற்கு எடுத்துக் காட்ட வரப்போகும் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்திற்கு உதவக்கூடும். இது இரண்டாவது முனை.

மூன்றாவது முனை, அண்மை வாரங்களில் தமிழ்ப் பகுதிகளில் முடுக்கி விடப்பட்டிருக்கும் தேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகள் ஆகும். ஜெனிவாவில் அரசாங்கத்தைத் தண்டிக்கும் வகையிலான தீர்மானங்கள் தமிழர்கள் மத்தியில் உள்ள ஆயுத அரசியலில் நம்பிக்கையுடைய சக்திகளுக்கு ஊக்கியாக அமைய முடியும் என்பதால் உடனடியான ராணுவ மய நீக்கத்திற்கான வாய்ப்புக்கள் குறைவு என்ற ஒரு செய்தி இதன் மூலம் மேற்கு நாடுகளை நோக்கிக் கொடுக்கப்படுகிறது.

இவ்விதமாக ஜெனிவாவை எதிர்கொள்ளும் பொருட்டு அரசாங்கம் மேற்கொண்டுவரும் எல்லா நடவடிக்கைகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதன் இறுதி விளைவாகப் பாதிக்கப்படுவது ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் தான். அதாவது தமிழ் மக்களின் அரசியலை ஒரு கருவியாகக் கையாளும் ஜெனிவாத் தீர்மானங்கள் அந்த மக்களைப் பாதுகாக்க முடியாத ஒரு நிலையிலிருக்கின்றன என்று பொருள்.

ஜெனிவாத் தீர்மானங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் ராணுவ மய நீக்கத்தைக் கோரி நிற்கின்றன. ஆனால், மூன்றாவது ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்படும் ஒரு கால கட்டத்திலேயே நாடு குறிப்பாக வடக்கு – கிழக்கு மறுபடியும் ராணுவ மயப்படும் ஏது நிலைகள் உருவாகத் தொடங்கியிருக்கின்றன.

ஜெனிவாத் தீர்மானங்கள் இனப்பிரச்சினையின் ஆழவேர்களை நோக்கிச் செல்லவில்லை என்று தமிழர்களில் ஒரு பகுதியினர் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் மேற்படி தீர்மானத்தை அயோக்கியத்தனமானது என்று கூறி தீர்மானத்தின் நகல்கள் வீதிகளில் எரிக்கப்பட்டுமுள்ளன.

ஆனால், இத்தகைய விமர்சனங்கள் இருக்கத்தக்கதாகவே, இப்பொழுது புதிதாகப் பிரச்சினைகள் தோன்றியுள்ளன. அவை தமிழ் மக்களின் இயல்பு வாழ்வோடு சம்பந்தப்பட்டவை. தமிழ் மக்களுடைய அன்றாட நடவடிக்கைகளில் குறுக்கிடுபவை. எனவே, உடனடியானவை. இப்படிப் பார்த்தால் புதிதாக உருவாகிவரும் பிரச்சினைகள் நிலைமைகளை பின்னோக்கி நகர்த்தக்கூடியவை. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்போது, நல்லிணக்கத்தைப் பற்றியும், நிரந்தரத் தீர்வைப் பற்றியுமான உரையாடல்கள் பின் தள்ளப்பட்டுவிடும். இயல்பு நிலையைத் திரும்பப் பெறுவதே உடனடியான நிகழ்ச்சி நிரலாக மாறிவிடும். இயல்பு நிலை தொடர்ச்சியாகக் கெடத் தொடங்கினால் கடந்த சில ஆண்டுகளாக சிறிது சிறிதாக அதிகரித்து வந்த தமிழ்ச் சிவில் வெளியானது சுருங்கிப்போய்விடும்.

மகத்தான மக்கள் ஆணையைப் பெற்ற மாகாண சபையானது சுருங்கத் தொடங்கியுள்ள தமிழ் சிவில் வெளியை எப்படிப் பாதுகாக்கப்போகிறது.? தர்மபுரம் சம்பவத்தின் பின் எத்தனை தமிழ் அரசியல்வாதிகள் அந்தப் பகுதிக்குச் சென்றிருக்கிறார்கள்? நிச்சயமாக அந்தத் தொகை ஜெனிவாவுக்குப் போன அரசியல்வாதிகளின் தொகையை விடவும் குறைவானதே. இரண்டு அரசியல் வாதிகள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருக்கிறார்கள். . சில அரசியல் வாதிகள் ஜெனிவாவில் தர்மபுரம் சம்பவத்தை எடுத்துக்கூறியுள்ளார்கள். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை இது தொடர்பில் மன்னாரில் ஒரு சத்தியாக்கிரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் 200இற்கும் குறைவானவர்களே கலந்து கொண்டதாகக் கூறப்படுகின்றது. அதிலும் கத்தோலிக்க குருமார்;களும் கன்னியாஸ்திரிகளுமே கணிசமான தொகையினர் என்றும் கூறப்படுகின்றது. அதேசமயம் அண்மையில் மன்னாரில்; ஜெனிவாத் தீர்மானத்திற்கு எதிராக நடாத்தப்பட்ட ஓர் ஆர்ப்பாட்டத்தில் 500இற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்தமை சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஆனால், மாகாண சபைக்குக் கிடைத்த மக்கள் ஆணையின் பருமன் மற்றும் அது ஏற்படுத்திய எதிர்பார்ப்புக்கள் இவற்றுடன் ஜெனிவாக் கூட்டத்தொடர் ஏற்படுத்திய எதிர்பார்ப்புக்கள் என்பவற்றின் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது இப்பொழுது புதிதாகத் தோன்றியிருக்கும் இயல்பின்மை தொடர்பில் அதாவது, தமிழ் சிவில் வெளி மறுபடியும் சுருக்கிச் செல்லக்கூடிய ஏது நிலைகள் தொடர்பில் தமிழ் அரசியல் வாதிகளின் செயற்பாடுகள் போதாது என்றே தோன்றுகிறது. ஜெனிவாவை நோக்கிக் காத்திருந்த தமிழ் மக்கள் குறிப்பாக, வன்னி மக்கள் காலச் சக்கரத்தில் பின்னோக்கிச் செல்லத் தொடங்கியது போல் உணர்வதாகக் கூறப்படுகிறது. அது சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஒரு நிலைமையை ஒத்ததாய் உள்ளது என்று கூறப்படுகின்றது.

போர்க் குற்றம் தொடர்பில் இரு தரப்பும் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஜெனிவாவில் விவாதிக்கப்படுவதின் இறுதி இலக்கு எதுவெனில் தமிழ் மக்கள் மத்தியில் ஆயுத அரசியலை மனோரதியப்படுத்தும் – Romanization – போக்குகளை பலவீனப்படுத்துவது என்பதுதான். ஐ.நா.வின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரான லூயிஸ் ஆர்பர் அண்மையில் இது தொடர்பாகக் நியூயோர்க் ரைம்ஸ் சஞ்சிகையில் தெரிவித்திருக்கும்; கருத்துக்கள் ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டியவை. பதவியில் இருக்கும்போது உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்படாத இக்கருத்துக்கள் இப்பொழுது அவர் அனைத்துலக நெருக்கடிகள் குழுவின் – international crisis group – தலைவராக இருக்கும்போது அதுவும் குறிப்பாக, மேற்கு நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களின் கருத்துக்களை அதிகம் பிரதிபலிக்கும் ஒரு சஞ்சிகையில் கூறப்பட்டுள்ளது. லூயிஸ் ஆர்பர் மட்டுமல்ல, அவருடைய பொறுப்பில் இப்பொழுதிருக்கும் நவிப்பிள்ளை அம்மையாரும் ஏறக்குறைய அதே கருத்துடன் இருப்பதாகவே தெரிகிறது. இவர்கள் இருவர் மட்டுமல்ல, ஐ.நா. மனித உரிமைகள் செயலகமும் அப்படித்தான் நம்புவதாகத் தோன்றுகிறது. அதாவது, தமிழ் மக்கள் மத்தியில் ஆயுத அரசியலை மகிமைப்படுத்தும் தரப்புகளை பலமிழக்கச் செய்யவேண்டும் என்றே மேற்கு நாடுகளும் இந்தியாவும் சிந்திக்கின்றன. இது எப்பொழுதும் இலங்கை அரசாங்கத்திற்குச் சாதகமானதொரு பிடி.

எனவே, தமிழ்ச் சிவில் வெளியைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் என்று கூறிக் கொண்டு மேற்கொள்ளப்படக்கூடிய ராணுவ மயமாக்கலை உலக சமூகம் எப்படிப் பார்க்கும்?

இது தொடர்பில் சரியான ஒரு சித்திரத்தை தமிழ் அரசியல் வாதிகளால் மட்டுமே வழங்க முடியும். அவர்கள் தான் அரங்கில் நிற்பவர்கள். மக்கள் ஆணையைப் பெற்றவர்கள்.தவிர படிப்பாளிகள் அறிவுஜீவிகள் ஆய்வாளர்கள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களாலும் முடியும்.

இம்முறை ஜெனிவாத் தீர்மானத்தில் இணைக்கப்பட்டுள்ள ஓரம்சம் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. புதின் மூன்றாவது திருத்தச் சட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவமே அது. ஜெனிவாத் தீர்மானம் தொடர்பில் இந்தியாவைத் திருப்திப்படுத்தக்கூடிய ஓரம்சம் அது. இந்நிலையில், 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட வடமாகாண சபையானது தனது மக்களை நோக்கிவரும் புதிய மாற்றங்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறது?

கடந்த இரு ஆண்டுகளாக ஜெனிவாவிலிருந்து கொழும்பை நோக்கிச் செய்திகள் உணர்த்தப்பட்டன. இம்முறை கொழும்பிலிருந்தும் ஜெனிவாவை நோக்கி செய்திகள் உணர்த்தப்படுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக அரசாங்கம் ஜெனிவாவை எதிர்கொள்வதில் பெற்ற தேர்ச்சியும் படிப்பினையும் காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளது. அல்லது அவற்றை எதிர் கொள்வதற்கான புதிய உத்திகளை அரசாங்கம் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டது எனலாமா? இதை மறுவளமாகச் சொன்னால் இதுவரையிலுமான ஜெனிவாத் தீர்மானங்கள் அவற்றை வெட்டியோடலாம் என்ற ஓர் அனுபவத்தையும் துணிச்சலையுமே அரசாங்கத்திற்குப் பெற்றுக் கொடுத்துள்ளன எனலாமா?
21-03-2014

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *