மூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்தின் அடுத்த கட்டம்

ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த கையோடு மேற்குநாடுகள் இலங்கை அரசாங்கத்தைப் பாராட்டின. வெல்லக் கடினமான ஒரு பயங்கரவாத இயக்கத்தைத் தோற்கடித்த ஒரு அரசாங்கமாக அவை இலங்கை அரசாங்கத்தைப் பார்த்தன. போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த பேரழிவை அவை தவிர்க்கப்படவியலாத பக்கச் சேதங்களாகவே பார்த்தன. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் பக்கச் சேதங்கள் மனித உரிமை மீறல்களாக மாற்றப்பட்டன.

கடந்த மாதம் மூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்தில் அவ்வாறுதான் கூறப்பட்டுள்ளது. அதாவது, ‘மனித உரிமை மீறல்கள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய குற்றங்கள”; என்று. ஆனால், தமிழர்களில் ஒரு தரப்பினர் அவை போர்க் குற்றங்கள் என்று கூறுகிறார்கள். அவை அனைத்துலகப் பொறிமுறை ஒன்றிற்கூடாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.

அதேசமயம், தமிழர்களில் மற்றொரு தரப்பினர் அவை இனப்படுகொலை என்று கூறி வருகிறார்கள். அவற்றை விசாரிப்பதற்கு ஓர் அனைத்துலகப் பொறிமுறை வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.

இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்றவை போர்க் குற்றங்களா அல்லது இனப்படுகொலையா என்பதில் தமிழர்களால் ஐக்கியப்பட்ட ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அது மட்டுமல்ல, கடந்த ஐந்தாண்டுகளாக அனைத்துலக சமூகத்தை போர்க்குற்றம் தொடர்பிலோ அல்லது இனப்படுகொலை தொடர்பிலோ தமிழர்களின் உச்சபட்ச விருப்பங்களை நோக்கி வளைத்தெடுப்பதிலும் தமிழர்கள் போதிய வெற்றியைப் பெறமுடியவில்லை.

ஆனால், இலங்கை அரசாங்கமோ கடந்த மூன்றாண்டு கால வளர்ச்சிகளையும், பின்னோக்கி இழுத்துச் செல்லும் செய்முறை உத்திகளை வெற்றிகரமாகப் பிரயோகிக்கத் தொடங்கிவிட்டது. கடந்த ஜெனிவாக் கூட்டத்தொடரையொட்டி நடந்தவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அப்படித்தான் கூறவேண்டியிருக்கிறது.

palaisdesnationsஅதாவது, இறுதிக் கட்டப் போரில் நடந்தவை இனப்படுகொலையா அல்லது போர்க் குற்றங்களா என்பதில் தமிழர்களால் ஒருமித்த முடிவுக்கு வரமுடியாதிருக்கும் ஒரு பின்னணியில், கடந்த மூன்று ஜெனிவாக் கூட்டத் தொடர்களின் மூலமாக மேற்கு நாடுகள் அரசாங்கத்தை பொறுப்புக்கூறச் செய்வதில் போதிய வெற்றியைப் பெற்றிராத ஒரு பின்னணியில், அதிலும், குறிப்பாக, இதுவரையிலுமான மூன்று ஜெனிவாத் தீர்மானங்களிலும் இலங்கைத்தீவில் இடம்பெற்றவற்றவை மனித உரிமை மீறல்களாகச் சுருக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில், இலங்கை அரசாங்கமோ, இங்கு நடந்தவை பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தவிர்க்கப்படவியலாத பக்கச் சேதங்களே என்று நிரூபித்துக் காட்டும் ஒரு செய்முறைப் பாதையில் தீர்மானகரமாகச் செயற்படத் தொடங்கிவிட்டது.

இதை அரசாங்கம் இரண்டு தளங்களில் செய்கிறது. முதலாவது உள்நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் மறுபடியும் உயிர்பெறத் தொடங்கிவிட்டதாகக் கூறி அதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள்.

இரண்டாவது தளம், நாட்டுக்கு வெளியில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் செயற்பட்டுவரும் பதினாறு அமைப்புக்களையும் அவற்றுடன் தொடர்புடையவர்களையும் தடை செய்ததின் மூலம் புலம்பெயர்ந்த தரப்பே உள்நாட்டில் தோற்கடிக்கப்பட்ட ‘பயங்கரவாத்திற்கு” பிராணவாயுவை வழங்கி வருகிறது என்று ஒரு சித்திரத்தை உருவாக்க முற்படுகிறது.

அரசாங்கத்தின் இந்த இரு தளச் செயற்பாடுகளை மேலும் சிறிது ஆழகமாகப் பார்க்க வேண்டும்.

முதலாவதாக, உள்நாட்டில் குறிப்பாக, வடக்கில் அதிலும் குறிப்பாக வன்னிப் பகுதியில், விடுதலைப்புலிகள் இயக்கம் மறுபடியும் தலையெடுத்திருப்பதாகக் கூறப்பட்டு இயல்பு வாழ்க்கை சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. வடக்கு-கிழக்கில் ஒப்பீட்டளவிற் சிவில் வெளி குறைவாக இருப்பதும் வன்னியில்தான். ஏனைய பகுதிகளோடு ஒப்பீடுகையில் அராசங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கடைசியாக வந்த பகுதி அது. எனவே, ஏனைய பகுதிகளையும் விடவும் அங்கேதான் ஒப்பீட்டளவில் கூடுதலாக படை பிரசன்னம் காணப்பட்டது.

கடந்த ஐந்தாண்டுகளாக அங்கு மெல்ல மெல்ல விரிந்து வந்த சிவில் வெளியானது இப்பொழுது மறுபடியும் சுருங்கத் தொடங்கிவிட்டது. இதன் பொருள் அங்கு இயல்பு வாழ்க்கை முழுவதுமாகக் குலைந்துவிட்டது என்பதல்ல. அது முன்னரைவிடக் கூடுதலாகச் சோதனைக்குள்ளாகத் தொடங்கிவிட்டது என்பதுதான்.

எவ்வளவுக்கெவ்வளவு இயல்பு வாழ்வு சோதனைக்குள்ளாகிறதோ அவ்வளவுக்கவ்வளவு சிவில் வெளியும் நிச்சயமற்றதாக மாறுகிறது. இவ்வாறு சிவில் வெளி சோதனைக்குள்ளாகத் தொடங்கியிருப்பது தொடர்பில் வட-கிழக்கில் உள்ள சில அரசியல் வாதிகளே குரல் கொடுத்திருக்கிறார்கள். சிவில் இயக்கங்களோ அல்லது மத நிறுவனங்களோ போதியளவுக்கு குரல் கொடுக்கவில்லை. இது தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் விதத்திலான நடவடிக்கைகள் எதையும் காணமுடியவில்லை.

சிவில் வெளி சோதனைக்குள்ளாகும்போது நல்லிணக்கத்தைப் பற்றியெல்லாம் உரையாட முடியாது. இன்னும் சரியாகக் கூறின் மெய்யான பொருளில் சிவில் வெளி எனப்படுவது நல்லிணக்கததின் கனியாகத்தான் கிடைக்கவேண்டும். எங்கே நல்லிணக்கம் உண்மையின் மீதும், நீதியின் மீதும் கட்டியெழுப்பப்படுகின்றதோ அங்கே தான் சிவில் வெளியும் அதிகம் அர்த்த புஷ்டியானதாகவும் நிச்சயத்தன்மை மிக்கதாகவும் தொடர் வளர்ச்சிக்குரியதாகவும் அமைகிறது. மாறாக, நீதியின் மீது கட்டியெழுப்பப்படாத போலியானதொரு நல்லிணக்கமானது நிச்சயத்தன்மை குறைந்த சிவில் வெளிகளையே உருவாக்குகிறது. நீதி நிலைநாட்டப்படாதவிடத்து அங்கே அச்சமும் பழிவாங்கும் உணர்;ச்சியும் உறை நிலையில் இருக்கும். எனவே, அச்சத்தின் மீது கட்டியெழுப்பப்படும் சிவில் வெளியானது எளிதில் உடைந்துவிடக்கூடியது.

எனவே, ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான ஒரு சமூகத்தில் சிவில் வெளி சோதனைக்குள்ளாகிறது என்றால் நல்லிணக்கம் சோதனைக்குள்ளாகிறது என்றே பொருள். அல்லது மெய்யான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் அந்த நாடு தோல்வியடைந்துவிட்டது என்றே பொருள். ஆயின், மெய்யான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியாததிற்கு யார் பொறுப்பு? வென்றவர்களா? தோற்றவர்களா?

ஆனால், அரசாங்கம் இதை வேறுவிதமாக வியாக்கியானம் செய்ய முற்படுகின்றது. தன்னால் தோற்கடிக்கப்பட்ட ஒரு ‘பயங்கரவாதமானது” புலம்பெயர்ந்த தமிழர்களின் பின்பலத்தோடும் தூண்டுதலோடும் மீள உயிர்ப்பிக்கப் படுவதாக காட்ட முற்படுகிறது. இது விடத்தில் உலகளாவிய இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிராக மேற்கு நாடுகள் கைக்கொள்ளும் அதே அணுகுமுறையை தானும் பின்பற்றுவதாகக் காட்ட முற்படுகின்றது. தனது தரப்பு நியாயத்திற்கு வலுச்சேர்க்கும் விதத்தில் அது புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் இயங்கும் அமைப்புக்களைத் தடை செய்துமிருக்கிறது.

ஜெனிவா மூன்றின் தீர்மானத்தை அரசாங்கம் எதிர்கொள்ளும் இரண்டாவது தளம் இதுவாகும். புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றொரு ஆயுதப் போராட்டத்தை அடைகாக்கிறார்கள் என்ற ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் மேற்கு நாடுகளை நெருக்கடிக்குள்ளாக்க முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது.

புலம்பெயர்ந்த தமிழர்களைக் கருவிகளாகப் பயன்படுத்தியே மேற்கு நாடுகள் தன் மீது அழுத்தத்தைப் பிரயோகித்து வருவதாக அரசாங்கம் நம்புகிறது.

எனவே, பயங்கரவாதம் என்று மேற்கு நாடுகள் வர்ணிக்கும் நடவடிக்கைகளோடு புலம்பெயர்ந்த தமிழர்களைத் தொடுப்பதன் மூலம் அரசாங்கம் ஒரே கல்லில் இரு மாங்காய்களை வீழுத்தலாம் என்று திட்டமிடுகின்றது.

முதலாவது மாங்காய் – தமிழத் தேசிய நெருப்பை அணையவிடாது பாதுகாப்பதாகக் கருதப்படும். தமிழ்ப் புலம் பெயரிகளுக்கும் தாய் நாட்டுக்குமான தொடர்பைத் துண்டித்து விடுவதன் மூலம் தமிழர்களின் அரசியலை இச்சிறு தீவின் எல்லைகளுக்குள் முடக்குவது.

இப்படியாகப் புலம் பெயர்ந்த தமிழர்களுக்குப் பயங்கரவாத முத்திரை குத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவிற்கு அவர்களை நீண்ட கால நோக்கில் அரசியலற்ற சமூகமாக மாற்றலாம் என்று சிந்திக்கவும் இடமுண்டு.

இதில் தீவிர அரசியற் செயற்பாட்டாளர்களின் கதை வேறு. சாதாரண புலம் பெயரிகளின் கதை வேறு. சாதாரண புலம்பெயரிகளைப் பொறுத்தவரை இனி நாடு திரும்புவது என்றால் புலம்பெயர்ந்த களத்தில் எந்தவொரு அரசியற் செயற்பாட்டிலும் ஈடுபடக்கூடாது என்று அவர்கள் சிந்திக்கத் தலைப்படுவர். ஏற்கனவே, கடந்த ஆண்டு புலம் பெயர்ந்தவர்களின் சொத்துக்களை அரசாங்கம் கையேற்கப்போவதாகவும், அதற்கான சட்ட ஏற்பாடுகளைப் பற்றிச் சிந்திக்கப்படுவதாகவும் ஒரு கதை வந்தபோது பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டில் உள்ள தமது சொத்துக்களை விற்க முற்பட்டதையும், இதனால் யாழ்ப்பாணத்தில் காணி விலை ஒப்பீட்டளவில் சரிந்ததையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். எனவே, சாதாரண புலம்பெயர்ந்த தமிழர்கள் இனி அரசியற் செயற்பாடுகளைப் பொறுத்தவரை அடக்கி வாசிக்கவே முற்படுவர். அல்லது அதை ரகசிசயமாகச் செய்ய முற்படுவர். இதில், நாடு திரும்பத் தேவையில்லாதவர்கள் அதாவது, புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நிலையான நலன்களுடன் மிகவும் ஸ்தாபிதமாக அதாவது ”வெல் செற்றில்ட்’ ஆக வாழ்பவர்களும் அங்கு ஏற்கனவே தீவிரமாகச் செயற்பட்டவர்களும் மட்டுமே இனித் தொடர்ந்தும் தீவிர அரசியலில் ஈடுபடுவார்கள். மற்றும்படி விடுமுறைக் காலங்களில் நாடு திரும்ப விரும்புவோரும் தாய் நாட்டில் சொத்துக்களை அதிகம் உடையவர்களும் இனி அடக்கி வாசிக்கவே முற்படுவர்.

இது நீண்ட எதிர்காலத்தில் தாய் நாட்டிற்கும் புலம்பெயர்ந்த தரப்புக்கும் இடையிலான அரசியல் இடை ஊடாட்டங்களை வெகுவாகப் பாதிக்கும். நிதி ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தாய் நாட்டிலிருக்கும் தமிழர்களை இது பெருளமவிற்குப் பலவீனப்படுத்தும். இது முதலாவது.

இரண்டாவது மாங்காய் – மேற்கு நாடுகள் புலம்பெயர்ந்த தமிழர்களைக் கருவிகளாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது.

மேற்படி தடைக்கு நாட்டுக்கு வெளியே சட்டப் பெறுமதி குறைவு. உளவியற் பெறுமதியும் அரசியற் பெறுமதியும் தான் அதிகம். மேற்கு நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு அமைய செயற்படும் அமைப்புக்கள் இதில் பலவுண்டு. எனவே, அவை அங்கு தொடர்ந்தும் செயற்பட முடியும். ஆனால், மேற்கு நாடுகள் தமக்கெதிராக ஆயுதமேந்திய இயக்கங்களின் விடயத்தில் எந்த அளவுகோல்களைப் பயன்படுத்துகின்றனவோ அதே அளவுகோல்கiளேயே தானும் இது விசயத்தில் பயன்படுத்தியிருப்பதாக ஒரு தோற்றத்தைக் காட்ட இலங்கை அரசாங்கம் முயற்சிக்கின்றது.

பெரும்பாலான மேற்கத்தைய நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கம் இப்பொழுதும் தடை செய்யப்பட்டிருப்பது அரசாங்கத்திற்கு அதிகம் அனுகூலமானது. ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மனோரதியப்படுத்தக்கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதும் அரசாங்கத்திற்கு வாய்ப்பானது. எனவே, விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு அல்லது ஆயுத மேந்திய தமிழ் அரசியலுக்குச் சாதகமாயில்லாத ஓர் உலகச்; சூழலை அரசாங்கம் உச்சபட்மாகக் கையாண்டு வருகின்றது. இதனால், ஜெனிவாக் கூட்டத் தொடரில் தமிழர்கள் இனப்படுகொலையா? அல்லது போர்க் குற்றமா? என்ற விவாதங்களில் ஈடுபடும்போது அரசாங்கமோ அது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் தவிர்க்கப்படவியலாத பக்கச் சேதம் என்று நிரூபிக்க முயற்சிக்கின்றது.

இதில் புலம்பெயர்ந்த தமிழர்களை பயங்கரவாதம் என்று மேற்கு நாடுகள் முத்திரை குத்தும் நடவடிக்கைகளுடன் தொடர்பு படுத்துவதன் மூலம் மேற்கு நாடுகள் அவர்களை கருவிகளாகப் பயன்படுத்துவதில் வரையறைகளை ஏற்படுத்திவிடலாம் என்றும் அரசாங்கம் நம்புகின்றது.

ஒருபுறம் அமைச்சர் பீரிஸ் மனித உரிமைகள் ஆணையாளரது விசாரணைகளில் பங்கேற்பதை துரோகம் என்று வர்ணிக்கின்றார். அதாவது, சாட்சிகள், துரோகிகள் ஆக்கப்படக்கூடிய ஓர் அரசியல் சூழலே நிலவுகின்றது என்று பொருள். இது சாட்சிகளுக்கு பாதுகாப்பில்லை என்ற ஒரு செய்தியை வெளிக்கொண்டு வருகின்றது. இன்னொரு புறம் நாட்டிற்கு வெளியிலான விசாரணைகளுக்கு அனுசரணை புரியக் கூடிய அமைப்புக்கள் ‘பயங்கரவாதத்துடன்” தொடர்புடையவைகளாக முத்திரை குத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அத்தகைய விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் எவரையும் ‘பயங்கரவாதத்துடன்” தொடர்புபடுத்த முடியும்.

அதாவது மூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்தின் அடுத்த கட்ட நகர்வானது இரண்டு தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது. முதலாவது தேசத்துரோகம். இரண்டாவது பயங்கரவாதம். இவ்விரு தடைகளையும் தாண்டி மேற்படி விசாரணைகளை முன்னோக்கிச் செலுத்த அனைத்துலக சமூகத்தால் குறிப்பாக மேற்கு நாடுகளால் முடியுமா? தமக்கு எதிரான அமைப்புக்களுக்கு எதிராக அவை பிரயோகித்து வரும் பயங்கரவாதம் என்ற அளவுகோல் இப்பொழுது அவர்களுக்கே தடையாக மாற்றப்பட்டிருக்கிறது.
எனவே, இத்தடைக்குப் பின்னரான அடுத்த கட்டத்தைக் குறித்து செயல் பூர்வமாகச் சிந்திக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கே உரியது.

இது விடயத்தில், மேற்படி தடை குறித்து இதுவரையிலும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (human rites watch) முக்கியஸ்தர் ஒருவர் மட்டுமே கருத்துத் தெரிவித்துள்ளார். மேற்கத்தைய நாடுகளின் உத்தியோகபூர்வ அபிப்பிராயங்கள் எதுவும் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் வெளியிடப்படவில்லை. கொழும்பில் சில மேற்கத்தைய தூதரகங்களில் நிகழ்ந்த சிவில் அமைப்புக்களை சேர்ந்தவர்களோடான சந்திப்புக்களின் போது இது பற்றி பிராஸ்தாபிக்கப்பட்டதாக சில தகவல்கள் உண்டு.

உண்மையில் இப்பொழுது உருவாகி இருப்பது ஒரு சட்டப் பிரச்சினை அல்ல. இது ஒரு அரசியல் பிரச்சினையே. இதை அரசியல் தீர்மானங்களின் மூலம் தான் எதிர்கொள்ள முடியும். அதற்கொரு அரசியல் திடசித்தம் (political will) வேண்டும். ஐ.நா.தீர்மானத்தில் தமிழர்கள் என்ற வார்த்தை வருவதை தவிர்ப்பது என்பதை ஓர் அரசியல் தீர்மானமாக எடுத்த மேற்கு நாடுகளிடம், இனப்பிரச்சினையை ஒரு மனித உரிமைப் பிரச்சினையாகவே பார்ப்பது என்பதை ஓர் அரசியல் தீர்மானமாக எடுத்த மேற்படி நாடுகளிடம் ஜெனிவா மூன்றிற்குப் பின்னரான நிலைமைகளை எதிர்கொள்ளத் தேவையான அரசியல் திடசித்தம் எப்பொழுது உருவாகும்?

09-04-2014

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *